திங்கள், 20 ஜூன், 2016

மோடியும் மைத்திரியும் சேர்ந்து திறந்து வைத்த அமரர் துரையப்பா அரங்கம்...

தான் கொலையாளிகளின் இலக்கு என்பதை நன்கறிந்திருந்த அன்றைய யாழ் மேயர் அல்பிரட் தங்கராஜா துரையப்பா அவர்கள்  ஒரு கத்தோலிக்க கிறீஸ்தவராவர்.  ஆனாலும்  
ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் பொன்னாலையிலுள்ள வரதராஜ பெருமாள்  கோவிலில் சென்று வழிபடும் வழக்கம் உடையவர். ஜாதி மத பேதம் கடந்து மக்களின் அன்பை, அதிலும் தாழ்த்தப்பட்ட மக்களின் மனம் கவர்ந்தவர். அதனால் ஜாதிய தமிழ் தேசியவாதிகளுக்கு அவர் பெரும் சவாலாக இருந்தார்.  அமிர்தலிங்கம் யோகேஸ்வரன் போன்றவர்களால்  உசுப்பி விடப்பட்ட   இளைஞர்கள் துரையப்பாவை கொலை செய்ய தருணம் பார்த்து காத்திருந்தனர் .  அதற்காக  அந்த சனிக்கிழமை பிரபாகரன் உள்ளிட்ட கொலைகாரர்கள் காத்திருந்தனர். அன்றில் இருந்துதான் ஈழத்தமிழர்கள் வாழ்வில் இரத்த ஆறு ஓடத்தொடங்கியது. அதற்கு  வரதராஜ பெருமாள் கோவிலில் சிந்திய துரையப்பாவின் இரத்தமே கட்டியம் கூறியது போல இருந்தது  . கோவில் படிக்கட்டுகளில் வைத்தே கொலையாளிகள்  அவருக்கு வணக்கம் கூறினார் அவரும் பதில் வணக்கம் கூறினார் அதேகணம் அவரை சுட்டு வீழ்த்தினார்கள் கொலையாளிகள்.
 யாழ்ப்பாண மேயராக இருந்த அல்பிரட் துரையப்பா  மிகவும் ஒரு வித்தியாசமான மனிதர்.




யாழ்ப்பாண மாவட்டத்தை பிரதிநிதித்துவப் படுத்திய அநேகமான பாராளுமன்ற அங்கத்தவர்கள்  எல்லோருமே என்று சொல்லலாம் தமிழ் தீவிரவாதமுடையவர்களாக இருந்தார்கள். திருமதி பண்டாரநாயக்காவின் தலைமையிலான எஸ்.எல்.எப்.பி அரசாங்கத்தின் மீது தளர்வு காட்டாத விரோதம் கொண்டிருந்த அவர்கள் அதனை சிங்களத் தலைமைத்துவம் எனக் குற்றம் சாட்டினார்கள்.
அல்பிரட் துரையப்பா இந்த அலையில் எதிர்நீச்சல் போட்டு வந்த ஒருவர். அவர் நுட்பமான அறிவுமிக்க ஒரு உள்ளுர் அரசியல்வாதியாகவும், கீழ்தட்டு மக்களின் இதயத்தையும் மனதையும் வென்ற ஒரு மனிதராகவுமிருந்தார், அந்த மக்களில் பெரும்பான்iயோர் நகர்ப்புற வாக்காளர்களாக இருந்தார்கள். சலுகைகளையும் உரிமைகளையும் அடைவதற்கான வழி விரோதமும் எதிர்ப்பும் அல்ல ஆனால் சமரசமும் விட்டுக்கொடுப்புமே அதற்கு ஏற்ற பாதை என அல்பிரட் துரையப்பா அந்த மக்களை ஏற்றுக்கொள்ள வைத்திருந்தார். அதனால் அவர் எஸ்.எல்.எப்.பி யுடன் இணைந்து திருமதி பண்டாரநாயக்காவின் வலது கரமான பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்காவின் நெருங்கிய நண்பரானார்.
யாழ் மாவட்டத்தின் மகுட அணிகலன் போன்ற யாழ்ப்பாண நகரத்தை ஒரு எஸ்.எல்.எப்.பி தீவாக மாற்றியதற்கு அல்பிரட்டுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். அவரை அரசாங்கம் உயர்த்தி வைக்க முயன்றதுக்கு இதுதான் முக்கிய காரணம்.
ஒரு அமைதியான மாலை வேளையில் அல்பிரட் அவரது வீட்டுக்கு இராப்போசனம் உண்ண வருமாறு என்னைத் தொலைபேசியில் அழைத்தார்.” நீங்கள் உங்கள் வாசஸ்தலத்தில் தனிமையில்தான் இருக்கிறீர்கள் என்பதை நானறிவேன். நாங்கள் இரவு விருந்தில் கலந்து கொண்டு ஒருவரையொருவர் அறிந்து கொள்வோம்” இவ்வாறிருந்தது அவரது அழைப்பு.
அரசியல் வாதிகள் எனக்கு ஒவ்வாமையானவர்கள் அல்ல, அதனால்தான் திருகோணமலை பாராளுமன்ற அங்கத்தவர்களுடன் எனக்கு சுமுக உறவு ஏற்பட்டிருந்தது. அல்பிரட் புத்திசாலியாகவும் அசாதாரணமான அரசியல்வாதியாகவும் எனது ஆர்வத்தை தூண்டியிருந்தபடியால் அரசியல் அடியொழுக்குகளைப் பற்றிய சில அறிவுகளைத் தெரிந்து கொள்வதற்கு அது பயனுள்ளதாக இருக்குமென்பதால் அந்த அழைப்பை நான் ஏற்றுக் கொண்டேன்.
நேர்த்தியாக ஆடையணிந்து வீட்டில் தனிமையில் இருந்தார் என்னை விருந்துக்கு அழைத்த அல்பிரட் துரையப்பா.அவரது மனைவி அங்கில்லாததுக்கு என்னிடம் மன்னிப்புக் கோரினார். அவரது மனைவி ஒரு மருத்துவர், புறூணையில் பணிபுரிகிறார்.” பீலிக்ஸ் உங்களைப்பற்றி என்னிடம் சொல்லியிருக்கிறார். நீங்கள் இருவரும் பாடசாலையிலும் பின்பு பல்கலைக்கழகத்திலும் ஒருமித்துக் கற்றீர்களாமே?” என என்னிடம் வினாவினார். அது சரியானது என நானும் எற்றுக்கொண்டேன்.
என்னுடன் பேசுவதற்காக அவர் தன்னுடைய வீட்டுவேலைகளை நன்றாகவே தயார் படுத்தியிருக்கிறார். முற்றாகவும் சாத்தியமான விதத்திலும் யாழ்ப்பாணத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலைகளையும் மற்றும் தெற்குடன் இசைவுள்ளதான நகரின் அபிவிருத்தி பற்றிய அவரது கண்ணோட்டத்தையும் சுருக்கமாக விளக்குவதில் அவர் கொண்டிருந்த அவா எங்களது உரையாடல்களின் சுமையை சுவராஸ்யமற்றதாக்கியது.
விருந்து ஏற்பாடுகளும் வித்தியாசமானவைகளாக இருந்தன. வேலைக்காரன் எனக்கு யாழ்ப்பாண முன்மாதிரியான உணவுவகைளைப் பரிமாறினாலும் என்னை விருந்துக்கு அழைத்தவர் அவைகளை உண்ணுவதைத் தவிர்த்து அவரது வேலையாள் நன்றாக மூடிப் பூட்டிய பாத்திரத்தில் விசேட உணவினைக் கொண்டுவந்து  வைக்கும்வரை காத்திருந்தார். உணவுத்திட்ட கட்டுப்பாடுகளை அனுசரிக்கும் அளவுக்கு அவருக்கு இன்னும் வயதாகவில்லை என நினைத்து நான் ஆச்சரியத்திலாழந்து போனேன். எனது உந்துதல்களை உணர்ந்து கொண்ட அல்பிரட், இது எதையும் செய்யத் தயங்காத தனது அரசியல் எதிரிகள் தனக்கு நஞ்சூட்டி விடாமலிருக்க மேற்கொள்ளும் ஒரு தற்காப்பு என எனக்கு விளக்கினார்.
“அன்றொருநாள் நீங்கள் போன திரைப்படம் உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா?”(ஆகா எனது நகர்வுகளையெல்லாம இவர் கண்காணித்துக் கொண்டிருக்கிறார்) “ சில மாதங்களுக்கு முன்பு நானும் அங்கு போயிருந்தேன். மேலும் நான் சீருந்து தரிப்பிடத்தை நோக்கி நடந்து கொண்டிருக்கையிலேயே எனது சீருந்து வெடிவைத்து தகர்க்கப்பட்டது. நான் தப்பிப் பிழைத்தேன். எனது தினசரிப் பிரார்த்தனை என்னைக் காப்பாற்றியது. சிங்கள தமிழ் மக்களிடையே ஐக்கியத்தை விரும்பும் ஒரு அரசியல்வாதியாக நான் இருப்பதால் தீவிரவாதிகள் என்னை வெறுப்பதுடன் என்னைக்கண்டு பயப்படுகிறார்கள்.”என்றார் அவர்.  எனது அனுபவத்தை பொறுத்தமட்டில்  அப்போது கண்ணிவெடி பொருத்தப்பட்ட சீருந்துகளெல்லாம்  மிக்கி ஸ்பிலான்சின் நாவல்களிலேயே இடம்பெற்றிருந்தன.
தீவிரவாத வன்முறையின் இருண்ட ஆழங்களை இதுவரை நேரிட்டு அறிந்ததில்லை. அல்பிரட்டுக்கு ஒரளவுக்கு பிறர்மீது நம்பிக்கையில்லாமல் அவர்களைக்கண்டு அஞ்சும் நோய் இருக்குமோ என எனக்கு ஆச்சரியம்கூட ஏற்பட்டது.”கடினமான தோற்றமுடைய இளைஞன் தனது கையை வாயருகில் வைத்திருப்பது போலுள்ள சிலையை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அவன் டார்சானைப்போல பாவனை காட்டவில்லை. அவன்தான் எனது சீருந்தினை வெடி வைத்துத் தகர்த்த வில்லன். காவல்துறையினர் அவனைப் பிடிக்க இருந்த நேரத்தில் அவன் சயனைட்டை விழுங்கி விட்டான். இந்த வெட்கம்கெட்ட பாராளுமன்ற அங்கத்தவர்கள் அவனை ஒரு நாயகனாகச் சித்தரித்து அவனுக்கு சிலை வைத்துள்ளார்கள். கொலைகாரர்களை நாயகர்களாக சித்தரித்து வழிபாடு செய்வதைத்தான் நமது பாராளுமன்ற அங்கத்தவர்கள் பாவப்பட்ட தமிழ் மக்களுக்கு முன்மாதிரியாக எடுத்துக்காட்டுகிறாhகளா? என்னுடைய பார்வை வித்தியாசமானது.” நீண்ட விளக்கமளித்தார் அவர்.
அன்றைய இரவு அவரை விட்டுப் பிரிந்து வந்தபோது எனக்கு ஆலோசிப்பதற்கு நிறைய விடயங்கள் இருந்தன.காவல்துறை கண்காணிப்பாளர் மித்திர அபேசிங்க மேம்போக்காக இயங்கும் துணை ஜனநாயகத் தமிழ் கட்சிகளில் உள்ள வன்முறை எண்ணம் கொண்ட வாலிபர்கள் ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் இடையூறுகள் விளைவிப்பதற்கும் கொலைகள் செய்வதற்கு வேண்டியும் பதுக்கி வருவதைப் பற்றிப் பேசுகையில்  என்னிடம் கூறிய கருத்தை நினைவுபடுத்தினேன். 1971ல் மாத்தறையில் வைத்து காவல்துறை உதவிக் கண்காணிப்பாளர் பிபிலே சிங்கள இளைஞர்கள் காடுகளில் யுத்தப் பயிற்சி பெறுவதாக கூறிய கருத்துடன் இது பெருமளவில் ஒத்திருப்பதாகத் தோன்றியது. இரண்டுமே தடை செய்யப்பட்டவை. அன்றைய இரவு ஒரு கடினமான இரவாகவிருந்தது.
ஒரு வகையான புறப்பாடு
எனக்குப் பெரிய ஆறுதல் தரும் விடயமாக லால் விஜயபால எனக்குப்பதிலாக யாழ்ப்பாணத்துக்கு தெரிவு செய்யப்பட்டார். வடக்கு மற்றும் கிழக்கு இரண்டையும் நிர்வகிக்கும் சுமைகள் அகற்றப்பட்டன (அது பிபாகரனின் நீண்ட ஆயுளுக்காக வேண்டியிருக்கலாம்). அது 1975 ல் ஒரு ஜூலை மாத நடுப்பகுதி யாழ்ப்பாணத்தில் உள்ள எனது நண்பர்களுக்கும் சகாக்களுக்கும், அது மனவருத்தமான ஒரு பிரியாவிடையாக இருந்தது, ஏராளமான இராப்போசன விருந்துகளையும், பிரியாவிடை உரைகளையும் என்னைச் சுற்றி நடத்தினார்கள்.
நான் திருகோணமலைக்கு மீண்டும் திரும்பி எனது வழமையான பழக்கமான பணிகளை கவனிக்கத் தொடங்கினேன் எனது அமைதியடைந்த மனது திருமதி பண்டாரநாயக்காவின் நேரடித் தொலைபேசி அழைப்பு ஒன்றின் மூலம் ஆட்டம் கண்டது. ”திஸ்ஸ என்னிடம் ஒரு கெட்ட செய்தி உள்ளது. இன்று காலை அல்பிரட் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டார்.நீங்கள் உடனடியாக யாழ்ப்பாணம் சென்று அவரது மரணச் சடங்குகளுக்கான ஒழுங்குகளை மேற்கொள்ள வேண்டும்.  நானே என்னுடைய அமைச்சரவை அமைச்சர்களுடன் நேரடியாக வருகிறேன்” என்று கூறினார். எந்த விடயத்தையும் நேரடியாகக் கையாளும் சிறந்த தலைவர் அவர்.  உடனேயே நான் விமானம் மூலம் யாழ்ப்பாணம் போய்ச் சேர்ந்து நான் கைவிட்டு வந்த அதிகாரத்தை மீண்டும் தொடரலானேன். நான் விமானத்திலிருந்து இறங்கிய உடனேயே நான் அறிந்து கொள்ள ஆரம்பித்து அதிசயப்பட்ட ஒருவரான மரணமடைந்த அந்தத் தலைவருக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக வைத்தியசாலைக்குச் சென்றேன். தனது மக்கள்மீது எவ்வளவு உயர்ந்த பார்வையைக் கொண்டிருந்த அந்த மனிதரது குரூரமாக துப்பாக்கிச் சன்னங்கள் பாய்ந்த அந்த உடலை பார்த்தபோது இதயமே வெடித்து விடும் போல இருந்தது.
அவரது கொலை சம்பந்தமான கருத்துக்கள் என்னிடம் விளக்கப்பட்டன. தான் கொலையாளின் இலக்கு என்பதை நன்கறிந்திருந்த மனிதரான அல்பிரட் வருந்தத்தக்க விதத்தில் தனது பூஜை வழிபாட்டு வழக்கத்தில் மாற்றங்களை ஒருபோதும் செய்ததில்லை. கிறீஸ்தவ பின்னணியைக் கொண்டவராக இருந்தாலும் அவரது சமயசம்பந்தமான  மூட நம்பிக்கைப் பழக்கங்கள் (எல்லா அரசியல்வாதிகளையும்போல) உண்மையில் பல தெய்வ வழிபாட்டினைக் கொண்டதாகவிருந்தது. ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் பொன்னாலையிலுள்ள விஷ்ணு கோவிலில் அவர் பூஜை வழிபாடு நடத்தி வந்தார். இந்தச் சனிக்கிழமைதான் அவரது கடைசிப் பூஜை நடக்கும் சனிக்கிழமையாகவிருந்தது.கோவில் படிக்கட்டுகளில் வைத்தே அவர் தனது மரணத்துக்கான நியமனத்தை பெற்றுக்கொண்டார். ஒரு வாலிபனான கொலையாளியால் சாவு அவரைத் தழுவிக் கொண்டது. ஒரு கைத்துப்பாக்கியால் அவரைக் கொன்ற அந்தக் கொலையாளி ஒடிவிட்டான். அவனைத் தடுத்து நிறுத்த யாரும் துணியவில்லை.
காவல்துறை கண்காணிப்பாளர் மித்திர அபேசிங்க கொலையாளிகளாக இருக்கலாம் என நம்புபவர்களை வேட்டையாடுவதற்கு நேரத்தை வீணடிக்காமல் உடனே தயாரானார். பிரதான சந்தேக நபர் பதின்மவயதான பிரபாகரன் எனும் பெயருடைய (ஒரு சமயம் என்கீழ் பணியாற்றிய மென்மையான சைவ உணவுக்காரரான காணி இலிகிதர் வேலுப்பிள்ளையின் மகனான) ஒரு போக்கிரி என்றும் அவன் ஏற்கனவே படகுமூலம் தமிழ்நாட்டுக்குத் தப்பிவிட்டான் என்றும்உடனடியாகவே அவர்கள்  கண்டு பிடித்தார்கள். காவல்துறை தலைமையகத்தில் ஐ.ஜி.பி. அனா செனிவிரத்னவுடன் நாங்கள் ஒரு விளக்கவுரையாடலை நடத்தினோம். ஆனால் திருப்புமுனையான சம்பவம் எதுவும் கண்ணுக்குத் தெரிகிறமாதிரி உடனடியாக நடக்கவில்லை. எனவே நாங்கள் பிரதம மந்திரியினதும் மற்றும் மரணச் சடங்குக்காக வரப்போகும் முக்கிய பிரமுகர்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் கவனம் செலுத்தலானோம்.
இறுதி வாழ்த்துக் கோசம்
பிரதமர், அமைச்சரவை அமைச்சர்கள், மாநகர முதல்வர்கள் வெளிநாட்டு ராஜதந்திரிகள், மற்றும் பல தரப்பட்டோர் என்று யாழ்ப்பாணம் முன் எப்போதும் கண்டிராத இனி எப்போதும் காணமுடியாத மிகச் சிறந்த நல்லவர்களினதும் வல்லவர்களினதும் கூட்டம் நிரம்பி வழிந்தது. அல்பிரட்டுக்கு விசுவாசமான கீழ்தட்டு மக்களைக் கொண்ட பெருந்திரளான மக்கள் கூட்டம் அவர் கட்டிய அரங்கத்தை நிறைத்திருந்தது.
நான் நினைக்கிறேன் முதலாவது இரங்கலுரையை நான்தான் ஆரம்பித்தேன் என்று, மிகக் குறுகிய காலம் நான் அறிந்திருந்த மனிதரைப்பற்றி எனக்குத் தெரிந்த அனைத்தையும் புகழ்ந்து பேசினேன். அதைத் தொடர்ந்து பேசிய பிரதம மந்திரி ஆழ்ந்த வேதனையுடன் பேசினார். தமிழர் மற்றும் சிங்களவரிடையே நெருங்கிய உறவினை அல்பிரட் மூலமாக உருவாக்க முடியும் என தான் நம்பியிருந்ததாக அவர் தெரிவித்தார். மேலும் பல சொற்பொழிவுகள் நிகழ்தப்பட்ட பின்னர் இறுதியாக அல்பிரட் அவரது எளிமையான ஆதரவாளர்களின் துயரத்துக்கு மத்தியில் நித்திய இளைப்பாறுதலுக்காக அடக்கம் செய்யப்பட்டார். அத்துடன் அல்பிரட் நல்வழிப்படுத்த பெரும்பாடுபட்ட இன நல்லுறவுக்கான சுடரும் முற்றாக அணைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் எங்கும் ஒரு இரத்த ஆறு பெருக்கெடுத்து ஒட ஆரம்பித்தது.
கடமை முடிந்தது, ஏற்கனவே படுகொலை எனும் புயல் மேகங்கள் சூழ்ந்து ஏற்படுத்திய வெறுப்பினால் தளர்வடைந்த மனதில்  பாரிய துயரத்தைச் சுமந்து கொண்டு அமைதியான திருகோணமலை நோக்கி நான் மீண்டும் பறக்க ஆரம்பித்தேன்.
திஸ்ஸ தேவேந்திரா
(இந்தக் கட்டுரை எழுத்தாளர் யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் அரசாங்க அதிபராகக் கடமையாற்றிய ஓய்வு பெற்ற முன்னாள் நிருவாகசேவை உத்தியோகத்தராவார்.)
தமிழில் எஸ்.குமார்
நன்றி
தேனீ – இணையத்தளம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக