திங்கள், 8 ஆகஸ்ட், 2016

புதிய கல்விக்கொள்கை: கார்ப்பரேட்- வர்ணாசிரம கள்ளக்காதலுக்கு பிறந்த பிள்ளை

thetimestamil.com :ஊரில் பெரும்பான்மையோர் நோயுற்றிருக்கையில் அந்த
ஊருக்கு ஒரு போலி மருத்துவர் வந்தால் என்ன நடக்கும் என யோசித்திருக்கிறீர்களா? அது நோயைக்காட்டிலும் ஆபத்தானது என்கிறீர்களா… சற்றேறக்குறைய அதே நிலையில்தான் இப்போது கல்விச்சூழல் இருக்கிறது. சமீப காலங்களில் பல பெற்றோர்களுடனும் மாணவர்களுடனும் உரையாட நேர்கிறது. அப்போதெல்லாம் எழும் அச்சம் நமது கல்விசூழல் குறித்தாகவே இருக்கும். ஆனால் அதைவிடவும் பெரிய பயம் பாஜக அரசு புதிய கல்விக்கொள்கைக்கான வரைவு அறிக்கையை வெளியிட்ட போது எழுந்தது.
கல்வித்துறை மேம்பாடு பற்றி எந்த அறிக்கை எழுதப்பட்டாலும் அதில் சில அம்சங்கள் கட்டாயம் இடம்பெறும். பாடத்திட்டத்தை காலத்துக்கேற்ப மீள்வடிவமைப்பு செய்வது, கல்வி நிலையங்களில் உளவியல் ஆற்றுப்படுத்துனர்களை பணியமர்த்துவது என்பதுபோன்ற மானே தேனே பாணி ஆலோசனைகள் இணைக்கப்படும். அப்படியான பரிந்துரைகள் இந்த வரைவு அறிக்கையிலும் ஏராளமாக இருக்கின்றன.

அவை செய்யப்படுவதற்கான காலக்கெடு எப்போதும் நிர்ணயிக்கப்படுவதில்லை. உதாரணமாக பள்ளிகளில் ஆற்றுப்படுத்துனர்களை பணியமர்த்தச் சொல்லி வருடம் ஒரு நீதிமன்ற ஆணையாவது வெளியாகும், பள்ளி மாணவர்கள் ஏதேனும் கொலை செய்தால் மட்டும் அவை பரபரப்பாக விவாதிக்கப்பட்டு அடங்கிவிடும். அப்படியான வெற்று லட்சியவாத பில்டப் பரிந்துரைகளோடுதான் ஆரம்பிக்கிறது டி.எஸ்.ஆர் சுப்ரமணியம் அறிக்கை.
நான் முதல்வரானால் எனும் தலைப்பில் மாணவர்கள் கட்டுரை எழுதுவது போல இங்கேயும் பல மெச்சத்தக்க பரிந்துரைகள் இருக்கின்றன. அவற்றை பட்டியலிட்டால் தேர்தலுக்கு முன்னால் மோடி மூஞ்சியை பார்த்து ஏமாந்ததுபோல இதிலும் நீங்கள் மயங்கிவிடக்கூடும். ஆகவே தேவைப்படுவோர் தனியே வாசித்துக்கொள்க.
உதாரணத்துக்கு ஒன்றிரண்டை எடுத்துக்கொள்ளலாம், தொடக்கக்கல்வியை பெறுவதற்கான தகுதியை அங்கன்வாடியிலேயே பெறுவதற்கான சூழலை உருவாக்க வேண்டும் என்கிறது இந்த வரைவு அறிக்கை (பகுதி -முன்னோக்கத்தையும் செயலாக்கத்தையும் நிறைவு செய்யத்தக்கவாறான முதன்மையான கல்வி குறிக்கோள்கள்). இந்த ஒரு குறிக்கோளை அடையவே இந்தியா இருக்கும் நிலையில் நூறு ஆண்டுகள் ஆகும். ஓரளவு நல்ல கட்டிடம், உபகரணங்கள் கொண்ட அங்கன்வாடியை நான் என் வாழ்நாளில் இதுவரை பார்த்ததில்லை. தமிழக அரசின் ஆரம்பப்பள்ளிகளில் 50% பள்ளிகள் இரண்டு அல்லது அதற்கும் குறைவான ஆசிரியர்களைக் கொண்டு செயல்படுகிறது. ஆரம்பக் கல்வியை இப்படி சிதைப்பதில் அரசுக்கு ஒரு உள்நோக்கம் உண்டு, ஆரம்பத்திலேயே படிக்கவிடாமல் துரத்திவிட்டால் பிறகு உயர்நிலைக்கல்வியில் இருந்தும் அரசு விலகிக்கொள்ளலாம் இல்லையா?
இந்த கல்விச்சூழல் பற்றிய எந்த கரிசனமும் புதிய கல்விக்கொள்கையில் இல்லை. ஆனால் சிறப்பான முன்தயாரிப்புக்கல்வி, எல்லோருக்கும் உயர்கல்வி, வாழ்நாள் முழுக்க கல்வி கற்கும் வாய்ப்பு என மோடியின் மேடைப்பேச்சைப்போல ஜிகினா குறிக்கோள்கள் மட்டும் இருக்கின்றன.
இன்னொரு உதாரணத்தையும் பார்ப்போம். பயிற்சி பெற்ற ஆற்றுனர்களை பள்ளிகள் பணியமர்த்தும் என்கிறது இவ்வறிக்கை (4.2 production of rights of the child and adolescent education). இந்தியாவில் ஆற்றுப்படுத்துனர்களின் தகுதி என எந்த வரையறையும் இதுவரை செய்யப்படவில்லை. வெறுமனே உளவியல் படித்தவர்களால் ஆற்றுப்படுத்துனராக பணி செய்ய முடியாது. பெரியவர்களின் உளவியல் பிரச்சினைகளை கையாளத் தெரியாதவர்களால் குழந்தைகளுக்கான ஆற்றுப்படுத்துதலை செய்ய இயலாது. காரணம் குழந்தைகள் பெரும்பாலும் பெரியவர்களின் பிரச்சினையை எதிரொலிப்பதைத்தான் நாம் சிறார் நடத்தைக் கோளாறாக புரிந்துகொள்கிறோம் (மூளைத்திறன் குறைவு போன்ற விதிவிலக்குகள் தவிர). 2009 ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி இந்தியாவில் 13 லட்சம் பள்ளிகள் உள்ளன.
பள்ளிக்கு ஒன்றாக நியமித்தாலும் நமக்கு 13 லட்சம் ஆற்றுப்படுத்துனர்கள் தேவை. (கவனிக்க: ஒரு ஆற்றுப்படுத்துனர் நாளொன்றுக்கு 3 பேரைத்தான் கையாள முடியும், அதன் பிறகான ஆற்றுப்படுத்துதல் நடவடிக்கைகள் பெரிய அளவில் பலன் தராது. ஆகவே பெரிய பள்ளிகளில் ஒரு ஆற்றுப்படுத்துனர் பதவி என்பது வெறும் கண்துடைப்பே. மேலும் சிறார்களால் தங்கள் பிரச்சினையை தெளிவாக விளக்கி சொல்ல முடியாதாகையால் பிரச்சினைக்கான காரணத்தை கண்டறியவே பல வாரங்கள் ஆகலாம்) இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான கவுன்சிலர்களை (ஆற்றுப்படுத்துனர்) பயிற்றுவிக்கவோ அங்கீகரிக்கவோ இந்தியாவில் எந்த ஏற்பாடும் இல்லை. இன்னும் ஆற்றுப்படுத்துனர்கள் தேவைப்படும் கல்லூரிகள் மற்றும் மற்ற கல்வி நிலையங்கள் உள்ளன. ஆக இந்த அறிக்கையின் ஒற்றைவரி பரிந்துரையை செயல்படுத்தவே பல பத்தாண்டு உழைப்பு தேவை. இனாமாக கிடைத்த முட்டையை கக்கத்தில் வைத்துக்கொண்டு கனவு கண்ட பிச்சைக்கார சாமியாரைப்போல நாமும் இவற்றை வைத்து கனவு காணலாம், வேறெதுவும் தற்போதைய சூழலில் சாத்தியமில்லை.
இவை சாத்தியப்படுகள் பற்றிய கேள்விகள். ஆனால் மறுபுறம் பல அபாயகரமான பரிந்துரைகள் மிக நயமாக செருகப்பட்டிருகின்றன. திவசம் செய்வதற்கு மட்டும் கட்டாயமாக தேவைப்படும் சமஸ்கிருதத்தை கிட்டத்தட்ட எல்லா மட்டத்திலும் கட்டாயமாக்க இந்த அறிக்கை பரிந்துரைக்கிறது.
இந்திய மொழிகளின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் சமஸ்கிருதத்தின் சிறப்பான முதன்மையினை கருத்தில் கொண்டும், நாட்டின் பண்பாட்டு ஒற்றுமைக்கு அதன் தனித்தன்மை வாய்ந்த பங்களிப்பைப் கருதியும் பள்ளிகளில் அதனை கற்பிப்பதற்கு வழி செய்யப்படும். பல்கலைக்கழக நிலையில் அதனை கற்பதற்கு மிகவும் தாரளமான வசதிகள் வழங்கப்படும். (பரிந்துரையின் மொழியாக்கம்)
இந்த ”குறிக்கோளை” விளக்க அவசியமில்லை என கருதுகிறேன். இந்தியா என்றால் இந்துக்கள், இந்து என்றால் பார்ப்பனீயம் என்பதுதான் இதன் அடிநாதம் (நாட்டின் பண்பாட்டு ஒற்றுமைக்கு அதன் தனித்தன்மை வாய்ந்த பங்களிப்பைப் கருதியும்…!!)
பத்தாம் வகுப்பில் பலரும் தோல்வியடைய காரணம் அறிவியல், கணிதம், ஆங்கிலம் ஆகிய பாடங்களில் மாணவர்களின் குறைந்த செயல்திறன் என கண்டறிந்துள்ள இந்த குழு, அதற்கான பரிந்துரையாக மாணவர்களை இரு பிரிவாக பிரிக்க சொல்கிறது. A – அதிக செயல்திறன் உள்ள மாணவர்கள், B குறைந்த செயல்திறன் உள்ள மாணவர்கள். இரண்டாம் நிலை மாணவர்கள் பிறகு மேற்சொன்ன பாடங்கள் தேவைப்படாத தொழிற்கல்வியை தொடரலாம். மாணவனுக்கு படிக்க வசதியில்லாமல் இருந்தால், ஆசிரியரே பள்ளியில் இல்லாமல் இருந்தால், மாணவருக்கு வேறு பிரச்சினை இருந்தால்கூட மதிப்பெண்கள் குறையலாம். ஆனால் அரசுக்கு அதனால் என்ன நட்டம்? கார்பரேட் நிறுவனங்களுக்கு இத்தகைய கடைநிலை தொழிலாளிகள் அவசியம் இல்லையா?
இந்த பரிந்துரை எத்தகைய கல்விச்சூழலைக் கொண்ட நாட்டில் செய்யப்படுகிறது என்பது மிகவும் தீவிரமாக விவாதிக்கப்படவேண்டியது. ஆரம்பக்கல்வியை முற்றிலுமாக சிதைத்து, சாதாரண வாக்கியத்தைக்கூட படிக்க முடியாத மாணவர்களை அரசே உருவாக்கிவிட்டு அவர்களை கீழ் நிலையிலானவர்கள் என அரசே பிரித்து அவர்களை தொழிற்கல்விக்கு அனுப்புவது ஹிட்லர் போன்ற கொடூர சர்வாதிகாரிகள் சிந்தனையில் மட்டுமே உதிக்க முடிகிற யோசனை.
தமிழக அரசுப்பள்ளிகளில் சராசரியாக பள்ளிக்கு 5 வகுப்பறைகள் உள்ளன, தனியார் பள்ளிகளில் அதன் எண்ணிக்கை 10. 2009 புள்ளிவிவரத்தின்படி பெண்களுக்கு என தனி கழிவறை கொண்ட தமிழக பள்ளிகள் 50 விழுக்காடு மட்டுமே. தமிழகத்தில் சராசரியாக அரசுப்பள்ளி ஒன்றுக்கு 4.2 ஆசிரியர்கள் இருக்கிறார்கள். தனியார் பள்ளிகளில் இத விகிதாச்சாரம் 11.7 ஆக உள்ளது. (தரவுகள் National university of educational planning and administration 2011 ல் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையிலானது).
அரசுப்பள்ளிகளை பயன்படுத்துவது பெருமளவில் மிகவும் பிற்படுத்தப்பட்ட, தலித் மற்றும் பழங்குடி மக்களும்தான். இவர்கள் கல்விக்கு உள்ள ஒரே வாய்ப்பான அரசுப் பள்ளிகளை இப்படி கீழினும் கீழான தரத்தில் வைத்துவிட்டு, அதில் படிக்கும் மாணவர்களை செயல்திறனற்றவர்கள் என பிரிப்பதன் மூலம் மாணவர்களை குற்றவாளியாக்குகிறது இந்த அறிக்கை. இதன் மூலம் பெருந்தொகையான பிற்படுத்தப்பட்ட, தலித் மற்றும் பழங்குடி மாணவர்களை வழமையான கல்வி வாய்ப்புக்களில் இருந்து விரட்டியடிக்க உத்தேசித்திருக்கிறது பாஜக. வெள்ளைக்காரன் காலத்தில் மற்ற ஜாதிக்காரர்கள் அரசுப்பணிக்கு வருவதைக் கண்டு பயந்த மராட்டிய பார்ப்பனர்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கான விதையை போட்டார்கள். அதன் பலனை இப்போது அறுவடை செய்ய முனைகிறார்கள்.
இன்னும் இருக்கிறது,
Dignity of labour (தொழிற்கண்ணியம்) கற்பிக்கப்படும் என சொல்லப்பட்டிருக்கிறது. அனேகமாக யூனியன் எதுவும் ஆரம்பிக்காமல் போட்டதை தின்றுவிட்டு வேலை செய்ய கற்றுக்கொடுப்பார்கள் என நினைக்கிறேன்.
ஒற்றுமை, தொடர்பு ஆகியவற்றை உறுதிப்படுத்தி அறிவுரை பெறுவதற்காக ஆசிரமங்களோடு அருகில் உள்ள பள்ளிகளை இணைக்கும் வழிமுறைகள் கையாளப்படும் எனும் பரிந்துரையும் இங்கிருக்கிறது. ஊரில் உள்ள ஆசிரமங்கள் எல்லாம் கஞ்சா சப்ளை முதல் பெரிய லெவல் தரகு வேலை வரை செய்துகொண்டிருக்கும் நாட்டில் அவர்களுக்கு ஆள் அனுப்பும் வேலையை அரசு செய்யவிருக்கிறது. எல்லா மாணவர்களும் RSS ல் உறுப்பினராக்கப்படுவார்கள் என அறிவிக்காததன் மூலம் இக்கமிட்டி தம் மக்கள் மீதான கரிசனத்தை காட்டியிருக்கிறது என நம்பலாம்.
ஊர்புற மாணவர்களின் தொழிற் திறமைகள் மிகுந்த கவனத்துக்குரியன. முறையான பள்ளி நேரத்துக்குப் பிறகு தொழில் அடிப்படையிலான படிப்புகள் தேசிய தொழில் வளர்ச்சி மேம்பாட்டு வாரியத்தின் உதவியோடு ஊர்ப்புற மாணவர்களுக்கு வழங்கப்படும். அதென்ன ஊர்ப்புற மாணவர்களுக்கு மட்டும் தொழிற்கல்வி?
இந்துத்துவா தனது கள்ளக்காதலனான கார்ப்பரேட்டுக்களுக்கு என ஒரு அன்புப்பரிசையும் இந்த அறிக்கையில் கொடுத்திருக்கிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 6 விழுக்காட்டை கல்விக்கு ஒதுக்கும் லட்சியம் நிறைவேற்ற முயற்சி எடுக்கப்படும் என சொல்லும் இந்த அறிக்கை, புதிய அரசுக் கல்விநிறுவனங்கள் எதுவும் துவங்கப்படாது என தெளிவுபடுத்துகிறது. ஆனால் கல்வித்துறையில் முதலீடு செய்யும் தனியார்களுக்கு வரிச்சலுகை கொடுத்து ஊக்குவிக்கப்படும் என்கிறது இவ்வறிக்கை. சென்ற ஆண்டு (2015) பட்ஜெட்டில் நிதியமைச்சர் ஜெட்லீ கல்விக்கான ஒதுக்கீட்டை 16 விழுக்காடும் சுகாதாரத்துக்கான ஒதுக்கீட்டை 15% வெட்டியிருக்கிறார் என்பதை நினைவில் வைக்கவும்.
ஆராய்ச்சி வளர்ச்சிக்கான அன்னிய நேரடி முதலீடு, வெளிநாட்டு பல்கலைக் கழகங்கள் இங்கே தொழில் செய்ய அனுமதி (அதனை பட்டம் கொடுக்க என நாகரீகமாக குறிப்பிடுகிறார்கள்), கல்வி நிறுவனங்களில் நிதியை பெருக்க முன்னாள் மாணவர் நிதி, பயிற்சிக் கட்டணத்தை உயர்த்துதல், கல்வி நிறுவனங்களில் தனியார் முதலீடு ஆகிய வழிகள் பின்பற்றப்படும் என்கிறது டி.எஸ்.ஆர் சுப்ரமணியம் குழு அறிக்கை.
கல்வியியலின் வாடையே படாத மத்திய அரசு அதிகாரிகளை புதிய கல்விக் கொள்கையை வரயறை செய்ய நியமனம் செய்ததில் இருந்தே பாஜகவின் நோக்கத்தை புரிந்துகொள்ள முடியும். அதிலும் அரசு நேர்மையாக செயல்பட்டதா என்றால், இல்லை. குழுவின் தலைவர் தனது அறிக்கையை முழுமையாக வெளியிடாவிட்டால் தாமே அதனை வெளியிடுவேன் என அரசை எச்சரித்திருக்கிறார் சுப்ரமணியம். இப்படி தன் சொந்த அறிக்கையிலேயே திருட்டுத்தனம் செய்யும் பாஜக இன்னும் எதை வேண்டுமானாலும் செய்யும். தமது படிப்பு சான்றிதழ்களையே போலியாக தயாரிக்கும் தலைவர்களிடம் நாம் நமது குழந்தைகளின் எதிர்காலத்தை ஒப்படைக்கும் துயர நிலையில் இருக்கிறோம்.
இந்தக் கல்விக்கொள்கையின் நோக்கம் தெளிவாக இருக்கிறது. பெருநிறுவனங்களுக்கு மலிவான கூலிகளை உருவாக்குவது, கல்விச்சூழலை முற்றிலுமாக இந்து மயமாக்குவது, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட ஏழைகளை உயர்கல்வியில் இருந்து துரத்துவது, கல்வியை முற்றாக தனியார் மயமாக்குவது ஆகியவைதான் இவ்வறிக்கையின் சாரம். போதுமான அளவு பசப்பல்கள், ஜோடனைகள் எல்லாம் சேர்க்கப்பட்டு இது கல்வி மேம்பாட்டுக்கான அறிக்கைபோல தோற்றமளிக்கிறது. பார்ப்பனீயத்தின் ஆளுமையின் கீழ் கல்வி இருந்தால் அது நாட்டை எப்படி சீரழிக்கும் என்பதற்கு நம்மிடம் இரண்டாயிரம் ஆண்டு வரலாறு உண்டு.
மாநிலத்திலோ சமச்சீர் கல்வியையே சகிக்க முடியாத சீமாட்டி ஆட்சியில் இருக்கிறார். தமிழக கல்வித்துறையை பீடித்த சாபங்களில் ஒன்றுதான் ஜெயலலிதா. ஆகவே பொதுமக்கள் இதில் தீவிர கவனம் செலுத்த வேண்டிய தருணம் இது. ஏற்கனவே நாம் பெரும் பொருளாதாரத் தாக்குதலில் சிக்கியிருக்கிறோம். கத்தோலிக்க பள்ளிகள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்திருக்கின்றன் (சி.எஸ்.ஐ, லூத்தரன் சபைகளின் பள்ளிகள் பரிசுத்த ஆவியின் உத்தரவுக்காக காத்திருகின்றன என நினைக்கிறேன்). அரசியல் இயக்கங்களும் இதற்கான எதிர்ப்பு போராட்டங்களை ஆரம்பித்திருக்கின்றன. ஆனால் அவை போதாது, இவை பற்றிய பரந்த விவாதங்களும் பெரும் எதிர்ப்பும் வெகு மக்கள் மத்தியில் இருந்து எழவேண்டும். இல்லாவிட்டால் பாஜகவின் அறிவுப் படுகொலையை வேடிக்கை பார்ப்பதைத் தவிர வேறு வழியிருக்காது.
வில்லவன் ராமதாஸ், சமூக-அரசியல் விமர்சகர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக