திங்கள், 20 ஜூன், 2016

3000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியம் - கொங்கு மண்டலத்தின் யானைகளின் வாழ்விடத்தை உறுதிப்படுத்தும் ஆவணம்

குமிட்டிபதியில் காணக்கிடைக்கும் பெருங்கற்கால பாறை ஓவியம் | படம்: ர.கிருபாகரன் குமிட்டிபதியில் காணக்கிடைக்கும் பெருங்கற்கால பாறை ஓவியம் | படம்: ர.கிருபாகரன் கோவையின் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதி என்பது காலம் காலமாக யானைகள் வாழ்விடம் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் சுமார் 3000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியம் உள்ளது.
கோவை மாவட்டம், மேற்குத்தொடர்ச்சி மலைத் தொடரை ஒட்டியிருக்கிறது. வன ஆக்கிரமிப்பு, காடுகள் அழிப்பு போன்ற காரணங்களால் கோவையில் சமீப காலமாக வனவிலங்குகள் ஊடுருவல் தவிர்க்க முடியாத பிரச்சினையாகிவிட்டது. இதனிடையே விவசாய பரப்புகளில் சேதம் விளைவித்து வரும் காட்டுயானை ஒன்றை பிடித்து, கும்கியாக மாற்றும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். ஆனால் யானைகளால் பாதிப்பு ஏற்படுவதாகக் கூறப்படும் கோவையின் தென்மேற்குப் பகுதி முழுவதும் ஒரு காலத்தில் யானைகளின் வாழ்விடங்களாக இருந்தவை என்கின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். இதை உறுதிப்படுத்தும் விதமாக சுமார் 3000 ஆண்டுகள் பழமையான பெருங்கற்கால பாறை ஓவியம் ஒன்றும் கோவையில் காணக்கிடைக்கிறது.
கோவையின் தென்மேற்குப் பகுதியில் வேலந்தாவளம் அருகே குமிட்டிபதி கிராமத்தில் தனியார் கல்லூரி ஒன்றின் அருகே, ‘பதி மலை’ என்ற பாறைக் குன்று உள்ளது. முருகன் கோயிலையொட்டி அமைந்துள்ள இந்த குன்று, கீழ் பகுதியில் பல குகைகளைக் கொண்டுள்ளது. அதில் பழங்கால மக்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் பல உள்ளன. அவற்றில் ஒன்று, இந்த பாறை ஓவியம். வெண்மை நிறத்தைக் கொண்டு வரையப்பட்டுள்ள இந்த ஓவியத்தில் யானை ஒன்றை, அதன் மேலிருந்து கட்டுப்படுத்திச் செல்லும் மனிதனும், அவற்றைச் சுற்றி பெரிய பெரிய கோடுகள் குறுக்கும் நெடுக்குமாகவும் உள்ளன. சுமார் 4 அடி அகலமும், 2 அடி உயரத்திலும் உள்ள இந்த பாறை ஓவியம், அப்பகுதியில் யானைகள் வாழ்விடமாக இருந்ததற்கு உதாரணமாகக் கூறப்படுகிறது.
சூழலியல் செயல்பாட்டாளர் மோகன் கூறும்போது, ‘இங்குள்ள வேலந்தாவளம் (வேளம் - யானை, தாவளம் - விற்பனை இடம்) யானை சந்தையைக் குறிப்பதாகவும், மாவூத்தம்பதி (மாவூத் - யானைப்பாகன், பதி - வசிப்பிடம்) யானை வளர்ப்பவர்கள் வசிப்பிடமாகவும் இருந்திருக்கிறது. அங்குள்ள வனப்பகுதியில் கொப்பம் என்ற குழிகளை ஏற்படுத்தி யானைகளை பிடித்துள்ளனர் என்பதற்கான சான்றுகளும் உள்ளன. டாப்சிலிப்பிலும் கொப்பங்கள் உள்ளன. சாதாரணமாக சுற்றித்திரியும் யானைகளை மனிதர்கள் கட்டுப்படுத்தி வாழ்ந்ததையே குமிட்டிபதி பாறை ஓவியம் விளக்குகிறது. தெற்கே உள்ள ஆனைமலைக்கும் வடக்கே உள்ள கோவை மாவட்ட காடுகளுக்கும் இடையே உள்ள பாலக்காட்டு கணவாய் என்பது கேரள, தமிழக யானை வழித்தடமாக இருந்திருக்கிறது. யானைகளை விற்கும் இடமாகவும், பழக்கப்படுத்தும் இடமாகவும் இந்த பகுதிகள் இருந்துள்ளன. அந்த வரலாற்றுத் தொடர்பே, இன்று வரை யானைகள் அதிகம் ஊடுருவும் பகுதியாக இருக்கக் காரணம். யானைகளின் வசிப்பிடமே இன்று விளைநிலங்களாகவும், மக்கள் வசிப்பிடங்களாகவும் மாறியுள்ளன’ என்றார்.
தொல்லியல் துறை
பாறை ஓவியம் குறித்து தொல்லியல் துறையினர் கூறும்போது, ‘கொங்கு மண்டலத்தில் நீலகிரி மாவட்டம் கரிக்கியூரில் உள்ளதைப் போல கோவையில் வெள்ளருக்கம்பாளையம், குமிட்டிபதி என ஒரு சில பாறை ஓவியங்களே உள்ளன. அதில் யானையை மனிதன் ஓட்டிச் செல்வது போன்றுள்ள இந்த ஓவியம் 3000 ஆண்டுகள் முந்தைய பெருங்கற்கால (அல்லது) இரும்புக்காலத்தில் வரையப்பட்டதாகும். போர் உருவானபோது யானைப்படை உருவானது. அதனாலேயே யானைகளை பிடிக்கவும், விற்கவும் மனிதன் கற்றுக் கொண்டான். கோவையின் வரலாற்றையும், யானையின் வாழ்விடத்தையும் கூறும் அரிய பாறை ஓவியம் இது. பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று’ என்கின்றனர்.
பாண்டியன் பாறை
குமிட்டிபதியைச் சேர்ந்த முத்துச்சாமி (60) கூறும்போது, ‘பாறை ஓவியத்துக்கான விளக்கம் தெரியவில்லை. ஆனால் சுமார் 10 பேர் அமரக்கூடிய அந்த குகையை பாண்டியன் பள்ளி (அ) பாண்டியன் பாறை என்பார்கள். பாண்டிய மன்னர்கள் காலத்தில் இங்கு பாடம் நடத்தவும், உயரமாக இருப்பதால் கண்காணிக்கவும் பயன்படுத்தி இருக்கலாம். மேலும் யானைகளை கட்டுப்படுத்துவது குறித்து அங்கு பாடம் நடத்தியிருக்கவும் வாய்ப்புள்ளது’ என்றார்.
பாதுகாக்க வேண்டும்
பாறை ஓவியங்கள் பலவும் எளிதில் பார்க்க முடியாத வகையில் அடர்ந்த காடுகளுக்குள்ளேயே இருக்கின்றன. ஆனால் குமிட்டிப்பதியில் உள்ள பாறை ஓவியம் எளிதில் பார்க்கக்கூடியதாக இருக்கிறது. ஆனால் அந்த குகையானது அங்குள்ளவர்களின் மது அருந்தும் இடமாகவும், சமூக விரோத செயல்களுக்கான இடமாகவும் இருக்கிறது. இதை தொல்லியல் துறை புனரமைத்து பாதுகாத்தால் ஆய்வு மாணவர்களுக்கும், வரலாற்று ஆர்வலர்களுக்கும் பயனளிக்கும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.  tamilthehindu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக