வியாழன், 19 மே, 2016

தேர்தல் முடிவுகள்... – பணம்தான் ரிசல்ட்...தந்தி டி.வி யின் பங்குச் சந்தை கருத்துக் கணிப்பு மோசடி !

pandey
தேர்தல் முடிவில் பாசிச ஜெயாவின் கன்டெய்னர் வெற்றி குறித்து எழுதுவதற்கு நிறைய இருக்கின்றன. இங்கே அந்த வெற்றியை தந்தி டி.வி பாண்டே கொண்டாடுவதில் உள்ள அழுகுணி ஆட்டத்தை மட்டும் பார்ப்போம்.
சுற்றுச் சூழல் என்.ஜி.ஓ அருண் கிருஷ்ணமூர்த்தியை வைத்து தந்தி டி.வி எடுத்திருக்கும் கருத்துக் கணிப்பு கிட்டத்தட்ட அப்படியே பலித்திருப்பதாக பாண்டேயும், அருணும் குதூகலிக்கிறார்கள். அநேர்மைக்கு புகழ்பெற்ற பாண்டே இந்த கணிப்பு நேர்மையாகவும், நடுநிலைமையுடனும் எடுக்கப்பட்டதாக மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார்.

சில நாட்களுக்கு முன்பாக நாளொன்றுக்கு பத்து தொகுதி வீதமும் பின்பு ஐ.பி.எல் ஃபைனல் நெருங்க நெருங்க இருபது முப்பது என்று விறு விறுப்பை கூட்டியது தந்தி டி.வி. அந்த நாட்களில் என்.ஜி.வோ கிருஷ்ணமூர்த்தி ஒவ்வொரு தொகுதியிலும் கடந்த கால வரலாறு, வாக்களிக்கும் பாணி, நிரந்தர பிரச்சினைகள், கட்சி சார்பு, சாதி, மதம் போன்ற சமூக பிரிவுகள், ஆளும் கட்சி குறித்த பார்வை, அந்தந்த வட்டார பிரச்சினைகள் என்று யோகேந்திர யாதவ் போலவே பொளந்து கட்டினார்.
இங்கே ஒரு உண்மையை பதிவு செய்வோம். தம்பி அருண் கிருஷ்ணமூர்த்தி, தந்தி பாண்டே போல முட்டாள்களையும் சந்தர்ப்பவாதிகளையும் மடக்கும் புத்திசாலியான முட்டாளோ, உளறுவாயரோ, கத்துபவரோ இல்லை. கண்டிப்பாக தான் சொல்வது முழு உண்மைதான் என்று நம்பவைக்ககூடிய ‘புத்திசாலி’தான். ஒரு முதலாளித்துவக் கல்வியின் அதிகபட்ச சாத்தியங்களோடு கொட்டிக் கிடக்கும் விவரங்களை பல்வேறு காம்பினேஷ்ன்களில் கூட்டிக் கழித்து வகுத்து பெருக்கி குறைந்த பட்சமாக கூட மக்களின் வாக்களிக்கும் திசையை யூகித்து சொல்லமுடியும் என்பதற்கேற்ப அவர் முயற்சி செய்கிறார். எனினும் இதை ஏதோ கணித சூத்திரம் போல மக்களின் மனங்களை அப்படியே படம்பிடித்துக் காட்டும் என்பதல்ல. அதனால்தான் இதை குறைந்த பட்சம் என்கிறோம்.
அநீதிகளை ஏற்றுக் கொண்டே ஆகவேண்டிய ‘நீதியாக’ முன்வைப்பது பாண்டேயின் உத்தி என்றால் அதே ‘நீதியை’ சமூகப் பொருளாதார விவரங்களாக மாற்றுவது அருண் கிருஷ்ணமூர்த்தியின் உத்தி.
இதில் அருண் கிருஷ்ணமூர்த்தி தொகுதி வாரியாக விளக்கமளிக்கும் போது குறிப்பிட்ட தொகுதியின் வெற்றி தோல்வி குறித்த பாண்டேவின் குறுக்கீடு அ.தி.மு.கவின் சாணக்கியத்தனமாகவோ இல்லை தி.மு.கவின் பரிதாபமான நிலையாகவோ புரிந்து கொள்ளலாமா என்று இருக்கும். ஆனால் அருண் கிருஷ்ணமூர்த்தி அப்படி விளக்குவதில்லை. அதே நேரம் முதலாளியான பாண்டேவின் மனம் புண்படக்கூடாது என்பதால் தலையாட்டிக் கொண்டு அமைதியாகி விடுகிறார். மேலும் இதில் அவர் சமரசமாக நடந்து கொள்வதில்லை பாண்டே போலவே நடந்து கொள்கிறார் என்பதை எளிதில் கண்டு பிடிக்க முடியாது. இதுதான் வேறுபாடு.
தந்தி டி.வி-யின் கருத்துக் கணிப்பு துல்லியமாக வெற்றி பெற்றிருப்பதாக இலையடிமை புதிய தலைமுறை மாலன் பாண்டேவுக்கு பாராட்டு மழை பொழிகிறார். ஆங்கில ஊடகங்கள் அஞ்சிய தமிழக தேர்தல் கருத்துக் கணிப்பை தைரியமாக ஏற்றுக் கொண்டு சரியாக கணித்திருப்பதாக தந்தி டி.வி பாண்டே மற்றும் அருண் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவர்களின் குழுவினருக்கு மாலன் பாராட்டுவது ஒரு அறிவுத் துறை சாதனையை பார்த்து வியந்து அல்ல. சாமர்த்தியமாக அ.தி.மு.க வெற்றியை கணித்திருக்கும் அந்த ‘திறமை’ மாலனது சொந்த மகிழ்ச்சிக்குரியது.
இனி இந்த கருத்துக் கணிப்பின் மோசடிக்கு வருவோம்.
தமிழகத்தின் சட்டமன்றத் தேர்தல்களில் தி.மு.கவும் அ.தி.மு.கவும் என இருமுனைப் போட்டிதான் பிரதானம் என்பதை அறிவதற்கு பெரிய அறிவு தேவையில்லை. மூன்றாவது அணி அ.தி.மு.கவின் பி டீம் என்பதாலாயே தந்தி புதிய தலைமுறை, குமுதம், தினமணி, தமிழ் இந்து போன்ற ஊடகங்கள் புரட்சி அண்ணிக்கு பெரிய கவரேஜ் கொடுத்தன. அடுத்து ஆளும் கட்சியை எதிர்த்து இங்கே எதிர்க்கட்சிகளோ இல்லை எதிர்க்கட்சிகள் அமைக்கும் கூட்டணியை வைத்து  ஆளும் கட்சியோ கூட்டணி அமைக்கவில்லை என்பதாலும் இங்கே அ.தி.மு.கவுக்கு ஆதாயம் என்பதை அறிவதற்கு பெரிய அல்லது சிறிய அறிவு தேவையில்லை.
விஜயகாந்தின் முடிவுக்கு தி.மு.க காத்திருந்ததைப் போலவே ஜெயலலிதாவும் காத்திருந்தார். தே.மு.தி.க மக்கள் நலக்கூட்டணிக்கு போனதால் தி.மு.கவுக்கு கிடைத்த பாதகத்தை விட அ.தி.மு.கிற்கு கிடைத்த சாதகம் அதிகம். இந்நிலையில் தொகுதிகளுக்கு போகிறார் அருண் கிருஷ்ணமூர்த்தி.
போனவர் மேற்கண்டவாறு அந்தந்த தொகுதிகளின் சமூக, பொருளாதார நிலைமைகளை அலசி ஆராய்கிறார். அந்த அலசலை தொகுத்து யாருக்கு வெற்றி, தோல்வி, இழுபறியா என்று முன்வைக்கிறார். இதுதான் நிரூபணமாயிருக்கிறது என்று பாண்டேவும், அருணும் குதுகலிக்கிறார்கள். எனினும் அ.தி.மு.கதான் அசுரப் பெரும்பான்மை பெறும் என்று அவர்கள் சொல்லவில்லை. அ.தி.மு.கவிற்கு  மார்ஜின் பெரும்பான்மை  எனுமளவுக்கு இடங்கள், தி.மு.கவிற்கு பெரும்பான்மைக்கு சற்று குறைவான இடங்கள், மீதி இழுபறி என்று நின்றார்கள்.
இதுவரை பார்த்த விசயங்கள் ஜெயலலிதாவுக்கும் தெரியும். இதற்கு மேல் தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும் ஒரு முக்கியமான விசயம் – அதன் அளவை ஜெயலலிதா மட்டும்தான் முடிவு செய்தார். அது பணம். எந்தெந்த தொகுதி பலவீனம், அவைகளுக்கு எவ்வளவு பணம், வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளுக்கு எவ்வளவு பணம், இது போக அந்தந்த தொகுதிகளின் அமைச்சர் வேட்பாளர்கள் அள்ளி விடும் பணம் – இவை குறித்து நமது மேதகு அருண் கிருஷ்ணமூர்த்தி வாயைத் திறக்கவே இல்லை. இவையெல்லாம் தேர்தல் முடிவுகளில் தாக்கம் செலுத்தாதா யுவர் ஆனார்?
தேர்தல் அரசியல் தமது வாழ்வை தீர்மானிப்பதில்லை என்பதைப் போலவே தேர்தலில் யாருக்கு வாக்களிக்கவேண்டும் என்ற கண நேர வேலைக்கு பணத்தை வைத்து முடிவு செய்வதும் மக்களிடையே நிலைபெற்றுவிட்டது. அ.தி.மு.க அளவு இல்லாவிட்டாலும் தி.மு.கவிலும் வேட்பாளர்களைப் பொறுத்து பணம் வினியோகித்ததாக நக்கீரன் இதழே தெரிவிக்கிறது. அ.தி.மு.க மையப்படுத்தப்பட்ட அளவின் பண வினியோகத்தை செய்திருக்கிறது. தி.மு.க அப்படி செய்யவில்லை என்றாலும் அந்தந்த வேட்பாளர்கள் அவர்களது வசதிகளுக்கேற்ப அதை ஏற்பாடு செய்து கொண்டார்கள்.
இதனால் தமிழக மக்கள் அனைவரும் பணத்திற்கு சோரம் போனார்கள் என்பதல்ல. 78% வாக்குகளில் முப்பது முதல் முப்பந்தைந்து சதவீதம் வரை வெற்றிக்கு போதுமானது. அதிலும் மும்முனை நாற்முனைப் போட்டி என்றால் வெற்றி சதவீதம் இன்னும் குறையும். இந்நிலையில் வெற்றி தோல்வியின் இடைவெளி என்பது 1 முதல் ஐந்து சதவீதம் என்றால் மொத்த தொகுதி மக்களில் அதாவது வாக்களிப்போரில் அதிகபட்சம் 20 சதவீதம் பேருக்கு பணம் கொடுத்தால் போதுமானது. அடுத்து இந்த பணத்தை அந்தந்த தொகுதிகளில் எந்தந்த பொருளாதார பிரிவினர், சாதியினர், ஆண், பெண் என்று முடிவு செய்ய வேண்டும். தற்போதைய நிலவரங்களின் படி அ.தி.மு.க மற்றும் தி.மு.கவின் வாக்கு வித்தியாசம் மூன்றிலிருந்து நான்கு சதவீதங்களுக்குள் இருக்கிறது.
தி.மு.க-விற்கு 38 என்ற அளவிலும், அ.தி.மு.க-விற்கு 42 என்ற அளவிலும் வாக்கு சதவீதம்  இருப்பதால் மீதம் இருபது சதவீதம் மற்ற கட்சிகளுக்கு போய்விட்ட படியால் வெற்றியைத் தீர்மானிக்கும் அந்த நான்கு சதவீத வாக்குகளையும் உள்ளடக்கி இருபது சதவீத வாக்குகளுக்கு குறி வைத்தால் போதும். அ.தி.மு.கவைப் பொறுத்த வரை இது முப்பதாகவும் இருக்கும். இத்தகைய நாற்முனைப் போட்டியில் சிதறும் வாக்குகளால் வெற்றியைத் தீர்மானிக்கும் அளவு குறைந்தால் அது வெற்றியைக் குறிவைத்து வீசப்படும் பணத்தின் இலக்கை கண்டுபிடிப்பதற்கு மிகவும் உதவியாகவே இருக்கும். ஆகவே பணம்தான் இந்த வெற்றியின் அடிப்படை என்பது வெள்ளிடை மலை.
அடுத்து அம்மா ஆட்சி நடைபெறும் காலத்தில், அம்மாவின் தேர்தல் ஆணையமே நீதிபதியாக இருக்கும் நேரத்தில் அ.தி.மு.கவினர் இதை திட்டமிட்டும், வெளிப்படையாகவும் செய்திருக்கிறார்கள். தி.மு.கவினரோ கொஞ்சம் பயந்து பயந்து செய்திருக்கிறார்கள். இது போக பல கிராமங்களில் மக்களே முடிவு செய்து ஊர் பஞ்சாயத்து நடக்கும் இடத்தில் மொத்தமாக வாங்கியிருக்கிறார்கள். சில இடங்களில் தடுக்க நினைத்த தி.மு.கவினரை விரட்டியும் இருக்கிறார்கள். வாய்ப்பிருக்கும் பட்சத்தில் இந்த உண்மைகளை நேரடி அறிக்கையாக தருகிறோம்.
இப்போது அருண் கிருஷ்ணமூர்த்தி தனது ஆய்வுகளில் இந்த அம்சத்தை புறக்கணித்திருப்பார் என்றா கருதுகிறீர்கள்? நிச்சயம் இல்லை. இல்லை பாண்டேவுக்கு இது தெரியாதா என்ன? இன்னும் சொல்லப் போனால் தந்தி நிர்வாகம் அ.தி.மு.கவிற்கு ஆதரவாக இருப்பதால் மன்னிக்கவும் அடிமையாக இருப்பதால் இந்த பண வினியோகம் எவ்வளவு இருக்கும், எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது புள்ளிவிவரங்களாகவே வந்து கொட்டியிருக்கவும் கூடும்.
ஆக மேற்கண்ட சமூக நிலைமைகளை ஆய்வும் செய்யும் அறிஞர் அருண் கிருஷ்ணமூர்த்தி இந்த வைட்டமின் ப குறித்தும் நிச்சயம் ஆய்வு செய்திருப்பார். ஒரு வேளை இந்த வைட்டமின் ஊழலுக்கு மக்கள் எவ்வளவு பலியாகியிருப்பார்கள் அல்லது மாட்டார்கள் என்று ஒரு குழப்பம் வரலாம். நல்லது, நேரடி விசாரிப்பில் ஒரு கிராமத்தின் பெரிய மனிதர்களிடம் இது குறித்து கேட்டால் முடிந்தது விசயம். இது போக பொதுவான அரசியல் சூழலிலேய ஊடகங்கள், நீதிமன்றம், போலீசு என அனைத்தும் ஊழல்மயமாக மாறியிருக்கும் போது மக்களில் கணிசமான பேரும் பணத்தை வைத்து ஓட்டுப் போடமாட்டார்கள் என்று முடிவு செய்யும் நிலைமை தமிழகத்தில் இல்லை. பாம்பின் கால் பாம்பறியும் போது பாண்டேவுக்கு மட்டும் தெரியாதா என்ன?
தற்போதைய நிலவரப்படி தி.மு.க நூறையும், அ.தி.மு.க நூற்றி முப்பதையும் எட்டி விட்டிருக்கிறது. இதன்படி அ.தி.மு.க பணத்தை அள்ளி வீசிய அளவிற்கு வெற்றி கிடைக்க வில்லை என்பதும் நிச்சயம். இதனால்தான் பாண்டே அருண் குழுவினர் கருத்துக் கணிப்பின் போது கொஞ்சம் அடக்கி வாசித்தார்கள். அந்த அளவுக்கு அவர்கள் கிரிமினாலாஜியில் தோய்ந்திருக்கிறார்கள், வாழ்த்துக்கள்! அதே நேரம் பணம் வாங்காத மக்களும் அரசியல் ஆய்வுகளோடு வாக்களிக்கிறார்கள் என்றால் அதுவும் அப்படி முழுமையாக நடப்பதில்லை.
சென்னையில் ஐ.டி நண்பர்களிடம் விசாரித்த போது படித்தவர்கள் வாக்களிக்கும் கதையைக் கேட்டால் மயக்கமே வரும். ஒரு நண்பர் குழு சீமானுக்கு வாக்களிப்பாதாக கூறினார்கள். சீமானின் கொள்கை என்ன என்று கேட்டால் தெரியவில்லை ஆனார் புதியவர் என்றார்கள். இறுதியில் தேர்தல் அன்று ஒரு நண்பரின் கல்யாணத்திற்கு செல்ல வேண்டியிருப்பதால் வாக்களிக்க இயலாது என்றார்கள். தரைத்தள வீடும் பொருட்களும் முழுகியவர் ஒருவர் இரட்டை இலைக்கு வாக்களித்தார். ஏனென்றால் எல்லாத் தேர்தலிலும் அந்தக் கட்சிக்கு வாக்களித்துத்தான் பழக்கம் என்றார். தி.மு.கவிற்கு வாக்களித்தாக சொன்னவர் சிலரும் இதையே கூறினார்கள். அதாவது இவையெல்லாம் ஒரு பழக்கம். இவை விடுத்து கொள்கை அடிப்படையில் வாக்களிப்போரின் சதவீதம் ஐந்து முதல் பத்திற்குள் இருந்தால் மிக அதிகம்.
சாரமாகப் பார்த்தால் நமது மக்கள், தேர்தலை கொள்கை, அரசியல், மாற்றம், பொருளாதாரம், உரிமை, ஜனநாயகம் போன்றவற்றில் இருந்து பார்த்து அலசி வாக்களிப்பதில்லை. கற்பனையாக அப்படி ஒரு நிலை வந்தால் கருத்துக் கணிப்புகள் இப்போது போல சுலபமாக நடத்த முடியாது. எனவே ஏழைகளாகவும், அரசியல் தற்குறிகளாவும், அடிமைகளாவும் வாழும் தமிழக மக்களிடம் பணம் எனும் காரணம் என்ன விளைவை ஏற்படுத்தும் என்பதறிய நாசா விஞ்ஞானியாக இருக்க வேண்டியதில்லை.
தந்தி டி.விக்காக கருத்துக் கணிப்பு எடுத்த அருண் கிருஷ்ணமூர்த்தி தமிழக மக்களிடம் பணம் குறிப்பாக அ.தி.மு.க பணம் ஏற்படுத்தும் மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்துவிட்டு அதிலிருந்து முடிவுகள் எடுத்துக் கொண்டே தனது மதிப்பீட்டை முன்வைத்திருக்க வேண்டும். ஆனால் விளக்கமளிக்கும் போது வைட்டமின் ப வை பேசாமல் வேட்பாளர் பலம், சாதி, மதம், பொருளாதாரம் போன்ற டீசன்டான விசயங்களை முன்வைத்தார். கள்ளச்சிரிப்புடன் அதை ஆமோதிக்கும் பாண்டேவுக்கும் தெரியும் – பணம்தான் ரிசல்ட் என்று! vinavu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக