திங்கள், 13 ஜூன், 2016

பிரசவ கால ரத்தப்போக்கை கட்டுப்படுத்தும் உயிர் காக்கும் ஆடை வழங்குவது நிறுத்தம்

பிரசவத்துக்குப் பிறகு பெண் களுக்கு ஏற்படும் ரத்த ப்போக்கை கட்டுப்படுத்துவதற்காக அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், 108 ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு மத்திய அரசு வழங்கி வந்த உயிர் காக்கும் ஆடை திடீர் என நிறுத்தப்பட்டுள்ளதால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மகப்பேறு காலத்தின்போது பெண்களுக்கு அதிக ரத்தப் போக்கு காரணமாக 30 சதவீதம் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது என ஆய்வின்போது கண்டறி யப்பட்டது. இதில் குறிப்பாக கிராமப்புறங்களில் உயிரிழப்பு அதிகரித்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து ரத்தப்போக்கினால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்து வமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், 108 ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு ரத்தப்போக்கை கட்டுப்படுத்தும் உயிர் காக்கும் ஆடை என்கிற பாதுகாப்பு உபகரணத்தை மத்திய அரசு வழங்கி வந்தது.

திறந்த நிலையில் உள்ள இந்த ஆடையில் பிரசவ காலத்தில் ரத்தப்போக்கால் பாதிக்கப்படும் பெண்ணை படுக்க வைத்து பாதம், முழங்கால், தொடை, இடுப்பு, வயிறு வரை ஒவ்வொரு உடல் பாகத்தையும் சுற்றி இறுக்கி கட்டுவர். இந்த ஆடையை அணிந்த பிறகு ரத்தம் வெளியேறும் வேகம் கட்டுப்படுத்தப்படும். பின்னர் அருகில் உள்ள அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள முடியும்.
கிராமப்புறங்களில் வசிக்கும் பெண்கள் ரத்தப்போக்கினால் பாதிக்கப்படும்போது அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலை யத்துக்கோ அல்லது அரசு மருத்துவமனைக்கோ செல்ல 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவி த்தவுடன் ஊழியர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று முதலில் அந்த பெண்ணிற்கு உயிர் காக்கும் ஆடையை அணிவித்து அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்கின்றனர்.
ரத்தப்போக்கு அதிகமாக இருப்பதால் உடனடியாக உயிர் காக்கும் ஆடையை ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கழற்றுவதில்லை. அதற்குப் பதிலாக பாதிக்கப்பட்ட பெண்ணை சேர்த்திருக்கும் ஆரம்ப சுகாதார நிலையம் அல் லது அரசு மருத்துவமனையில் ஏற்கெனவே இருக்கும் மற்றொரு உயிர் காக்கும் ஆடையை 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களிடம் கொடுத்துவிடுவர்.
அந்த பெண் அணிந்து வந்த உயிர் காக்கும் ஆடையை மருத்துவமனை ஊழியர்கள் பெற்று அதை சுத்தம் செய்து ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மீண்டும், மீண்டும் பயன்படுத்தி வருகின்றனர். இந் நிலையில், தேனி மாவட்டத்தில் பல அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வழங்கப்பட்ட உயிர் காக்கும் ஆடை மாயமாகி விட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களிடம் பெற்ற உயிர் காக்கும் ஆடைகளையும் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள் சிலர் திரும்பத்தரவில்லை எனப் புகார் எழுந்துள்ளது.
இதுபோன்ற சூழ்நிலையில் மாவட்டம் தோறும் சில வாரங் களுக்கு முன்பு வரை வழங்கி வந்த உயிர் காக்கும் ஆடைகள் விநியோகத்தை மத்திய அரசு நிறுத்தி விட்டது. இதனால் ரத்தப் போக்கினால் ஏற்படும் உயிரிழப்பு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதில் குறிப்பாக கிராமப்புறத்தில் வசிக்கும் பெண்கள் அதிகமாக பாதிக்க வாய்ப்புள்ளது.
இது குறித்து ‘தி இந்து’விடம் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சிலர் கூறியதாவது:
தமிழகத்தில் உள்ள அனைத்து 108 ஆம்புலன்ஸ்களில் உயிர் காக்கும் ஆடை வழங்கப் பட்டி ருந்தது. ஆனால் தற்போது விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் மட்டுமே எங்களது வாகனத்தில் உள்ளது. ஒவ்வொரு உயிர் காக்கும் ஆடையும் ரூ.40 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை விலை உள்ளது. இதன் காரணமாக விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் உயிரிழப்பை தடுக்க உயிர் காக்கும் ஆடைகளை மத்திய, மாநில அரசுகள் மீண்டும் விநியோகம் செய்ய வேண்டும் என்றனர்.
இது தொடர்பாக மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் (பொ) செல்வராஜிடம் கேட்ட போது, உயிர் காக்கும் ஆடை முன்பு வழங்கப்பட்டது. தற்போது வழங்கப்படவில்லை. உயிர் காக்கும் ஆடைகள் கேட்டு மருத்துவ துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்றார்.  ஆர்,சவுந்தர்  tamil.thehindu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக