ஞாயிறு, 19 ஜூன், 2016

சென்னை மாணவர்கள் விபரீத பஸ் தினக் கொண்டாட்டம்


சென்னையில் கல்லூரி மாணவர்கள் பெரும்பாலானோர், விபரீத செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. ‘பஸ் தினக் கொண்டாட்டம்’ என்று தொடங்கி, தாங்கள் கல்லூரிக்கு பேருந்தில் பயணப்படும்போது ‘ரூட்டு தல’யாக மாறி, மோதலில் ஈடுபடுகிறார்கள். அரிவாள், உருட்டு கட்டையுடன் தாக்குதல் சம்பவம் நடக்கிறது. பெண் பயணிகளைக் கிண்டலடிக்கின்றனர். பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் மீதும் தாக்குதல் நடக்கிறது. பொது சொத்துகளுக்கும் சேதம் விளைவிக்கப்படுகிறது. இதுபோன்ற அசம்பாவித சம்பவங்களைத் தடுக்க சமீபத்தில், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்துக்கு போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். சென்னையில் உள்ள நந்தனம் அரசு கலை கல்லூரி, மாநிலக் கல்லூரி, புது கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி, டாக்டர் அம்பேத்கர் கல்லூரி, தியாகராய கல்லூரி ஆகிய கல்லூரிகளின் முதல்வர்கள் மற்றும் மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள், பஸ் ஊழியர்களின் பிரதிநிதிகள், கல்லூரி மாணவர்களின் பிரதிநிதிகள் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். இதில் 10 அதிரடி திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, “பஸ் தினம் பெயரில் மாணவர்கள் பஸ்களில் ஊர்வலமாக செல்ல தடை விதிக்கப்படுகிறது. பஸ்களில் படிக்கட்டுகளில் பயணம் செய்வதற்கும் பஸ்களின் கூரை மீது ஏறி நின்று பயணம் செய்வதற்கும் அனுமதி இல்லை. கல்லூரிக்கு வரும் மாணவர்கள் கண்டிப்பாக அடையாள அட்டை கொண்டு வரவேண்டும். அடையாள அட்டை இல்லாத மாணவர்களைக் கல்லூரிக்குள் அனுமதிக்கக் கூடாது. கல்லூரிக்கு வரும் மாணவர்களின் பைகள் மற்றும் உடைமைகளைக் கண்டிப்பாக சோதனை செய்ய வேண்டும். கல்லூரிகளின் நுழைவு வாயில், மாணவர்கள் விடுதி, கேன்டீன் மற்றும் கல்லூரி வளாகங்களில் கண்டிப்பாக சி.சி.டி.வி. கேமிராக்களைப் பொருத்த வேண்டும். கல்லூரியின் உள்ளே, முன்னாள் மாணவர்கள் மற்றும் வெளியாட்களை கண்டிப்பாக அனுமதிக்கக்கூடாது. வன்முறை மற்றும் ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபடும், தொடர்ந்து தவறு செய்யும் மாணவர்களைக் கல்லூரியில் இருந்து தற்காலிக இடைநீக்கம் செய்யலாம். இதுகுறித்து மாணவர்களுக்கு அடிக்கடி கலந்தாய்வு கூட்டங்களை நடத்தி ஆலோசனைகள் வழங்க வேண்டும். பஸ்ஸில் கலாட்டா செய்யும் மாணவர்கள் குறித்து பொதுமக்கள் அல்லது பஸ் ஊழியர்கள் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்க வேண்டும். தகவல் வந்தவுடன் போலீஸார் உடனடியாக உரிய நடவடிக்கை எடுப்பார்கள். வன்முறையில் ஈடுபடும் மாணவர்கள் குறித்து 95000 99100 என்ற செல்போன் எண்ணுக்கு எஸ்எம்எஸ் மூலம் தகவல் அனுப்பலாம். மாநகர பஸ்களில் கண்டிப்பாக கேமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு நடைமுறையை அமல்படுத்த வேண்டும்” போன்ற திட்டங்களை அதிரடியாக அரங்கேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னையில் தினமும் காலை 8 மணியில் இருந்து 9 மணி வரை முக்கியமான பஸ் நிறுத்தங்களில் குறிப்பாக மாணவர்கள் பஸ்களில் பயணம் செய்யும் வழித்தடங்கள் உள்ள பகுதிகளில் போலீஸார் காவல் பணியில் ஈடுபடுவார்கள்.  minnambalarm.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக