சனி, 11 ஜூன், 2016

திண்டுக்கல். தலித் பெண் கொலை... 3 கொடியவர்கள் பாலியல்... ஜாதி பார்க்கும் போலீஸ்

திண்டுக்கல் அருகே 21 வயது பெண் கடந்த மாதம் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து 3 பேரை போலீசார் கைது செய்த பின்னரும் கூட, இந்த விவகாரத்தின் பின்னணி என்ன என்று சரிவர தெரியவில்லை என பெண்ணின் தந்தை கூறியுள்ளார்.
ரேகா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) கடந்த மேய் மாதம் 2 ஆம் தேதி திடீரென காணாமல் போனார். இந்நிலையில் அவரது சடலம் மேய் 6 அன்று  திண்டுக்கல் அருகே கண்டெடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, ரேகாவின் உறவினர்கள், அவர் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதாக குற்றஞ்சாட்டினாலும், போலீசார், அவர் கற்பழிக்கப்பட்டார் என்ற  குற்றச்சாட்டை ஏற்க மறுத்து வருகின்றனர்.

இதுகுறித்து இதன் விசாரணை அதிகாரியான திண்டுக்கல் துணை போலீஸ் சூப்பிரண்டு கபிலன் நியூஸ் மினிட்டிடம் கூறுகையில், இந்த மரணம் ஒரு கொலை தான் என்றும், பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் முடிவு அறிவிக்கபடாத நிலையிலேயே உள்ளது என்றும் கூறினார். மேற்கொண்டு அவர் பதில் கூற மறுத்துவிட்டார்.
ரேகாவின் தந்தை  ஆறுமுகம் தனியார் நிறுவனம் ஒன்றில் டிரைவராக இருந்து வருகிறார். இவர்கள் குடும்பத்தின் சோதனை காலம்  கடந்த மேய் 2 ஆம் தேதி முதல் துவங்கியது. அன்று காலை 9 மணியளவில் சிங்காநல்லூரில் உள்ள அவரது தோழி பரிமளாவின் வீட்டுக்கு செல்வதாக கூறி சென்றுள்ளார். இரவு வெகுநேரமாகியும், வீடு திரும்பாததால், அவரது குடும்பத்தினர் பரிமளாவை தொடர்பு கொண்டு விசாரித்துள்ளனர். அப்போது பரிமளா, சிங்காநல்லூர் வந்த பின், இருவரும் அவரவர் வேலைகளை பார்க்க பிரிந்து சென்றதாக கூறியுள்ளார்.
அதனை தொடர்ந்து, ஏதேனும் தகவல் கிடைக்குமா என்ற எண்ணத்தில் ரேகாவின் நோட்டு புத்தகத்தை எடுத்து பார்த்த போது அழக பத்மநாபன் என்றொருவரின் போன் நம்பர் குறிக்கப்பட்டிருப்பதை கவனித்தனர். இதுகுறித்து ஆறுமுகம் தனது வீட்டிலிருந்து சில நிமிட தொலைவில் வசிக்கும் அழக பத்மநாபன் மற்றும் மேலும் 5 நபர்கள் மீது தங்கள் குடும்பத்தினர் சந்தேகப்படுவதாக கூறினார். மேலும், தனது உறவினர்களை அழைத்து கொண்டு, இவர்களின் வீட்டிற்கு சென்று, ரேகாவை பற்றி விசாரிக்க சென்றதாகவும், ஆனால் அழக பத்மநாபன் வீட்டில் இல்லை என்றும் அவர் கூறினார்.
இதனைதொடர்ந்து, அன்றிரவு பின்னிரவில் வீட்டு வேலைக்காக வைக்கப்பட்டிருந்த ரூ.18000 காணாமல் போயிருப்பதை ஆறுமுகம் கண்டுபிடித்தார். இதனை தொடர்ந்து இரவு 12.30 மணியளவில், ஆறுமுகம் சூளூர் போலீஸ் ஸ்டேஷன் சென்று, தனது மகள் காணமல் போனதை புகாராக கொடுக்க சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த போலீசார் அவரிடம் பகலில் வருமாறு கூறி திரும்ப அனுப்பியுள்ளனர்.
மறுநாள் காலை ஆறுமுகமும், அவரது உறவினர்களும் போலீஸ் ஸ்டேஷனுக்கு மீண்டும் சென்ற போது, அந்த புகாரை அவர்கள் வாங்க மறுத்ததுடன், சிங்காநல்லூர் போலீஸ் ஸ்டேஷனில் புகாரை கொடுக்கும்படி கூறியுள்ளனர். மேய் 3 ஆம் தேதியன்று அந்த புகாரை சிங்காநல்லூர் போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்த போதும், போலீசார் அன்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவில்லை என கூறப்படுகிறது.
பின்னர் போலீசார் அழகாவை கூப்பிட்டு விசாரித்த போது, அவர் தான் ரேகாவுடன் பேசி ஒரு மாதத்திற்கும் மேல் ஆகிவிட்டதாக கூறியுள்ளார்.
ஆனால் சில நாட்களுக்கு பின்னர் ரேகாவை பற்றி அவரது குடும்பத்தினருக்கு மோசமான தகவல் ஒன்று கிடைக்கப்பெற்றது. மேய் 6 அன்று திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி போலீஸ் சப் –இன்ஸ்பெக்டர் ஆறுமுகத்தை தொடர்பு கொண்டு, ரேகாவின் உடலை அவர்கள் கைப்பற்றியதாக கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து, உடலை பெறுவதற்காக ஆறுமுகமும் அவரது குடும்பத்தினரும் மருத்துவமனைக்கு சென்ற போது, பிரேத பரிசோதனைக்காக ரூ.6500 கட்ட சொல்லி கேட்கப்பட்டுள்ளனர்.ஆனால், பிரேத பரிசோதனை அறிக்கையை தனது குடும்பத்தினருக்கு தரவில்லை என்றும், இதுவரை தங்கள் மகளின் சாவுக்கு காரணம் என்ன என்பதை தங்களால் அறிய முடியவில்லை என்றும் ஆறுமுகம் கூறினார். மேலும், பிரேத பரிசோதனை அறிக்கையில் என்ன கூறப்பட்டுள்ளது என்று கூட தனக்கு தெரியாது என்றும் அவர் கூறினார்.
விசாரணை குறித்த எந்த தகவலும் போலீசார் எங்களுடன் பகிர்ந்து கொள்வதில்லை என கூறும் ஆறுமுகம், “நாங்கள் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்தவர்கள். போலீசார் எங்களிடம் விசாரணை குறித்து எதுவுமே பகிர்ந்து கொள்வதில்லை” என்றார் அவர்.
மேலும் அவர், கோயம்பத்தூரிலிருந்து 160 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திண்டுக்கல்லுக்கு செல்லும் அளவு கூட எங்களிடம் பணம் இல்லை. “அதையும் தண்டி நாங்கள் திண்டுக்கல் சென்றால் அங்கே போலீஸ் ஸ்டேஷனில் ‘ நீங்கள் தாழ்ந்த ஜாதிக்காரர்கள் அதனால் செருப்பை கழட்டிவிட்டு உள்ளே வாருங்கள்’ என கூறுவதுடன், இப்போது ஏன் வந்தீர்கள் ? வருவதற்கு முன் எங்களை தெரியப்படுத்திவிட்டு தான் வரவேண்டும் என கூறி எங்களை அதட்டுகினறனர்” என கூறினார்.
இதுவரை போலீசார் அழகா பத்மநாபன் மற்றும் அவரது நண்பர் மூர்த்தி உபட மூவரை கைது செய்துள்ளனர். அழகா பத்மநாபன், தனது மகளை காதலிக்க கூறி வற்புறுத்தி, அதற்கு அவள் இணங்காததால்,தனது நண்பர்கள் மூவருடன் சேர்ந்து திண்டுக்கல்லுக்கு கடத்தி சென்று கற்பழித்து கொலை செய்துள்ளதாக ஆறுமுகம் கூறுகிறார். “ அவர்கள் மூவருக்கும், எனது மகளை கொன்றதற்காக தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும்” என்றார்.
மேலும் தனது, குடும்பத்தினரின் பாதுகாப்பிற்காக ஆறுமுகம் அரசு வேலை ஒன்றை தர வேண்டும் என கேட்கும் ஆறுமுகம், “ இது போன்ற செயல்கள் மீண்டும் எனது சமூகத்தில்  உள்ளவர்களுக்கு நடக்காமலிருக்க  அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறினார்.
இதனிடையே, கடந்த புதன்கிழமையன்று தேசிய பழங்குடியினர் ஆணையம் 2,80,000 ரூபாய் இழப்பீடாக ரேகாவின் குடும்பத்தினருக்கு வழங்கியுள்ளது. “ ஆணையத்தினர் வந்து பார்ப்பதற்கும் மூன்று நாட்களுக்கு முன்னால் மூன்றாவது குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். இருப்பினும், என்ன நடந்தது என எங்களுக்கு போலீசார் இதுவரை தெரிவிக்கவில்லை.” என்றார் ஆறுமுகம்.
ஒருமாதம் கடந்த நிலையில், போலீசார் இந்த வழக்கின் விசாரணையில் தீர்வை நோக்கி நகர்வதை போல் தெரிகிறது. ரேகாவின் குடும்பத்தினரோ, அவரது மரணத்தால் நொறுங்கி போயுள்ளனர். “ ரேகாவிடம் அதிக எதிர்பார்ப்பு வைத்திருந்தோம். எங்கள் குடும்ப வறுமையை அவரால் தான் போக்க உதவ முடியும் என நாங்கள் நம்பினோம்” என்றார் கவலை தோய்ந்த முகத்துடன் ஆறுமுகம்.   thenewsminute.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக