சனி, 28 மே, 2016

வைகோ விஜயகாந்த் மீது விடுதலை சிறுத்தைகள் கடும் அதிருப்தி...

மக்கள் நலக் கூட்டணி என்ற ஒன்று உண்மையில் இருந்ததா?' என்று சொல்லும் அளவுக்கு அதன் தலைவர்கள் திசைக்கொருவராய் பயணிக்கத் தொடங்கிவிட்டனர். ' வைகோவின் உணர்ச்சிவசப்பட்ட நாடகங்களும் விஜயகாந்தின் மேடை நாகரீகமில்லாத மேனரிசமும்தான் தோல்விக்குப் பிரதான காரணம்' எனக் கொந்தளிக்கின்றனர் வி.சி.க.வினர். சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் போட்டியிட்ட கட்சிகளிலேயே நல்ல வாக்குகளை வாங்கியது விடுதலைச் சிறுத்தைகள்தான். அவர்கள் போட்டியிட்ட பல தொகுதிகளில் இரண்டாம் இடம், மூன்றாம் இடம் என கணிசமான அளவுக்கு வாக்குகளைப் பெற்றுள்ளனர். காட்டுமன்னார் கோவில் தொகுதியில் வெறும் 87 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை நழுவவிட்டார் திருமாவளவன். தேர்தல் தோல்விக்குப் பிறகு, வி.சி.க.வின் 25 வேட்பாளர்களையும் அழைத்துப் பேசினார் திருமா. நேற்று முன்தினம் நடந்த இந்தக் கூட்டத்தில், அடுத்த அரசியல் நகர்வை நோக்கி நீண்ட நேரம் விவாதம் நடத்தியுள்ளார்.


இதைப் பற்றி நம்மிடம் விரிவாகப் பேசினார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில நிர்வாகி ஒருவர். " திராவிடக் கட்சிகளுக்கு மாற்று என்ற அரசியலுக்கான விதையை திருமாதான் முதலில் விதைத்தார். அந்த வகையில் இந்தத் தேர்தல் முடிவு எங்களுக்கு வெற்றிதான். ஏறக்குறைய 23 தொகுதிகளில் தி.மு.க.வின் வெற்றிவாய்ப்பு எங்களால் பறிபோயிருக்கிறது. தலித் வாக்கு வங்கியைத் தக்க வைத்திருக்கிறோம். மக்கள் நலக் கூட்டணி மக்கள் மத்தியில் எடுபடாமல் போனதற்கு முதல் காரணமாக நாங்கள் கருதுவது வைகோதான். ’தி.மு.க.வை வீழ்த்தவே ‘அ.தி.மு.க.-B டீம் போல வைகோ செயல்பட்டார்’ என்ற ஹேஷ்யங்களுக்கு எவ்வளவு முனைந்தும் எங்களால் விளக்கமளிக்க முடியவில்லை.  போதாதற்கு வைகோவும் அது தொடர்பான கேள்விக்கு எந்த விளக்கமும் சொல்லாமல் ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் இருந்து வெளியேறியது, அந்தக் கேள்வியைக் கேட்டாலே சீறுவது என அவரது செயல்பாடுகள் அனைத்தும் மக்கள் மத்தியில் எதிர்மறையான எண்ணத்தையே உருவாக்கியது. அந்த நேரத்தில் கூட்டணியின் மற்ற தலைவர்கள், இதை சரியாகக் கையாளவில்லை.

அதேபோல், பொதுக் கூட்டங்களில் விஜயகாந்த் நடந்து கொள்ளும் விதத்தால் பெரிய பாதிப்பு ஏற்பட்டது. ' ஒரு முதல்வர் வேட்பாளர் இப்படித்தான் இருப்பாரா?' என எள்ளி நகையாடும் அளவுக்கு அவருடைய பேச்சுக்கள் இருந்தன. 'வெள்ளந்தியாகப் பேசுகிறார்' என சப்பைக்கட்டு கட்டினாலும், அது வாக்குகளாகக் குவியவில்லை. விஜயகாந்த் தோல்வியே அதற்கு வலுவான ஆதாரம். இதைப் பற்றித்தான் திருமா எங்களிடம் நீண்டநேரம் பேசினார். ' எங்களை ஒதுக்கிவைத்தால்தான் கொங்கு மண்டலத்தில் ஓட்டு வாங்க முடியும்' என தி.மு.க நிர்வாகிகள் கணக்கு போட்டு எங்களை வெளியேற்றினார்கள்.
ஆனால், கொங்கு மண்டலத்தில் அனைத்துத் தொகுதிகளையும் தி.மு.க பறிகொடுத்துவிட்டது. இப்போது எங்களது வாக்கு வலிமையை தி.மு.க தலைமை உணர்ந்திருக்கும். தவிர, தேர்தலில் தலித் ஓட்டுக்களை மட்டுமே முழுவதுமாக எங்கள் வேட்பாளர்கள் வாங்கினார்கள். தலித் அல்லாதவர்கள் வாக்குகள் எந்த பூத்திலும் எங்களுக்கு விழவில்லை. தலித் வாக்கு வங்கியை தக்க வைத்திருக்கிறோம் என்பது இந்தத் தேர்தலில் நிரூபிக்கப்பட்டுவிட்டது" என்றவரிடம்,

"அடுத்து வரக் கூடிய தேர்தல்களில் திருமாவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்?" என்றோம். "ரொம்ப சிம்பிள். இனி மக்கள் நலக் கூட்டணியோடு தேர்தலைச் சந்திக்கும் முடிவில் தலைவர் இல்லை. உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணியாகப் போட்டியிடவும் ஆர்வம் காட்டவில்லை. அடுத்து வரக் கூடிய நாடாளுமன்றத் தேர்தல்தான் எங்களின் இலக்கு. பா.ஜ.க.வின் மதவாத எதிர்ப்பு அரசியலை நோக்கிச் செயல்படப் போகிறார் திருமா. சிதம்பரம், விழுப்பும், காஞ்சிபுரம் என நாங்கள் வலுவாக இருக்கும் மூன்று எம்.பி தொகுதிகளில் தேர்தல் வேலைகளைத் தொடங்க இருக்கிறோம். தொகுதிக்கு மூன்று லட்சம் வாக்குகளை உறுதி செய்ய வேண்டும் என்பதுதான் எங்கள் இலக்கு. நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் அணியில் நாங்கள் இடம் பெறவே வாய்ப்பு அதிகம். தி.மு.க.வும் இதையேதான் விரும்புகிறது. எம்.பி தேர்தலை நோக்கிய பயணத்தில் இருக்கிறார் திருமா" என்றார் உற்சாகத்தோடு.

'அரசியல் என்பது எதையும் சாதகமாக்கிக் கொள்ளும் கலை' என்பார்கள். மாற்றத்தை முன்வைத்து வி.சி.க வாங்கிய வாக்குகளின் பலனை நாடாளுமன்றத் தேர்தலில் அறுவடை செய்ய ஆயத்தமாகிவிட்டாரா தொல்.திருமாவளவன்!?விகடன்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக