சனி, 11 ஜூன், 2016

துணைவேந்தர் பதவிகள் எட்டு கோடி ரூபாய் வரை விலை போகிறது'

தமிழகத்தில் காலியாக உள்ள பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிகள் நிரப்பப்பட்டு வருகின்றன. ' கடந்த காலங்களில் 3 கோடி ரூபாய் அளவுக்குப் பேரம் பேசப்பட்டு வந்த துணைவேந்தர் பதவிகள், இப்போது எட்டு கோடி ரூபாய் வரை விலை போகிறது' என வேதனைப்படுகிறார்கள் கல்வியாளர்கள். கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக போராசிரியர் கணபதி நியமிக்கப்பட்டிக்கிறார். அதேபோல், தமிழ்நாடு திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பேராசிரியர் பாஸ்கரன் நியமிக்கப்பட்டிருக்கிறார். இதனால், இந்த இரண்டு பல்கலைக்கழகங்களிலும் நீடித்து வந்த குழப்பங்கள் நீங்கிவிட்டன. ஆனால், சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த தாண்டவனின் பதவிக்காலம் நிறைவடைந்து ஆறு மாதங்கள் ஆகிவிட்டன.

அதேபோல், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த கல்யாணி மதிவாணனின் பதவி முடிந்து ஓராண்டு முடிந்துவிட்டது. இந்தப் பல்கலைக்கழகங்களில், புதிய துணைவேந்தரை தேர்வு செய்யும் மூன்று பேர் கொண்ட கமிட்டி நியமிக்கப்பட்டது. இருப்பினும், பல மாதங்களாக புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய முடியாமல், தேர்வுக் குழு தவித்து வருகிறது. காரணம், ' துணைவேந்தர் தேர்வில் வழக்கம்போல் நடக்கும் அரசியல்தான்' என்கின்றனர் கல்வியாளர்கள்.

தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகத்தின் முன்னாள் தலைவர் பேராசிரியர் தமிழ்மணி நம்மிடம், " பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவி என்பது மிக முக்கியமானது. இந்தப் பதவிகளுக்கு வருபவர்கள் சிறந்த கல்வியாளர்களாகவும் ஊழலுக்கு அப்பாற்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும் என விரும்புகிறோம். ஆனால், கடந்த பத்தாண்டுகளில் பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் அரசியல் சார்புள்ளவர்களும், ஊழலுக்கு துணை போகிறவர்களுமே நியமிக்கப்பட்டுள்ளனர். துணைவேந்தரை தேர்வு செய்ய, மூன்று பேர் கொண்ட கமிட்டியை நியமிக்கின்றனர்.
ஆளுநரின் பிரதிநிதியாக நியமிக்கப்படுகிறவர் கமிட்டியின் ஒருங்கிணைப்பாளராக செயல்படுகிறார். தவிர, செனட் சார்பாக ஒரு பிரதிநிதியும், சிண்டிகேட் சார்பாக ஒரு பிரதிநிதியும் தேர்வு செய்யப்படுகிறார். இதில், செனட் சார்பில் தேர்வாகும் பிரதிநிதி அரசியல் கலப்பில்லாத கல்வியாளராக இருக்கிறார். மற்ற இரு பிரதிநிதிகளும் அரசுக்கு வேண்டப்பட்டவர்களாக உள்ளனர். இதனால், யார் துணைவேந்தர் பதவிக்கு வர வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்தியுள்ளவர்களாக இவர்கள் இருக்கின்றனர். இதுதான் நடக்கப்போகும் ஊழல்களுக்கு தொடக்கப்புள்ளியாக அமைகிறது.

அரசியல் புள்ளிகள் சிலர், பல்கலைக்கழகங்களையும் தங்களுக்குள் கோட்டா சிஸ்டம் அடிப்படையில் பிரித்து வைத்துள்ளனர். ' எந்த பேராசிரியர் எங்கே நியமிக்கப்பட வேண்டும்' என்பதில் ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்கள் தெளிவாக உள்ளனர். துணைவேந்தர் தேர்வு என்பது நியாயமான முறையில், வெளிப்படையாக நடத்தப்பட வேண்டும் என்று விரும்புகிறோம். சிறந்த கல்வியாளர்கள் தேர்வுக் குழுவில் இடம்பெறும்போதுதான், பல்கலைக்கழகத்திற்கு சிறந்த துணைவேந்தர் கிடைப்பார். கல்வித் தகுதி, நிர்வாகத் திறமை என்பதையும் தாண்டி, ஊழலற்றவர்கள் பதவிக்கு வர வேண்டும்.
தற்போது துணைவேந்தர் பதவிகளுக்கு எட்டு கோடி வரையில், விலை பேசப்படுவதாக எங்களுக்குத் தகவல்கள் வருகின்றன. இவ்வளவு தொகை கொடுத்து வருகிறவர்கள் எப்படி சிறந்த கல்வித் தரத்தை உருவாக்குவார்கள்? கொடுத்த பணத்தை ஈட்டத்தான் விரும்புவார்கள். இவர்களின் கீழ் கல்வி பயிலும் மாணவர்களும் ஊழல் செய்வதை சாதாரணமான விஷயமாகத்தான் பார்ப்பார்கள். உயர் ஊழல் துறையாக உயர்கல்வி மாறிப் போவதை முதல்வர் தடுக்க வேண்டும்" என்றார் வேதனையோடு.>ஆ.விஜயானந்த்  விகடன்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக