புதன், 24 ஆகஸ்ட், 2016

கலைஞர் :நம்மை ஏமாற்றி, தோற்கடிக்க யார்? யார்? புல்லுருவிகளாக இருந்தார்கள்? யாரு ராஜேஷ் லக்கானியா?


தமிழக சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும்பாடு’ என்ற தலைப்பில், திமுக சார்பில் கண்டனப் பொதுக்கூட்டம் சென்னை தங்கச்சாலை மணிக்கூண்டு அருகில் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. கூட்டத்தில் மு.க.ஸ்டாலின், ‘ஜெயலலிதா அவர்களே, கருணாநிதியை கேள்வி கேட்கிறீர்களே... நாங்கள், நீங்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தயார். ஆனால் அவைத் தலைவரிடம் நாங்கள் பேசுவதற்கான உரிமையை முறையாக பெற்றுத்தரக்கூடிய தகுதி, தெம்பு, திராணி, யோக்கியதை, அருகதை முதலமைச்சராக இருக்கக்கூடிய உங்களுக்கு உள்ளதா?‘ என்ற காட்டமான உரை திரண்டிருந்த திமுக-வினரை உற்சாகப்படுத்தியது.
இந்நிலையில் கூட்டத்தில் முக்கிய உரை நிகழ்த்திய திமுக தலைவர் கலைஞர், ‘என்னைப் பொருத்தவரை, நான் தேர்தலில் ஏற்படுகிற வெற்றி, தோல்விகளைப் பற்றி கவலைப்படுகிறவன் அல்ல. குறிப்பாக, இந்தத் தேர்தலிலே நான் ஆட்சியைக் கைப்பற்றமுடியாத ஒரு சூழ்நிலைக்கு ஆளானது என்றால் அதற்குக் காரணம், மேடையில் அமர்ந்திருக்கின்ற நாங்கள் அல்ல. எதிரே வீற்றிருக்கின்ற பல்லாயிரக்கணக்கான நீங்கள்தான். நான் இவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை.
எத்தனையோ தேர்தல்களில் திமுக தோற்றிருக்கிறது. இதே தங்கச்சாலையில், அண்ணா போட்டியிட்டு வெற்றி பெறமுடியாமல் போயிருக்கிறது. அதனால் அண்ணாவை இந்த உலகம் மறந்துவிடவில்லை. அண்ணாவால் வளர்க்கப்பட்ட நாங்கள்தான் உங்களை எல்லாம் பல்லாயிரக்கணக்கில் பெற்றிருக்கிறோம்.
திமுக என்றைக்கும், எதற்கும் பயந்து ஒதுங்கியதில்லை. இன்னும் வளரக்கூடிய கட்சிதான் திமுக. யாரும் சந்தேகப்படத் தேவையில்லை. இன்னும் சாத்வீக முறையில் இதேபோன்று பொதுக்கூட்டங்களை நடத்தி கருத்துகளை எடுத்துரைக்க வேண்டும். தமிழகத்தில் எத்தகைய அநீதிகள் சட்டமன்றத்தில் முதலமைச்சரால் ஏற்படுகிறது என்று எடுத்துக்காட்டி, இதற்கெல்லாம் உங்கள் தீர்வு என்னவென்று கேட்கிறவகையில் உண்ணாவிரதத்தை நடத்திக் காட்டுவோம். தமிழ்நாட்டுக்கு ஏற்பட்ட இந்தச் சோகத்தை நீக்கி, தமிழ்நாட்டை பலம்வாய்ந்த மாநிலமாக மாற்றுவதற்கு நாம் அனைவரும் ஒற்றுமையாகச் சேர்ந்து போராடுவோம்.
சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுகிற சமயத்தில் தமிழ்நாட்டில் பிரதமர் அலுவலகத்தில் இருந்து செய்திகள் வந்தது. நாம்தான் ஜெயிக்கிறோம், உங்களுடைய நடவடிக்கைகளைச் செய்யுங்கள் என்று எழுதியிருந்தது. அந்த செய்தியைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள எல்லா மாவட்டங்களிலும், எல்லா வாக்குச்சாவடி மையங்களிலும் திமுக-வை வீழ்த்துவதற்கான சூழ்ச்சிகள் பின்னப்பட்டதா?
நம்மை ஏமாற்றி, தோற்கடிக்க யார்? யார்? புல்லுருவிகளாக இருந்தார்கள். யார்? யார்? அதற்கு துணைபோனார்கள் என்பதையெல்லாம் நான் அறிவேன். அவர்களுக்கு தகுந்த தண்டனையை எதிர்காலத்திலே ஜனநாயகம் தீர்ப்பாக வழங்கும். அந்த ஜனநாயகம் இங்கு மறுபடியும் மறுமலர்ச்சி பெற்று தமிழகத்தை தமிழன் மீண்டும் ஆளுவான் என்ற நம்பிக்கையை நோக்கி நாம் தொடர்ந்து பயணம் செய்வோம்’ என்று மு.கருணாநிதி உரையாற்றினார். கருணாநிதி தன் உரையில் சுட்டிக்காட்டிய புல்லுருவி என்ற வார்த்தையைக் கேட்டு திமுக தொண்டர்களே குழம்பி விட்டனர். தலைவர் யாரைச் சொல்கிறார் என்று திணறிய தொண்டர்கள் புல்லுருவி என்ற சொல்லின் பொருள் கேட்டு கொஞ்சம் குழம்பித்தான் போய் விட்டனர். தமிழ் அகராதி புல்லுருவி என்ற சொல்லை ஒரு ஒட்டுண்ணி தாவரம் என்கிறது. கொஞ்சம் விளக்கமாகச் தமிழ் விக்‌ஷனரியில் தேடினால் //மரங்கள் மீது படர்ந்து வளர்ந்து அவற்றின் சத்தினை உறிஞ்சும் ஒட்டுண்ணி வகை தாவரம். இச்சொல் பிறரது உழைப்பை உறிந்து அவரைச் சார்ந்து வளர்பவர் என்ற பொருளில் வசைச்சொல்லாகவும் பயன்படுகிறது// என்கிறது விக்‌ஷனரி. இப்போது கருணாநிதி சுட்டிக்காட்டிய புல்லுருவி யார் என்று குழம்பாமல் என்ன செய்வார்கள் தொண்டர்கள்?  minnambalam.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக