வெள்ளி, 10 ஜூன், 2016

ஷகீலா ; சினிமா வாய்ப்புக்காக நான் ஒருபோதும் தரம் தாழ்ந்தது இல்லை

சினிமாவில் நடிக்கும் வாய்ப்புக்காக நான் எங்கேயும் கீழ்ப்படியவில்லை. யாருக்கும் இரையாகவில்லை”: ஷகிலாவின் சுயசரிதையிலிருந்து எதிர்பார்க்கவே இல்லை. ‘ப்ளே கேர்ள்ஸ்’ என்ற என் முதல் படம் பாக்ஸ் ஆஃபீஸில் பெரிய ஹிட் ஆனது. சில்க் ஸ்மிதாவுடன் நடித்த அந்த சினிமாவின் வெற்றி என்னை ஆனந்தத்தின் உச்சத்துக்குக் கொண்டு சென்றது. சினிமா என்னும் பிரம்மாண்ட உலகத்தில் என் எதிர்காலம் நிச்சயிக்கப்பட்டுவிட்டது. அத்தனை நாள் யாராலும் அறியப்படாமல் கோடம்பாக்கத்தின் ஒரு சாதாரண இளம்பெண்ணாக இருந்த நான் தென்னிந்தியா முழுக்க அறியப்பட்டுவிட்டேன். சினிமாவின் டிக்ஷனரியில் ஷகீலா என்ற பெயர் பதிவுசெய்யப்பட்டுவிட்டது. இவ்வளவு பெரிய வெற்றியும் கவனமும் எனக்குக் கிடைக்கும் என்று நான் எதிர்பார்த்திருக்கவில்லை.  மலையாள திரையுலகில் பெரிதாக கலை கொள்கை  முழக்கம் இடும் மோகன்லால் மம்முட்டி போன்ற வியாபாரிகள் நடிகை ஷகீலாவை ரொம்ப மோசமாக திரை உலகை விட்டு அப்புறப்படுத்தினார்கள் ..

 நான் விரும்பியதைவிட வேகமாக வளர்ந்து வந்தேன் என்று சொல்லலாம். அந்த மகிழ்ச்சியை குடும்பத்தினரிடமும் நண்பர்களிடமும் பகிர்ந்துகொண்டேன்.
சினிமாவின் புதிய மேய்ச்சல் நிலங்களை தேடி அடைவதற்கு விரும்பினேன். நடிப்புலகில் நுழையும்போது எனக்கு பதினேழு வயது திகைந்திருந்தது. நடிப்பில் விருப்பமிருந்தும் அதுவரை நான் யாரிடமும் வாய்ப்புக் கேட்டு செல்லவில்லை; யாருடைய காலையும் பிடிக்கவில்லை; ஆனாலும் சினிமா உலகம் என்னைத் தேடி வந்தது. மற்ற கஷ்ட நஷ்டங்கள் ஏதுமில்லாமல் சினிமாவில் நுழைய முடிந்ததற்காக தெய்வத்துக்கு நான் நன்றி சொன்னேன்.
இதை நான் உங்களிடம் சொல்லும்போது உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம், நான் நடிப்பது எல்லாம் செக்ஸ் சினிமாவில்தானே? உடம்பைக் காட்டுவதைத் தவிர அதில் என்ன நடிப்பு இருக்கிறது? வாழ்க்கையே பாழாகிவிடவில்லையா? பலபேரிடம் பலவிதமான சமரசங்களும் செய்ய வேண்டியிருந்திருக்குமே? இந்த விதங்களில் வந்த ஒரு நடிகை ’நான் கஷ்டப்படாமலேயே சினிமாவுக்கு வந்தேன்’ என்று சொன்னால் எப்படி நம்புவது? ஆனால், தெரிந்துகொள்ளுங்கள் – நான் வந்த வழி சரியான வழி. ஒரு வேளை அதிர்ஷ்டம் என் பக்கம் இருந்தது என்று சொல்லலாம்.
சினிமாவுக்கு வருவதற்கு முன்பும் சினிமாவில் புகழ்பெற்ற பின்பும் என் வாழ்க்கையில் சில விஷயங்கள் நடந்திருக்கின்றன. ஆனால், சினிமாவில் நடிக்கும் வாய்ப்புக்காக நான் எங்கேயும் கீழ்ப்படியவில்லை. யாருக்கும் இரையாகவில்லை. சினிமா ரசிகர்களின், ஆர்வலர்களின் அபிப்ராயப்படி சினிமா என்பது பெண்களைப் பொறுத்தவரை ஒரு ஆபத்தான துறைதான். சினிமாவில் நுழைந்துவிட்டால், ஒரு நடிகையாகிவிட்டால் அவளுடைய வாழ்க்கை அவ்வளவுதான் என்றொரு பேச்சு நம் சமூகத்தில் இருந்துவருகிறது. அதை நான் முழுக்க மறுக்கவில்லை. ஒரு எல்லை வரை அதில் உண்மையும் இருக்கிறது. அப்படிப்பட்ட சில பேரை எனக்கும் தெரியும். ஆனால் என் சினிமா பிரவேசத்திலும் அதன் பிறகான வாழ்க்கையிலும் சினிமாவின் பெயரால் ஒரு ஆபத்தும் எனக்கு நேர்ந்ததில்லை. எந்த இயக்குனரும் எந்த தயாரிப்பாளரும் கூடப் படுக்க என்னிடம் வேண்டுகோள் விடுத்ததில்லை. எந்த விதமான அட்ஜஸ்ட்மெண்ட்களுக்கும் உடன்பட நேர்ந்ததில்லை. நான் பாட்டுக்கு நடிக்கப் போவேன். திரும்பி வருவேன். எல்லோருடனும் சீக்கிரமாகவே நட்புக் கொண்டுவிடுவேன். அதனால் என்னிடம் மிக நேசத்துடன்தான் திரைத்துறையினர் பழகுகிறார்கள்.
அதற்குக் காரணம், ஒரு இடைத்தரகர் மூலமாகவோ பிம்ப் மூலமாகவோ இயக்குனரிடம் அல்லது தயாரிப்பாளரிடம் வாய்ப்புக் கேட்டுப் போனதில்லை என்பதுதான். அப்படியெல்லாம் போயிருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்கலாம். தலை முழுக்க நடிப்பு வெறி கொண்டு, வாழ்வதற்கு ஒரு வருமானத்திற்கான வழியைத் தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய வேண்டியிருக்கலாம். நான் எப்படி சினிமாவில் நுழைந்தேன் என்று சென்ற அத்தியாயங்களில் சொல்லியிருக்கிறேன். கொஞ்சம் பருமனான ஒரு சிறுமியிடம் பழகுவதைப் போலத்தான் என்னிடம் எல்லோரும் பழகினார்கள். அதற்காக பிற்காலத்தில் என் வாழ்க்கையில் காதலோ செக்ஸோ இருக்கவில்லை என்று அர்த்தமில்லை. ஆனால் அதெல்லாம் என்னுடைய விருப்பத்தின் பேரிலும் என்னுடைய கிளர்ச்சியின் பேரிலும் மட்டுமே நிகழ்ந்தது தவிர சினிமாவில் வாய்ப்பு கிடைப்பதற்காக அல்ல. இன்னொரு உண்மை என்னவென்றால், நான் காதலித்தவர்களில் பல பேர் சினிமாவுடன் அதிகத் தொடர்பில்லாதவர்கள் என்பதுதான்.
ஷகிலா (ஓர் இதயத்தின் உண்மைக் கதை)
தமிழில்: ஸ்ரீபதி பத்மநாபா
உயிர்மை வெளியீடு.   thetimestamil.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக