புதன், 3 ஆகஸ்ட், 2016

பேரா. சுபவீ, ஊடகவியலாளர் குணா மற்றும் சிலருக்கு ஒரு திறந்த மடல்: கௌதம சன்னா...

கௌதம சன்னாகௌதம சன்னா பேராசிரியர் சுபவீ அவர்களுக்கு வணக்கம்.
இந்த கடிதம் உங்களுக்கும் உங்களைப் போலவே கருத்துத் தெரிவித்துள்ள ஊடகவியலாளர் குணா மற்றும் சூனியர் விகடன் இதழ் குழுமத்திற்குமானது. நீங்கள் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள் என்பதால் இதை எழுத வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. என்னை உங்களுக்கு யாரென தெரியாமல் இருக்கலாம். நான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னணி பொருப்பாளராக இருந்தாலும் அந்த தகுதியில் இக்கடிதத்தை எழுதவில்லை. ஒரு சாமான்ய மனிதனாக எனக்கு எழுந்துள்ள கேள்விகளினால் உந்தப்பட்டு இக்கடிதத்தை எழுதுகிறேன். இதற்கு மற்ற பின்னணிகளை சேர்த்துக் கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.

அண்மையில் நீங்கள் வெளியிட்டுள்ள ஒரு கண்டன அறிக்கையில்
விழுப்புரத்திற்கு அருகில் நவீனா என்னும் பெண் செந்தில் என்னும் இளைஞனால் எரித்துக் கொலை செய்ய முயன்று இருக்கும் செய்தி மிகப் பெரும் வேதனை தரும் செய்தியாக வெளி வந்துள்ளது. இதே செந்தில் முன்பு ஒருமுறை தான் ஒரு பெண்ணை காதலித்ததற்காக கை கால் வெட்டப்பட்டிருப்பதாக சொல்லி காவல்துறையில் புகார் கொடுத்து இருந்தார்.
அதனை ஒட்டி புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாதத்தில் நானும் கலந்து கொண்டேன். அவன் பக்கம் நியாயம் இருப்பதாக எண்ணி கை கால் வெட்டப்பட்ட அவனுக்காக பரிதாபப்பட்டு அன்று கருத்துக்களை நான் தெரிவித்தேன். அதற்காக இப்போது வெட்கமும் வேதனையும் அடைகிறேன்.
தன்னை விரும்பாத ஒரு பெண்ணை அடையவேண்டும் அல்லது அழிக்க வேண்டும் என்று நினைக்கும் மிருக குணம் கொண்ட ஒருவனுக்காகவா பரிந்து பேசினோம் என்று எண்ணி இப்போது நான் துயரப் படுகிறேன். செந்திலின் நடவடிக்கை மிகக் கடுமையான கண்டனத்திற்குரியது.
நவீனா இல்லத்தினரோடு துயரத்தைப் பகிர்ந்து கொள்கிறேன். – சுபவீ
என்று உங்கள் வலைப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். இதே போன்ற பதிவை ஊடகவியலாளர் குணாவும் ஆனந்த விகடனும் போட்டு தமது மன்னிப்பை கோரியுள்ளனர். உங்களது துயரத்தில் நானும் பங்கேற்கிறேன். நவீனாவிற்கு மட்டுமல்ல சாதிய வன்முறைக்கு பலியாகி வரும் எல்லா பெண்களின் துயரத்திலும் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
நான் உங்களின் நேர்மையை சந்தேகிக்கவில்லை. ஆனால் உங்கள் அனைவரின் அவசரத்தையும் அதிர்ச்சியோடு பார்க்கிறேன். உங்கள் கண்டனங்கள் உண்மைக்கு வெகுதூரம் இருப்பதுடன் அது உருவாக்கவுள்ள கேடுகளை பற்றிக் கொஞ்சமும் முன்யோசனையில்லாமல் வெளிவந்துள்ளது என்பதுதான் அதிர்ச்சிக்குக் காரணம்.
மனநோயாளியாக மாறிவிட்ட டாக்டர் ராமதாசின் செயல்பாடுகளுக்கு இன்றைய ஊடகங்களும் அறிவாளிகளும் ஏதாவது ஒரு வகையில் தெரிந்தும் தெரியாமலும் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு உங்களின் எதிர்வினையும் ஒரு சாட்சி.

முதலில் அ மார்க்ஸ் குழுவினரின் அறிக்கையிலிருந்து பார்ப்போம்:
1.செந்திலின் கை கால் துண்டிக்கப்பட்டது ரயில் விபத்தால்ஏற்பட்டதுதான் என எங்கள் குழு உறுதியாகக் கருதுகிறது. இதன் பின் வேறு எந்தச் சதித் திட்டமும் இல்லை.
2.சாதி மீறிய திருமணங்களுக்கு எதிராக இன்று பெரிய அளவில் சாதி அமைப்புகளும், பா.ம.க போன்ற அரசியல் கட்சிகளும் இயங்குவதாலும், அதன் விளைவாக இன்று இப்படியான காதல் திருமணங்களில் தலித் இளைஞர்கள் கொல்லப்படுவதாலும் இது போன்ற பிரச்சினைகளில் சாதி சக்திகள்தான் இதைச் செய்திருப்பார்களோ என்கிற அய்யம் யாருக்கும் ஏற்படுவது இயல்புதான். அந்த வகையில் இதிலும் சில ஐயங்களை தனி நபர்களும், சில இயக்கங்களும் முன்வைக்கின்றன. செந்திலுக்கு ஏற்பட்டது விபத்தல்ல, அது திட்டமிட்ட தாக்குதல் என அவர்கள் கூறுகின்றனர். நாங்கள் இதை ஏற்கவில்லை. எனினும் இது ஒரு உணர்வு நுட்பம் மிக்க ஒரு பிரச்சினையாக உள்ளதால், இது குறித்து ஒரு இரண்டாவது கருத்தைப் (second opinion) பெறுவது போல சி.பி.சி.ஐ.டி போன்ற வேறொரு புலனாய்வு நிறுவனத்திடம் இந்த வழக்கை மேல்விசாரணைக்கு ஒப்படைக்கலாம். அந்தப் பெண்ணின் பெயர் செந்திலின் புகாரில் தவறாக உச்சரிக்கப்பட்ட ஒரே காரணத்தினாலேயே அப்படி ஒரு பெண்ணே இல்லை என இந்த வழக்கை விசாரித்த மேற்குகாவல் நிலையம் அறிவித்தது வழக்கை மூட நினைத்தது மிகப்பெரிய தவறு. எனவே மறு விசாரணை ஒன்றுக்கு உத்தரவிடலாம் என்பதை எங்கள் குழு வற்புறுத்துகிறது.
3.இது போன்ற பிரச்சினைகளில் ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பாக நிற்போர் மிகவும் விழிப்புணர்வுடன் சாதீய வன்முறைகளைக் கண்காணிப்பது அவசியம் என்கிற அதே நேரத்தில், தீரவிசாரித்துக் களத்தில் இறங்குவதும் அவசியம்.
4.செந்திலின் தற்போதைய நிலை மிகவும் பரிதாபமானது .அவரது விதவை அன்னை 21 ஆண்டுகளுக்கு முன் இதே போல ஒரு ரயில் விபத்தில் தன் கணவரைப் பறி கொடுத்தவர். இந்த முதிய வயதில் அவர் மகன் இந்நிலைக்கு ஆளாகியிருப்பது கொடுமை, முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து செந்திலுக்கு உரிய இழப்பீடும் மோட்டார் பொருத்தப்பட்ட சக்கரவாகனம் ஒன்றும் அளிக்க வேண்டும்.
மேற்கண்ட குழுவின் முடிவுகளில் எனது கருத்தை இங்கே பதிவிட விரும்புகிறேன். அது உங்களுக்கு ஒரு தெளிவைத் தரலாம்.
முதலாவதாக. உண்மையறியும் குழுவின் அறிக்கையோடு நான் உடன்படுகிறேன். ஆனால் ஒரு பகுதியளவிலே மட்டும்தான்.. குற்றவியல் வழக்குகளில் விசாரணை என்பது பல கோணங்களைக் கொண்டிருக்கும். குழுவின் விசாரணையில் சில கோணங்கள் விடுபட்டிருக்கலாம் என்பதற்கு சாத்தியமுள்ளது, அதனால்தான் சிபிசிஐடி விசாரணைக்கு உரிய வழக்காக செந்திலின் சம்வத்தைக் குழு கருதியிருக்கிறது. பாதிக்கப்பட்ட நபருக்கு நீதி கேட்கும்போது ஒரு முறைக்கு பல முறை பரிசோதித்துக் கொள்வது நல்லது என்ற அடிப்படையிலே குழு கூறியிருப்பதை நாம் வரவேற்கத்தான் வேண்டும்.
இரண்டாவதாக.. ரயிலில்தான் செந்திலின் கை கால் துண்டிக்கப்பட்டிருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அது எப்படி நடந்திருக்கும் என்பதில் உள்ள கோணங்கள் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டியவை. அப்படி எதுவும் இந்த வழக்கில் நடந்ததாகத் தெரியவில்லை. காவல்துறை தொடக்கம் முதலே செந்திலின் வழக்கை தவறாக கையாண்டு முடித்துவிட்டது. அதனால் கடைசிவரை உண்மை வெளிவராமலே நீதியின் பார்வை செந்திலுக்கு கிடைக்காமலே போய்விட்டது. அதற்கு இந்த அறிக்கையும் ஒரு வகையில் மறைமுகமாக உதவியுள்ளது என்பதை மன வருத்ததோடு சுட்டிக் காட்டவேண்டியுள்ளது.
மூன்றவதாக.. இழப்பீடு மட்டுமல்ல மோட்டார் பொருத்தப்பட்ட ஒரு வண்டியை செந்திலுக்கு செந்திலுக்குத் தர வேண்டும் என குழு பரிந்துரைத்துள்ளது. காரணம் செந்திலின் வலது கை மற்றும் கால் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது என்பதால்தான்.
இப்போது உங்கள் முன்னும் ஊடகயிலாளர் குணா மற்றும் ஆனந்த விகடன் குழுமத்தின் முன்னும் வைக்கின்ற கேள்விகளை பின்வருமாறு வரிசைப் படுத்திக் கொள்கிறேன்.
  1. செந்தில் நவீனா காதல் என்கிற தனிப்பட்ட விசயம் செந்திலின் கை கால் துண்டிக்கப்பட்டு அது வழக்கான பிறகுதான் பொதுப் பிரச்சனையானது. அது தொடர்பாக கொடுக்கப்பட்ட புகார் விசாரிக்கப்படாமலே காவல்துறை முடித்துக் கொள்ள, அ.மார்க்ஸ் உண்மையறியும் குழுவிற்கு பல சந்தேகங்கள் இருந்த நிலையில் அக்குழுவின் முடிவினை மட்டும் இறுதியானதாக நீங்கள் நம்பியது எப்படி.
  2. ஒரு வேளை குற்றவியல் விசாரணை முறையாக நடத்தப்பட்டு ரயில் அடிப்பட்டு செந்தில் கைகால் இழக்க சிலர் காரணமாயிருக்கலாம் என்று முடிவாகியிருந்தால் என்ன நடந்திருக்கும். அப்படி ஒரு விசாரனைக்கான வாய்ப்பு செந்திலுக்கு கிடைக்காமலே போய்விட்டதே அதைப் பற்றி ஏன் நீங்கள் கருத்து கூறவில்லை.
  3. ஊனமுற்ற இந்த நிலையில் செந்திலினால் நடக்க முடியாது. கை கால் துண்டிக்கப்பட்டு ஆறு மாதங்கள் ஆன நிலையில் எந்த ஒரு பலசாலியும் பொய்க் காலை வைத்துக் கொண்டு சகஜமாக நடக்க முடியாது. அதற்கு தனி பயிற்சி வேண்டும். மன உறுதி மேம்பட வேண்டும். அதே நேரத்தில் குழு சொன்னதுபோல் மோட்டார் வாகனம் கொடுத்தால்கூட வலது கை இல்லாததால் வண்டியே ஓட்ட முடியாது. எனவே மற்றவரை சார்ந்தே வாழ வேண்டிய நிலையில் செந்தில் இருந்துள்ளார்.
4.நவீனாவினை கொலை செய்ய உடலின் ஒரு பக்க இயக்கமே இல்லாத செந்தில் திட்டமிட்டு வன்னியர்கள் வசிக்கும் பகுதிக்குள் போனது எப்படி?
5.போகும்போது கையில் பத்து லிட்டர் பிடிக்கக்கூடிய பெட்ரோல் போத்தலை கொண்டு போயுள்ளார். அதை கொண்டு போவதற்கான சாத்தியம் எப்படி இருக்கிறது.
6.அப்படியே கொண்டு போனாலும் ஏற்கெனவே பிரச்சினைக்குரிய நபர் வன்னியர் குடியிறுப்பில் நன்கு அறிமுகமானவராகத்தான் இருக்க முடியும். அவரை யாருக்கும் அடையாளம் தெரியாமல் போய்விட்டதா. அவர் போகும்வரை யாருமே அவரை கண்டுக் கொள்ளவில்லையா..?
  1. நவீனாவின் வீட்டிற்கு நுழைந்து கதவைத் திறந்து, நவீனாவை வரவழைத்து வீட்டில் உள்ள மற்றவர்களை ஒரு அறையில் வைத்துப் பூட்டிவிட்டு, நவீனாவின் மீது பெட்ரோல் ஊற்றி, தீப்பெட்டியைத் திறந்து பற்றவைத்து… இவை அத்தனையும் தன்னுடைய ஒற்றை இடது கையாலே செய்ய வேண்டும். செய்ததாக சொல்கிறார்கள்.. இவையெல்லாம் எந்தவிதமான எதிர்ப்பும் இன்றி நடந்திருக்கிறேதே எப்படி.. ஒரு சிறிய தள்ளலிலேயே விழுந்துவிடக்கூடிய பலவீனமான செந்தில் இவ்வளவு பேரை சமாளித்தது எப்படி?
8.முதலில் தன் மீது பெட்ரோல் ஊற்றிக் கொண்டு பிறகு நவீனாவை கட்டிப் பிடித்துக் கொண்டான் செந்தில் என்கிறார்கள். தன் மீது ஊற்றிக் கொள்ளும் வரை இருந்த அவகாசமும், ஒற்றைக் கையாலே தீப்பெட்டியை சாகசமாகத் திறந்து தீக்குச்சியை எடுத்து பற்ற வைக்கும்வரை உள்ள அவகாசத்தில் அந்த பெண் ஏன் தப்பிக்க முடியாமல் போனது ஏன். அல்லது கூச்சல் போட்டிருந்தால்கூட மற்றவர்கள் காப்பாற்றி இருக்கலாமே அதைப்பற்றி ஏன் மற்றவர்கள் வாய் திறக்க மறுக்கிறார்கள்.
9.செந்தில் நவீனா இருவரும் தீக்காயங்களுடன் போராடிக் கொண்டிருந்தபோது செந்திலை மட்டும் மருத்துவமனைக்கு கொண்டு போகாமல் குற்றுயிராய் விட்டு போனது மட்டுமின்றி, காவல்துறை வந்தபோதுகூட அங்கிருந்த வன்னியர்கள் மறித்தார்களே அது ஏன்.. அந்த தாமத்தால் செந்தில் செத்துப் போனான் என்றால் அது கொலை என்றுதானே பார்க்கப்பட வேண்டும்..?
10.செந்தில் எப்படி செத்தான் என்பதைப் பற்றி இதுவரை வெளிவந்த தகவல்கள் எல்லாம் அங்கிருந்த வன்னியர்கள் கொடுத்த செய்திதான். செந்தில் தரப்பில் ஒரே ஒருவர் மட்டும், அது செந்தில் மட்டும்தான். இறந்து போனவரை சாட்சியாக இனி அழைக்க முடியாது என்பதால் வன்னியர்கள் தரப்பு வாக்குமூலத்தை மட்டும் வைத்துக் கொண்டு, அதுவே இறுதியானதாக இருக்கும் என்று எப்படி உங்களால் முடிவுக்கு வர முடிந்தது.
11.நவீனாவின் பெற்றோர் வீட்டில் இல்லை என்ற தகவலை செந்தில் பெற்றது எப்படி, அவருக்கு யார் போன் செய்தது என்பதைப் பற்றின விசாரணை ஏதாவது நடந்ததா..? செந்தில் கைப்பேசியையும், நவீனாவின் கைபேசியையும் ஆய்வு செய்யாமல் இந்த உண்மை தெரிய வருமா.., அல்லது மற்ற யார் மூலம் தகவல் செந்திலுக்கு போனது என்கிற சந்தேகத்தை எப்படித் தீர்த்துக் கொள்வது.
12.செந்தில் இறந்தபோது மறுநாள் இதழ்களில் வந்த செய்தியில் லைட்டரைக் கொண்டு தீ வைத்துக் கொண்டுதான் நவீனாவை கட்டிக் பிடித்துக் கொண்டான் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் காவல்துறையிடம் கொடுக்கப்பட்ட சாட்சிப் பொருள்களில் தீப்பெட்டி கொடுக்கப்பட்டுள்ளது. இது எப்படி மாறியது.
13.செந்தில் இறந்தவுடன் அவன்தான் தீவைத்துக் கொண்டு நவீனாவைக் கொலை செய்துவிட்டான் என்று உடனே செய்தி வெளியாகி, உடனே மன்னிப்புக் கேட்கும் நிலை உருவானதே அதன் பின்னணி என்னவாக இருக்கும்.
மேற்கண்டவைகளெல்லாம் குற்றவியல் விசாரணையின் போது எதிர் கொள்ள வேண்டிய கேள்விகள். இவற்றிற்கு பதில் தெரியாமல் வழக்கினை முடிப்பதும், சம்பவத்திற்கு உடனடி காரணத்தைக் கண்டுப்பிடிப்பதும் இயலாத காரியம். குறைந்தபட்ட சட்ட நடைமுறை அறிவு இல்லாதோர் வேண்டுமானால் அப்படி சொல்லலாம், நம்பலாம், மெத்த கற்ற தங்களைப் போற்றவர்கள் நம்பியதுதான் ஆச்சர்யமாக இருக்கிறது.
இதுவரை குற்றவியல் காரணங்களை மட்டுமே பார்த்தோம், இனி அரசியல் ரீதியாக சில விசயங்களை தெளிவு படுத்திக் கொள்ள வேண்டும். கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக பாமக நடந்துக் கொண்ட முறையும், அதன் அநியாயங்களும் உங்களுக்குத் தெரியும். நீங்கள்கூட அதற்கு எதிர்வினையாற்றினீர்கள். பாமகவின் அடித்தளம் சிதைந்துக் கொண்டிருக்கிறது என்பதற்காக அதை தூக்கி நிறுத்த திட்டமிட்டு உருவாக்கப்பட்ட தாக்குதல்தான் தருமபுரியில் நடத்தப்பட்ட கொள்ளையும் தாக்குதலும்.
அந்த தாக்குதலுக்கு காரணமாக திவ்யாவின் தந்தையான நாகராஜின் தற்கொலை என்று சொல்லப்பட்டது. ஆனால் அங்கு விசாரித்தபோது திவ்யா மற்றும் அவரது தாயாரிடம் அவரது மரண நேரத்திற்கு முன்பே நாகராஜ் செத்துப் போய்விட்டார் என்பது சொல்லப்பட்டது. அதே நேரத்தில் அவரது தற்கொலை செய்துக் கொண்டார் எனபதை யாரோ சில மூன்றாம் நபர்களே வெளியுலகத்திற்கு சொன்னார்கள். அவர்கள்தான் உடலைக் கொண்டு வந்து சாலையில் போட்டு மறியல் செய்து கலவரத்தைத் தொடங்கினார்கள். கலவரம் நடந்துக் கொண்டிருக்கும்போது தான் திவ்யாவின் தாயாருக்கு தனது கணவர் இறந்து போன செய்தியை உறுதிப்படுத்த முடிந்தது. எனவே நாகராஜ் கொலை செய்யப்பட்டார் என்ற சந்தேகத்தை காவல்துறை கடைசிவரை கணக்கில் எடுத்துக் கொள்ளாமலே வழக்கினை கைகழுவி விட்டது. அதற்கு பிரதியுபகாரமான மாவட்ட கண்காணிப்பாளராக இருந்த ‘அஸ்ரா கர்க்’ அவர்களின் மைத்துனிக்கு மருத்துவ கல்லூரியில் இடம் வாங்கித் தரப்பட்டது என்பதை சில இதழாளர்கள் அம்பலப்படுத்தினார்கள்.
மேற்கண்ட நாகராஜின் கொலை திட்டமிட்டு கலவரத்திற்காக நடத்தப்பட்டது என்பதை ஊடகங்கள் சிலவற்றில் வெளிக் கொண்டுவரப்பட்டது. அது பாமகவின் தேர்தல் வெற்றிக்காக நடத்தப்பட்ட கொலை மற்றும் கொள்ளை, தாக்குதல் என்பதில் எவ்வித ஐயமும் அன்றைய நடப்புகள் நிறுவின. அதற்குப் பிறகு நாடகக் காதல், என்ற ஒரு அசிங்கமான அஸ்திரத்தை பாமக கையில் எடுத்துக் கொண்டு தமிழகத்தையே கலவர மண்ணாகியது. தனது தேர்தல் வெற்றி என்ற குறுகிய நோக்கத்திற்காக பாமக எந்த அளவிற்கு இறங்கும் என்பதை அதன் அத்தனை செயல்களும் நிருபித்தன என்பது தங்களின் கவனத்திற்கு வராமல் போயிருக்காது.
இன்னும் பாமக தனது செயல்பாடுகளை நிறுத்திக் கொண்டதாகத் தெரியவில்லை. நமது சமூக முன்னோர்கள் உருவாக்கி வைத்திருந்த அத்தனை நல்ல இணக்கங்களையும் தனது காலுக்கு கீழே போட்டு மிதித்து, தமிழகத்தை சாதி வெறிபிடித்த மனநோயாளிகளின் கோட்டையாக மாற்றிவிட முயன்று வருகிறது. இந்நிலையில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் ராமதாசின் பாமக அடைந்து படுதோல்வி மீண்டும் அதை வன்முறை பாதைக்கு திருப்பிவிடும் என்பதைப் பற்றி எல்லோரும் பயந்தார்கள். அதன் தொடர்ச்சியாக நவீனாவின் மரணத்தை ஏன் நீங்கள் பார்க்க மறந்துவிட்டீர்கள்.
எல்லாவிதத்திலும் சந்தேகத்திற்கு உரிய செந்தில் நவீனா மரணம் ஏன் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டிருக்கக்கூடாது. இந்த கோணத்தை நாம் மறுத்துவிட முடியுமா? எத்தனையோ பெண்கள் பாலியல் படுகொலைகள் செய்யப்பட்டபோது அமைதியாக இருந்த டாக்டர் ராமதாஸ் இப்போது பெண்களின் பாதுகாப்புக் கோரி போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளார். அவரது அடிபொடிகள் திருமாவளவனை தூக்கில் போட வேண்டும் என்று வன்முறைக்கு தூபம் விடுகிறார்கள். அதுவுமின்றி கலப்புமண தடுப்பு படையை உருவாக்கப்போவதாக அவரது ஆதரவாளர்கள் அறிவித்திருக்கிறார்கள். இந்த செயல்களெல்லாம் திடீரென நடந்தவைகள் போலவோ, உணர்ச்சி வேகத்தில் நடந்தவை போலவே தெரியவில்லை. மிக நிதானமாக திட்டமிட்டு நடத்தப்பட்டவை. அதற்கான முன்னுதாரானங்கள் நிறைய இருக்கின்றன.
இப்போது உங்களுக்கும் ஊடகவியலாளர் குணா மற்றும் ஆனந்த விகடனுக்கும் இந்த திறந்த மடலை எழுதக்காரணம் என்ன.. நீங்கள் மன்னிப்புக் கேட்டதின் மூலம் உங்களது பெருந்தன்மையை உலகிற்கு காட்டலாம். ஆனால் உண்மையினை புதைப்பதற்கு நேரடி காரணமாக உங்களது பெருந்தன்மையின் மூலம் நடந்து விட்டது என்பதால்தான். ஊடக வெளிச்சம் கொண்ட உங்களின் கருத்துக்கள் ஊடகங்களின் மத்தியில் ஒரு தயக்கத்தை உருவாக்கி செந்திலுக்கும், நவீனாவிக்கும் கிடைக்க வேண்டிய நீதியை கிடைக்க விடாமல் செய்துவிட்டது என்பதால்தான்.
இனி, இச்சம்பவத்தில் உண்மை வெளிவரும் என்ற நம்பிக்கை இல்லை. வழக்குப் பற்றின எல்லா விவரங்களும் பாமக வன்னியர்கள் தருவது மட்டுமே உண்மை என்கிற நிலை இருக்கும்போது நியாயம் எப்படி கிடைக்கும் என்று நினைக்கிறீர்கள். நீங்கள் அனைவரும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதின் மூலம் உங்களை நடுநிலையானவர்களாக, நேர்மையானவர்களாக காட்டிக் கொண்டிருக்கிறீர்கள். அது உங்களுக்குப் பெருமை தரலாம். ஆனால் நடுநிலைமை என்று ஒன்று இல்லை உங்களுக்கு நன்றாகத் தெரியும். எல்லோரும் எதாவது ஒரு பக்கத்தில்தான் நிற்க வேண்டும். அது எந்தப் பக்கம் என்பதில்தான் நேர்மை என்பது அடங்கி இருக்கிறது.. இப்போது கூட உங்களின் உள் மனதை நான் சந்தேகிக்கவில்லை. ஆனால் உங்களின் பதட்டம், அவசரம் அது ஏன் மற்ற நேர்வுகளில் உடனே வெளிப்படவில்லை என்பதுதான். உங்களின் பங்களிப்பை நிலையாக எதிர்நோக்கும் அன்பர்களில் நானும் ஒருவன். நீங்கள் தடம் மாறக்கூடாது என்பது எமது நோக்கம். இது உங்களுக்கும் குணா மற்றும் விகடன் குழுமத்திற்கும் சேர்த்துதான்.
நீங்கள் அனைவரும் சொன்ன கண்டனமும், கேட்ட மன்னிப்பும் இனி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தண்டனையாக தொடரும்.. அப்போது என்ன செய்வீர்கள் என்ற வருத்தத்துடன்.
  • கௌதம சன்னா.
கௌதம சன்னா, எழுத்தாளர். அரசியல் செயற்பாட்டாளர்.
நன்றி: அம்பேத்கர். இன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக