சனி, 28 மே, 2016

சாரு நிவேதிதா : சீமானுக்கு ஒரு கடிதம்... வெறுப்பு அரசியல் வீணாக போய்விடும்

அன்புள்ள சகோதரர் சீமான் அவர்களுக்கு, வணக்கம். இந்தக் கடிதத்தை உங்களுக்கு நான் எழுதும் காணம், நீங்கள் மற்ற அரசியல்வாதிகளிலிருந்து தனித்து இருக்கிறீர்கள் என்பதுதான். முக்கியமாக எந்தப் பெரிய கட்சியுடனும் நீங்கள் சேரவில்லை. சேர்ந்திருந்தால் நாலைந்து சட்டசபை உறுப்பினர்களோடு கணக்கைத் துவக்கியிருக்கலாம். மேலும், உங்கள் தேர்தல் அறிக்கை தமிழ்நாட்டு நலனில் உண்மையிலேயே அக்கறை கொண்ட செயல்திட்டத்தைக் கொண்டிருந்தது.
ஆனால், உங்கள் கட்சியின் அடிப்படையான கொள்கையில் சில ஆபத்தான அம்சங்கள் உள்ளன. தமிழ்நாட்டைத் தமிழர்தான் ஆள வேண்டும் என்பது அதில் ஒன்று. உங்களுடைய பிரசாரங்களிலும் தெலுங்கு பேசுபவர்களை வந்தேறிகள் என்று உணர்ச்சிகரமாகச் சாடுகிறீர்கள். இளைஞர்கள் கை தட்டுகிறார்கள்.மேலும், பொதுவாகவே, உங்கள் பேச்சு வெறுப்பு என்ற எளிதில் பற்றக் கூடிய உணர்வை விசிறி விடுவதுபோல் இருக்கிறது. ஹிட்லருடைய பாணியும் இதே போலவே இருந்தது என்பதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா?

ஆவேசமான பேச்சு, நாட்டு நலன் என்ற நோக்கத்துக்காக ஒரு பொது எதிரியை உருவாக்குவது, குறுகிய பிராந்தியவாதம் (Parochialism) – இதெல்லாம் ஹிட்லரின் அடையாளங்கள்

;ஆனால், 2000 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தமிழன் போகிற போக்கில் ஒரு பாடலாகப் பாடினான். யாதும் ஊரே, யாவரும் கேளிர். எல்லா ஊரும் என்னுடைய ஊரே; எல்லோருமே என் உறவுக்காரர். அதுதான் நம்முடைய தமிழ் கலாச்சாரம். “தமிழ்நாட்டைத் தமிழர்கள் மட்டுமே ஆள வேண்டும் என்று மட்டுமே சொல்கிறோம். தெலுங்கர்கள் இங்கே வசிப்பதற்கு எந்தப் பிரச்சினையும் இல்லை,” என்று நீங்கள் சொல்லலாம். இந்த வாதமும் ஹிட்லரிடமே கொண்டு சேர்க்கும். இப்படி ஒவ்வொருவரையும் தெலுங்கர்கள், தமிழர், கன்னடியர். மலையாளி என்று பிரித்துக் கொண்டிருந்தால் அது எங்கே போய் முடியும்? கீழ்ச்சாதி ஆண் மேல்சாதிப் பெண்ணை மனந்தால் அவன் தலை அவனிடம் தங்காது. இன்னமும் தலித்துகள் கோயிலுக்குள் செல்ல முடியவில்லை. இன்னமும் இந்தியா முழுவதும் ஒரு மனிதர் அவர் சாதியால் மட்டுமே அடையாளம் காணப்படுகிறார். சாதிய ஒடுக்குமுறையும் படு மோசமாக இருந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தமிழர், தெலுங்கர் என்ற இனப்பாகுபாடும் தேவையா சீமான்?

மேலும் தமிழ்நாட்டுக்கு நீங்கள் நல்லது செய்ய வேண்டுமானால், அதை அன்பின் மூலமே செய்ய முடியும். வெறுப்பின் மீது கட்டமைக்கப்படும் போராட்டங்கள் சடுதியில் சரிந்து விழுந்துவிடுகின்றன. ஈழப் போராட்டம் அதற்கு ஒரு சாட்சி. சொல்லிக்கொண்டே போகலாம் சீமான். திமுக, அதிமுகவைச் சேர்ந்த குடும்பங்களைத் தவிர மற்றவர்கள் அந்த இரண்டு கட்சிகளுக்கும் மாற்று வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
இன்னும் ஐந்து ஆண்டுகளில் நீங்கள் அந்த மாற்றைக் கொடுக்க வேண்டுமானால், அதற்கு ஒரே வழிதான் இருக்கிறது. வெறுப்பை விட்டுவிட்டு அன்பின் பாதையைத் தேர்ந்தெடுங்கள். அதற்கான புளூபிரிண்ட் 1908 டிசம்பர் 14-ஆம் நாள், டால்ஸ்டாய் ஒரு இந்தியருக்கு எழுதிய கடிதத்தில் இருக்கிறது. இந்தக் கடிதம் காந்தியின் வாழ்வைத் தீர்மானித்த காரணிகளில் ஒன்று. இதில் டால்ஸ்டாய் சொல்கிறார்: “20 கோடி மக்களைக் கொண்ட இந்தியா என்ற மாபெரும் தேசத்தை, பிரிட்டனில் இருந்து வியாபாரம் செய்ய வந்த ஒரு சிறிய கம்பெனி அடிமைப்படுத்தியதாம். புத்தியுள்ள யாராவது இதை நம்ப முடியுமா? மனித குலத்தின் அடிப்படையாக விளங்கும் அன்பைப் புரிந்துகொள்ளாமல் நீங்களே வன்முறையில் வாழ்ந்தீர்கள். அதுதான் நீங்கள் அடிமைப்பட்டதன் காரணம்.

அந்தக் கடிதத்தை முழுமையாகப் படியுங்கள். பல குறள்களையும் அதில் அவர் மேற்கோள் காட்டுகிறார். அந்தக் கடிதத்தில் உங்கள் கட்சிக்கான செயல்திட்டம் இருக்கிறது. அதைச் செய்தால் அடுத்த பத்தாண்டுகளில் நீங்களே முதல்வர்.
;சாரு.
நன்றி: புதிய தலைமுறை, 2 ஜூன் 2016

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக