சனி, 4 ஜூன், 2016

எழுத்தாளர் காஞ்சா அய்லய்யாவுக்கு பார்ப்பனர்கள் கொலை மிரட்டல் !

kancha-ilya-threatened-by-brahmin-thugsகாஞ்சா அய்லய்யா இந்தியாவின் புகழ்பெற்ற எழுத்தாளர், தலித் அரசியல் சிந்தனையாளர், மனித உரிமை செயற்பாட்டாளர். “நான் ஏன் இந்து அல்ல”, “பின் இந்து இந்தியா”, “அய்யங்காளி” போன்ற நூல்களின் ஆசிரியர். அச்சமின்றி பார்ப்பனியத்தை எதிர்த்து பேசி வரும் அறிவு ஜீவிகளில் ஒருவர். தற்போது ஐதரபாத் மௌலானா அபுல்கலாம் ஆசாத் உருது பல்கலைகழகத்தில் சமூக நீதி ஆய்வு மையத்தின் இயக்குநராக பணியாற்றுகிறார்.

விஜயவாடாவில் சி.ஐ.டி.யு ஏற்பாடு செய்த கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் ’இந்தியாவில் தொழிலாளர் வர்க்கத்தின் பரிணாம வளர்ச்சி’ என்ற தலைப்பில் உரையாற்றினார். அதில் “பார்ப்பனர்கள் உற்பத்தியில் ஒருபோதும் பங்கெடுக்கவில்லை, அவர்களுடைய சமூகம் உடலுழைப்பு சார்ந்த வேலைகளில் ஈடுபடவில்லை” என குறிப்பிட்டுள்ளார். ஆனால் ஊடகமோ பார்ப்பனர்கள் சோம்பேறி சமூகம் என திரித்து எழுதியது.
இதையறிந்த 15 பேர் கொண்ட பார்ப்பன கும்பல் அவருடைய அலுவலகத்தில் அவரை சூழ்ந்து கொண்டு மன்னிப்பு கேட்கும் படி மிரட்டியது. தான் தெரிவித்த கருத்துகளுக்கு அடிப்படை காரணங்களை விளக்கி கூறினாலும் அந்த கும்பல் காது கொடுக்க தயாராக இல்லை. மன்னிப்பு கேட்க அவர் மறுக்கவே, ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் தகாத வார்த்தையால் பேசியும், தொலைபேசி வாயிலாக கொலை மிரட்டல் விடுத்தும் இருக்கிறது.
அதன்பிறகு நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் காஞ்சா அய்லய்யா ’நான் இந்துமதத்தை விமர்சித்து கொண்டு இருப்பதால் சீர்திருத்தம் அடையும் என எதிர்ப்பார்த்தேன். ஆனால், அதன் கலாச்சாரம் இதுவென்றால், நான் இந்துமதத்தை பற்றி இனிப் பேசப்போவதில்லை” என உடைந்து போய் கூறியுள்ளார். எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு நடந்தது காஞ்சா அய்லய்யாவுக்கும் தொடர்கிறது.
தெலுங்கு மொழி பேசும் எழுத்தாளர்கள், அறிவு ஜீவிகள், செயற்பாட்டாளர்கள் என 50 பேர் இந்த கொலை மிரட்டலை கண்டித்து காஞ்சா அய்லய்யாவுக்கு ஆதரவு தெரிவித்து இருக்கின்றனர்.
பார்ப்பனியம் வரலாற்று உண்மைகளை திரித்து எழுதுமே ஒழிய அங்கீகரிக்காது. அப்படி அம்பலபடுத்துவர்களை ஒழித்துக்கட்டும். இதுதான் நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கல்புர்கி, ரோஹித் வெமுலா உள்ளிட்ட எண்ணற்ற அறிவுஜீவிகளையும், நாத்திகவாதிகளை காவு வாங்கியதற்கான பின்புலம்.
நாத்திகவாத கண்ணோட்டத்தை அறிவியல் பூர்வமாக விளக்கினால் மத உணர்வை புண்படுத்தி விட்டதாக கூறி மதவெறியர்கள் ஆதாயம் தேட முயல்கின்றனர். இங்கு மட்டுமல்ல வங்கதேசத்திலும் இதுதான் நடக்கிறது. இந்த ஆண்டில் மட்டும் பத்துக்கும் மேற்ப்பட்ட மதசார்பற்றவர்களும், நாத்திகவாதிகளும் இஸ்லாமிய மதவெறிக்கு இதுவரை பலியாகி உள்ளனர்.
சிந்தனையாளர்கள், அறிவுஜீவிகள், கலைஞர்கள் இல்லாத சமூகம் என்பது ஊனமானது. விலைமதிப்பில்லாத அவர்கள் உயிர் போவதை பார்த்து நாம் மௌனமாக கடந்தோமானால், அது நம்தேசத்தை தற்குறிகள் நிறைந்த தேசமாக மாற்றிவிடும்.
நீதிமன்ற கருப்பு அங்கிகள் காவி உடையை தரிக்கும் தருணத்தில் , இந்துத்துவ கருத்துக்களை பொதுவெளியில் பேசுவதையே ஜனநாயகம் எனப் பொழிப்புரை தருகிறது பார்ப்பனப் பாசிசம்.
அதனால் இந்த அரசு கட்டமைப்பில் நின்று கொண்டு பார்ப்பனியத்தை கூண்டில் ஏற்றிவிட முடியாது. அரசின் அனைத்து உறுப்புகளையும் பயன்படுத்திதான் மாலேகான் குண்டுவெடிப்பு குற்றவாளிகள் தப்பிவிக்கப்பட்டனர் என்பது ஒரு வெள்ளிடை உதாரணம். ஆகையால் பார்ப்பன பயங்கரவாதத்துக்கு எதிரான தீர்ப்பு என்பது மக்கள் மன்றத்தில் மட்டுமே கிடைக்கும்.
-மில்ட்டன், செயலர்,
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், சென்னை
ஹிந்துஸ்தான் டைம்ஸில் வெளியான காஞ்சா அய்லய்யாவின் பேட்டியிலிருந்து சில பகுதிகள்:
kancha-ilyaமே 16 அன்று ஹைதராபாத் மவுலானா ஆசாத் தேசிய உருது பல்கலைக் கழகத்தில் ஹிந்துஸ்தான் டைம்ஸ் அய்லய்யாவை சந்திக்க போன போது அவரது அறைக்கு வெளியே இரண்டு தொலைக்காட்சி படப்பிடிப்பு குழுக்களும், மாநில பார்ப்பனர்கள் சங்கத்தைச் சேர்ந்த ஒரு ஆவேசமான கூட்டமும் இருந்தன.
கூச்சலும் குழப்பமுமாக இருந்த  அறையில் தொலைபேசி இடையிடையே ஒலித்துக் கொண்டிருந்தது. “யார் பேசுவது? நீ ஒரு பயங்கரவாதியா? நீ எந்த அமைப்பைச் சேர்ந்தவன் என்று சொல்லு” என்று பேராசிரியர் மறுமுனையில் பேசிக் கொண்டிருந்த நபரிடம் கேட்டுக் கொண்டிருந்தார்.
கேள்வி : என்ன நடந்தது?
மே 14 அன்று விஜயவாடாவில் சி.ஐ.டி.யு சார்பில் ஒரு உரை நிகழ்த்தும்படி என்னை அழைத்திருந்தார்கள். உழைப்பின் தோற்றம் பற்றியும், இந்தியாவில் உற்பத்தியின் வரலாறு பற்றியும் நான் பேசினேன். திராவிடர்களுடையதும், பழங்குடி மக்களுடையதுமான முறைப்படுத்தப்பட்ட உழைப்பு சிந்த சமவெளி நாகரீகத்தில் தொடங்கி வளர்ந்தது என்று கூறினேன். அவர்கள் களிமண்ணை செங்கல் ஆக்கினார்கள்; மரத்தைக் கொண்டு வீடுகளும், அறைக்கலன்களும் செய்தார்கள்; நுட்பமான கால்வாய்களையும், வடிகால் அமைப்புகளையும் கட்டியமைத்தார்கள்.
இந்த முன்னேற்றம் ஆரியர் படையெடுப்புக்குப் பிறகு வேத காலம் தொடங்குவதும் வரையிலும் நீடித்தது. படிப்படியாக, வேதங்களின் செல்வாக்கு அதிகரிக்க அதிகரிக்க உழைப்பின் அங்கீகாரம் பறிக்கப்பட்டது. கடவுளரின் உலகில் உழைப்பை செலுத்துபவர்கள் சண்டாளர்கள், சூத்திரர்கள், கடவுள் மறுப்பாளர்கள் என்று அழைக்கப்பட ஆரம்பித்தனர்.
உழைப்புக்கு எதிரான இந்த ஒட்டுமொத்த கோட்பாடும் பார்ப்பன எழுத்தாளர்களாலும் பின்னர் வேத மதத்தை கட்டமைத்த பூசாரிகளாலும் கட்டி எழுப்பப்பட்டது. இது 6-வது நூற்றாண்டு வரை தொடர்ந்தது. அப்போது புத்தர் தோன்றி, “கடும் உழைப்பு ஒவ்வொரு மனிதனின் கடமையாகும்” என்ற சிராமண தத்துவத்தை முன் வைத்தார். இந்த சிராமண கலாச்சாரம், இந்தியாவின் பெரும் பகுதிகளில் புத்த மதத்தை அழித்தொழித்த சங்கராச்சாரியாரின் எதிர்ப் புரட்சி வரை தொடர்ந்தது.
இசுலாமிய, பிற்பாடு கிருத்துவ ஆட்சியாளர்கள் காலத்தில் வேத மதம் கட்டுக்குள் இருந்தது.  1947-க்குப் பின் பார்ப்பன ஆதிக்கம் தொடர்கிறது.
வரலாற்றில் பார்ப்பனர்கள் ஒரு போதும் உற்பத்தியில் பங்கேற்றதில்லை என்பதுதான் நான் என் உரையில் பதிய வைத்த முக்கியமான கருத்து.
கேள்வி: 2010-ல் உங்கள் வீடு சூறையாடப்பட்டது. வலதுசாரி குழுக்கள் உங்களை பல ஆண்டுகளாகவே குறி வைத்து வந்திருக்கின்றனர். இப்போது என்ன மாறியிருக்கிறது?
கடந்த காலத்தில், பார்ப்பனர்களால் தலைமை தாங்கப்படும் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க போன்ற அமைப்புகளின் தாழ்த்தப்பட்ட சாதி உறுப்பினர்கள்தான் என்னை தாக்கினார்கள். இதுதான் முதல்முறையாக பார்ப்பனர்கள் வெளிப்படையாக என்னை குறி வைப்பது. ஆந்திரா மற்றும் தெலுங்கானா அரசுகளிடமிருந்து கிடைக்கும் ஆதரவு அவர்களுக்கு தைரியம் ஊட்டியிருக்கிறது.
ஆட்சிக்கு வந்த பிறகு சந்திரசேகர் ராவும், சந்திரபாபு நாயுடுவும் பார்ப்பனர்களின் நலனுக்காக தலா ரூ 100 கோடி ஒதுக்கினர். பார்ப்பன சாதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் தலைமையில் அந்த சாதிக்காக தனி வாரியங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
அவர்கள் தோளில் பெரிய கோடாரியை வைத்திருக்கும் பரசுராமனை தங்கள் சின்னமாக பயன்படுத்துகின்றனர். கோடாரியைக் காட்டி யாரையோ மிரட்ட முயற்சிக்கின்றனர். அரசு ஆதரவிலான இந்த குழுக்கள் தலித் பகுஜன்களுக்கும், சிறுபான்மையினருக்கும் அச்சுறுத்தலானவை.
கேள்வி : இந்த முறை என்ன மாதிரியான மிரட்டல்களை நீங்கள் எதிர் கொண்டீர்கள்?
மே 16 அன்று ஒருவர் என்னை தொலைபேசியில் அழைத்து, தான் ஆந்திர பிரேதச முன்னாள் தலைமை செயலர் ஐ.ஒய்.ஆர் கிருஷ்ணராவ் (இப்போது ஆந்திரா பார்ப்பனர் நலச் சங்க தலைவர்) சார்பாக பேசுவதாக கூறினார். அதே நபர் அதற்கு முந்தைய நாள் சி.ஐ.டி.யு கருத்தரங்கில் எனது உரைக்காக நான் தண்டிக்கப்பட வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.
அவரது அறிக்கை ஹிஸ்டீரியாவை தூண்டியது, எனது கொடும்பாவிகள் எரிக்கப்பட்டன. ஒருவர் எனது அலுவலக தொலைபேசி எண்ணை பேஸ்புக்கில் போட, வசவு பாடும் அழைப்புகள் வந்து குவிய ஆரம்பித்தன.
பார்ப்பனர்கள் உற்பத்தியில் என்ன பங்களித்தார்கள் என்று புள்ளிவிபரங்களை தரும்படி அவர்களிடம் கேட்டேன். எத்தனை பேர் செருப்பு தொழிலாளர்களாகவும், பானை செய்பவர்களாகவும், கட்டிட தொழிலாளர்களாகவும், விவசாய தொழிலாளர்களாகவும், துப்புரவு தொழிலாளர்களாகவும் உள்ளனர்? தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் அவர்களில் எத்தனை பேர் பதிவு செய்துள்ளார்கள்?
சேற்றை உணவாக மாற்றும் மக்களை அழுக்கு மனிதர்கள் என்று அழைக்கும், அவர்களை இழிவாக கருதும் ஒரு சமூகத்தில் நான் வாழ்கிறோம் என்று நான் வாதிட்டேன். இப்படி இருந்தால் நமது நாடு எப்படி முன்னேற முடியும்?  வினவு.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக