சனி, 28 மே, 2016

ஓசூர்: நிலஅளவையாளர் வெட்டி கொலை.. 50 லட்சம் கப்பம் கேட்டு கொலை !

ஓசூர்: ரூ.50 லட்சம் பணம் கேட்டு ஓசூரில் கடத்தப்பட்ட நிலஅளவையாளர் (சர்வேயர்) சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். சேலம் அருகே காருடன் அவரது உடலை எரித்து விட்டனர். இதுதொடர்பாக ரியல் எஸ்டேட் அதிபர் போலீஸ் பிடியில் சிக்கியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் திரிவேணி கார்டன் பகுதியை சேர்ந்தவர் குவளைசெழியன் (42). ஓசூரில் நில அளவையாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி ரேவதி. குவளை செழியன் நேற்று காலை 11 மணியளவில் தனது காரில் அலுவலகத்துக்கு புறப்பட்டார்.


மதியம் ரேவதி செல்போனில் அவரை தொடர்பு கொண்டார். ஆனால் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனிடையே மாலை 4.30 மணியளவில், ரேவதியை தொடர்பு கொண்ட குவளை செழியன், ரூ. 50 லட்சம் பணத்தை தயார் செய்து வைக்கும்படி கூறி விட்டு இணைப்பை துண்டித்து விட்டார். அதிர்ச்சியடைந்த ரேவதி, ஓசூர் டவுன் போலீசில் புகார் அளித்தார். குவளைசெழியனை பணத்திற்காக கடத்தியிருக்கலாம் என சந்தேகம் அடைந்த போலீசார், உடனடியாக தீவிர விசாரணை மேற்கொண்டனர். ஓசூர் ஏஎஸ்பி ரோகினி பிரியதர்ஷினி, பாகலூர் இன்ஸ்பெக்டர் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

அலுவலக ஊழியர்களிடம் விசாரணை நடத்தியதில், குவளைசெழியன், அலுவலகத்திற்கே வரவில்லை என தெரியவந்தது. தொடர்ந்து நள்ளிரவு வரை, குவளை செழியனின் நண்பர்கள், உறவினர்களிடம் விசாரணை நடந்தது. முன்னதாக மாலை 6-7 மணி வரை குவளை செழியனின் செல்போன் ஆன் செய்யப்பட்டிருந்தது. அப்போது செல்போன் டவர் கிருஷ்ணகிரி என காட்டியதால், அங்கு சென்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.
ஓசூர் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வந்த நிலையில், சேலம் மாவட்டம் காரியாப்பட்டி அருகே உள்ள கே.என்.புதூர் பகுதியில் இன்று அதிகாலை கார் ஒன்று எரிந்த நிலையில் இருந்தது. அதன் அருகே உள்ள தோட்டத்தில் அரளி செடிகளுக்கு மத்தியில் மர்ம நபர் ஒருவர் பதுங்கியிருந்தார்.
அங்கு பூப்பறிக்க சென்ற பெண்கள், சந்தேகமடைந்து அக்கம் பக்கத்தினருக்கு தகவல் ெகாடுத்தனர். பின்னர் பொது மக்கள் திரண்டு வந்து, மர்ம நபரை பிடித்து தீவட்டிப்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், குவளை செழியனை கடத்தி கொலை செய்து, காருடன் உடலை எரித்தது தெரியவந்தது. இது குறித்து போலீசார் கூறியது: பிடிபட்டவர் சேலம் மாவட்டம் வெள்ளாளப்பட்டி பகுதியை சேர்ந்த சக்திவேல் (36). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரும், மேலும் 3 பேரும் சேர்ந்து நேற்று குவளை செழியனை ஓசூரில் இருந்து, அவரது காரில் கடத்தியுள்ளனர்.

பின்னர் குவளை செழியனின் தலை, கால், கை பகுதிகளை தனித்தனியாக வெட்டி கொலை செய்தனர். உடல் பாகங்களை சாக்கு மூட்டையில் போட்டு கொண்டு, அதே காரில் சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். அதிகாலை 4 மணியளவில், கே.என்.புதூர் பகுதியில் வந்தபோது, அங்கிருந்த பள்ளத்தில் கார் சிக்கி கொண்டது. காரை அவர்களால் எடுக்க முடியவில்லை. இதனால் 4 பேரும் குவளை செழியனின் சடலத்துடன், பெட்ரோல் ஊற்றி காரை எரித்தனர்.

அப்போது சக்திவேலுக்கு தீக்காயம் பட்டது. இதனால் அவரை அங்கேயே விட்டு விட்டு மற்ற மூவரும் தப்பியோடி விட்டனர். தப்பியோட முடியாமல், தோட்டத்தில் மறைந்து இருந்தபோது சக்திவேல் சிக்கி கொண்டார். பணத்திற்காக இந்த கொலையை அவர்கள் செய்துள்ளனர். வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என சக்திவேலிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர். தொடர்ந்து தப்பியோடிய மற்ற மூவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். dinakaran,com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக