திங்கள், 6 ஜூன், 2016

700 அரங்குகளைக் கொண்டதாக சென்னை புத்தகக் காட்சி (ஜூன் 1 முதல் 13 வரை) தீவுத்திடலில்

700 அரங்குகளைக் கொண்டதாக சென்னை புத்தகக் காட்சி (ஜூன் 1 முதல் 13 வரை) தீவுத்திடலில் நடந்து வருகிறது. பள்ளி-கல்லூரி-தேர்வு எனும் வட்டத்தைக் கடந்து ஒரு பொதுக்கல்வி என்ற வகையில் பல்துறை நூலறிவு தேவையானது. அந்த வகையில் மக்களின் பார்வைக்கும், பழக்கத்திற்கும், பரிசீலனைக்கும் புத்தகக் காட்சிகள் தேவைப்படுகின்றன. சென்னை புத்தகக் காட்சியைப் பொறுத்தவரை 25-35 வயதுக்கு உட்பட்ட புதிய இளைஞர்கள் வெகுவாக வருகின்றனர். தகிக்கும் வேனிலன் வெப்பத்தையும் பொருட்படுத்தாது உடையெல்லாம் வியர்வையில் நனைய, தான் தேடிவரும் பொருளில் பொருத்தமான ஒரு புத்தகத்தைப் பார்க்கும் போது அந்த வாசகரின் கண்களில் மலரும் குளிர்ச்சி சூழலையே இதமாக்குகிறது. ஆனால், ஆர்வமுள்ள இந்த புதிய தலைமுறை, சமூகக் கண்ணோட்டத்துடன் சரியான நூல்களை தேர்ந்தெடுக்கும் திறன் பெற்றிருக்கவில்லை என்பதும் எதார்த்தம்.
இந்த செயல்திறன் பருவத்தினருக்கு அறிவுத்தேடலில் ஒரு வழிகாட்டல் அவசியப்படுகிறது.
தங்களுக்குத் தெரிந்த சமூக அறிவுடன் அவர்கள் தெரிவு செய்வதற்கான வாய்ப்பையும் சந்தையின் இரைச்சல் தட்டிப் பறித்து விடுகிறது
புத்தகக் காட்சிதங்களுக்குத் தெரிந்த சமூக அறிவுடன் அவர்கள் தெரிவு செய்வதற்கான வாய்ப்பையும் சந்தையின் இரைச்சல் தட்டிப் பறித்து விடுகிறது. “அதிகம் விற்றது”… “இந்த வாரம் பத்திரிகையில் வந்தது”, “அந்தத் தொலைக்காட்சியில் அவர் சொன்னார்”, “முகநூலில் அமர்க்களமாக போட்டிருந்தார்கள்” என்பதை மட்டுமே வைத்துக் கொண்டு அதன் சமகால சமூகத் தேவை, மானுட வளர்ச்சிக்கான அதன் நுட்பம், திறன், அழகியல் பற்றிய தேடல் இன்றி வாசகரை ‘புதிதாக ஒன்று என் கையிலும்’ என்று புத்தகக் காட்சியின் பயன்பாட்டை நுகர்வின் மகிழ்ச்சியாக, கொண்டாட்டமாக குறுக்கும் வேலைகளும் நடக்கின்றன.
தமிழ் இந்துவோ (தி இந்து) புத்தகக் காட்சியின் தொடக்கத்தை ‘சொர்க்க வாசல்’ திறந்து விட்டது என்று ‘கூட்டத்தில் கோவிந்தா!’ உணர்ச்சியைத் தூண்டுகிறது. எழுத்தாளர் இமயமோ ‘கோட்பாட்டுச் சுமையில்லாத’ புதிய எழுத்துக்கள் என்று மறுகாலனிய பிரகாரத்தைத் தாண்டாத பிரசாதங்களை ருசிக்க இலக்கிய மடப்பள்ளிகளை விதந்தோதுகிறார். கதையும், கவிதையும் நுட்பமாக படைக்கத் தெரிந்ததனாலேயே சமூகப் பிரச்சனைகளுக்கு இலக்கியத் தீர்வும் அரசியலுக்கு அப்பாற்பட்டு எந்தக் குழு, கோட்பாட்டையும் சாராத பொதுத்துசை வழி ஒன்று இருப்பது போலவும் பாவனைகளில் உலா வரும் இந்த ஊடகப் பிரஜைகள்தான் புது தலைமுறைக்கு எது நல்ல இலக்கியம்? எது சிறந்த கலை? எது சிறந்த கருத்து? என்று வழிகாட்டும் நபர்களாக முதலாளித்துவ ஊடகங்களால் முன்னிறுத்தப்படுகிறார்கள்.
புத்தகக் காட்சி
நாம் வாழும் சமூக அமைப்பின் சாதி, மத, வர்க்கப் பிளவுகளை நம்மை உணர வைக்கும், நமக்கு அறியத் தரும் கதைகள், கவிதைகள், அரசியல் கட்டுரைகள்
தொலைக்காட்சி சானல்களைப் போல முன்னரே திட்டமிடப்பட்ட முடிவுகளைத் தாண்டி தெரிவு செய்ய வாய்ப்பில்லாத சூழலுக்கு புதிய வாசகர்கள் நெட்டித் தள்ளப்படுகிறார்கள். எனவே, புத்தகங்கள் விழிப்புணர்வும், புது அனுபவமும் தருகின்றன என்பதோடு, புத்தகக் கண்காட்சி பற்றிய விழிப்புணர்வும் நமக்குத் தேவைப்படுகிறது. பஞ்சு மிட்டாய்க்கும், பலூன்களுக்கும் பின்னே இழுக்கப்படும் பிள்ளைகளைப் போல வண்ணம், வடிவத்தைப் பார்த்து மட்டும் புத்தக ஆர்வத்தில் விழாமல் எண்ணம், நோக்கம், விளைவு கருதியும் புத்தகங்களைத் தேர்ந்தெடுக்கவே ஒரு கற்றல் தேவை நமக்கு.
அப்படியானால் ஊடகங்கள் முன் வைக்கும் எதையுமே படிக்கக் கூடாதா? என்றால் விசயம் அதுவல்ல.
  • புதிய எழுத்தாளர்கள் புத்தகங்களை விளம்பர கனத்தில் மட்டும் பரிசீலிக்காமல், சமகால சமூகப் பிரச்சனைகளை எந்த அளவுக்கு நம் அறிவு-உணர்வு மட்டத்திற்கு உயர்த்திச் செல்கிறது.  எந்தப் பக்கச் சார்பில் நின்று நூல் பேசுகிறது. ஒவ்வொரு வார்த்தைக்கும் பின்னே எந்த வர்க்கம் இருக்கிறது. படிப்பதனால் அது நம்மிடம் ஏற்படுத்தும் மனநிலை என்ன? என்பவைகளை உள்ளமர்த்தி புத்தகங்களை தேர்வு செய்யுங்கள்.
  • நாம் வாழும் சமூக அமைப்பின் சாதி, மத, வர்க்கப் பிளவுகளை நம்மை உணர வைக்கும், நமக்கு அறியத் தரும் கதைகள், கவிதைகள், அரசியல் கட்டுரைகள் இவைகளை “பிராண்ட்”, “மகுடம்” பார்க்காமல் யார் எழுதினாலும் படிப்பதற்கான ஜனநாயகம் தேவை என்பதோடு, அவைகளை விமர்சிக்கும் ஜனநாயகம் சேர்ந்தே உள்ளது என்பதையும் இழக்க வேண்டாம்.
முக்கியமாக புத்தகங்களை தெரிவு செய்வதற்கும், தேடுவதற்கும் குறிப்பிட்ட அளவு சமூக அறிவு தேவைப்படுகிறது. பார்க்கும் அத்தனை நூல்களையும் கட்டமைப்பிற்காகவும், காதில் கட்டளை இடும் ஊடக ஊளைக்காகவும் வாங்கிவிட நினைப்பது அறியாமை. குறிப்பாக சென்னை புத்தகக் காட்சியின் மொத்த அரங்குகளையும் உத்தேசமாக பார்வையிட ஒருவருக்கு முழு மூன்று நாட்கள் தேவைப்படும். ஆனால், 3 மணி நேரத்திலேயே தங்கள் தேவைகளைத் தெரிவு செய்யும் வாசகர்களும் உண்டு. “சார் எது தேவை, அது எங்க கிடைக்கும் என்று முடிவு செய்து விட்டால் மூணு மணி நேரமே போதும்!” என்று அனுபவத்தோடு பேசுபவர்கள் உண்டு. அனைத்துக் கடைகளையும் ஒரு பொது அறிமுகமாக பார்ப்பது வேறு. பரிசீலித்து தெரிவு செய்ய அரசியல் அறிவு அவசியம்.
புத்தகக் காட்சி
நாம் இன்று சந்திக்கும் உலகின் உண்மை முகத்தையும், அதன் சாரத்தையும், அதை இயக்கும் சக்தியையும் அறிந்துகொள்ள உதவும் புத்தகங்களே பெரும்பாலானோரின் தேடலாக இருக்கிறது.
கோயில் கடையைப் போல, தசாங்கம் மறைத்த ஜீயர் கட்-அவுட், ‘பெரியவா’ சிலை, படம், உத்திராட்சை, ஸ்படிகம், ஆசீர்வாத ஆள் பிடிக்கும் சிரிப்பு இவைகளைப் பார்த்த மாத்திரத்திலேயே இதுக்கும் புத்தகத் தேடலுக்கும் சம்பந்தமில்லை என முடிவு செய்ய சமூக அறிவும், அரசியல் அறிவும் தேவை. இன்னொரு பக்கம் இலக்கிய வழிபாட்டுக்கு நம்மை இழுக்கும் ஒரிஜினல் நவீன இலக்கிய செக்கு ‘ஆயில்’ கடைகளும் உண்டு. குமுதம் மாமா பக்கங்களில் கைங்கர்யமும் போகிற போக்கில் பிறந்த பர்ஃபியூமுக்கு மார்க்கெட்டிங்கும் செய்யும் சாரு, புத்தகக் கண்காட்சி அரங்கில் உட்கார்ந்து கொண்டு உலகளாவிய ரசனையை உள்வாங்கும் இலக்கிய உரையாடலை நடத்துவதையும் புரிந்து கொள்ள வெறும் புத்தக அறிமுகம் மட்டும் போதாது. இவர்களின் வர்க்க அரசியலையும், வழிகாட்டும் திசைகளையும் சமூக அறிவோடு புரிந்து கொண்டால்தான் புத்தக வடிவில் திரட்டப்படும் இலக்கிய அழுக்குகளை விலக்க முடியும்.
நாம் இன்று சந்திக்கும் உலகின் உண்மை முகத்தையும், அதன் சாரத்தையும், அதை இயக்கும் சக்தியையும் அறிந்துகொள்ள உதவும் புத்தகங்களே பெரும்பாலானோரின் தேடலாக இருக்கிறது. ஆனால், இந்தத் தேவைக்கும் புத்தக உலகிற்கும் எப்போதும் போல ஒரு இடைவெளி உள்ளது. நாட்டின் கொழுத்த கல்வி நிறுவனஙகளில் இருந்து எதார்த்தத்தை புரிய வைக்கும் பலதுறை சார்ந்த நூல் எழுதும் ஆற்றல் உள்ளவர்களை ஒரு சிறு வீதம் கூட தகுதியற்று இருக்கிறது. முதலாளித்துவ நிறுவனங்களின் கீழ் பணியாற்றும் அறிவுத்துறையினரின் முதலாளிகளுக்கு சேவை செய்யும் அறிவோடு மட்டுமல்ல, சமூகத்தை ஆளும் அறிவுத்துறை அருகதையையும் இழந்து விட்டனர். எந்த ஒரு சமூக விவகாரங்களை விளக்கவும், விவரிக்கவும், உள்ளதை உரைக்கவும் தகுதியற்று ஆக்கப்பட்டு விட்டனர். அறிவுத் தேடலின் வாசகர்களோ, குடும்பச் சிக்கல் தொடங்கி நாட்டுச் சிக்கல் வரை புதிய கலாச்சார நிலைமைகள், புதிய பொருளாதார நிலைமைகள், புதிய அரசியல், சமூக நிலைமைகள் என ஒவ்வொன்றைப் பற்றியும் அறியத் துடிக்கிறார்கள், தேடுகிறார்கள். அவர்களின் தேவையைப் பூர்த்தி செய்ய உள்ளபடியே புத்தகக் காட்சிகளில் போதிய பதில் இல்லை என்பதும் ஒரு உண்மை.
ஆனாலும், தங்கள் சக்திக்கு மீறி மக்களை நேசிக்கும் சமூக ஆர்வலர்களும், எழுத்தாளர்களும், பதிப்பாளர்களும், ஒரு சிறிய அளவில் பழைய மற்றும் புதிய நூல்களை வாசகர்களுக்கு வழங்கி வருகிறார்கள். முக்கியமாக சமுதாயத்தின் தெருப்போராட்டங்களில் கருத்துக்களை உருவாக்கும் இயக்கங்கள்தான் இளைய தலைமுறைக்கு கோடையின் குளிர் ஊற்றாய் சற்று ஆறுதல் அளிக்கிறது. முதலாளித்துவம் மறுக்கும் சமூக அறிவை, மார்க்சிய லெனினிய அரசியல்தான் இதையும் ஒரு போராட்டமாய் மக்களிடம் கொண்டு சேர்க்கிறது என்பது புத்தகக் காட்சியிலும் புலப்படும் உண்மை. புத்தகக் காட்சிக்கு வெளியில் நடக்கும் மக்கள் போராட்டங்களால் வளைந்த சமூகத் தாக்கம்தான் புத்தகங்களின் முகத்தையும் மாற்றி வருகிறது. சுயசார்பற்ற நாட்டின் அரசியல் நிலைமைகளே சுயமுன்னேற்ற நூல்களை கேலிக்குரியதாக்கி விட்டது. சமூக முன்னேற்றத்தில்தான், தனக்கான முன்னேற்றமும் அடங்கி உள்ளது என்பதை அனுபவமாகக் கற்றுக் கொண்ட வாசகர்கள், அரசியல் கண்ணோட்டத்தோடு புத்தகங்களை தெரிவு செய்யும் வளர்ச்சிப் போக்கில் புத்தகக் காட்சிகள் நிச்சயம் வாசகர்கள் தேவைக்கு மாற வேண்டிய வளர்ச்சியும் தொடரும்!
– துரை. சண்முகம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக