வியாழன், 7 ஜூலை, 2016

கொள்ளையர்களால் தாக்கப்பட்ட பெண் எஸ்.ஐ உயிரிழப்பு!

தமிழகத்தில் கொள்ளையர்களால் தாக்கப்பட்டு காவல்துறையினரும், பொதுமக்களும் மரணிக்கும் நிகழ்வுகள் நாளுக்குநாள் அதிகரித்துச் செல்கிறது. ஒசூரில் காவலர் முனுசாமி கொள்ளையர்களால் தாக்கப்பட்டு பலியான நிலையில், சென்னையில் ஒரு கொள்ளையன் தாக்கி ஆசிரியை நந்தினி பலியானார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் வேலூரில் செயின் பறிப்பு சம்பவத்தின்போது கொள்ளையர்களால் தாக்கப்பட்ட எஸ்.ஐ. செல்வாம்பாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
வேலூர், கஸ்பாவைப் பகுதியைச் சேர்ந்தவர் செல்வாம்பாள் (40) , கோட்டை காவலர் பயிற்சி பள்ளியில் பணியாற்றிய இவர், கடந்த ஏப்ரல் 11ஆம் தேதியன்று வேலூரில் இருந்து அணைக்கட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது, அவரை பைக்கில் இரண்டு மர்ம நபர்கள் பின்தொடர்ந்துள்ளனர்.
ஆள்நடமாட்டம் இல்லாத வல்லண்டகிராமம் அருகே சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் அவரைத் தாக்கியுள்ளனர். தடுமாற்றம் அடைந்த செல்வாம்பாள் கீழே விழுந்தார். பின் மர்ம நபர்கள் அவருடைய கழுத்தில் இருந்த 10 பவுன் நகையைப் பறிக்க முயன்றுள்ளனர். அப்போது எஸ்.ஐ. கொள்ளையர்களை எதிர்த்து போராடியதுடன் கூச்சலிட்டிருக்கிறார். சப்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அதற்குள் கொள்ளையர்கள், எஸ்.ஐ. கழுத்தில் கிடந்த சங்கிலியை வேகமாக இழுத்து அறுக்க, அது அறுந்து விழுந்துள்ளது. கிடைத்த பாதியை எடுத்துக்கொண்டு கொள்ளையர்கள் ஓடிவிட்டனர். கொள்ளையர்கள் தாக்கியதிலும், கீழே விழுந்து அடிபட்டதிலும், மிக முக்கியமாக செயினை இழுத்தபோது கழுத்தில் பலத்த காயமடைந்த செல்வாம்பாள், வேலூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தபோதிலும் ஒரு காவலராக இருந்தும்கூட அவர் கொடுத்த புகாரின்மீது எந்த நடவடிக்கையும் இல்லை. பின்னர் சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நினைவிழந்த நிலையில் இருந்தார். நினைவிழந்த பின்னர் சரியான பராமரிப்பு இல்லாததால் நுரையீரல் தொற்றும் சேர்ந்து கொள்ள சிகிச்சை பலனின்றி திங்கட்கிழமை உயிரிழந்தார் செல்வாம்பாள். இது வேலூர் பகுதி காவலர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை உருவாக்கி உள்ளது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே சிகிச்சை பெற்று வந்தபோதே காவலர்களிடம் புகார் கூறினார். ஆனால், செல்வாம்பாள் தாக்கப்பட காரணமான கொள்ளையர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை. ஒசூரில் கொள்ளையர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த காவலர் முனுசாமி குடும்பத்தினருக்கு தமிழக அரசு ரூபாய் ஒரு கோடி நிதி உதவி அளித்தது. அதுபோலவே, கொள்ளையர்கள் தாக்கி உயிரிழந்துள்ள செல்வாம்பாள் குடும்பத்தினருக்கும் தமிழக அரசு ரூபாய் ஒரு கோடி கொடுக்குமா என்பதுதான் காவல்துறையினரின் இப்போதைய பேச்சு.minnambalam.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக