செவ்வாய், 23 ஆகஸ்ட், 2016

நடிகை ரம்யா மீது தேசத்துரோக வழக்கு.. பாகிஸ்தான் நல்ல நாடு என்றதால் .. மன்னிப்பு கேட்க மறுப்பு!

பாகிஸ்தான் நல்ல நாடு என கருத்து தெரிவித்த நடிகையும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி.யுமான ரம்யா மீது தேச துரோக வழக்கு பதிய வலியுறுத்தி மைசூரு நீதிமன்றத்தில் ஒரு வழக்கறிஞர் மனு தாக்கல் செய்துள்ளார்.
நடிகையும், காங்கிரஸ் முன்னாள் எம்பியுமான ரம்யா அண்மையில் கன்னட தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், "பாகிஸ்தானில் நடைபெற்ற 'சார்க் நாடுகளின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள்' கருத்தரங்கில் கலந்துக்கொண்டேன். அங்குள்ள மக்கள் நம்மைப் போலவே சாதாரணமாக வாழ்கின்றனர்.
இந்தியாவில் இருந்து சென்ற எங்களுடன் அவர்கள் மிகுந்த நட்புடன் பழகினர். பாகிஸ்தானுக்கு செல்வது நரகம் செல்வதற்கு ஒப்பானது என மத்திய அமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறிய‌துபோல அந்நாடு இல்லை. நல்ல நாடாகவே இருக்கிறது" என தெரிவித்திருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூரு, மைசூருவில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
இந்நிலையில், மைசூருவைச் சேர்ந்த வழக்கறிஞர் கே.விட்டல் கவுடா சோம்வார்பேட் நீதிமன்றத்தில் தனிநபர் புகார் ஒன்றைப் பதிவு செய்துள்ளார்.
அதில் "ரம்யா அவரது கருத்துகளால் இந்திய தேசத்தை அவமதித்துவிட்டார். நமது பாரம்பரிய எதிரியான பாகிஸ்தானை ஆதரித்து பேசி இந்திய மக்களை தூண்டிவிட்டிருக்கிறார். ரம்யா மீது கிரிமினல் குற்ற சட்டப்பிரிவு 124 ஏ-ன் கீழ் தேச துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு விசாரணை வரும் 27-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  வெப்துனியா .com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக