சனி, 21 மே, 2016

டாக்டர்.கிருஷ்ணசாமி : ஜனநாயகத்துக்கு பேராபத்து ... அதிமுகவினர் பணம் கொடுத்து தொகுதிகளை பறிக்கிறார்கள்

வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து அதிமுக வென்றிருப்பது ஜனநாயகத்துக்கு பேராபத்து என புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் க. கிருஷ்ணசாமி தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிட்ட புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் க. கிருஷ்ணசாமி வாக்கு எண்ணிக்கை தொடங்கிய முதல் சுற்றில் இருந்து தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்தார். கடைசி சுற்றில் அதிமுக வேட்பாளர் ஆர். சுந்தரராஜ் அதிக வாக்குகளை பெற்று, 493 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. தபால் வாக்குகளில் டாக்டர் கிருஷ்ணசாமி தரப்பில் சந்தேகம் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து மூன்று முறை எண்ணப்பட்டது.
டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் கூறும்போது, “பொதுமக்கள் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்த்தார்கள். கருத்துக் கணிப்புகளிலும் ஆட்சி மாற்றம் வரும் என சொன்னார்கள்.
ஆனால், எதிர்பார்த்தது போல மாற்றம் வரவில்லை. தொகுதிக்கு ரூ. 10 கோடிக்கு மேல் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வாக்குகளை வாங்கியுள்ளனர். இதனால் ஒட்டுமொத்த முடிவுகளும் மாறியுள்ளது.
ஓட்டப்பிடாரம் தொகுதியில் மிக குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளேன். எனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
ரூ. 200-க்கும் ரூ. 250-க்கும் வாக்குகளை வாங்கி வென்றிருப்பது ஜனநாயகத்துக்கு பேராபத்து என்றார் அவர். tamil.thindu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக