வியாழன், 7 ஜூலை, 2016

கொலம்பஸ் அமெரிக்காவை ஆக்கிரமித்தான் ... கண்டுபிடிக்கவில்லை !

500 வது கொலம்பஸ் டே - 1992 ல் நியுயார்கில் நடைபெற்ற ஊர்வலம்1992-ம் ஆண்டில் கொலம்பஸ் கண்டுபிடிப்பு 500-வது ஆண்டுவிழா கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடிக்கவில்லை, ஆக்கிரமித்தான். அவன் புதிய உலகம் தேடிப்புறப்பட்ட மாலுமி அல்ல; நிறவெறியும் ஆதிக்க வெறியும், பணவெறியும் பிடித்து அலைந்த ஒரு கடல் கொள்ளைக்காரன். கொலம்பஸ் கண்டுபிடிப்பின் 500-வது ஆண்டு விழா கொண்டாட்டத்தை ஒட்டி எழுதப்பட்ட முக்கியமான புதிய கலாச்சாரம் கட்டுரை . அமெரிக்காவைக் கண்டுபிடிக்கவில்லை’ என்று கூறினால் வாசகர்கள் அதிர்ச்சியடையக்கூடும் அல்லது சுப்பிரமணியசாமி வெளியிடும் பரபரப்பு அறிக்ககை’யுடன் ஒப்பிட்டு ஒதுக்கிவிடவும் கூடும். புதிதாக யோசனை சொல்பவர்களை “இவரு பெரிய கொலம்பஸ் – கண்டு பிடிச்சிட்டாரு” என்று கேலி செய்ததை இன்றோடு நிறுத்திவிடுங்கள். ஏனென்றால் கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடிக்கவில்லை.
(கொலம்பஸ் ஆக்கிரமிப்பின் வரலாறு – பார்க்க பெட்டிச் செய்தி)
கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டு பிடித்தார் என்று நீங்கள் ஒப்புக் கொள்வதாக இருந்தால், யுவான் சுவாங், வாஸ்கோடகாமா, ஆரியர்கள் ஆகிய பலரும் தனித்தனியே இந்தியாவைக் கண்டுபிடித்ததாக ஒப்புக் கொள்ளவேண்டும். வாஸ்கோடகாமா இந்தியாவுக்கு கடல் வழியைக் கண்டுபிடித்தார். இந்தியாவை அடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் திட்டத்துடன் அவர் பயணம் செய்தார். கொலம்பஸும் இந்தியாவுக்கு கடல்வழி தேடிப் புறப்பட்டவன்தான். அமெரிக்கக் கண்டத்தையே அவன் இந்தியாவாக நினைத்தான், பெயரிட்டான். துதிக்கையைத் தடவிப் பார்த்து விட்டு ”யானை துண் போல இருக்கிறது” என்று குருடன் சொன்னால் அது நகைப்புக் குரியது. அந்தக் குருடன் வெள்ளைத் தோல் ஐரோப்பியனாக இருந்த காரணத்தால், துதிக்கைக்கு யானை என்று பெயர் வைத்ததை உலகமே ’ஏற்றுக் கொண்டது’. கொலம்பஸ் கரையொதுங்கிய இடத்துக்கு ’மேற்கு இந்தியத் தீவுகள்’ என்று பெயரும் சூட்டப்பட்டது.
கிறிஸ்டோபர் கொலம்பஸ்
கிறிஸ்டோபர் கொலம்பஸ்
சரி, அமெரிக்கா கண்டம் என்று ஒன்று பூமியில் இருப்பதையே முதன்முதலில் கொலம்பஸ்தான் கண்டுபிடித்தாரா? அதுவும் இல்லை. நார்வே, கிரீன்லாந்து போன்ற இடங்களிலிருந்து 10-ம் நூற்றாண்டிலேயே சென்ற மாலுமிகள் வட அமெரிக்கா சென்று அங்கே குடியேறியுமிருக்கிறார்கள். 1440-இல் ரைன்லாந்து பகுதியில் புழக்கத்திலிருந்த உலக வரைபடத்திலும் அமெரிக்கா இடம் பெற்றிருக்கிறது. இது பல ஐரோப்பியர்களுக்கும் தெரிந்திருக்கிறது. கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்ததோ 1492-இல்தான். மேற்கூறிய விவரங்கள் சிதம்பர ரகசியங்களல்ல, ஐரோப்பிய வரலாற்றாசிரியர்களாலேயே ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மைகள்தான். அப்படியிருக்க கொலம்பஸ்தான் அமெரிக்காவைக் கண்டுபிடித்தார் என்று உலகம் முழுவதும் வரலாற்றுப் பாடம் போதிக்கப்படுவது ஏன்?
அமெரிக்கா யாருடைய நாடு? கொலம்பஸ் கரையிறங்கும்போது அங்கு வெறும் காடும் மலையும்தான் இருந்ததா. மனிதர்களும் இருந்தார்களா? இலட்சக்கணக்கான பழங்குடி மக்கள் இருந்தார்கள், ”வாஸ்கோடகாமாவின் புண்ணியத்தில் தான் இந்தியாவை அடிமைப்படுத்தினோம்” என்று வாஸ்கோடகாமா கோழிக்கோட்டில் இறங்கிய ஆண்டை இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டாக பிரிட்டிஷார் கொண்டாடியிருந்தால் நாம் சகித்துக் கொள்ள முடியுமா? நமக்கு வாஸ்கோடகாமாவின் வரவு, ஆதிக்கத்தின் வரவு, அடக்குமுறையின் துவக்கம். அமெரிக்கப் பழங்குடியினரைப் பொருத்தவரை கொலம்பஸும் அவ்வாறே. போர்த்துகீசியர்களைவிடப் பன்மடங்கு கொடுரமான அடக்குமுறையை இனக் கொலையை முன்நின்று நடத்தியவன் கொலம்பஸ். நிறவெறியை, பண்டங்கள் போல அடிமைகள் விற்கப்படுவதை, இனப் படுகொலையை, கொள்ளையை முன்நின்று நடத்திய மண் வெறியும், பொன் வெறியும் ஆதிக்க வெறியும் கொண்ட ஒரு மாலுமிதான் கொலம்பஸ்.
இந்த உண்மைகளை நிறுவுவதுடன் இக்கட்டுரையை முடித்துக் கொள்ளலாம் – அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் கொலம்பஸின் கண்டுபிடிப்பிற்கு 500-வது ஆண்டு விழாவைக் கோலாகலமாகக் கொண்டாட முனையாமல் இருந்தால்! 15-ஆம் நூற்றாண்டின் கொலம்பஸை இருபதாம் நூற்றாண்டின் கொலம்பஸ்கள் உயிர்ப்பிக்கும்போது நாம் வாளாயிருக்க முடியாது.

ஸ்பெயின் பார்சிலோனாவில் அமைந்துள்ள கொலம்பஸ் உருவ சிலை
ஸ்பெயின் பார்சிலோனாவில் அமைந்துள்ள கொலம்பஸ் உருவ சிலை
”1492: கொலம்பஸ் அமெரிக்கா-வைக் கண்டுபிடித்தார். 1992: அமெரிக்கா கொலம்பஸைக் கண்டுபிடிக்கிறது!” அமெரிக்க அரசு கொண்டாடவிருக்கும் ஐநூறாவது ஆண்டு விழாவின் முழக்கம் இது. ”கொலம்பஸின் வீரத்தைக் கவுரவிக்கும் வகையில் நமது கொண்டாட்டங்கள் அமையவேண்டும்” என்று அறைகூவல் விடுத்திருக்கிறார் புஷ். கொண்டாட்டச் செலவுகளுக்கு முதல் தவணையாக 250 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஸ்பெயினிலிருந்து மூன்று கப்பல்களில் புறப்பட்டு வந்து அமெரிக்காவில் கரையேறிய கொலம்பஸின் ‘சாகசச் செயல்’ மீண்டும் நிகழ்த்திக் காட்டப்பட உள்ளது. ஸ்பெயினில் உள்ள கொலம்பஸின் சிலைக்கும் அமெரிக்க சுதந்திர தேவியின் சிலைக்கும் திருமணமும் செய்து பார்க்கப் போகிறார்கள். இன்னும் பல வடிவங்களில் கொண்டாட்டங்கள் நடக்கவுள்ளன.
பிற வடிவங்களைக் காட்டிலும் ஒரளவு பொருத்தமானது இந்தத் திருமணம் தான். அமெரிக்க ஜனநாயகப் புரட்சியின் சின்னம் சுதந்திர தேவியின் சிலை; ஆக்கிரமிப்பு நிறவெறி, பகற்கொள்ளை, இனப்படுகொலை, பொருள் வெறி, நம்பிக்கை மோசடி – ஆகியவற்றின் சின்னம் கொலம்பஸ். அமெரிக்காவின் இரட்டை வேடத்தை சூசகமாகத் தெரிவிக்கவல்லது இந்தத் திருமணம்தான். சுதந்திர தேவியின் சிலையை அகற்றி அங்கே கொலம்பஸின் சிலையை நிறுவுவது மேலும் பொருத்தமாயிருக்கும்.
’அமெரிக்கா கொலம்பஸைக் கண்டு பிடிக்கிறது’ 250 கோடி ரூபாய் செலவு செய்து! விரயம்! ராட்னி கிங் எனும் கறுப்பினத் தொழிலாளியின் மண்டையைப் பிளந்த வெள்ளை காவலர்களை நிரபராதிகள் என்று விடுதலை செய்த வெள்ளை நீதிபதிகளில் அமெரிக்கா கொலம்பஸைக் கண்டுபிடிக்கவில்லையா? கரீபியப் பழங்குடி மக்களை நரவேட்டையாடிய தனது வெள்ளை மாலுமிகளுக்கு கொலம்பஸ் வழங்கியிருக்கக் கூடிய தீர்ப்புதானே அது!
13 அடி கொண்ட கொலம்பஸின் சிலை 2012ல் நடைபெற்ற கொலம்பஸ் டே கண்காட்சியில் வைக்கப்பட்டது
13 அடி கொண்ட கொலம்பஸின் சிலை 2012ல் நடைபெற்ற கொலம்பஸ் டே கண்காட்சியில் வைக்கப்பட்டது
கொலம்பஸின் ’வரம்புமீறிய’ நர வேட்டையால் கவலை கொண்ட ஸ்பெயின் மன்னன் பெர்டினாண்டைப் போல புஷ் பதறுகிறார்: “நமது முகத்தையே விகாரமாகத் திரித்துக் காட்டும் கண்ணாடியைப் பார்த்து அதிர்ச்சியடைவது போல லாஸ் ஏஞ்செல்ஸ் கலவரததால் கவலையுற்றதாக” கூறுகிறார். கண்ணாடியில் பிரசன்னமானது அவரது கொள்ளுப்பாட்டன் கொலம்பஸ் தான் என்பதை யார் அவருக்குப் புரிய வைப்பது? கறுப்பின மக்கள்தான் – புரிய வைக்க வேண்டும்.
“இந்த நாட்டை வெறுக்கிறோம். இதன் கொடியை வெறுக்கிறோம். இந்தத் தீர்ப்பை மன்னிக்கும் எல்லா வெள்ளையர்களையும் வெறுக்கிறோம்’ என்கிறார் நியூ யார்க் கறுப்பின சேரி நிர்வாகக் கமிட்டி உறுப்பினர் பெளவெல். மகிழ்ச்சியின் 500-வது ஆண்டு விழாவை, வெறுப்பின் 500-வது ஆண்டு விழா முந்திக் கொண்டு விட்டது. லாஸ் ஏஞ்செல்ஸில் பற்றியெரியும் தீயின் வெளிச்சத்தில் கொலம்பஸின் குற்றங்கள் விகாரமாகத் தெரிகின்றன.
இன்றைய அமெரிக்காவின் கறுப்பின இளைஞர்களில் நான்கில் ஒருவர் சிறையில் இருக்கிறார். வேறு விதமாகச் சொல்வதென்றால் கல்லூரியில் படிக்கும் கறுப்பின இளைஞர்களைவிட சிறையில் இருப்பவர்களே அதிகம். தமது சொந்த மண்ணான ஆப்பிரிக்காவிலிருந்து அவர்களைப் பிடுங்கிக் கொண்டுவந்து சீரழித்தது யார்? கறுப்பன் என்றாலே அடிமை என்ற நிலையை உருவாக்கியது யார்?
கொலம்பஸ்
தன்னை அன்புடன் வரவேற்று பொன்னை அள்ளித்தந்த சான் சால்வடார் பழங்குடிகளை விலங்கிட்டு அடிமையாக இழுத்து வந்தான்
நிறவெறியின் தந்தை! கொலம்பஸ். ஆம் அமெரிக்க அடிமை வர்த்தகத்தின் தந்தை கொலம்பஸ்: வெள்ளையர் அல்லாதவர்களை மட்டுமே அடிமையாக்கியதன் மூலம், அடிமை வியாபாரத்துடன் நிறவெறியையும் இணைத்தவன் கொலம்பஸ்.
கொலம்பஸிற்கு முந்தைய காலத்திலும் அடிமை வர்த்தகம் இருந்தது. ஆப்பிரிக்காவிலிருந்து போர்த்துகீசியர்களால் கொண்டுவரப்பட்ட கறுப்பின அடிமைகள் வீட்டு வேலைக்காரர்களாக கணக்கர்களாக வர்த்தக முகவர்களாகக்கூட பணியாற்றியிருக்கிறார்கள். 1440 இல் போர்த்துகலில் ஆப்பிரிக்க அடிமைகள் ஏலம் விடப் பட்டபோது அவர்களை குடும்பங்களிலிருந்து பிரித்துக் கொண்டு வந்ததை சாதாரண போர்த்துகீசிய குடிமக்களே எதிர்த்திருக்கிறார்கள். காரணம் நிறம் அல்லது இனம் காரணமாக இயற்கையிலேயே தங்களைவிடத் தாழ்ந்த மனிதர்களாக அடிமைகளை அவர்கள் கருதவில்லை.
ஆனால் அடுத்த 60 ஆண்டுகளில் கி.பி. 1500 இல் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. மத்திய அமெரிக்கத் தீவுகளின் பழங்குடி மக்களை இரண்டு வகையாகப் பிரித்தான் கொலம்பஸ். ”அரவாக் இனத்தவர்கள் ஆயுதமேந்த லாயக்கற்றவர்கள், ஆனால் சொல்வதை எளிதில் புரிந்து கொள்ளக்கூடியவர்கள் – எனவே அவர்களை வேலைக்காரர்களாகப் பயன்படுத்தலாம்; கரீபிய இனப் பழங்குடிகள் மூர்க்கமா னவர்கள் – எனவே அவர்களை அடிமைச் சந்தையில் விற்றுவிடலாம்” என்று ஸ்பெயின் மன்னனுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டான்.
இனப்படுகொலை
நிறவெறியின் அடிப்படையிலான அடிமை முறையை கொலம்பஸின் பாதையில் அமெரிக்காவை ஆக்கிரமித்த ஐரோப்பியர்கள் அனைவரும் தொடர்ந்தனர்
தன்னை அன்புடன் வரவேற்று பொன்னை அள்ளித்தந்த சான் சால்வடார் பழங்குடிகளை விலங்கிட்டு அடிமையாக இழுத்து வந்தான் ஹெய்தி மக்களைப் பார்த்து ”உலகத்திலேயே இவர்களைப் போல இனிமையானவர்கள் கிடையாது” என்று சொல்லிவிட்டு அடுத்த வரியிலேயே ”இவர்களை நல்ல வேலையாட்களாகப் பயன்படுத்தலாம்” என்று சிபாரிசு செய்தான். ஆயிரக்கணக்கான அமெரிக்கப் பழங்குடிகளைப் பிடித்து ஸ்பெயினுக்கு ஏற்றுமதி செய்ததுடன் மற்றவர்களை சொந்த மண்ணிலேயே அடிமையாக்கினான். நிறவெறியின் அடிப்படையிலான அடிமை முறையை கொலம்பஸின் பாதையில் அமெரிக்காவை ஆக்கிரமித்த ஐரோப்பியர்கள் அனைவரும் தொடர்ந்தனர். 1622 இல் ஆங்கிலேய ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்த பெளஹாட்டன் பழங்குடி மக்களை ”மிருகங்கள், மிருகங்களைவிட மிருகத்தனமான மிருகங்கள்” என்று சாடினான் ஆங்கிலேய காப்டன் ஸ்மித்.
இருபதாம் நூற்றாண்டுக்கு வருவோம். ‘ஆரிய இனம் இயற்கையிலேயே உயர்ந்தது’ என்றான் ஹிட்லர், ‘ஆங்கிலேயர்கள் இயற்கையிலேயே தனிச் சிறப்பான குணாம்சங்களைக் கொண்டவர்கள்’ என்றார் மார்கரெட் தாட்சர். ’அமெரிக்க மாண்பு, அமெரிக்க சிந்தனை’ என்று பலவாறாகப் பேசுகிறார் புஷ். வெள்ளையர்களைத் தவிர பிறர் இயற்கையிலேயே தாழ்ந்தவர்கள் என்ற கொலம்பஸின் கருத்து எப்படியெல்லாம் அவதாரம் எடுக்கிறது!
அடிமை விற்பனை – கொலம்பஸின் கண்டுபிடிப்பு
Landing_of_Columbus_(2)
அமெரிக்காவின் நவீன முதலாளித்துவம் கொலம்பஸின் கோட்பாட்டை காலத் திற்கேற்பப் பிரயோகிக்கிறது.
நிறவெறி மட்டுமல்ல: அடிமைகளை பண்டங்கள் போலவும், ஆடுமாடுகள் போலவும் விற்பனை செய்யும் முறையை அறிமுகப்படுத்தியவன் கொலம்பஸ் அவனுக்கு முந்தைய காலத்தில் ஒரு அடிமையை விலைகொடுத்து வாங்கிய ஆண்டை விதிவிலக்கான சமயங்கள் தவிர மற்றெப்போதும் ஆடுகளைப்போல விற்றதில்லை. ஆதிக்கமும் சுரண்டலும் இருந்த போதும் அடிமைகள் தங்கள் ஆண்டையுடன் பல பரம்பரைகளுக்குக்கூட பிணைக்கப்பட்டிருந்தார்கள். ஆனால் நோயுற்றவர்கள், குறிப்பிட்ட திறமையில்லாதவர்கள், முதியவர்கள், பெண்கள் ஆகியோரை அடிமாடுகளைப் போல விற்கும் முறையை அறிமுகப்படுத்தியவன் கொலம்பஸ். அமெரிக்க முதலாளித்துவத்தின் வளர்ச்சி கொலம்பஸின் இந்தக் கண்டுபிடிப்பை ‘அதன் எல்லைக்கே கொண்டு சென்றது. அமெரிக்காவின் புகையிலை, ரப்பர். காப்பித் தோட்டங்களுக்காக ஆப்பிரிக்க மக்கள் விரட்டி, வேட்டையாடி, கூண்டிலடைத்து ஏலமிடப்பட்டனர்.
Slavery-sale
அடிமைகளை பண்டங்கள் போலவும், ஆடுமாடுகள் போலவும் விற்பனை செய்யும் முறையை அறிமுகப்படுத்தியவன் கொலம்பஸ்
அமெரிக்காவின் நவீன முதலாளித்துவம் கொலம்பஸின் கோட்பாட்டை காலத் திற்கேற்பப் பிரயோகிக்கிறது. Hire and Fire (வேண்டுமென்றால் வைத்துக்கொள். வேண்டாமென்றால் துரத்திவிடு) என்ற மூன்றே சொற்களுக்குள் தனது தொழிலாளர் நல சட்டத்தை அமெரிக்கா அமல்படுத்துகிறது. நம்மையும் அமல்படுத்த நிர்ப்பந்திக்கிறது. இளமையை முதலாளிக்குத் தந்துவிட்டு முதுமையில் விரட்டப்பட்டு நிர்க்கதியாய்த் தெருவில் நிற்கும் அமெரிக்க அநாதைகளை உருவாக்கிய பிதாமகன் கொல்ம்பஸ்.
“பொறுமை, வீரம் போன்ற நற்குணங்களை கொலம்பஸிடமிருந்து நாம் கற்றுக் கொள்ளவேண்டும்” என்கிறது ஒரு அமெரிக்க பாடநூல்: “கரீபிய மக்களிடம் கொலம்பஸ் பெரும் ஆர்வம் காட்டினார்: இருந்த போதும் கொலம்பஸ் அவர்கள் மத்தியில் நிம்மதியாக வாழமுடியவில்லை” என்கிறது இன்னொரு அமெரிக்கப் பாட நூல்.
இதைப் படிக்கின்ற யாரும் கொலம்பஸை புத்தனாகவும், அமெரிக்கப் பழங்குடிகளை காட்டுமிராண்டிகளாகவும் மட்டுமே புரிந்து கொள்ளமுடியும். பழங்குடிகளிடம் கொலம்பஸ் காட்டிய ”ஆர்வத்திற்கு” சான்று?
கொலைகாரன் கொலம்பஸ்
தூக்கு மேடையைப் பார்த்திராத அமெரிக்கத் தீவுகளில் 340 துக்கு மேடைகளை நிறுவினான் கொலம்பஸ். இஸ்பானோலாவில் மட்டும் 50,000 பழங்குடிகளைப் படுகொலை செய்தான். எப்படி என்பதை எழுதுகிறார் கொலம்பஸின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய கிர்க் பாட்ரிக் சேல்:
தூக்கு மேடையைப் பார்த்திராத அமெரிக்கத் தீவுகளில் 340 துக்கு மேடைகளை நிறுவினான் கொலம்பஸ். இஸ்பானோலாவில் மட்டும் 50,000 பழங்குடிகளைப் படுகொலை செய்தான்.
தூக்கு மேடையைப் பார்த்திராத அமெரிக்கத் தீவுகளில் 340 துக்கு மேடைகளை நிறுவினான் கொலம்பஸ். இஸ்பானோலாவில் மட்டும் 50,000 பழங்குடிகளைப் படுகொலை செய்தான்.
“இந்தியர்களின் (பழங்குடிகளின்) கைகால்களையும் குடலையும் நாய்களைக் கொண்டு குதற வைத்தனர்; தப்பியோடிய இந்தியர்களை புதர்களில் தள்ளி ஈட்டிகளாலும் வாள்களாலும் கிடிக்கிப் பிடிபோட்டுக் கொன்றனர். தப்பி ஓடியவர்களையும் தேடிப் பிடித்துக் கொன்று ‘கடவுள் அருளால்’ விரைவில் முழுவெற்றி அடைந்தனர்
விரட்டிப் பிடித்த பழங்குடிப் பெண்களைத் தன் மாலுமிகளுக்கு பரிசாகத் தந்தான் கொலம்பஸ். அந்தப் பெண்களைத் தாங்கள் பலாத்காரம் செய்ய முனைந்த போது அவர்கள் காட்டிய எதிர்ப்பை ஆத்திரத்துடன் தனது குறிப்புகளில் எழுதுகிறான் மாலுமி. காமவெறியால் கொலம்பஸின் மாலுமிகளுக்குள்ளேயே தோன்றிய கலவரங்களை எழுதுகிறான் இன்னொரு மாலுமி.
புஷ்ஷின் அமெரிக்கா தனது குழந்தைகளுக்குக் கற்றுத்தர விரும்பும் கொலம்பஸின் வீரத்திற்கும் பொறுமைக்கும் இவை சில சான்றுகள். கொலம்பஸ் காட்டிய பாதையை அமெரிக்காவை ஆக்கிரமித்த ஐரோப்பியர்கள் அனைவருமே தவறாமல் பின்பற்றினார்கள்.
25,000 ஆண்டுகளாக வாழ்ந்து வளர்ந்த அந்த மக்களின் மண்ணை அவர்களது ரத்தத்தைக் கொண்டே கழுவிவிட்டு, அமெரிக்கா எனப் பெயர் சூட்டி குடியேறினார்கள்.
குழந்தைகளை படுகொலை செய்து தன்னுடைய வேட்டை நாய்களுக்கு உணவாக்கும் வெறியன்
குழந்தைகளை படுகொலை செய்து தன்னுடைய வேட்டை நாய்களுக்கு உணவாக்கும் வெறியன்
கொலம்பஸ் முதன் முதலில் ஆக்கிரமித்த ஹெய்தி மற்றும் டொமினிகன் தீவுகளின் அன்றைய – 1492 இல் மக்கள் தொகை 30 லட்சம். அடுத்த 40 ஆண்டுகளில் அதாவது 1532 இல் அங்கே எஞ்சியிருந்தவர்கள் வெறும் 300 பேர். கொலை செய்யப்பட்டவர்கள் வெறும் பழங்குடி மக்கள் அல்ல; கொலம்பஸின் வார்த்தைகளில் சொன்னால் ”உலகத்திலேயே மிக இனிமையான மக்கள்!”
அமெரிக்கா என இன்று அழைக்கப்படும் நிலப்பகுதியில் வாழ்ந்திருந்த பழங்குடிகள் 2 கோடி. வன விலங்குகளைப் போல மாதிரிக்காக இன்று விட்டு வைக்கப்பட்டி ருப்பவர்கள் 16 லட்சம்.
மெக்சிகோவில் ஐரோப்பியர்களின் நாகரீகக் காலடிகள் பதியும்போது அங்கிருந்த மக்கள் 2 1/2 கோடி இன்று எஞ்சியிருப்பவர்களோ 20 லட்சம். ரத்தத்தை உறைய வைக்கும் இந்த இன ஒழிப்பை சாதிக்க நேரடியான கொலைகளைக் காட்டிலும் வக்கிரமான முறைகளையெல்லாம் கையாண்டார்கள் கொலம்பஸின் ஐரோப்பிய வாரிசுகள்.
அழிந்தது போக 4000 பேர் மட்டுமே எஞ்சியிருந்த ‘சேயன்’ எனும் பழங்குடி மக்களை ஆடுமாடுகளைப் போலக் காயடித்தார்கள். வர்ஜினிய பழங்குடி மக்களின் குழந்தைகளை அவர்களிடமிருந்து கட்டாயமாகப் பறித்துக் கொண்டு சென்றது வர்ஜினியா புகையிலைக் கம்பெனி.
அம்மைநோய்
நிலங்களை பறித்துக்கொண்டு வெள்ளையர்கள் பழங்குடிகளுக்குக் கொடுத்த போர்வை அம்மை நோயாளிகள் பயன்படுத்திய போர்வை.
போர்வையைக் கொடுத்து பழங்குடிகளின் நிலத்தை எழுதி வாங்கிக் கொண்டார்கள். அந்த அப்பாவி மக்கள் அதைப் பயன் படுத்திய போது அப்போர்வையே அவர்களது இறுதிப் பயணத்திற்கான கோடித்துணியானது. ஆம் வெள்ளையர்கள், பழங்குடிகளுக்குக் கொடுத்த போர்வை அம்மை நோயாளிகள் பயன்படுத்திய போர்வை. வெள்ளையர்களின் நயவஞ்சகம் குறித்து இன்று மனம் வெதும்பிக் கூறுகிறார் ஒரு செவ்விந்தியத் தலைவர் ”பல்வேறு செவ்விந்திய-இனக்குழுக்களுடன் மொத்தம் 371 ஒப்பந்தங்கள் போட்டார்கள் வெள்ளையர்கள் எங்களால் நினைவு வைத்துக் கொள்ளக்கூட முடியாத அளவு பல உறுதி மொழிகளைக் கொடுத்தார்கள். ஆனால் ஒன்றை மட்டும்தான் நிறைவேற்றினார்கள் – எங்கள் நிலத்தை எடுத்துக் கொள்கிறோம் என்றார்கள். எடுத்துக் கொண்டார்கள்”
மனித நாகரிகத்தின் இருண்ட பக்கங்களைச் சித்தரிக்க செங்கிஸ்கானையும், இடி அமீனையும் உதாரணம் காட்டுகிறார்கள் ஐரோப்பிய அமெரிக்க வரலாற்றாசிரியர்கள். இந்த வக்கிரமான இன ஒழிப்பு நடவடிக்கையை ஒப்பிடும்போது அவர்கள் எம்மாத்திரம்? இந்த குரூரத்தை நடத்தி முடிக்க கொலம்பஸின் வாரிசுகளுக்கு எப்படி மனம் வந்தது? இதை நிறைவேற்றுவதற்கான ’தார்மீக பலத்தை’ எப்படிப் பெற்றார்கள்? ‘தார்மீக நியாயத்தை’ எப்படிக் கற்பித்தார்கள்? இந்தக் கேள்விக்கான விடை அவர்கள் நடத்தி முடித்த படுகொலையை விட பயங்கரமானது.
வெள்ளையனை எதிர்ப்போர் மனிதர்களல்ல!
ஹெய்டியில் கொலம்பஸ் தன்னுடைய சகாக்களோடு சேர்ந்து டெய்னோ வழங்குடிகளை சித்ரவதை செய்து, பாலியல் வல்லுறவு செய்து பின்பு கொன்று அவன் வேட்டை நாய்களுக்கு பரிசளித்தான்
ஹெய்டியில் கொலம்பஸ் தன்னுடைய சகாக்களோடு சேர்ந்து டெய்னோ பழங்குடிகளை சித்ரவதை செய்து, பாலியல் வல்லுறவு செய்து பின்பு கொன்று அவன் வேட்டை நாய்களுக்கு பரிசளித்தான்
ஒரு நாகரிகம் அல்லது இனம் இன்னொன்றுடன் மோதும்போது போர்களும் கொலைகளும் வரலாற்றில் தவிர்க்கவியலாதவைதான். அதிலும் முன்னேறிய நாகரீகத்தின்மீது பின்தங்கிய நாகரீகம் படையெடுக்கும்போது அழிவு அதிகமாக இருக்கும். சிந்து சமவெளியின் திராவிட நாகரிகத்தின் மீது நாடோடி ஆரியர்கள் நடத்திய தாக்குதலையும், செங்கிஸ்கானின் போர்களையும் இன்ன பலவற்றையும் இதற்கு உதாரணம் காட்டலாம். ஆனால் பின்தங்கிய பழங்குடி மக்கள்மீது முன்னேறிய வெள்ளை நாகரிகம் தொடுத்த தாக்குதலுக்கும் இனக் கொலைக்கும் கிறித்துவப் பாதிரிகளும், வெள்ளை ஆதிக்கவாத வரலாற்றாசிரியர்களும் கற்பிக்கும் நியாயத்தின் சாரம் இது தான்.
முறியடிக்க வேண்டிய எதிரிகளை பழங்குடி மக்களை – கொலம்பஸும் அவர்களது வாரிசுகளும் உயிருள்ள மனிதர்களாகக் கருதவில்லை; அகற்றப்பட வேண்டிய உயிரற்ற சடப் பொருளாகவே கருதினார்கள்; சித்தரித்தார்கள்.
“அவர்களிடம் பண்பாடு இல்லை. எழுதத் தெரியவில்லை. வரலாற்றை எழுதி வைப்பதில்லை. எழுதப்பட்ட சட்டமில்லை, ஒருவருக்கொருவர் மோதிக் கொள்கிறார்கள். நம்மைக் கண்டால் பெண்களைப் போல(!) ஒடி ஒளிகிறார்கள்” – பழங்குடிகளை அடிமையாக்கி விற்க 1550 இல் ஸ்பானிய அரசுப் பிரதிநிதி கூறிய நியாயம் இது. தமது கொலைகளும், அடிமையாக்குவதும் சட்டப்படி செல்லும் என்பதற்கு 16-ம் நூற்றாண்டின் ஸ்பானிய நீதிபதி கூறிய நியாயம் ‘அவர்கள் பண்பாடற்ற காட்டுமிராண்டிகள்’ என்பதுதான். ‘அவர்கள் மாற வேண்டும் இல்லையேல் அவர்கள் ஒழித்துக்கட்டப்படுவார்கள்’ என்று 1930 இல் பேசினான் அமெரிக்க செனட்டர் பேண்டல்டன். ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்த ஐரிஷ் இன மக்களை (அவர்களும் கிறித்துவர்களாக இருந்தபோதும்) கடவுளுக்கு பலியிடுவதில் தவறில்லை எனக்கூறிய கத்தோலிக்கப் பாதிரிகள் அமெரிக்கப் பழங்குடிகளைக் கொலை செய்ய தேவனின் அங்கீகாரத்தை வழங்கியதில் வியப்பில்லை.
அமெரிக்காவை கண்டுபிடித்த கொலம்பஸ் ஸ்பெயினுக்குத் திரும்பி வரும்போது தன்னுடன் சில மீன்கள், பறவைகள் மற்றும் விநோதமான செம்புநிறமுள்ள பழங்குடிகளையும் கொண்டு வந்தார்
அமெரிக்காவை கண்டுபிடித்த கொலம்பஸ் ஸ்பெயினுக்குத் திரும்பி வரும்போது தன்னுடன் சில மீன்கள், பறவைகள் மற்றும் விநோதமான செம்புநிறமுள்ள பழங்குடிகளையும் கொண்டு வந்தான்
கொலம்பஸின் ஆக்கிரமிப்பை மிகக்கடுமையாக எதிர்த்துப் போராடியவர்கள் கரீபிய மக்கள். கரீப் என்றால் அவர்களது மொழியில் வீரம் செறிந்த என்று பொருள் அவர்களை நரவேட்டையாடவும் அடிமையாக்கவும் கொலம்பஸ் கற்பித்த நியாயம் நயவஞ்சகமானது. கரீப் கனிப் கானியல் என்று அந்தச் சொல்லின் மூலத்திற்கு விளக்கம் தந்தான் கொலம்பஸ். கணிபல் என்றால் நரமாமிசம் தின்னும் காட்டுமிராண்டிகள் என்று பொருள். உண்மையில் அவர்களிடம் அத்தகைய பண்பாடு இல்லாதபோதும் கொலம்பஸின் இந்த ஆய்வு மட்டுமே அவர்களை கொல்லப் போதுமானதாக இருந்தது.
தொகுத்துக் கூறினால் வெள்ளை நாகரீகத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள், எதிர்ப்பவர்கள் காட்டுமிராண்டிகள். காட்டுமிராண்டிகள் என்றால் அவர்கள் மனிதர்களே அல்ல; எனவே அவர்களைக் கொல்வதில் தவறில்லை. ஏனென்றால் அவர்கள் தடைக்கற்கள். ஆம் வெறும் தடைக்கற்கள் மட்டுமே.
இதே கருத்தை அமெரிக்க குழந்தைகளுக்கு வெகு எளிமையாக, பூடகமாக சொல்லித்தருகிறது அவர்களது பாடநூல்:
“அமெரிக்காவை கண்டுபிடித்த கொலம்பஸ் ஸ்பெயினுக்குத் திரும்பி வரும்போது தன்னுடன் சில மீன்கள், பறவைகள் மற்றும் விநோதமான செம்புநிறமுள்ள பழங்குடிகளையும் கொண்டு வந்தார்”.
அமெரிக்க ஆதிக்கத்தின் சின்னம் கொலம்பஸ்!
போராட்டம்
அமெரிக்காவில் கொலம்பஸ் டே – வை எதிர்த்து நடைபெற்ற போராட்டம்
வரலாற்று ஆதாரங்களை எடுத்து வைத்து கொலம்பஸும், வெள்ளை ஆக்கிரமிப்பாளர்களும் பழங்குடிகளுக்கு இழைத்த அநீதிகளுக்கு விளக்கம் கேட்டால் இன்றைய அமெரிக்க, ஐரோப்பிய அறிஞர்கள் சொல்கிறார்கள். ”கொடுமை தான். ஆனால் இது தவிர்க்க முடியாதது”. ஈராக்கிய மக்கள் மீது அமெரிக்க விமானங்கள் குண்டு மழை பொழிந்தபோதும் இவர்கள் அளித்த விளக்கம் இதுதான்.
ஏன் தவிர்க்க முடியாது? ஏனென்றால் அமெரிக்கா சொல்வதுதான் ஜனநாயகம், வெள்ளையர்கள் கூறுவதுதான் பண்பாடு; ஐரோப்பியர்கள் கூறுவதுதான் அரசியல் நியாயம். இவற்றை மறுப்பவர்களோ, எதிர்ப்பவர்களோ தடுப்பவர்களோ கொடுமைக்கு உள்ளாவதைத் தவிர்க்க முடியாது.
ஏனென்றால் ”தங்கம்தான் செல்வம். அதை வைத்திருப்பவன்தான் உலகத்தில் தான் நினைத்ததைச் சாதிக்கிறான்; ஆன்மாக்களை சொர்க்கத்துக்குக்கூட அனுப்புகிறான். புனித ஜானுக்கு இறைவன் கூறிய புதிய உலகம், புதிய சொர்க்கம் ஆகியவற்றுக்கு என்னையே தூதனாக்கியிருக்கிறார். அதைக் கண்டுபிடிக்கவும் அவரே எனக்கு வழிகாட்டினார்” – கொலம்பஸ்.
2014ல் கொலம்பஸ் டே - வை கண்டித்து நடைபெற்ற போராட்டம்
2014ல் கொலம்பஸ் டே – வில், ஏன் நாங்கள் ஒரு பாலியல் பலாத்காரம் செய்தவன், கொலைக்காரன் மேலும் திருடனை கொண்டாட வேண்டும் என்ற பதாகையோடு நடைபெற்ற போராட்டம்
“புதிய உலக ஒழுங்கை புஷ் இறைவனின் பெயரால் அறிவிக்கவில்லையே தவிர அவர் கொலம்பஸ் பேசியதையே தான் பேசுகிறார். 500 ஆண்டுகளுக்குப் பின்னும் அந்த ஆணவமும், திமிரும், பொருள் வெறியும் எள்ளளவும் குறையவில்லையே!
கரீபியர்கள், அரவாக்குகள், செவ்விந்தியர்கள், பெளஹாட்டன்கள் ஆகியோர் அமெரிக்கா கண்டத்தை – தங்கள் மண்ணை – இழந்திருக்கலாம். ஆனால் தங்கள் வரலாற்றை இழக்க அவர்கள் சம்மதிக்கவில்லை. ஏனெனில் வரலாற்றை இழந்தவனுக்கு வருங்காலமுமில்லை. கொலம்பஸ் விழாவுக்கு எதிரான சிறு பொறியாக தங்கள் போராட்டத்தை அவர்கள் துவங்கியிருக்கிறார்கள். பாம்புப் பிடாரர்களின் நாட்டைச் சேர்ந்த நாமும் அவர்களுடன் இணைந்து கொள்வோம். சீக்கிரம்! லாஸ் ஏஞ்செல்ஸ் மட்டும்தான் எரிந்திருக்கிறது; அமெரிக்கா மிகப் பெரிய வல்லரசு; கொலம்பஸ் மிகப் பெரிய எதிரி.
– சூரியன்
மே, ஜூன் 1992, புதிய கலாச்சாரம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக