திங்கள், 13 ஜூன், 2016

கலைஞர் சவுக்கடி :எந்த மொழி மக்களிடமும் சமஸ்கிருதத்தை திணித்தால் ஓடஓட விரட்டுவோம்

திமுக முன்னாள் அமைச்சர் பூங்கோதை அருணா - பாலாஜி தம்பதியரின் மகள் சமந்தா - ஷ்ரிநாத் ஜோடியின் திருமணம், சென்னை சாந்தோம் எம்.ஆர்.சி. சென்டர் - வள்ளியம்மை திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. திருமண விழாவை திமுக தலைவர் கருணாநிதி தலைமையேற்று நடத்தினார். பின்னர், அவர் மணமக்களை வாழ்த்திப் பேசியபோது, ‘தமிழ்நாட்டில், தமிழ்மொழிக்கு மூவேந்தர் காலந்தொட்டு இருக்கும் அதனுடைய மூப்பு, அதனுடைய மொழி ஆதிக்கம், அந்த மொழிக்கிருந்த செல்வாக்கு, அதைக் கையாண்ட மூவேந்தர்களின் பரம்பரை என ஒரு வரலாறு உண்டு. அந்தப் பரம்பரையை எல்லாம் ஒழித்துக் கட்டிவிட்டு, நாங்கள் தமிழுக்கு இடம் தரமாட்டோம், வட மொழிக்குத்தான் இடம் தருவோம் என்று சொல்வார்களானால், தமிழன் ஒவ்வொருவரும் கையில் சவுக்கை எடுத்துக்கொண்டு வடமொழி ஆதிக்கத்தை வேரறுக்கக் கிளம்பவேண்டும்.
எப்படி கட்டாய இந்தித் திணிப்புக்கு எதிராகக் கிளர்ச்சியெழுந்ததோ அதுபோல் எழ, கிளர்ச்சி உருவாக யாரும் காரணமாக இருந்துவிடக்கூடாது. ஆளும் கட்சியின் ஆசியோடு சமஸ்கிருதத்தைப் பரப்ப முயற்சி நடக்கிறது. பல ஆலடி அருணாக்கள் தமிழகத்தில் உருவாக வேண்டும். அப்படி உருவாகிற ஆலடி அருணாக்கள் வடமொழி ஆதிக்கத்தை வீழ்த்த ஒன்று திரளுவார்கள். அதற்கு நாம் துணை போகவேண்டும் என்று கேட்டுக்கொண்டு, இந்த மணவிழாவில் நாம் எடுத்துக்கொள்ளும் வீர சபதமாக வடமொழி ஆதிக்கத்துக்கு இடம் தரமாட்டோம், சமஸ்கிருதத்துக்கு தமிழ்நாட்டிலே இடம் கிடையாது,

சமஸ்கிருதத்துக்கு தமிழ்நாட்டில் மாத்திரமல்ல; எந்த மொழி பேசுகிற மக்களிடமும் சமஸ்கிருதத்தை யார் திணித்தாலும் அதை ஓடஓட விரட்டுவோம்’ என்றார். கல்வித் திட்டத்தில் சமஸ்கிருத மொழி மட்டுமே உள்ள வேதபாடத் துறை (வேதிக் போர்டு) வரும் ஜுன் 16 முதல் மத்திய அரசு செயல்படுத்தும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியிருந்தார். இதற்கு, தமிழகத்திலிருந்து தொடர்ந்து எதிர்ப்புக் கிளம்பி வருகிறது. ஏற்கனவே, இதைக் கண்டித்து அறிக்கை வெளியிட்ட கருணாநிதி தற்போது திருமண நிகழ்வில் இதுகுறித்துப் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது  minnambalam.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக