ஞாயிறு, 22 மே, 2016

நான்கு பெண் முதலமைச்சர்கள் ... இந்தியாவின் நான்கு திசையிலும் ..மம்தா, ஜெயலலிதா,மெஹபூபா, அனந்தி பென் !

விகடன்.காம் :இந்தியாவின் நான்கு திசையிலும்  பெண் முதல்வர்கள் வீற்றிருக்கும் கம்பீரத் தருணம் இது. அந்த ஆளுமைகளின் வாழ்க்கையும் வெற்றித்துளிகளும் சுருக்கமாக இங்கு..!
மம்தா பேனர்ஜி, மேற்கு வங்க முதல்வர்
1955-ம் ஆண்டு ஜனவரி மாதம் 5-ம் தேதி, கொல்கத்தாவின் அந்த சராசரி பிராமணக் குடும்பத்தில், ப்ரமலீஸ்வர் பேனர்ஜி மற்றும் காயத்ரி தேவி தம்பதிக்கு பிறந்தவர், மம்தா பேனர்ஜி. அப்பா ஊட்டிய ஆர்வத்தில் அரசியல் ஆசை ஊற்றெடுக்க, 15 வயதில் அரசியல் பற்றியும், சட்டம் பற்றியும் பேசவும், தெரிந்துகொள்ளவும் ஆரம்பித்தார். கொல்கத்தாவின் ஜோஷ் சந்திர சதிரி சட்டக் கல்லூரியில் சட்டம் முடித்தார். படிக்கும் காலத்திலேயே காங்கிரஸ் கட்சியின் மாணவ அமைப்புக்குத் தலைவரானார். 1976 முதல் 1980 வரை மஹிலா காங்கிரஸில் பொதுச் செயலாளர் பதவியில் வலுவாகத் தடம் பதித்தார்.
2002-ல் காங்கிரஸ் கட்சியின் மீது கொண்ட அதிருப்தி காரணமாக திரிணாமுல் காங்கிரஸ் என்ற புதிய கட்சியை உறுதியுடன் தொடங்கிய மம்தா, ரயில்வே துறை அமைச்சர் ஆனார்.
2009-ம் ஆண்டு இரண்டாவது முறையாக ரயில்வே துறை அமைச்சராகத் தொடர்ந்தார். அந்தத் தேர்தலில், 19 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்வானார்கள். இதில், இவரையும் சேர்த்து 5 பேர் பெண்கள். இவரின் உத்தரவின் பேரில் தொடர் வண்டியான 'துரந்தோ எக்ஸ்பிரஸ்' இயக்கத்தை தொடங்கி மக்களிடையே மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றார். 2011-ம் ஆண்டு தேர்தலில் மற்ற கட்சிகளை காட்டிலும் மிகப்பெரும் வெற்றியை ஈட்டி, மேற்கு வங்கத்தின் முதல் பெண் முதல்வரானார்.
தன் ஆட்சியில் விவசாயத்துக்கும், விவசாயிகளுக்கும் முன்னுரிமை கொடுத்தார் மம்தா. தனியார் நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்டிருந்த 400 ஏக்கர் நிலத்தை அதன் உரிமையாளர்களான விவசாயிகளுக்கே திருப்பிக் கொடுக்க உத்தரவிட்டார். இது இவர் ஆட்சியில் அமர்ந்ததும் அமல்படுத்திய முதல் உத்தரவு. 2012-ம் ஆண்டு, பிப்ரவரி 16-ம் தேதி பில்கேட்ஸ், மம்தாவுக்கு, '‘கரைபடா கரங்களுக்கு சொந்தக்காரர், எந்த ஊழலிலும் சிக்காமல் மக்களுக்காகப் பாடுபடும் உலகின் முதல் அரசியல் பெண்மணி’ என்கிற பாராட்டுக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்தார்.

12 வங்க மொழிப் புத்தகங்கள், நான்கு ஆங்கில புத்தகங்கள் உட்பட, இதுவரை 16 புத்தகங்கள் எழுதியுள்ளார். எளிமை என்றால் அது மம்தாதான் எனும் அளவுக்கு, காட்டன் புடவையில் மட்டுமே காணக்கிடைப்பார். ஓய்வு நேரங்களில் ஓவியம் வரைவது மற்றும் கவிதைகள் படைப்பது இவருக்குப் பிடித்த பொழுதுபோக்கு. திருமணம் செய்துகொள்ளாமல், தனக்கென சொத்து எதுவும் சேர்க்க நினைக்காமல், 61 வயதில் அரசியலில் புயலெனப் பயணப்பட்டுக்கொண்டிருக்கும் மம்தா, 2016-ம் ஆண்டு மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளார். 10 வருடங்கள் தொடர்ந்து முதல்வர் என்கிற பெருமையையும் பெற்றிருக்கும் மம்தா, தனது பதவி ஏற்பு நாளுக்காகக் காத்திருக்கிறார்.

மெகபூபா முஃப்டி, ஜம்மு காஷ்மீரின் முதல் பெண் முதல்வர்

ஜம்மு காஷ்மீர் வரலாற்றில் முதல் பெண் முதல்வர், மெகபூபா முஃப்டி. 1959-ம் ஆண்டு மே மாதம் 22-ம் தேதி அக்ரன் நவ்போரா என்ற இடத்தில் பிறந்தவர். செல்வாக்கு மிகுந்த குடும்பப் பெண்ணான இவர், படிப்பிலும் திறமையிலும் படுகெட்டி. காஷ்மீர் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை முடித்தார். காங்கிரஸை மிகவும் நேசித்த தன் தந்தை முஃப்டி முகமது சயத்திடம் அரசியல் கற்றுக்கொண்டார். 1996-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பெண் வேட்பாளராக நின்று, மிகவும் கவனிக்கப்பட்டார். 
மெகபூபாவின் தந்தை 1989-ம் ஆண்டு உள்துறை அமைச்சராக பதவியேற்றபோது, மெஹபூபாவின் தங்கை ருபையா சயத் கடத்தப்பட்டு சில தினங்களுக்குப் பிறகே விடுவிக்கப்பட்டார். அப்போது தன் தங்கைக்காக பல ஊடகங்களுக்கு இவர் கொடுத்த துணிச்சலான பேட்டிதான், மக்களிடையே இவரை பிரபலமாக்கியது. தன் உறவினரான ஜேவ் இக்பாலை திருமணம் செய்து கொண்ட இவருக்கு லிட்டிஜா, இர்டிகா என இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் ஒருவர் லண்டனிலும், மற்றொருவர் சினிமாவிலும் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தான் வகித்து வந்த ஜம்மு காஷ்மீர் சட்டசபை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த மெகபூபா, ஶ்ரீநகர் நாடாளுமன்றத் தேர்தலில் 1999-ம் ஆண்டு போட்டியிட்டு, தோல்வியைத் தழுவினார். பின் 2002-ம் ஆண்டு நடைபெற்ற லோக் சபா தேர்தலில் தனக்கான வாய்ப்பைப் பெற்றார். தந்தை இறந்த சில மாதங்களுக்குப் பிறகு, 2016-ம் ஆண்டு ஏப்ரல் 4-ம் தேதி முதல் பெண் முதல்வராகப் பொறுப்பேற்று, மக்கள் பணியில் முழு வீச்சுடன் செயலாற்றிக்கொண்டிருக்கிறார்.

அனந்திபென் பட்டேல், குஜராத்தின் முதல் பெண் முதல்வர்

1941-ம் ஆண்டு நவம்பர்- 21-ம் தேதி குஜராத்தில் பிறந்தார் அனந்திபென் பட்டேல். இவருடைய தந்தை பள்ளி ஆசிரியர் என்பதால், ஆசிரியை கனவு இவருக்கு சிறு வயதிலிருந்தே இருந்தது. மற்றவர்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மை இயல்பிலேயே அமையப்பெற்ற இவரும், பிரதமர் மோடியும் ஒரே பள்ளியில் படித்தவர்கள். மேல்நிலைப் படிப்புக்காக அஹமதாபாத்தில் உள்ள ழி.வி மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்தபோது, மிகச்சிறந்த தடகள வீராங்கனையாக விளங்கி, விருதும் பெற்றார்.
1960-ம் ஆண்டு கல்லூரியில் சேர்ந்தபோது, அங்கு படித்த ஒரே மாணவி, அனந்திபென்தான். குஜராத்தைப் பொருத்தவரை சாதிக்கும் பெண்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்த இவர். கல்லூரிப் படிப்பை முடித்த கையோடு, தன் ஊரில் வசித்த கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு கல்விக் கற்றுத் தந்தார். அவர் சிறுவயதில் கண்டிருந்த கனவும் நனவானது. ஆம், அவர் நினைத்ததுபோலவே, பள்ளி ஆசிரியையானார்.
ஆசிரியையாகப் பணிபுரிந்தபோது, ஒருமுறை பள்ளி சுற்றுலாவுக்கு மாணவர்களை அழைத்துச் சென்றார் அனந்திபென். அந்தச் சுற்றுலாவில், இரண்டு மாணவர்கள் சர்தார் சரோவர் அணையில் தவறி விழ, சற்றும் யோசிக்காமல் உடனே அணையில் குதித்து அவர்களைக் காப்பாற்றினார். இந்த வீரதீரச் செயலுக்காக குடியரசுத் தலைவரின் கையால் விருது பெற்றார். பிறகு பள்ளியின் தலைமை ஆசிரியையானவருக்கு, அவரின் தைரியம் பா.ஜ.க கட்சியிலிருந்து அழைப்பு வரச் செய்தது. பா.ஜ.க.வில் சேர்ந்து, அரசியல் பிரவேசத்தை ஆரம்பித்தார்.
சீனாவில் நடந்த சர்வதேச பெண்கள் கருத்தரங்கில், இந்தியாவின் ஒரே பிரதிநிதியாகக் கலந்துகொண்டார் அனந்திபென். தேசிய ஒருமைப்பாட்டுக்காக கட்சி களமிறங்கியபோது, குஜராத்திலிருந்து கலந்துகொண்ட ஒரே பெண் இவர்தான். 1962-ம் ஆண்டு, மே 29-ம் தேதி  மடஃபாய் பட்டேலுக்கும், இவருக்கும் திருமணம் நடைபெற்றது.  இவர்களுக்கு சஞ்சய், அனார் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இவருடைய கணவர் குஜராத்தின் கலைக் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
குஜராத்தின் குடிநீர் பிரச்னையை தீர்க்கும் வகையில் அனந்திபென் எடுத்த நடவடிக்கைகள் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பள்ளிக் கல்வித்துறையிலும் இவர் கவனம் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் ஒவ்வொரு சாதனைகளுக்கும் விருது தேடிவந்தது. 1987 முதல் 2005 வரை பள்ளியில் வீர்பாலா விருது முதல் அரசியலில் குதித்த பிறகு என இதுவரை  7 விருதுகளை பெற்று மற்றவர்களுக்கு முன் உதாரணமாகச் செயல்பட்டு வருகிறார் அனந்திபென் பட்டேல்.
ஜெ.ஜெயலலிதா, தமிழ்நாட்டின் முதல் பெண் முதல்வர்
1948-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி மைசூரில் ஜெயராம், வேதவள்ளி தம்பதிக்குப் பிறந்தார், ஜெயலலிதா. மைசூர் நீதிமன்றத்தில் அரச மருத்துவராக பணியாற்றினார் இவருடைய தாத்தா. மைசூர் மன்னர் ஜெயசாம ராஜேந்திரா உடையார் அவர்களின் சமூக இணைப்பைப் பிரதிபலிக்கும் விதமாக, தனது குடும்ப உறுப்பினர்களின் பெயர்களில் முன்னோட்டாக ‘ஜெயா’ என்று சேர்த்தார் இவருடைய தாத்தா.
 ஜெயலலிதா தனது இரண்டு வயதிலேயே தன் தந்தையை இழந்தார். பிறகு, அவரின் அம்மா மற்றும் தாய்வழி தாத்தா -பாட்டி வாழ்ந்த பெங்களூருக்குச் சென்றார். பெங்களூருவில் தங்கியிருந்த அந்தக் குறுகிய காலத்தில், சில ஆண்டுகள் ‘பிஷப் காட்டன்’ பெண்கள் உயர்நிலை பள்ளியில் கல்வி பயின்றார். வெள்ளித்திரை வாய்ப்புக்காக சென்னை வந்தார். சென்னை, சர்ச் பார்க் ப்ரேசன்டேஷன் கான்வென்ட்டில் தனது கல்வியைத் தொடர்ந்த இவர், பின்னர் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் பட்டப்படிப்பில் சேர்ந்தார். ஆனால் சினிமா வாய்ப்பால், அதைக் கைவிட்டார்.
படிப்பில் கெட்டியான ஜெயலலிதாவுக்கு, சட்டம் படிக்க ஆசை. ஆனால், காலம் அவருக்கு வேறு திட்டங்கள் வைத்திருந்தது. ஷங்கர்.வி.கிரி இயக்கிய ‘எபிஸில்’ ஆங்கிலப் படம் மூலமாக தனது திரையுலக வாழ்க்கையைத் தொடங்கினார். ஆனால், அப்படம் எதிர்பார்த்த அளவுக்குப் பாராட்டுப் பெற்றுத் தரவில்லை. திரையுலகில் அவருக்கென்று ஒரு தனி இடத்தைக் கொடுத்தது, 1964-ல் வெளியான ‘சின்னடா கொம்பே’ என்ற கன்னடப் படம். ஒரு வருடம் கழித்து, ‘வெண்ணிற ஆடை’ படம் மூலமாக தமிழ் திரையுலகில் தன் நடிப்பைத் தொடங்கினார்.
அரசியலில் சேரும் முன் தனது திரை வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளிவைக்க அவர் நடித்த கடைசி படம், மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பில் 1980-ல் வெளியான ‘நதியைத் தேடி வந்த கடல்'. அதே ஆண்டில், அ.தி.மு.க நிறுவனரான எம்.ஜி.ராமச்சந்திரன், ஜெயலலிதாவை பிரசார செயலாளராக நியமித்தார். நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர், அவர் மாநிலங்களவைக்கு நியமிக்கப்பட்டார். அ.தி.மு.க.வின் எதிர்கால வாரிசாக, ஊடகங்களை மதிப்பிடச் செய்யும் அளவுக்கு அரசியலில் தன் ஆளுமையை பதித்தார்.
எம்.ஜி.ஆரின் மரணத்துக்குப் பின், ஜானகி ராமச்சந்திரனை அ.தி.மு.க.வின் அடுத்த தலைவராக சில கட்சி உறுப்பினர்கள் பரிந்துரைத்தனர். இதன் காரணமாக கட்சி இரண்டாகப் பிரிந்தது. ஒன்று ஜானகி ராமச்சந்திரன் தலைமையிலும், மற்றொன்று ஜெயலலிதா தலைமையிலும். இறுதியில், ஜானகி ராமச்சந்திரன் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். 1989-ல், அ.தி.மு.க கட்சி ஒன்றுபட்டு, ஜெயலலிதா தலைமையில் செயல்பட்டது. தளராத தன் அரசியல் போராட்டத்தால், நான்காவது முறையாக (1991, 2001, 2011, 2016) தமிழக முதல்வராகியிருக்கிறார்.
திருமணம் செய்துகொள்ளாமல் பொதுவாழ்வில் செயல்பட்டுவரும் ஜெயலலிதா, எம்.ஜி.ஆருக்குப் பிறகு 10 வருடங்கள் தொடர்ந்து தமிழகத்தை ஆளும் பெருமையைப் பெற்றிருக்கிறார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக