புதன், 3 ஆகஸ்ட், 2016

முன்னாள் குற்றப் பழங்குடிகள், கைதேர்ந்த கொலைக் குற்றவாளிகள்” கிரண் பேடி, புதுச்சேரி துணைநிலை ஆளுநரின் இனவெறி ட்விட்!,

உச்சநீதிமன்ற வழக்கறிஞர் கிருபா முனுசாமி : ஒரு குறிப்பிட்ட இனத்தை பிறப்பால் குற்றவாளிகள் என அழைப்பது, இந்திய அரசியலமைப்பு உத்திரவாதமளித்துள்ள அவர்களின் கண்ணியத்துடன் வாழும் அடிப்படை வாழ்வுரிமைக்கு எதிரானது என்று உங்களுக்கு தெரியாதா?
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, ஐபிஎஸ் பணியிருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும் இன்னமும் போலிஸ் அதிகாரியைப் போலவே நடந்துகொள்கிறார்.
ஆகஸ்டு 2-ஆம் தேதி தன்னுடைய ட்விட்டர் பதிவில், “முன்னாள் குற்றப் பழங்குடிகள் கொடூரமானவர்களாக அறியப்பட்டவர்கள். குற்றங்களைச் செய்வதில் அவர்கள் கைத்தேர்ந்தவர்கள். அரிதாகப் பிடிப்பட்டு, தண்டனை பெறுவார்கள்” என இனவெறி தொனிக்க பதிவு செய்திருக்கிறார். புதுச்சேரியில் உள்ள சிறைச்சாலைக்கு சென்றது குறித்த பதிவாக இது இருக்கலாம். சிறையில் உள்ள தண்டனை பெற்ற அல்லது வழக்கு விசாரணையில் அடைக்கப்பட்டுள்ளவர்களின் படங்கள் வெளியாவதை அவர்களுடைய சமூக வாழ்க்கையை பாதிக்கக்கூடும் என்ற அடிப்படையில் வெளியிடுவதை மனித உரிமை செயற்பாட்டாளர்கள் எதிர்க்கிறார்கள்.

ஆனால், கிரண் பேடியோ எவ்வித பொறுப்பும் இல்லாமல், தான் இன்னும் போலீஸ் அதிகாரியைப் போன்ற செயல்படுவதாக நினைத்து சிறையில் உள்ளவர்களின் படங்களை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.
கிரண்பேடியின் செயலுக்கு, “ஒரு குறிப்பிட்ட இனத்தை பிறப்பால் குற்றவாளிகள் என அழைப்பது, இந்திய அரசியலமைப்பு உத்திரவாதமளித்துள்ள அவர்களின் கண்ணியத்துடன் வாழும் அடிப்படை வாழ்வுரிமைக்கு எதிரானது என்று உங்களுக்கு தெரியாதா?” என உச்சநீதிமன்ற வழக்கறிஞர் கிருபா முனுசாமி உள்பட பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக