சனி, 4 ஜூன், 2016

குஜராத் அதானிகளின் 50,000 கோடி மின்சார ஊழல்...

gautam_adani_narendra_modi_mukesh_ambani_624x351_epa நிலக்கரி இறக்குமதியின் போலி விலையேற்றத்தின் மூலம் சுமார் 29,000 கோடி, மின்னுற்பத்தி நிலைய உபகரணங்கள் இறக்குமதியின் போலி விலையேற்றம் என்கிற வகையில் சுமார் 9,000 கோடி, இழப்பீட்டு கட்டணம் என்கிற வகையில் சுமார் 10,000 கோடி என கிட்டத்தட்ட 50,000 கோடி அளவில் கொள்ளை நடந்துள்ளது.
மின்சார துறையில் ரூ. 50,000 கோடி வரையில் நடந்திருக்கும் கொள்ளையை எக்னாமிக் அன்ட் பொலிட்டிக்கல் வீக்லி ஆங்கில பத்திரிகை அம்பலப்படுத்தியுள்ளது.  தேர்தலில் மோடிக்கு செலவழித்தஅதானி, டாடா, எஸ்ஸார், இந்தியா சிமெண்ட்ஸ், ஜிண்டால் உள்ளிட்ட 40 நிறுவனங்கள் இதில் சமபந்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இம்மோசடி மூன்று முறைகளில் நிகழ்த்தப்பட்டிருக்கிறது.
இந்தோனேசியாவிலிருந்து இறக்குமதியாகும் நிலக்கரியின் விலையை மிகைப்படுத்தி கணக்கு காண்பிப்பது; மின்னுற்பத்தி நிலையங்களுக்கு தேவையான கருவிகளை இறக்குமதி செய்வதிலும் மோசடியாக விலையை அதிகப்படுத்தி கணக்கு காட்டுவது, மூன்றாவதாக இழப்பீட்டு தொகை என்ற முறையில் அரசின் இழப்பீடை முறைகேடாக பெறுவது ஆகிய முறைகளில் இவ்வூழல் நடைபெற்றிருக்கிறது.
ஏன் இவர்கள் விலையை அதிகப்படுத்தி கணக்குகாட்ட வேண்டும்? பொதுமக்கள் செலுத்த வேண்டிய மின்கட்டணம் அரசால் நிர்ணயிக்கப்படுவதில்லை. மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம், மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையங்களால் தீர்மானிக்கப்படுகின்றன. அதை தீர்மானிக்க அவர்களே வகுத்துகொண்ட கொள்கையின் அடிப்படையில் கெப்பாசிட்டி கட்டணம் என்று அழைக்கப்படும் நிலைகட்டணம், எனர்ஜி கட்டணம் என்று அழைக்கப்படும் முதன்மை எரிபொருள் கட்டணம் ஆகியவற்றால் தீர்மானிக்கப்படுகிறது.
முதலாளிகளுக்கு இழப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்று வகுக்கப்பட்டிருக்கும் இக்கொள்கைகளின் அடிப்படையில், முதலாளிகள் தங்கள் முதலீடு மற்றும் செலவினங்களை கூறுவார்கள். அதற்கேற்ப விலையை ஏற்றி மக்களிடமிருந்து வசூலித்து தருகின்றன ஒழுங்குமுறை ஆணையங்கள். ஆக எவ்வளவு அதிகமாக செலவு செய்ததாக நிரூபிக்க முடியுமோ அந்தளவுக்கு லாபம் அதிகமாகும்.
நிலக்கரி இறக்குமதியில் மோசடி
டாடா, அதானி, அம்பானி, எஸ்ஸார் உள்ளிட்ட இம்மோசடி நிறுவனங்கள் சிங்கப்பூர், ஹாங்காங், துபாய் உள்ளிட வெவ்வேறு நாடுகளில் பெயர்ப் பலகை நிறுவனங்களை பதிவு செய்துகொள்கிறார்கள் அல்லது தங்களது நிறுவனத்தின் கிளை நிறுவனங்களை பயன்படுத்திக் கொள்கிறார்கள். இவர்கள் இறக்குமதி செய்யும் நிலக்கரி இந்தோனேசியாவிலிருந்து நேரடியாக இந்தியாவுக்குதான் கொண்டுவரப்படுகிறது. ஆனால் அதற்குரிய இன்வாய்ஸ் எனப்படும் விலைப்பட்டியல் ஆவணங்களோ பல நாடுகளில் இருக்கும் நிறுவனங்களுக்கும் கைமாறி இறுதியாக இந்தியா கொண்டுவரப்படுவதை போன்று போலியாக தயாரிக்கப்படுகிறது.
அதாவது இந்தோனேசியாவிலிருக்கும் நிலக்கரியை துபாயிலிருக்கும் நிறுவனம் வாங்கி அதிக விலைக்கு மலேசியாவிலிருக்கும் நிறுவனத்திற்கு விற்கும் இப்படி கைமாறி இறுதியாக அதானி கைக்கு வரும்.இதனால் அதானியின் நிலக்கரி செலவு அதிகமாகும். சரி இந்த நிறுவனங்கள் யாருடையது என்று பார்த்தால் இந்தோனேசியாவிலிருக்கும் நிலக்கரி சுரங்கம் முதல் அது பயணிக்கும் அனைத்து நிறுவனங்களும் அதானியின் சொந்த நிறுவனங்களே.
இந்திய அதானி நிறுவனம் மிகைப்படுத்தப்பட்ட விலையை வெளிநாட்டிலிருக்கும் அதன் துணை நிறுவனத்திற்கு அனுப்பிவிடும். அத்துணை நிறுவனமோ உண்மையான விலையை மட்டும் இந்தோனேசியாவிற்கு அனுப்பிவிட்டு மற்ற தொகையை கையகபடுத்திக்கொள்ளும். இப்பணம் வரியில்லா சொர்க்க நாடுகளில் கருப்பு பணமாக தங்கும். துணை நிறுவனங்கள் இல்லாமல் பெயர்பலகை நிறுவனங்கள் பயன்படுத்தப்பட்டால் தொகைக்கு ஏற்ப அந்நிறுவனங்களுக்கு கமிசன் வழங்கப்படுகிறது.
இந்தோனேசியாவிலிருந்து இறக்குமதியாகும் நிலக்கரியின் விலையை எம்முறையில் கணக்கிட்டாலும் மெட்ரிக் டன் ரூ. 3,300-ஐ (50 அமெரிக்க டாலர்) தாண்டுவதில்லை. ஆனால் போலியான ஆவணங்கள் மூலம் ரூ. 5,380 -ஆக (80 அமெரிக்க டாலர்) காட்டுகிறது. இடைப்பட்ட ரூ.2000(30 டாலர்) நிறுவனங்களால் அபகரிக்கப்படுகிறது. 2014-2015-ம் ஆண்டுகளில் 212.11 மில்லியன் டன் அளவுக்கு நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் குறிப்பிட்டுள்ளார். இது முந்தைய ஆண்டை காட்டிலும் 27% அதிகம். ஒரு மெட்ரிக் டன்னுக்கு ரூ.2000 கொள்ளை என்றால் என்றால் 212.11 மில்லியன் டன்னுக்கு? 40 ஆயிரம் கோடிக்கு அதிகமாக சென்றாலும் மிகக்குறைந்த அளவாக 29,000 கோடி அளவில் உறுதியாக ஊழல் நடந்திருப்பதாக கூறுகிறது எக்கனாமிக் அன்ட் பொலிட்டிகள் விக்லி பத்திரிகை.
இந்த ஊழலில் சம்பந்தப்பட்டிருப்பதாக மனோஜ் குமார் கார்க் என்ற இடைத்தரகரை மத்திய வருவாய் நுண்ணறிவு(Directorate of Revenue Intelligence) பிரிவு கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்துள்ளது. தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநில மின்சார வாரியத்திற்கு நிலக்கரி இறக்குமதி செய்ததில் நடைபெற்றுள்ள ரூ.280 கோடி ஊழல் தொடர்பாக இக்கைது நடந்துள்ளது. இந்த மனோஜ் குமார் துபாயை தலைமையகமாக கொண்டு கிலின்ட்ஸ் குலோபன் ஜெனரல் டிரேடிங்(Glints Global Trading LLC) நிறுவனத்தையும், ஹாங்காங்கை தலைமையகமாக கொண்டு கிலின்ட்ஸ் குலோபன் லிமிட்டட்(GlintsGlobalLimited) என்ற நிறுவனத்தையும் நடத்திவருகிறார்.
இந்த நபர் மீது ஏற்கனவே பேங்க் ஆஃப் பரோடா(BOB) வங்கியில் நடைபெற்ற அந்நிய செலவாணி மோசடி மற்றும் சட்டவிரோத பாசுமதி அரிசி இறக்குமதி ஆகிய குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. இதில் பேங்க் ஆஃப் பரோடா வழக்கு உச்சநீதிமன்றம் நியமித்த சிறப்பு புலனாய்வு குழுவால் விசாரிக்கபடுகிறது, பாசுமதி விவகாரம் மத்திய உளவுதுறையால் விசாரிக்கபடுகிறது என்பதன் மூலம் இவ்வழக்குகளின் தீவிரங்களை புரிந்துகொள்ள முடியும். இந்த இடைத்தரகரின் நிறுவனம் மூலமாகத்தான் தமிழக மின்வாரியம் நிலக்கரி இறக்குமதி செய்திருக்கிறது; இந்நிறுவனத்திற்கு இத்துறையில் முன்னனுபவம் கூட இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழநாடு மின்சார வாரியம் MGB commodities என்ற நிறுவனத்திற்கு நிலக்கரி இறக்குமதி செய்வதற்கான உரிமையை TNEB_1266168gஅளிக்கிறது. இந்த MGB நிறுவனம் கிலின்ட்ஸ் நிறுவனதின் மூலம் இந்தோனேசியாவிலிருந்து நிலக்கரி இறக்குமதி செய்கிறது. நிலக்கரி சுரங்கத்திலிருந்து $45 க்கு பெறப்படும் நிலக்கரியின் விலையை $87 என போலியான ஆவணங்கள் மூலம் தெரிவித்து தமிழக மின்வாரியத்திடமிருந்து மிகைப்படுத்தப்பட தொகையை பெற்றுக்கொள்கிறது இந்நிறுவனம். கிலின்ட்ஸ் நிறுவனம் இவ்வூழலின் சூத்திரதாரிகள் தங்களின் முகமாக பயன்படுத்திக்கொள்ளும் ஒரு நிறுவனம் தான். ஏன் இந்நிறுவனம் மூலமே தொடர்ச்சியாக நிலக்கரி வாங்கப்பட்டது? இதில் லாபமடைந்தது யாரெல்லாம்? உள்ளிட்ட கேள்விகளுக்கு இன்னும் விடையில்லை.
இம்முறையில் போலி விலையேற்றத்தின் மூலம் கொள்ளயடிப்பதை தாண்டி தரம் குறைந்த நிலக்கரியை தரமான நிலக்கரி என்று இறக்குமதி செய்து அதன் மூலமும் பல கோடிகள் கொள்ளயடிக்கப்பட்டுள்ளது. நிலக்கரியின் தரம் அதன் மொத்த கலோரிபிக் மதிப்பை(Gross Calorific Value- CGV) பொருத்து நிர்ணயிக்கப்படுகிறது. தரத்தை பொறுத்து அதன் விலையும் அதிகரிக்கும். இந்நிறுவனங்கள் குறைந்தவிலைக்கு தரம் குறைந்த நிலக்கரியை இறக்குமதி செய்துவிட்டு அதிக தரமுள்ள நிலக்கரியை வாங்கியதாக கூறி போலி ஆவணங்களை சமர்ப்பிக்கின்றன.இதனால் அதிக செலவு செய்திருப்பதாககூறி அதற்கேற்ப கட்டணம் பெற்றுக்கொள்கின்றன. இதனால் பொதுமக்களின் பணம் கொள்ளைபடிக்கப்படுவதோடு மின்சார உற்பத்தியும் குறைந்து இருவழிகளில் லாபமீட்டுகிறார்கள் இக்கொள்ளையர்கள்.
உபகரணங்கள் இறக்குமதியில் மோசடி
மேற்கண்ட முறை போலவே உபகரணங்கள் இறக்குமதியிலும் தங்கள் துணை நிறுவனங்களின் வழியாக விலையை Mundra_thermal_power_station
மிகைப்படுத்தியிருக்கிறார்கள் அதானி, எஸ்ஸார் உள்ளிட்ட நிறுவனங்கள். சீனாவிலிருந்ததும், தென் கொரியாவிலிருந்தும் இந்தியாவிற்கு நேரடியாக இறக்குமதி நடந்தாலும் இடையில் பல நிறுவனங்களை நுழைத்து, விலையை அதிகப்படுத்தி திட்டமிட்ட முறையில் இந்த கொள்ளை நடந்துள்ளது.
இம்முறையில் அதானி குழுமம் மட்டுமே சுமார் 6000கோடிகள் மோசடி செய்திருப்பதாக மத்திய வருவாய்துறை நுண்ணறிவு இயக்குநகரகம் அந்நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதே போன்று எஸ்ஸார் நிறுவனம் சுமார் 3000 கோடி அளவில் மோசடி செய்துள்ளதும் அம்பலமாகியுள்ளது.
அதானி குழுமத்திற்கு வருவாய் நுண்ணறிவு இயக்குனரகம் அனுப்பியிருக்கும் சம்மனில் மேற்படி கொள்ளையை சுட்டிகாட்டி “அந்நிய செலவாணியை திட்டமிட்ட முறையில் வெளிநாட்டிற்கு எடுத்து செல்ல சதி” திட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கவுதம் அதானியின் சகோதரர் விநோத் அதானியை குறிப்பிட்டு  இது தொடர்பாக விசாரிக்க நேரில் ஆஜராகுமாறு பல முறை நோட்டீஸ் அனுப்பியும் வேண்டுமென்றே ஆஜராக மறுத்து விசாணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் இந்த சம்மன் அனுப்பபட்டு இரண்டு ஆண்டுகள் ஆன பின்னரும் கூட அதானி மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. மோடி பதவியேற்று இரண்டு ஆண்டுகள் ஆகிறது என்பதையும் இதனுடன் இணைத்து பார்க்கலாம்.
மின்சார விலையை தீர்மானிக்கும் காரணிகளில் ஒன்றாக கூறப்படும் நிலைக்கட்டணத்தில் முதலாளிகளின் முதலீட்டுக்கான லாபத்தை உத்திரவாதப்படுத்தும் நோக்கில் உபகரணங்களுக்கான செலவும் கணக்கில் கொள்ளப்படுகிறது. இதை பயன்படுத்தி உபகரணங்களின் இறக்குமதி கட்டணத்தை மிகைப்படுத்தி மக்கள் பணத்தை திருடுகிறார்கள் கார்ப்பரேட் முதலாளிகள்.
இழப்பீட்டு கட்டணம் என்ற முறையில் கொள்ளை
Tata Power2குஜராத் மாநிலம் முந்திரா சிறப்பு பொருளாதார மண்டலத்தில் செயல்படும் அதானி மற்றும் டாடா-வின் மின்னுற்பத்தி நிலையங்கள் மூலமாக குஜராத், மஹாராஸ்டிரா, பஞ்சாப், ஹரியானா முதலியா மாநிலங்களுக்கு மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது. இதற்கான மின்சார கொள்முதல் ஒப்பந்தங்களை(Power Purchase Agreemnt -PPA). சம்பந்தபட்ட மின்பகிர்மான நிலையங்களோடு டாடாவுன், அதானியும் கையெழுத்திட்டுள்ளன.
இவ்வொப்பந்தப்படி மின் உற்பத்திக்கான எரிபொருளை உத்திரவாதப்படுத்தி தடையின்றி மின்சார விநியோகம் செய்வது டாடா மற்றும் அதானி நிறுவனங்களின் பொறுப்பு. இதற்காக அந்நிறுவனங்கள் நிலக்கரி சுரங்க நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும். இதன்படி அதானி பவர் நிறுவனம் இந்தோனேசியாவில் நிலக்கரி சுரங்கம் கொண்டிருக்கும் தனது மற்றொரு அதானி என்டர்பிரைஸ் என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொள்கிறது. டாடா பவர் நிறுவனம் தான் 30% பங்கு வைத்திருக்கும் இந்தோகோல் நிறுவனத்துடன் ஒப்பந்த செய்துகொள்கிறது.
இந்நிலையில் கடந்த 2013-ம் ஆண்டு டாடா மற்றும் அதானி நிறுவனங்கள் மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுவிட்டது என்றும் அதற்கு இழப்பீட்டு கட்டணம் தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தன. நஷ்டத்திற்கு காரணமாக அவர்கள் கூறியது தாங்கள் குறைந்த விலைக்கு நிலக்கரி பெற இந்தோனேசிய நிறுவனங்களுடன் ஒப்பந்தமிட்டிருந்ததாகவும் ஆனால் 2010-ம் ஆண்டு இந்தோனேசிய அரசு சந்தைவிலைக்கு தான் விற்க வேண்டும் என்று உத்தவிட்டிருப்பதாகவும் அதனால் இந்தோனேசிய நிலக்கரியின் விலை உயர்ந்து தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுவிட்டதாகவும் கூறி இழப்பீட்டு கட்டணம் கோரியது.
இதை விசாரித்த மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் “சட்டத்தில் மாற்றம்” என்ற விதி இந்திய சட்டத்தில் ஏற்படும் மாற்றத்திற்கு தான் பொருந்துமே தவிர இந்தோனேசிய சட்டத்திற்கு பொருந்தாது என்று கூறியது. அப்படி கூறிக்கொண்டே ஆனால் “மின்சார சட்டம் 2013பிரிவு 79(1)ன் படி நுகர்வோரின் நலனை மட்டும் கணக்கில் கொள்ள கூடாது மின்சார முதலாளிகளின் நலனையும் கணக்கில் கொள்ள வேண்டும்” என்றும் அச்சட்டம் கூறுகிறது. அச்சட்டப்படி இழப்பீடு தொகை வழங்கலாம் என்று தீர்ப்பு கூறியது. இத்தொகைய கணக்கிட எச்.டி.எப்.சி சேர்மேன் பரேக் மற்றும், தற்போதைய எஸ்.பி.ஐ (State Bank of India) தலைவர் அப்போதைய எஸ்.பி.ஐ கேப்பிட்டல் மார்கெட்ஸ் லிமிட்டடின்(SBI markets Limited) தலைமை செயல் அதிகாரியான அருந்ததி பட்டாச்சார்யா உள்ளிட்ட அதிகாரவர்க்க முதலாளிகளிகளை கொண்ட குழு அமைக்கப்பட்டது. இக்குழு டாடா மற்றும் அதானிக்கு 10,000 கோடி இழப்பீடு வழங்க பரிந்துரை செய்தது.
இது தொடர்பான மேல்முறையீடு தீர்பாயத்தில் நடந்துவந்தது. இதன் தீர்ப்பு கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது. இதில் மின்சார சட்டப்பிரிவு 79(1) -ன் படி மேற்படி இழப்பீடுத்தொகை வழங்கியது தவறு என்றும் மின்சார கொள்முதல் ஒப்பந்தத்தின் “சட்டத்தின் மாற்றம்” என்ற பிரிவின் அடிப்படையில் தான் மேற்படி இழப்பீட்டை வழங்கவேண்டும் என்றும் விநோதமான தீர்பளித்துள்ளது. அதாவது எந்த சட்டபிரிவின் அடிப்படையில் இழப்பீட்டுதொகையை அனுமதிப்பது என்பதில் இரு ஆளும் வர்க்க நிறுவனங்களுக்கு(Institution) இடையே நிலவும் வேறுபாட்டை ஏதோ மாபெரும் போராட்டம் போல நடத்துகிறார்கள். தவிர டாடா, அதானி கொள்ளையடிப்பதில் இவை ஒத்தகருத்துடன் செயல்படுகின்றன.
ஆக நிலக்கரி இறக்குமதியின் போலி விலையேற்றத்தின் மூலம் சுமார் 29,000 கோடி, மின்னுற்பத்தி நிலைய உபகரணங்கள் இறக்குமதியின் போலி விலையேற்றம் என்கிற வகையில் சுமார் 9,000 கோடி, இழப்பீட்டு கட்டணம் என்கிற வகையில் சுமார் 10,000 கோடி என கிட்டத்தட்ட 50,000 கோடி அளவில் கொள்ளை நடந்துள்ளது. இந்த கூட குறைந்தபட்ச கணக்கீடு என்கிறது எக்கனாமிக் அன்ட் பொலிட்டிக்கல் வீக்லி. மின்சார விலையேற்றத்தின் மூலம் இக்கொள்ளை பணம் பொதுமக்களிடமிருந்து பிடுங்கபட்டு முதலாளிகளுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு யூனிட்டுக்கும் ரூ 1.50 முதல் ரூ 2.00 வரை நாம் அதிகமாக செலுத்துகிறோம். மாதம் 1000 யூனிட் பயன்படுத்தும் ஒரு வீட்டிலிருந்து ஆண்டுக்கு சுமார் 24,000 ஆயிரம் வரை கொள்ளையடித்திருக்கிறார்கள் இம்முதலாளிகள்.
விலையை மோசடியாக அதிகப்படுத்தினார்கள் என்பது பிரச்சனையில் சிறு பகுதி மட்டுமே. மின்சாரம் வழங்கும் சேவையிலிருந்து அரசு விலகிக்கொண்டு மின் உற்பத்தியில் தனியார் முதலாளிகளை ஊக்குவித்ததன் விளைவே இன்று மின்சாரத்தின் விலையை தனியார் முதலாளிகள் தங்கள் விருப்பம் போல ஏற்றுகிறார்கள். அதை தட்டி கேட்கும் அதிகாரத்தையும் கட்டுமான சீர்திருத்தம் என்ற பெயரில் மக்களின் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொள்ளும் சட்டமன்ற நாடாளுமன்றத்திற்கு இல்லை. ஒழுங்குமுறை ஆணையங்கள் எனப்படும் அதிகாரவர்க்கத்தின் கைகளில் முடிவெடுக்கும் அதிகாரம் குவிக்கப்பட்டுள்ளது. ஆக தனியார் முதலாளிகள் மின்சாரம் தயாரிக்க அனுமதிக்கப்பட்டதே ஒரு கொள்ளைதான்.
தனியார்மயத்தின் மூலமாகத்தான் சிறப்பான சேவையை பெறமுடியும்,போட்டியின் மூலம் விலை குறையும்,ஊழல் குறையும் போன்ற தனியார்மய புரோக்கர்களின் வாதங்கள் எவ்வளவு போலியானது என்பதை இவ்வூழலும் அம்பலப்படுத்துகிறது.
– ரவி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக