புதன், 24 ஆகஸ்ட், 2016

நாரயண பெருமாள் பதவி நீக்கம் .. சசிகலா புஷ்பா: யாரையெல்லாம் நீக்குகிறாங்களோ அது அவங்களுக்கு நன்மைதான்

‘நெல்லையைச் சேர்ந்த நாராயணபெருமாள் அதிமுக அமைப்புச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். கடந்த 18.8.16 அன்று, டிஜிட்டல் திண்ணையில் இந்த நாராயணபெருமாள் பற்றி நான் சொல்லியிருக்கிறேன்.
‘நெல்லை புறநகர் மாவட்டச் செயலர் நாராயணபெருமாள். சட்டமன்றத் தேர்தல் முடிந்ததும் அதிரடியாக மாவட்டச் செயலாளர்களை மாற்றினார் ஜெயலலிதா. அதாவது, தேர்தல் சமயத்தில் சரியாகப் பணியாற்றாத பலரின் பதவிகள் காலியானது. அப்படி பதவி பறிக்கப்பட்டவர் நெல்லை புறநகர் மாவட்டச் செயலாளராக இருந்த முருகையாபாண்டியன். இவருக்குப் பதிலாக நியமிக்கப்பட்டவர்தான் நாராயணபெருமாள். மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவரான நாராயண பெருமாளுக்கு ஆரம்பத்திலிருந்தே பலவகையில் உதவியாக இருந்தது சசிகலா புஷ்பாதான். நாராயணபெருமாளுக்கு ஊராட்சிக் குழுத் தலைவர் பதவியை பெற்றுத்தந்தவரும் புஷ்பாதான். மாவட்டச் செயலாளர் பதவிக்கு நாராயணபெருமாள் பெயரை அமைச்சர் ஒருவரின் மூலமாக சிபாரிசு செய்த பெருமையும் புஷ்பாவுக்கு உண்டு. அந்த நன்றிக்காகவே அவர் புஷ்பாவுடன் தொடர்ந்து பேசியிருக்கிறார். அதுதான் அவருக்கு சிக்கலில் முடிந்திருக்கிறது’ என்பதுதான் நான் அப்போது சொன்ன தககவல்.

மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்ட நாராயணபெருமாளுக்கு ஒரு வாரத்துக்குப் பிறகு அமைப்புச் செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் சண்முகநாதனுக்கும், சசிகலா புஷ்பாவுக்கும் உறவினர்தான் இந்த நாராயணபெருமாள். கடந்த வாரத்தில் அவரது பதவிப் பறிப்புக்கு முக்கியக் காரணமாக சொல்லப்பட்டது சசிகலா புஷ்பாவுடன் தொடர்ந்து பேசி வந்ததுதான். கடந்த ஒரு வாரமாகவே மாவட்டச் செயலாளர் பதவிபோன சோகத்தில் இருந்திருக்கிறார் நாராயணபெருமாள். அந்த நேரத்தில்தான், மறுபடியும் புஷ்பாவிடமிருந்து போன் வந்திருக்கிறது. ’நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க. உங்களோடு நாங்க இருக்கோம். இதெல்லாம் நடக்கும்னு உங்களுக்குத் தெரியும்தானே?’ என்று ஆறுதலாகப் பேசியிருக்கிறார் புஷ்பா. சோகத்தில் இருந்த நாராயணபெருமாளும், ‘எப்போதும் கட்சிக்காகத்தான் புஷ்பா நான் உழைச்சேன். இப்படி செஞ்சுட்டாங்க. யாரோ சொல்றதைக் கேட்டுட்டு அவங்க நடவடிக்கை எடுக்குறாங்க. என்னைக் கூப்பிட்டு என்னன்னு விசாரிக்கலாம் இல்ல. உன்னோடு நான் பேசினதை எப்படி அவங்க தப்புன்னு சொல்றாங்க. நீயும் இதே கட்சியிலதானே இருந்த...’ என்றெல்லாம் புலம்பியிருக்கிறார். இந்தத் தகவல்களும் உளவுத்துறை போலீஸ் மூலமாக கார்டனுக்குப் போயிருக்கிறது. அதன்பிறகே, அடுத்த ஆக்‌ஷனில் இறங்கியிருக்கிறார் ஜெயலலிதா. தற்போது நாராயணபெருமாளிடம் இருந்த அனைத்துப் பொறுப்புகளும் பறிக்கப்பட்டுவிட்டது’ என்பதுதான் அந்த ஸ்டேட்டஸ்.
‘இதற்கு சசிகலா புஷ்பா தரப்பில் என்ன ரியாக்‌ஷன்?’ என்ற கேள்வியை கமெண்ட்டில் கேட்டது வாட்ஸ் அப். பதிலை அடுத்த ஸ்டேட்டஸாக அப்டேட் செய்தது ஃபேஸ்புக்.

(ஜெயலலிதாவுடன் நாராயணபெருமாள்)
‘ஜாமீன் வாங்குவதற்காக தமிழகத்துக்கு வரவேண்டிய சசிகலா புஷ்பா வரவில்லை. அவர் வராமலேயே ஜாமீன் வாங்குவதற்கான முயற்சிகள் நடந்தது. ஆனால் 29ஆம் தேதி சசிகலா புஷ்பா நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஆனால் சசிகலா புஷ்பாவோ, ‘இதற்கு நேரில் ஆஜராகவேண்டிய அவசியம் இல்லை. நான் வராமலேயே எப்படி ஜாமீன் வாங்கணும்னு எனக்குத் தெரியும்’ என்று சொல்லிவருகிறாராம். ’ஜாமீன் வாங்காமல் இங்கே வர வேண்டாம். சூழ்நிலைகள் சரியில்லை...’ என்று, சசிகலா புஷ்பாவுக்கு நெருக்கமான சிலர் சொல்லியிருப்பதால் அவர் தமிழகத்துக்கு வரத் தயங்குவதாகச் சொல்கிறார்கள்.
இந்தச் சூழ்நிலையில் நாராயணபெருமாள் மீது அடுத்தடுத்து எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளும் அவரது கவனத்துக்குப் போனது. ‘என் மேல கோபம் இருந்தால் அதை நேரடியாக என்கிட்டயே காட்டலாம். இப்படி, என்கிட்ட பேசினவங்க மேல எல்லாம் நடவடிக்கை எடுக்குறது எந்தவிதத்துல நல்லதுன்னு தெரியல. என்ன வேணும்னாலும் செய்யட்டும். அவங்க யாரை கட்சியைவிட்டு நீக்கினாலும் அது நீக்குறவங்களுக்குத்தான் நல்லது. என்னால யாருக்கும் பிரச்னை வரக்கூடாது என்று நினைக்கிறேன். அப்படி வந்துட்டா அவங்களை நான் கைவிட மாட்டேன். நாராயணபெருமாளுக்கு என்ன உதவி தேவையோ அதை நிச்சயமா நான் செய்வேன்..’ என்று சொல்லியிருக்கிறார் புஷ்பா.
அதுமட்டுமல்ல; சசிகலா புஷ்பா தயவால் எம்.எல்.ஏ. சீட் வாங்கியவர்கள் சிலர் தென் மாவட்டங்களில் இருக்கிறார்கள். அவர்களிடமும் சீக்கிரத்தில் பேசுவார் என்று சொல்கிறார்கள். ஆனால், புஷ்பாவின் பேச்சுக்கு அந்த எம்.எல்.ஏ-க்கள் செவி சாய்ப்பார்களா என்பது தெரியவில்லை.’ என்ற ஸ்டேட்டஸ்க்கு போஸ்ட் கொடுத்தது. அதற்கு லைக் போட்டு ஷேர் செய்தது வாட்ஸ் அப்.  மின்னம்பலம்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக