வெள்ளி, 10 ஜூன், 2016

விகடனின் புண்ணாக்கு ஒப்பீடு : வடிவேலு ,பெரியார், அம்பேத்கர், ஜெயகாந்தன், புதுமைப்பித்தன்

இந்த விகடனின் தடம் என்ற இதழ், ஏதோ கலை, இலக்கியத்தை உய்விக்க ஆண்டவனால் ஆசிர்வதிக்கப்பட்டது என்ற ரீதியில் எழுதி சூடம் கொளுத்தி தங்களின் பக்தியை பறைசாற்றும் பதிவுகளை வாசிக்க முடிந்தது. நானும் இதழை வாங்கி புரட்டிப் பார்த்தேன், பக்கவாட்டில் சாய்த்து, அண்ணாந்து தூக்கிப்பார்த்தேன், குனிந்து கீழே இறக்கிப் பார்த்தேன், சிரகாசனத்தோடு கண் சிவக்க பார்த்தேன். எந்த கோணத்திலும் பார்த்தாலும் எனக்கு இலக்கியமும் தெரியவில்லை, லேகியமும் தெரியவில்லை. இப்படி சகட்டு மேனிக்கு பார்த்ததில் உடலில் கண்ட இடத்தில் சுளுக்கு வந்ததுதான் மிச்சம். போதாக்குறைக்கு அட்டைப்படத்தில் பெரியார், அம்பேத்கர், ஜெயகாந்தன், புதுமைப்பித்தன் கோட்டோயோவியங்களோடு சிரிப்பு நடிகர் வடிவேலு படத்தையும் போட்டு யாரை கேவலப்படுத்துகிறார்கள் எனத்தெரியவில்லை.    எஸ் எஸ் வாசனே கொக்கோக சாத்திரம் என்றா காம கிளர்ச்சி நூலை அந்த காலத்திலேயே எழுதி பணம் பார்த்தவர் .. விகடன் குழுமம் புலிகளின் அத்தனை  மோசமான விடயங்களையும் நியாயப்படுத்தி பணம் பண்ணியவர்கள்

குமுதத்திற்கு தீராநதி, விகடனுக்கு தடம். இந்த வியாபார போட்டியில் கலை, இலக்கியத்தை நார் நாராக கிழித்து மானபங்கம் செய்கிறார்கள். தற்போது தமிழ்நாட்டில் கலை, இலக்கியம் என்பது துரித கதியில் அமோகமாக விற்பனையாகும் பண்டமாக மாற்றப்பட்டுள்ளது. சொப்பன ஸ்கலிதம், விரைவீக்கம், மூலம், பவுத்திரம் போன்ற உடல் உபாதைகளுக்கு மஞ்சள் நோட்டிஸ் விளம்பரம் செய்யும் சிட்டுக்குருவி லேகியம் புகழ் சிவராஜ் மருத்துவர் பாணியில் இலக்கியத்தையும் கேவலப்படுத்த தமிழ்நாட்டில் மட்டுமே சாத்தியம்.
இப்படி அரைவேக்காட்டுத்தனமாக ஆங்கில மருத்துவத்திற்கு இதழ் கொண்டுவர துணிச்சல் உண்டா? பொறியியலுக்காக ஒரு பிரத்யேக இதழை கொண் டு வருவார்களா? அல்லது வேற எந்த அறிவார்ந்த துறையிலாவது கை வைக்க துணிச்சல் உண்டா? இத்தகைய தடித்தனங்கள், இலக்கிய சேவை என்ற போர்வையில் விற்பனை உத்திகளாக கையாளப்படுகிறது. பொதுபுத்தியில் கலை, இலக்கியம் என்பது பொழுதுபோக்கு சமாச்சாரம் என்பது அடித்து இறக்கப்பட்டு, எந்த முன் அனுபவம்/அர்பணிப்பு இல்லாமல் எவர் வேண்டுமானாலும் எழுதலாம், இதற்காக இதழையும் தொடங்கலாம் என்பது தமிழ்நாட்டில்தான் நடக்கும். மற்ற அறிவார்த்தை துறைகளை, பவ்யமாக, மரியாதையாக அணுகும்போது இலக்கியம் மட்டும் இளிச்சவாய் துறையா? கலை, இலக்கியம் என்பது பொழுது போக்கு சமாச்சாரம் இல்லை. கல்லூரியில் படிக்கும்போது உழைப்பை செலுத்தி தேர்வாகும்போது, கலை, இலக்கியத்திற்கும் உழைப்பு, அர்பணிப்பு, தேடல் தேவை. இலக்கியம் அறத்தையும், விழுமியத்தையும், மாற்று மதிப்பீடுகளையும் முன்வைத்து , ஒரு சமூகத்தின் கலாச்சாரம், பண்பாட்டிற்கு அடித்தளமாக இருப்பது..ஆணிவேரையே புடுங்குவது தமிழ்நாட்டில் மட்டுமே சாத்தியம்..அவலம்..அவலம்..
வாசுதேவன், எழுத்தாளர்.  minnambalam.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக