திங்கள், 20 ஜூன், 2016

அதிமுக ஊழல்களை அம்பலப்படுத்துவேன் - திமுகவில் பழ.கருப்பையா

முன்னாள் எம்எல்ஏ பழ.கருப்பையா தான் மனதளவில் திமுக-வில் இணைந்துவிட்டதாக சொல்லியுள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “ ‘பழ.கருப்பையா மீண்டும் நமக்கு கிடைத்திருக்கிறார். தொடர்ந்து அவர் இங்கேயே இருக்க வேண்டும். நாங்கள் எல்லாம் இருக்கும்வரை, அவரும் எங்களோடு இருக்க வேண்டும். இடையில் ஏற்பட்ட கசப்புகளை மறக்க, எப்படி ஒரு கற்கண்டை எடுத்து வாயில் போட்டுக் கொள்கிறோமோ, அதைப் போல கற்கண்டை வாயிலே போட்டு மென்றிருக்கிறோம். அந்த இனிப்பின் உற்சாகத்தில் தொடர்வோம்; தொடர்ந்து கொண்டே இருப்போம்’ என, 'ரோமாபுரி பாண்டியன்' தொடர் பாராட்டு விழாவில், திமுக தலைவர் கருணாநிதி பேசினார். தமிழகத்தின் அரும்பெரும் தலைவராக இருக்கும் கருணாநிதி என்னை, திமுகவில் இணையக் கேட்டுக் கொண்ட பின், நான் மறுக்க முடியுமா?
மனதளவில், உடனே திமுக-வில் இணைந்து விட்டேன்.
மற்றபடி, சம்பிரதாயமாக நடக்கும் எந்த நிகழ்வுகளும் நடக்கவில்லை. கருணாநிதி அப்படி பேசி, நான் மனரீதியாக நெகிழ்ந்தது முதல், நான் திமுக-காரன்தான். இனி திமுக-வின் வெற்றிக்காகவும், வளர்ச்சிக்காகவும் பாடுபடுவதுதான், என் வாழ்நாள் பணி. திமுக மேடைதோறும், அக்கட்சி வளர்ச்சிக்காக முழங்குவேன். ஜெயலலிதா ஆட்சி தமிழகத்தில் மீண்டும் அமைந்திருப்பது, தமிழக அரசியல் வரலாற்றில் மிகப் பெரிய விபத்து. ஆனால், திமுக-வும் அசுர பலத்துடன் எதிர்க்கட்சியாக சபையில் அமர்ந்துள்ளது. திமுக தலைவர் கருணாநிதிக்கு, சட்டசபையில் உரிய மரியாதை அளித்து, அவருக்குரிய இருக்கையை வழங்கி, அவரது கருத்துகளைச் சபையில் பதிவு செய்ய வேண்டும். ஏற்கனவே, அதிமுக ஆட்சியின் அவலம், ஊழல் குறித்து ஆதாரங்களுடன் நான் விமர்சனங்களை வைத்தேன். அதே ஆட்சி தொடர்வதால், ஊழல்களை அம்பலப்படுத்தும் என் பணி தொடரும். விரைவில் நடக்கவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில், திமுக-வின் வெற்றிக்காக, முழு அளவில் பாடுபடுவேன்” என்றார்.  minnambalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக