வெள்ளி, 10 ஜூன், 2016

அதிமுகவில் சேர்ந்தால் எல்லாம் பெறலாம்.. பகிரங்கமாக வலைவிரிக்கும்"570 கழகம்"

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தனி பெரும்பான்மையாக வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தது அதிமுக. வலிமையான எதிர்கட்சியாக திமுக சட்டமன்றத்திற்குச் சென்றுள்ளது. இந்நிலையில் திமுகவைச் சேர்ந்த மாநில மகளிரணி துணைச் செயலாளர் ஜி.விஜயகுமாரி , திமுக மாநில பிரசாரக்குழுச் செயலாளர் கண்மணி,
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒன்றிய முன்னாள் திமுக செயலாளரும், போளூர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டவருமான ஏழுமலை, திருவண்ணாமலை வடக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி முன்னாள் துணை அமைப்பாளரும், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினருமான செந்தில்குமார், நகைச்சுவை நடிகர் கேதீஸ்வரன் என்ற போண்டா மணி உள்ளிட்டோருடன் மேலும் சிலர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் திருவள்ளூர் வடக்கு மாவட்ட இளைஞர் அணித்தலைவர் வழக்கறிஞர் இமாலயா கே.அருண்பிரசாத் அதிமுகவில் இணைந்தார்.தேர்தல் முடிந்து கிட்டத்தட்ட ஒரு மாத காலம் ஆகியிருக்கும் நிலையில் உள்ளாட்சித் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கட்சிமாறும் படலம் அரங்கேறியுள்ளது.ஆளும் கட்சி எதிர்கட்சியை உடைத்து தன் கட்சிக்குள் இழுத்துக் கொள்வது வழக்கமான ஒன்றுதான் என்றாலும் இது திமுகவினரிடையே கொந்தளிப்பை உருவாக்கி உள்ளது.

அதிமுக செய்தித்தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதியிடம் இதுபற்றி கேட்டோம். அப்போது, "திமுக தற்போது அதிகமான இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது என்றால் அதற்கு காரணம், திமுக-வின் உழைப்பு அல்ல.திமுக செலவழித்த பணம். அவர்கள் செலவழித்தப் பணத்தை வைத்து இந்தியாவுக்கே செலவழிக்கலாம். அந்த அளவுக்கு ஊடகங்களை விலைக்கு வாங்கி, பல லட்சம் கோடிகளை செலவழித்துள்ளனர். ஆனால், அதையும் தாண்டி மக்கள் 'அம்மாதான்’ முதல்வராக வேண்டும் என்று தெளிவாக இருந்தனர்.

நம்பிக்கையுடன் மீண்டும் அம்மாவை முதல்வராக்கியுள்ளனர். அதிமுக-வைப் பொருத்தவரை நாங்கள் யாரையும் கட்சிக்கு இழுப்பதில்லை.

ஆனால், கட்சியில் இணைய வருபவர்கள் எல்லோரையும் அம்மா அரவணைத்துக் கொள்வார். அதுவும், பெண்களுக்கு அம்மா தனி முக்கியத்துவம் கொடுப்பார். உள்ளாட்சியில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு என சொல்லியுள்ளார். அது அதிமுக-வுக்கு பெரும்பலமாக இருக்கும். சமீபத்தில் கட்சியில் இணைந்த எஸ்.ஆர்.பாலசுப்ரமணியத்துக்கு கூட மாநிலங்களவை எம்.பி பதவி வழங்கினார். அதுபோல, ஒவ்வொருவருக்கும் என்ன செய்யவேண்டும் என அம்மா முடிவெடுப்பார். ஆனால், அதிமுக-வில் யார் இணைந்தாலும் அவர்களின் எதிர்காலம் பாதுகாப்பானது என்பதை மட்டும் என்னால் உறுதியாகச் சொல்லமுடியும்" என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக