வியாழன், 7 ஜூலை, 2016

பெண்களை பயமுறுத்தும் அம்மா அடிமை + Ex போலீஸ் + அதிமுக எம்பி நடராஜ்...

 மீண்டும் மீண்டும் பெண்களுக்குப் பாதுகாப்பு என்ற பெயரில் ஆலோசனைகள் சொல்லப்படுவதுதான் நடந்து கொண்டிருக்கிறது. அதற்கு மாற்றாக, ஆண்களுக்கு ஆலோசனை சொல்லலாம். பெண்களை சமமாக நடத்தும்படியும், உடைமைப் பொருளாக நினைக்காமல், தாவர, சங்கம சொத்துக்களாக மதிப்பிடாமல் ரத்தமும் சதையும் உயிரும் உள்ள சக மனுஷியாக, மனிதப்பிறவியாக நினையுங்கள் என்பதை வலியுறுத்தலாம். அதை விடுத்து பாதுகாப்பு என்று பெண்ணை வீட்டுக்குள் முடக்கும் நடைமுறைகள் எரிச்சலூட்டுகின்றன.
படங்களைப் பதிவிடும்போது அதை யார் பார்க்கலாம் என்ற விதிமுறைகளைப் பெண்கள் பின்பற்றினால் போதும். படங்களையே பதிவிடாதீர்கள், அப்படி பதிவிட்டால் மார்ஃபிங் செய்வார்கள்தான் என்று அவர்கள் தரப்புக்கு வரிந்து கட்ட வேண்டாமே. ஒரு முன்னாள் காவல் துறை அதிகாரியாக பொறுப்புணர்வுடன் பேசுவதை விடுத்து, ஆதிக்க மனோபாவம் கொண்ட ஆணாக வெளிப்படுகின்றன இவரது கருத்துகள். தற்போது ஆளுங்கட்சியின் சட்ட மன்ற உறுப்பினராகவும் இருக்கும் திரு. நடராஜ் அவர்கள், ஆளுங்கட்சியைப் பாதுக்காக்கத்தான் நினைக்கிறாரே தவிர, பெண்களின் மன உணர்வுகளை அவர் பெரிதாக மதிக்கவில்லை..

பிற பெண்களின் படங்களை மார்ஃபிங் செய்பவனும் அதைப் பார்த்து ரசிப்பவர்களும்தான் அவமானப்பட வேண்டுமே தவிர, சம்பந்தப்பட்ட பெண்கள் அல்ல. அத்தகைய விழிப்புணர்வைத்தான் மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும், அதை விடுத்து பயமுறுத்தக் கூடாது.
பாலின சமத்துவம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும். குழந்தைகளின் வளர்ப்பிலேயே ஆண் என்றும் பெண் என்றும் வேறுபாடு காட்டுவதை விலக்கச் செய்ய வேண்டும். அதையெல்லாம் விடுத்து, படங்களைப் பதிவிடாதீர்கள் என்று எதிர் மறை பிரச்சாரத்தை மேற்கொள்ளாதீர்கள்.
நீ ஆண்; அதனால் உயர்ந்தவன்; நீ பெண்; அதனால் ஆணுக்குக் காலம்தோறும் கட்டுப்பட்டவள்; பாதுகாப்பாக வீட்டுக்குள் முடங்கியிருக்க வேண்டியவள் என்ற துருப் பிடித்துப் போன ஆயுதத்தைத் தூக்கிக் கொண்டு, பேயாட்டம் போடாதீர்கள்.
பெண்கள் பல படிகள் முன்னேறி மேலே மேலே போய்க் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் இன்னும் நின்ற இடத்திலேயே நின்று கொண்டிருக்கிறீர்கள். அத்துடன் மேலேறிச் செல்லும் பெண்களின் கால்களைப் பிடித்து இழுத்து குப்புறத் தள்ளி விட முயலாதீர்கள்.
கடுப்பேற்றாதீர்கள் மை லார்ட்…  thetimestamil.com
பா. ஜீவசுந்தரி, எழுத்தாளர்; ஊடகவியலாளர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக