வியாழன், 14 ஜூலை, 2016

தமிழக விரோதி வெங்கையா நாயுடுவை டிஸ்மிஸ் செய்ய மணியரசன் வலியுறுத்தல்

Modi should dismiss Venkaiah Naidu, demands Maniyarasanசென்னை: காவிரி நதிநீர் பிரச்சனையில் தமிழகத்துக்கு எதிராக செயல்படும் மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடுவை அமைச்சர் பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் மணியரசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக மணியரசன் வெளியிட்ட அறிக்கை:

இந்திய அரசின் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு, 10.07.2016 அன்று பெங்களுருவில் அவருக்கு நடந்த பாராட்டு விழாவில், "காவிரிச் சிக்கலில் கர்நாடகத்திற்கு ஆதரவாகச் செயல்படுவேன்" என்று பேசியுள்ளார். இதன் பொருள் என்ன? காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பையும் அதை ஏற்று செயல்படுத்தும்படி கட்டளையிட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் செயல்படுத்த மறுக்கும் கர்நாடகத்தின் சட்ட விரோதச் செயல்களுக்கு ஆதரவாக வெங்கையா நாயுடு நடந்து கொள்வார் என்பதே இதன் பொருளாகும். ஏற்கெனவே, அவர் அப்படித்தான் நடந்து வருகிறார்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பைச் செயல்படுத்தக் கூடாது என்று கர்நாடக அனைத்துக் கட்சிக் குழுவினர் ஓராண்டுக்கு முன், தலைமை அமைச்சர் நரேந்திர மோடியை சந்தித்த போது, அக்குழுவில் வெங்கையா நாயுடுவும் இருந்தார்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பேன் என உறுதியேற்றுக் கொண்டு, இந்திய அரசமைப்புச் சட்டப்படி நிறுவப்பட்ட காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்புக்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கும் எதிராகச் செயல்படும் வெங்கையா நாயுடு நடுவண் அமைச்சராக நீடிப்பது சட்ட விரோதச் செயல்!
இந்திய அரசமைப்புச் சட்டப்படி நடுவண் அமைச்சரவையாக இருந்தாலும், மாநில அமைச்சரவையாக இருந்தாலும் கூட்டுப் பொறுப்புடையவை. நடுவண் அமைச்சர் ஒருவர் பேசும் கருத்து, அவருக்குத் தலைமை தாங்கும் தலைமை அமைச்சர் பேசியதாகப் பொருள்படும். தலைமை அமைச்சர் நரேந்திர மோடி சட்ட விரோத அமைச்சரான வெங்கையா நாயுடுவை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கவில்லை என்றால், வெங்கையா நாயுடுவின் சட்டவிரோதப் பேச்சை தலைமை அமைச்சரும் ஆதரிக்கிறார் என்பது பொருளாகும்.
கடந்த 2011-இல், கேரளாவில் மலையாளிகள் தமிழர்களைத் தாக்கிய போது, நடுவண் நிதியமைச்சராக இருந்த ப. சிதம்பரம், தமிழர்களைத் தாக்கிய மலையாளிகளை விமர்சித்துத் தமிழ்நாட்டில் ஒரு கூட்டத்தில் பேசினார். நடுவண் அமைச்சர் அப்படி பேசியிருக்கக் கூடாது என்று அவரை வருத்தம் தெரிவித்து ஏடுகளில் அறிக்கை வெளியிடச் செய்தார், அப்போதிருந்த தலைமை அமைச்சர் மன்மோகன் சிங்.
இவ்வாறான சிக்கல்களில், தமிழர்களுக்கு ஒரு நீதி - மற்ற இனத்தாருக்கு வேறொரு நீதியா எனக் கேட்கிறோம்.
தமிழர்களுக்கு எதிராக வெங்கையா நாயுடு இவ்வாறு பேசுவது இது முதல் தடவையல்ல. உலகத் தெலுங்குக் கூட்டமைப்பின் ஆறாவது மாநாடு 2006இல், சென்னையில் நடந்த போது, தமிழ்நாட்டில் தெலுங்கை ஆட்சி மொழியாக்கிட - தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கு மக்கள் போராட வேண்டும் என்று கூறினார்.
கடந்த 2016 பிப்ரவரியில், சென்னை மீனம்பாக்கத்தில் நடந்த அகில இந்திய தெலுங்கு சம்மேளன - தமிழக தெலுங்கு யுகாதி விழாவில், தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கர்கள் தெலுங்கை மறந்துவிடக் கூடாது, தெலுங்கை வீடுகளில் பேச வேண்டும் என்றதுடன், தெலுங்கு மக்களை பாதுகாப்பவர்களுக்கு மட்டுமே இங்கு வாழும் தெலுங்கர்கள் வாக்களிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். அம்மாநாட்டில், தமிழ்நாட்டு ஆளுநர் ரோசைய்யா பேசும்போது, தமிழ்நாட்டில் தெலுங்கு மொழி பேசுவோர்க்கு பாதுகாப்பளிக்க வேண்டும் என்றார்.
இதையெல்லாம் பார்க்கும்போது, தமிழ்நாட்டை தெலுங்கு மயமாக்கிட, தெலுங்கர் மயமாக்கிட இந்திய ஆட்சியின் துணையோடு அமைச்சராக - ஆளுநராக இருப்பவர்கள் திட்டமிட்டு செயல்படுகிறார்கள் என்பது தெரிகிறது.
தெலுங்கு பேசும் மக்கள் தமிழ்நாட்டில் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தமிழ் மண்ணின் மக்கள். அவர்களுக்கும் தமிழைத் தாய்மொழியாக்க் கொண்டவர்களுக்கும் இடையே மொழி - இன அடிப்படையில் சண்டைகள் நடந்ததில்லை. அவ்வாறு தமிழ் மொழியைத் தங்கள் மொழியாக ஏற்று, தமிழ்நாட்டின் பண்பாட்டோடு இணைந்து வாழக்கூடிய தெலுங்கு பேசும் மக்களை, தனிப்பிரித்து தமிழுக்கும் - தமிழர்களுக்கும் எதிராகச் செயல்பட நடுவண் அமைச்சர் வெங்கையா நாயுடு, தமிழ்நாட்டு ஆளுநர் ரோசையா போன்றவர்கள் தூண்டுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
தமிழர்கள் அதிகாரத்திலுள்ள ஆந்திராவைச் சேர்ந்த தெலுங்கு அரசியல்வாதிகளின் சூழ்ச்சிகளை முறியடித்து, காலங்காலமாக பேணி வரும் தமிழர் - பிறமொழியினர் ஒற்றுமையை பாதுகாக்க வேண்டுமென்று தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கும் எதிராகச் செயல்படும் நடுவண் அமைச்சர் வெங்கையா நாயுடுவை தலைமை அமைச்சர் நரேந்திர மோடி, அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என்றும் கோருகிறேன்.
இவ்வாறு மணியரசன் வலியுறுத்தியுள்ளார்.  tamil.oneindia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக