புதன், 3 ஆகஸ்ட், 2016

விழுப்புரம் நவீனா மரணம்: ஏன் இந்த இறுக்கமான மவுனம்?

அ.மார்க்ஸ்thetimestamil.com ; அ.மார்க்ஸ் விழுப்புரம் செந்திலின் நெருப்பு ஆலிங்கனத்தின் விளைவாக 70 சதத் தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் நவீனாவுக்கு நேர்ந்த கதி அடுத்த சில நிமிட ங்களில் எனக்கு வந்தது. நான் அப்போது NCHRO கருத்தரங்கில் இருந்தேன். பத்திரிகையாளர்களிடமிருந்து அந்தச் செய்தி கிடைத்தது. நவீனாவின் மாமா ஏழுமலையிடம் பேசி தகவலை உறுதி செய்து கொண்டேன். அவர் ஒருகாலத்தில் தமிழ்த் தேசிய இயக்கங்களுடன் தொடர்பில் இருந்தவர். நான் மிகவும் வேதனைப்பட்ட சமீபத்திய நிகழ்வுகளில் ஒன்று இது. அந்தப் பெண், பெண் எனச் சொல்வதைக் காட்டிலும் ஒரு சிறுமி. மிகவும் ஏழைக் குடும்பம். நாங்கள் உண்மை அறியச் சென்ற போது தயங்கித் தயங்கி அவளிடம் சிலவற்றைக் கேட்ட போது அவள் அழுதது நினைவுக்கு வந்தது.

செந்திலின் குடும்பமும் அதை விட ஏழ்மையான குடும்பம். அவரது அப்பாவும் பல ஆண்டுகள் முன் இதேபோல ரயிலில் அடி பட்டுச் செத்ததை அவரின் அம்மா கண் கலங்கச் சொன்னார். இந்தப் பிரச்சினையில் இருவருமே பரிதாபத்திற்குரியவர்கள்.
இளம் வயதில் ஆண்களும் பெண்களும் நெருங்கிப் பழகும் வாய்ப்புகள் அதிகமாகின்றன. தவறான புரிதல்கள், அல்லது சரியான புரிதல்களாக இருந்த போதிலும் பிற சமூக மற்றும் குடும்பத் தடைகள் குறுக்கிடும்போது பெண்கள் பின் வாங்க நேர்கிறது. அது இப்படியான நிகழ்வுகளில் முடிந்து விடுகிறது. சமுக அக்கறை உள்ளவர்கள் கவனத்தில் எடுத்துப் பரிசீலிக்க வேண்டிய பிரச்சினைகளில் இதுவும் ஒன்று.
ஆனால் இது குறித்து இப்போது, அதுவும் இன்றைய ஊடகப் பரவலுள்ள இந்தச் சூழலில் காக்கப்படும் மௌனம் உண்மையிலேயே வருந்தத தக்கது.
இந்தப் பிரச்சினையில் இன்று உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் அந்த அப்பாவிப் பெண்ணுக்கு ஆறுதல் அளிப்பது என்பது காலங் காலமான சாதியக் கொடுமைகளை எல்லாம் இல்லை எனச் சொல்வதாக ஆகிவிடாது. அதே போல இந்தப் பிரச்சினையில் அப்பெண்ணின் பக்கம் நின்று பேசும் டாகடர் ராமதாஸ் போன்றவர்கள் அப்படிப் பேச எல்லா நியாயங்களும் இருந்த போதிலும் இன்று நடக்கும் எத்தனையோ சாதி வன்மக் கொலைகள்ளின் சாதி வெறிக் காரணிகளை இதன் மூலம் நியாயப்படுத்த முயல்வதையும் ஏற்க இயலாது.
டாக்டர் ராமதாஸ் தன் அறிக்கையில் இந்தப் பிரச்சினை தொடர்பான எங்களின் உண்மை அறியும் குழு அறிக்கையை ஒரு சான்றாகக் குறிப்பிட்டுள்ளார். மிக்க நன்றி. ஆனால் டாக்டர் அவர்களிடம் ஒரே ஒரு கேள்வியை மட்டும் முன் வைக்க விரும்புகிறேன். நாங்கள் எங்கள் ஆய்வுகளில் எங்களுக்குப் பட்ட உண்மைகளைச் சொல்பவர்கள் என்பதை இதன் மூலம் ஏற்றுக் கொண்டுள்ளீர்கள். இது போன்ற இன்னும் எத்தனையோ வன்முறைகளில் நாங்கள் அறிக்கைகளைத் தந்துள்ளோம் அவற்றிலும் நாங்கள் இதே போல உண்மைகளைத்தான் சொல்லியுள்ளோம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் அணிகளிடமும் இதைப் பேச வேண்டும்.
பின்னர் பதிவு செய்யப்பட்டது…
விழுப்புரம் நவீனா இன்று காலை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தீக்காயங்களுக்குப் பலியாகியுள்ளார்.
நேற்று மாலை நான் இட்ட பதிவைப் பார்த்து விட்டு கடலூர் நண்பர் Rights Babu தொடர்பு கொண்டார். அவரும் எங்கள் உண்மை அறியும் குழுவில் பங்கு பெற்றவர்.
நாளை நான் வருவதாகவும் புதுச்சேரி சென்று உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் அந்தப் பெண்ணைப் பார்த்து வரலாம் எனவும் திட்டமிட்டோம்.
காலையில் இந்தத் துயரச் செய்தி. அந்த ஏழைக் குடும்பத்திற்கு எங்களின் நெஞ்சார்ந்த அஞ்சலிகள்.
நவீனா கொளுத்தப்பட்ட அன்று அவளது மாமா ஏழுமலையிடம் பேசியதைச் சொன்னேன். அவர் முன்பு இயக்கங்களுடன் தொடர்பில் இருந்தவர் என்றேன். சென்ற ஆண்டு இந்தப் பிரச்சினை நடந்து ரயிலில் அடிபட்டு செந்தில் ஒரு கையையும் காலையும் இழந்த போது அது திட்டமிட்ட தாக்குதலின் விளைவு என ஊடகங்களும் சில இயக்கங்களும் எழுதியும் பேசியும் வந்த போது இலக்காக்கப்பட்டதுகூட ஏழுமலைதான். மாமா எனும் உறவின் அடிப்படையில் அந்தச் சிறுமியிடம் செந்தில் வந்து அடிக்கடி பிரச்சினை செய்வதை ஒருமுறை கண்டித்து அந்த வழக்கு காவல்துறை வரை போய் செந்தில் கைதும் செய்யப்பட்டார். எனவே செந்தில் மீது திட்டமிட்ட தாக்குதல் நடந்தது என்றால் அதனால் பாதிக்கப்படக் கூடிய நிலையில் இருந்தவர் ஏழுமலை. அவர் இப்போது இயக்கத் தொடர்புகளை எல்லாம் விட்டு விட்டு சைக்கிளில் பால் வியாபாரம் செய்து கொண்டுள்ளார்.
நவீனா ஆபத்தான நிலையில் இருப்பது குறித்து நான் மூன்று நாள் முன்னர் அவரிடம் பேசியபோது அவர் கூறினார்:
“கை காலை இழந்த பின்னும் அந்தப் பையன் அடிக்கடி வந்து நவீனாவுக்குப் பிரச்சினை கொடுத்திட்டுதான் இருந்தான். நான் அப்பவே நவீனாவின் அப்பா அம்மா கிட்ட சொன்னேன். நவீனாவைக் கொண்டு போயி எங்காவது வெளியூர் பள்ளிக்கூடத்தில சேருங்கன்னு. அவங்களால முடியல. அந்தப் பையன் ரயில்ல அடிபட்ட போது அது தாக்குதல்னு பிரச்சாரம் செய்யப்பட்டபோது கூட நாங்க பாதுகாப்புக்காகக் கூட எங்க சாதி இயக்கங்க கிட்ட போகல. போகக்கூடாதுங்கறதுல உறுதியா இருந்தோம். எங்க குடும்பத்துல இரண்டு திருமணங்கள் கலப்புத் திருமணம். (அந்த விவரங்களையும் சொன்னார்). தலித்கள்னு நாங்க அந்தத் திருமணத்தை சாதி அடிப்படையில் தடுக்கல. இப்ப நடந்ததை எல்லாம் பாக்கும்போது .ஒரு வேளை சாதிச் சங்கத்துல போயிருந்தாலாவது பாதுகாப்பு கிடைச்சிருக்குமோன்னு தோணுது..”
ஒரு விரக்தியில் அவர் பேசியதுதான் இது. ஆனால் இப்படியான மனநிலை ஒரு முன்னாள் இயக்கவாதியிடம் கூடத் தோன்றுவது குறித்து நாம் சீரியசாக சிந்திக்க வேண்டும்.
இங்கே சமூக ஆர்வலர்கள் மத்தியில் தொடரும் இறுக்கமான மவுனம்தான் இப்போது இதையும் இங்கே சொல்ல என்னை நிர்ப்பந்திக்கிறது.
மனித உரிமை செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான அ. மார்க்ஸின் முகநூல் பதிவுகளின் தொகுப்பு இங்கே…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக