வியாழன், 16 ஜூன், 2016

சாதிய சனாதன சக்திகளோடு சமரசம் செய்து கொள்ளாத சின்னக்குத்தூசி

பத்திரிகையாளர் சின்னக்குத்தூசி பிறந்த நாளை ஒட்டி, அவர் நினைவாக நக்கீரன் கோபால் தொடங்கிய சின்னக்குத்தூசி நினைவு அறக்கட்டளையின், அச்சு ஊடகம் சார்ந்த சிறந்த கட்டுரையாளர்களுக்கான & வாழ்நாள் சாதனையாளருக்கான விருது வழங்கு விழா சென்னையில் நடைபெற்றது. வாழ்நாள் சாதனையாளருக்கான் விருதை பதிப்பாளர் வைகறைவாணன் பாராட்டு, பட்டயம், ரூபாய் ஒரு லட்சம் தொகையுடன் பெற்றுக் கொண்டார். ஜீவசுந்தரி பாலன், ஹெச்.பீர்முகமது, பேரா.என்.சீனிவாசன் ஆகியோர் சிறந்த கட்டுரைக்கான  தலா 10,000 ரூபாய் விருதைப் பெற்றுக் கொண்டனர். சின்னக்குத்தூசியின் எளிமை, கொள்கை பிடிப்பு, யாவர் மீதும் காட்டிய அவர் காட்டிய அன்பு, தகவல் களஞ்சியமாக விளங்கியமை, சனாதன, சாதிய சக்திகளுக்கு எதிராக கருத்துப் போரை நடத்தியது என நக்கீரன் கோபால், கோவி லெனின், கோபண்ணா போன்றோர் சுட்டிக் காட்டிப் பேசினர்.


 இடதுசாரி அமைப்பின் வரலாறு, உழைப்பு, சாதனைகளை அறிய வாய்ய்பு தரும் பெரு நூலகம் ஒன்றினை சென்னையில் அமைக்க வேண்டுமென , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் ஜி.ராமகிருஷ்ணனிற்கு வேண்டுகோள் விடுத்தார் வைகறைவாணன். ஜீவசுந்தரி தான் பெற்ற விருதை தோழமைத் தந்தையர் கடலூர் பாலன், சின்னக்குத்தூசி, இரா.ஜவஹர் என  மூவருக்கும், வைகறைவாணன் அமரர் ஜீவாவிற்கும் விருதை சமர்ப்பணம் செய்வதாகக் கூறினர்."

கோவி லெனின் சின்னக்குத்தூசியினூடான தன் 26 ஆண்டு கால ஞாபகங்களை அறிவார்ந்த முறையில் தலைமையுரையில் பகிர்ந்து கொண்டார்.

விருதுகள் வழங்கி சிறப்புரையாற்ற வந்த தோழர் ஜி.ராமகிருஷ்ணன், அற்புதமான உரையை வழங்கினார். காமராசர், சம்பத்,கண்ணதாசன், பழ.நெடுமாறன், கருணாநிதி என்று தலைவர்களின் அன்பைப் பெற்ற சின்னகுத்தூசி, அரசியலோடு சமரசங்கள் செய்தாலும், அடிப்படையான நாத்திகம், சாதிய,சனாதன,பிற்போக்கு சக்திகளுக்கு எதிராக ஒரு பொழுதும் சமரசம் செய்து கொண்டது இல்லை என்றார்."

பெரியாரியம், அம்பேத்கரியம், மார்க்சியம் மூன்றும் தமிழ்நாட்டிற்கு இந்தியாவிற்கு தேவைப்படுவதாக ஜி.ஆர் தொடர்ந்து பேசினார். பெரியாரியத்தை தமிழ்நாட்டின் தி.மு.க, அ.தி.மு.க  என இரு திராவிடக் கட்சிகள் கைவிட்ட நிலையில், அதன் ஜீவ ஒளியை நாம் தொடர்ந்து ஏந்தி செல்வோம் என்று பிரகடன்ம் செய்தார்

கம்யூனிஸ்டுகளின் சாதிய மதவாத எதிர்ப்பு நடைமுறையை தந்தை பெரியார் என்றும் மதித்தார் என்று பேசிய ஜி.ஆர், காந்தியையும் தாங்கள்  கொண்டாடி வருவதாக வி.இராமமூர்த்தியின் “காந்திஜியின் இறுதி இருநூறு நாட்கள்” நூலின் வழியாக மேற்கோள் காட்டிப் பேசினார். ஆண்டு தோறும் சின்னக்குத்தூசி பெயரில் நினைவுச் சொற்பொழிவு நடத்தலாம் என்று, அறக்கட்டளைக்கு ஜி.ஆர் விடுத்த கோரிக்கையை ஏற்பதாக, நக்கீரன் ஆசிரியர் ஆர்.ஆர். கோபால் அறிவித்தார்.

சங்கொலி திருநாவுக்கரசு, இரா. ஜவஹர் சாவித்திரி கண்ணன், மணா, கார்த்திகைச்செல்வன், இரா.சிந்தன், கே.என்.சிவராமன், அப்பணசாமி, கவின்மலர், யுவகிருஷ்ணா, தாயன்பன், இனியன் போன்ற எழுத்தாளர்கள், கலைஞர்கள் விழாவில் பங்கேற்றனர். விழாவின் தொடக்கத்தில் கோவி.லெனின் இயக்கிய சின்னக்குத்தூசியின் ஆவணப்படம் திரையிடப்பட்டது.   thetimestamil.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக