வியாழன், 16 ஜூன், 2016

அமித்ஷா தாழ்த்தப்பட்ட மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பறிக்க...தலைவர் கி.வீரமணி எச்சரிக்கை

உத்தரப்பிரதேசம், அலகாபாத்தில் நடைபெற்ற பாஜக நிர்வாகக் குழுக் கூட்டத்தில் வரும் 2017ம் ஆண்டு நடக்கவிருக்கும் உத்தரப்பிரதேசம், பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க, பாஜக தலைவர் அமித்ஷா சில யோசனைகளையும், வழிகாட்டுதல்களையும் பாஜக-வினருக்கு வழங்கியுள்ளார். அவை…
‘1. தாழ்த்தப்பட்ட மக்களை மாநில, மாவட்ட, கிராம அளவிலான நிர்வாகப் பொறுப்புகளில் அதிக அளவில் நியமிக்க வேண்டும்.
2. தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகளுக்குச் சென்று உணவருந்த வேண்டும்.
3. ‘முத்ரா வங்கி’ திட்டத்தின்கீழ், தாழ்த்தப்பட்ட சமூகப் பெண்கள், பயனடையாதவர்களைக் கண்டறிந்து அவர்களை இந்த வளையத்துக்குள் கொண்டு வரவேண்டும்.

4. இரட்டை டம்ளர் எங்கும் இல்லாத நிலையை ஏற்படுத்துவதுடன், தாழ்த்தப்பட்டோர் சுதந்திரமாக ஆலயப் பிரவேசம் செய்யும் நிலையை ஏற்படுத்தவேண்டும்’ என்பதாகும்.
இந்நிலையில் ‘அமித்ஷா அறிவித்துள்ள திட்டங்கள் தாழ்த்தப்பட்ட மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பறிக்கவே!’ என திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், ‘இட ஒதுக்கீட்டில் தாழ்த்தப்பட்டோருக்கான விகிதாசாரம் கடைபிடிக்கப்படுகிறதா? ஐஐடி, ஐஐஎம், மத்திய பல்கலைக்கழகங்களில் உரிய விகிதாச்சாரம் பின்பற்றப்படுகின்றனவா என்று நாடாளுமன்றத்தில் புள்ளி விவரங்கள் தந்து வாதாட முன்வருவார்களா? உச்சநீதிமன்றத்தின் 31 நீதிபதிகள் எண்ணிக்கையில் இன்றும்கூட (மோடி ஆட்சி வந்து 2 ஆண்டு காலத்தில்) ஒரே ஒரு தாழ்த்தப்பட்ட சமூக நீதிபதி கூட நியமிக்கப்படவில்லையே ஏன்? இந்தியாவில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதிகளில் எத்தனைப் பேர் தாழ்த்தப்பட்டவர்கள் என்று கூறுவார்களா? அவர்களுக்கென்ற ‘கோட்டா’ நிரப்பப்படுகின்றதா? ஓய்வுபெற்ற தாழ்த்தப்பட்ட திறமையான நீதிபதிகள் பலரும் உள்ள நிலையில், அவர்களை உச்சநீதிமன்றத்திற்கு நியமிப்பதில் என்ன தடை இருக்க முடியும்? ஒருநாள் கூத்து போலத்தான், ஒருநாள் தாழ்த்தப்பட்டவர் வீட்டில் உண்ணச்செல்லும் சமபந்தி போஜனம் என்பதாகும்.
இது ஒரு அரசியல் மத்தாப்பு கொளுத்தல். கொஞ்ச நேரத்தில் கரியாகிவிடும். தீண்டாமை ஒழிப்புக்கான மத்திய அரசினால் 1969ல் நியமிக்கப்பட்ட இளையபெருமாள் கமிட்டி பரிந்துரையில் முக்கியமானது, தாழ்த்தப்பட்ட மக்களை கோயில்களில் அர்ச்சகர் ஆக்க வேண்டும் என்பதுதான். அதை காங்கிரஸ் அரசு செயல்படுத்தவில்லை என்று கூறினாலும்கூட இவ்வாட்சியான பாஜக செய்யலாமே… இந்தியா முழுவதிலும் செய்வார்களா? தீண்டாமை உண்மையிலேயே ஒழிக்கப்பட சாதி என்னும் அதன் மூலவேரை அல்லவா அழிக்க முன்வரவேண்டும். இவர்களது ‘ஹிந்துத்துவா’ அதற்கு இடம் தராது என்பதற்கு கோல்வால்கரின் (அவர்தான் ஆர்எஸ்எஸ்ஸின் தத்துவகர்த்தா) ‘ஞானகங்கை’ (Bunch of Thoughts) நூலே சரியான எடுத்துக்காட்டு அல்லவா?
ஓட்டுக்கான இந்த மயக்க பிஸ்கெட்டுகளில் மயங்கி அப்பாவி தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் எந்தவிதத்திலும் ஏமாறமாட்டார்கள் என்றாலும், எச்சரிக்கை தேவை!’ என்று குறிப்பிட்டுள்ளார்.  minnambalam.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக