புதன், 24 ஆகஸ்ட், 2016

தூய்மை இந்தியாவின் மனித கழிவுகளை எவன் சுத்தம் செய்வான்? பெச்வடா வில்சன் கேள்வி!

மகசேசே விருது வென்ற சமூக செயல்பாட்டாளர் பெஸ்வாடா வில்சன். | படம்: சந்தீப் சக்சேனா.
மகசேசே விருது வென்ற சமூக செயல்பாட்டாளர் பெஸ்வாடா வில்சன். | படம்: சந்தீப் சக்சேனா. சந்திர மண்டலத்துக்கு இந்தியா ராக்கெட் விடலாம், ஆனால் இன்னமும் கழிவுகளை அகற்ற மனிதர்களைப் பயன்படுத்துவதை அகற்றுவதற்கான தொழில்நுட்பத்திற்கு முதலீடு செய்ய விரும்பவில்லை என்று மகசேசே விருது வென்ற சமூக ஆர்வலர் பெஸ்வாடா வில்சன் கேள்வி எழுப்பியுள்ளார். சஃபாய் கரம்சாரி ஆந்தோலன் அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளரான மகசேசே விருது வென்ற பெஸ்வாடா வில்சன் டெல்லி, ஜாகீர் உசைன் கல்லூரியில் சாதியும் சமத்துவமின்மையும் என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றுகையில் மத்திய அரசின் மீது சரமாரி கேள்வி எழுப்பினார்.


"ஸ்வச் பாரத் மிஷனின் கீழ் 12 கோடி கழிப்பறைகள் கட்டப்படுகின்றன, ஆனால் இந்த கழிப்பறைகளை சுத்தம் செய்யப்போவது யார் என்ற கேள்வியே எழவில்லை. இன்னமும் கழிவுகளை அகற்ற மனிதர்களைப் பயன்படுத்துவது தொடரவே செய்கிறது.

கழிவுகளை வெளியே எடுக்கும் பம்ப்கள் இல்லாமல் யார் செப்டிக் டாங்குகளை சுத்தம் செய்வார்கள்? இந்தியா கிரயோஜனிக் எஞ்ஜின்களை உருவாக்கலாம், சந்திர மண்டலத்துக்கு ராக்கெட் அனுப்பலாம். ஆனால் கழிவுகளை மனிதர்களே அகற்றும் அவலத்தை ஒழிப்பதற்கான தொழில்நுட்பத்தில் நாம் முதலீடு செய்ய விரும்புவதில்லை.

நான் எனது பாடப்புத்தகத்தில் தீண்டாமை குறித்து டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் என்ன கூறினார் என்பதைப் பற்றி வாசித்ததேயில்லை. காந்திஜி என்ன கூறினாரோ அதுதான் நமக்கு தெரியும். கழிப்பறை சுத்தம் செய்யும் பெண்களை, குழந்தைகளைச் சுத்தம் செய்யும் தாயுடன் ஒப்பிட்டார் காந்தி. பிறரின் கழிவுகளை ஒரு சமூகத்தினர் சுத்தம் செய்யும் பணியில் நாம் அவர்களை ஈடுபடுத்துவதன் அவமரியாதையை, இழிவை நாம் இன்னும் கூட உணராதிருக்கிறோம்.

செப்டிக் டாங்குகளில் சுத்தம் செய்பவர்கள் மரணமடைந்து வருகின்றனர், ஆனால் பயங்கரவாதம் குறித்து செலவிடப்படும் நேரத்தில் பாதி நேரம் கூட செப்டிக் டாங்க் மரணங்களை ஒழிக்க செலவிடப்படுவதில்லை.

இந்தியாவை இரண்டு வைரஸ்கள் பீடித்துள்ளன் ஒன்று சாதி மற்றொன்று தந்தைவழி ஆணாதிக்க சமுதாயம், எந்த ஒரு அரசியல்வாதியும் இது குறித்து வெளிப்படையாக பேசுகிறார்களா? சாதியையும், ஆணாதிக்கத்தையும் தனித்தனியாக எதிர்த்துப் போராட முடியாது, இரண்டையும் எதிர்த்து சேர்த்துப் போராட வேண்டும்.

மனிதன் கழிவுகளை அள்ளுவது என்பது எளிதில் தீர்த்துவிடக் கூடிய பிரச்சினைதான். ஆனால் சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் ஆகியும் நாம் அந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியவில்லை, இதிலிருந்து விடுபட முடியவில்லை. இப்படியிருக்கையில் ‘அடிப்படைவாதம்’என்ற மிகப்பெரிய பிரச்சினையை நாம் எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்? 44% மக்கள் தொகை இன்னமும் ஊட்டச்சத்து குறைபாடுடன் இருக்கும் நாட்டில் எதைச் சாப்பிடக்கூடாது என்று கூறும் அரசு நம்மிடையே உள்ளது. சாதாரணமாக உடுத்த உடை இல்லாத ஏழைபாழைகள் உள்ள நாட்டில் எந்த உடை அணிய வேண்டும் எதை அணியக்கூடாது என்று கட்டளையிடும் அமைப்புகள் இருக்கின்றன. நமக்குப் பிடித்ததைச் சாப்பிட முடியாத, நாம் விரும்பும் ஆடைகளை உடுத்த முடியாத சுதந்திரம் இல்லாத போது. அரசியல் சட்ட சாசன உரிமைகளின் படி நாம் சொல்லியாக வேண்டியதை சொல்ல சுதந்திரம் இல்லாத போது நாட்டின் சுதந்திரம் என்பதன் அர்த்தம்தான் என்ன?”

என்று தனது உரையில் சரமாரியாகக் கேள்வி எழுப்பினார் வில்சன்     .Tamil.thehindu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக