திங்கள், 18 ஜூலை, 2016

ஆடிட்டர் வெட்டப்பட்ட வழக்கில் காஞ்சி ஜெயேந்திரருக்கு நோடீஸ்


ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் வெட்டப்பட்ட வழக்கில் ஜெயேந்திரர் உள்ளிட்ட ஒன்பது பேருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது, சென்னை உயர்நீதிமன்றம். சென்னை மந்தைவெளியைச் சேர்ந்த ஆடிட்டர் ராதாகிருஷ்ணனை கடந்த 2002ஆம் ஆண்டு ஒரு மர்ம கும்பல் வீடு புகுந்து அரிவாளால் வெட்டியது. இதில் ராதாகிருஷ்ணன், அவரது மனைவி மற்றும் வேலைக்காரர் ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
இதுகுறித்து பட்டினப்பாக்கம் போலீஸார் ஜெயேந்திரர், சுந்தரேச அய்யர், ரகு, ரவி சுப்பிரமணியம், அப்பு, கதிரவன், மீனாட்சி சுந்தரம், ஆனந்த், கண்ணன் உள்ளிட்டோரை கைது செய்தனர். இதில் ரவி சுப்பிரமணியம் அப்ரூவராக மாறினார்.

பரபரப்பான இந்த வழக்கில், விசாரணையின்போது கதிரவன், அப்பு ஆகியோர் இறந்து விட்டனர். இந்நிலையில் கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி இந்த வழக்கில் இருந்து ஜெயேந்திரர் உள்ளிட்ட ஒன்பது பேரையும் சென்னை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது. இந்த விடுதலை உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுப்பையா, ஜெயேந்திரர் உள்ளிட்ட ஒன்பது பேருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். அதில், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவுக்கு இரண்டு வாரத்தில் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
‘காஞ்சிபுரத்தில் வரதராஜ பெருமாள் கோயிலில் மேலாளராக பணியாற்றிய சங்கரராமன் செப்டம்பர் 3, 2004இல் கோயில் வளாகத்திலேயே வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் நவம்பர் 11, 2004இல் ஜெயேந்திரர் மற்றும் விஜயேந்திரரை கைது செய்தது தமிழக அரசு. அக்டோபர் 2005இல் உச்சநீதிமன்ற உத்தரவின்படி இவ்வழக்கு புதுவை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முருகன் நவம்பர் 27, 2013 அன்று, ‘சங்கரராமன் கொலைக்கான மூலக்காரணம் நிருபிக்கப்படவில்லை’ என்று ஜெயேந்திரர் உள்ளிட்ட 23 பேரை விடுதலை செய்தார்.
‘அந்த நேரத்தில் டெல்லி பாஜக-வில் இருந்து பலர் அப்போதைய புதுவை முதல்வர் ரங்கசாமியிடம் பேசியதால் புதுவை அரசு மேல்முறையீட்டுக்குச் செல்லவில்லை. அதேபோல ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் வழக்கிலும் தமிழக அரசிடம் பாஜக தலைவர்கள் சிலர் பேசினர். ஆனால், ‘இந்த வழக்கில் சட்டரீதியாக என்ன இருக்கிறதோ, அதை பின்தொடருங்கள்’ என முதல்வர் ஜெயலலிதா கூறிவிட்டார். அதன்பொருட்டே தற்போது மேல்முறையீட்டுக்குத் தமிழக அரசு சென்றுள்ளது’ என்கின்றனர் தமிழகத்தின் மூத்த அதிகாரிகள் சிலர்.  minnambalam.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக