புதன், 3 ஆகஸ்ட், 2016

ஸ்வாதி கொலையும் சமுத்திரக்கனியின்... கபாலி ....விமர்சனமும்

ப. ஜெயசீலன் : ஸ்வாதி கொலை குறித்து நான் முதன் முதலில் பத்திரிக்கை செய்தியாக படித்த பொழுது அந்த கொலையின் ஊடாக நிகழ்த்த பட்டிருந்த அந்த வன்முறை மிக மிக அதிர்ச்சியாகவும் மிக மிக அறுவெறுப்புப்பூட்ட கூடியதாகவும் இருந்தது. எனக்கு அந்த செய்தியை படித்த பின் ஏனோ முதலில் நினைவுக்கு வந்த பெயர் சமுத்திரக்கனி. சமுத்திரக்கனியின் “நாடோடிகள்” படத்தை நான் பார்த்த பொழுது ஒரு நாகரீக சமூகத்தில் ஒரு வெகுஜன ஊடகமான சினிமாவில் இப்படி பட்ட கதையை சிந்திக்க கூடிய ஒருவரால் எப்படி இயக்குனராக மாற முடிந்தது என்று நிஜமாகவே எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஒரு ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் விரும்புவதும் பின் அவர்களுக்குள் ஏற்படும் ஒரு முரண்பாடு காரணமாகவோ அல்லது சலிப்பு தன்மை காரணமாகவோ அல்லது கருத்தொற்றுமை இல்லாத காரணத்தினாலேயோ அவர்கள் பிரிவது என்பது உலகம் முழுவதும் ஒரு நாகரீக ஏன் பழங்குடிகள் சமூகத்தில் கூட நடைமுறையில் உள்ள நியதிதான் பழக்கம்தான். அதனை சட்டமும் ஏற்று கொண்டுதான் விவாகரத்து நீதிமன்றங்களை வழங்கி உள்ளது.

இந்நிலையில் தான் நமது மேதாவி சமுத்திரக்கனி ஒரு ஆணும் பெண்ணும் காதலிக்க, பெரிய தியாகங்கள் செய்து அவர்களை சேர்த்து வைக்கும் இளைஞர்கள் அதன் காரனமாக பிரச்சனைகளை சந்தித்து வரும் நிலையில் சேர்த்து வைத்த இருவரும் பிரிந்து அவர்கள் பாட்டுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று தெரிந்து அந்த இளைஞர்கள் வெகுண்டெழுவதாய் ஒரு நாடோடிகள் கதையை செதுக்கி இருப்பார்.
பிடிக்கிறது என்று சொல்லி பின்னால் பிடிக்கவில்லை என்று சொல்லி மிக பெரிய படு பாதக செயலை செய்த அந்த பெண்ணை இந்த வீரமான இளைஞர்கள் கடத்தி காரில் போட்டு ஏறி மிதித்து “சம்போ சிவ சம்போ” என்ற முருகேற்றும் பாடல் பின்னணியில் ஒலிக்க தூக்கி வந்து பிடிக்கிறது என்று சொல்லியபிறகு பிடிக்கவில்லை என்று சொல்லக்கூடாது என்ற உயரிய உண்மையை சொல்லி அந்த பெண்ணை திரும்பவும் அந்த இளைஞனிடம் ஒப்படைத்து விட்டுத்தான் நிம்மதி அடைவார்கள்.இந்த படம் தமிழ் ரசிக கண்மணிகளுக்கும் மிக பிடித்து போய் வெற்றியும் அடைந்தது.
இந்த படத்தை நான் பார்க்க நேர்ந்த பொழுது நான் அதிர்ச்சியில் உறைந்து போனேன். நல்ல மன நிலையில் உள்ள ஒருவனால் இப்படி ஒரு கதையை யோசிக்க முடியுமா? ஒரு பெண் ஆம் இல்லை வேண்டும் வேண்டாம் என்று சொல்வது அவ்வளவு பெரிய படு பாதக செயலா? பாவ செயலாகவே இருந்தாலும் அந்த பெண்ணின் மீது இப்படி பட்ட வன்முறையை பிரயோகிப்பது எந்த வகையில் நியாயமானது அல்லது நாகரீகமானது?
ஒரு அரிசி பருக்கை அளவு கூட நவீன நாகரீக சமுதாயத்துடன் இனங்காத ஒரு நூற்றாண்டு பின் தங்கி விட்ட ஒருவனால் மட்டுமே இப்படி யோசிக்க முடியும். சமுத்திரக்கனியை போன்றெ ஒரு நூற்றாண்டு பின் தங்கி விட்ட யாரோ ஒரு மனித மிருக மனநோயாளிதான் ஸ்வாதி மீதும் அந்த அருவெறுப்பான வன்முறையை பிரயோகித்துள்ளான். இந்நிலையில்தான் திரை அரங்குக்கு வருபவர்கள் கவலையை மறந்து சந்தோசமாக இருந்து விட்டு போகும் வகையில் ரஞ்சித் கபாலியை எடுக்கவில்லை என்று ஞான கனி சலித்து கொண்டிருக்கிறது.
திரையரங்கு விலைமாதுகள் குடியிருக்கும் கூடமா? சந்தோசமாக இருக்க மட்டும்தான் திரை அரங்கம் பயன் பட வேண்டுமா? ஏன் அது ஒரு நிகழ்த்து கலையின் மேடையாக இருக்க கூடாதா? “கலை என்பது மக்களுக்கானது..அது மக்களின் பிரச்சனைகளை பேச வேண்டும்” என்று சொல்லும் ரஞ்சித் போன்ற கலைஞர்களின் செயல்பாடுகள் ஞான கனி போன்றவர்களுக்கு ஒரு போதும் புரியாது என்பது ஒரு பக்கம் இருக்க இந்த ஞான கனிகள் திரையரங்குக்கு வருபவர்கள் சந்தோசமாக இருக்க தாங்கள் எடுத்த திரைப்படங்களின் வித்துக்கள்தான் இன்று ஸ்வாதியை கொடூரமாக கொன்றது என்பதையாவது உணர்ந்து கொள்வார்களா ?   thetimestamil.com
கட்டுரையாளர் ப. ஜெயசீலன், மெல்போர்ன் அவுஸ்திரேலியா 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக