வெள்ளி, 8 ஏப்ரல், 2016

அழகிரி....ஆடிய பாதங்களும் பாடிய வாயும் ஒய்ந்திடல் கூடுமோ? அதாங்க அஞ்ச நெஞ்சன் மீண்டும் ஆக்டிவ்!

அழகிரி ஆக்டிவ் திரைமறைவில் இருந்தபடி, தி.மு.க.,வில் அழகிரி, 'ஆக்டிவ்' ஆக செயல்படுவது தெரியவந்துள்ளது. 'தில்லுமுல்லு கட்சி' எனக் கூறிய பிரேமலதாவுக்கு, முதல் ஆளாக பதில் சொன்னதாகட்டும்; கருணாநிதியை அவதுாறாக பேசிய வைகோ கொடும்பாவியை கொளுத்தியதாகட்டும், அழகிரி ஆட்டம் ஆரம்பமாகி உள்ளதையே காட்டுகிறது.
கட்சியை விட்டு நீக்கப்பட்டிருந்தாலும், கட்சி விவகாரங்களில், அழகிரி அடிக்கடி மூக்கை நுழைக்கிறார் என்பது, தி.மு.க.,வினருக்கு தெரியாதது அல்ல. இவ்வளவு நாளும், 'தே,மு.தி.க.,வுடன் சேர்ந்தாலும், தி.மு.க., ஜெயிக்காது' என, திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்த அழகிரி, சமீபத்தில், அப்பாவை சந்தித்த பிறகு, ஆக்டிவாக செயல்பட துவங்கி
இருக்கிறார் என்கிறது, அறிவாலய வட்டாரம்.


சென்னை, ஈஞ்சம்பாக்கம், பீச் பங்களாவில், கடந்த ஒரு வாரமாக, குடும்பத்தினருடன் அழகிரி முகாமிட்டுள்ளார். தம்பி தமிழரசு மணிவிழா அழைப்பு காரணமாக, சென்னை வந்தவர், சும்மா இருக்காமல், உள்கட்சி விவகாரங்களை கையில் எடுத்து, வேகமாக செயல்பட துவங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது. அதில் ஒன்று, கொடும்பாவி எரிப்பு. தலைமை அறிவிப்பதற்கு முன், தந்தைக்காக இவர் நடத்திய போராட்டம், தி.மு.க.,வில், திடீர் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதிலும், லோக்சபா தேர்தலில், ஸ்டாலின் மீதான கோபம் காரணமாக, யாரை வீட்டுக்கு அழைத்து பேசினாரோ, அதே வைகோவின் கொடும்பாவியை கொளுத்த, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள, தன் ஆதரவாளர் களுக்கு உத்தரவிடுவதை பார்த்து, ஸ்டாலின் ஆதரவாளர்களே விக்கித்துப் போய்
உள்ளனர்.

இவரது ஒரு உத்தரவுக்காக, மதுரையில் மன்னன் தலைமையில், 300 பேர் திரண்டு வந்து, வைகோ உருவபொம்மையை எரித்துள்ளனர். தேனியில் நாகேந்திரன், போடியில் சண்முகம், அலங்காநல்லுாரில் மதுரை வீரன், மேலுாரில் ராஜேந்திரன் என, தென் மாவட்ட ஆதரவாளர்களை, ஒரே நாளில் உசுப்பி விட்டதும், 'தென் மாவட்டத்தில், வைகோ நுழைய முடியாது' என்ற அவரது ஆட்களின் பகிரங்க மிரட்டலும், வைகோவை மன்னிப்பு கேட்க வைத்துவிட்டது.

அதை, அறிவாலயத்தில் உட்கார்ந்து, சரவண பவன் வடையும், காபியும் சாப்பிட்டபடியே, ஸ்டாலின் ஆட்களே சொல்வது தான், அழகிரியின் அதிரடி அரசியலுக்கு கிடைத்த வெற்றி. இதில், கருணாநிதிக்கும் மிகுந்த மகிழ்ச்சி.

'வைகோ விவகாரத்தில், தி.மு.க., பேச்சாளர்கள், நாவை அடக்கி பேச வேண்டும்' என, கருணாநிதி அறிக்கை வெளியிட்டது, அந்த மகிழ்ச்சி செய்த வேலை தானாம். அழகிரியின் ஆக்டிவ் அரசியலை பார்த்து, அவரது ஆதரவாளர்கள் பூரித்து போயுள்ளனர்.அவர்கள் கூறியதாவது:

கடந்த, 1993ல் தி.மு.க.,வை உடைத்து, ஒன்பது மாவட்ட செயலர்களுடன் வைகோ வெளியேறியபோது, தென் மாவட்ட தி.மு.க.,வுக்கு சேதாரம் நிகழாமல் பார்த்துக் கொண்டது, அழகிரி தான்.

வைகோவுடன் சென்ற பொன்.முத்துராமலிங்கம், சங்கரன்கோவில் தங்கவேலு போன்றவர் களை, மீண்டும் தி.மு.க.,விற்கு அழைத்து வந்ததும், அவர் தான். அ.தி.மு.க.,வில் செல்வாக்கு பெற்ற சாத்துார் ராமச்சந்திரன், அனிதா ராதாகிருஷ்ணன், கருப்ப சாமி பாண்டியன், தென்னவன் போன்றவர் களையும், தி.மு.க.,வுக்கு இழுத்தார்.
அப்படிப்பட்டவர் மட்டும், இன்று கட்சியில் இருந்திருந்தால்,தே.மு.தி.க.,வை உடைக்கும் நிலைமையே வந்திருக்காது. விஜயகாந்தை எப்படி வழிக்கு கொண்டு வர வேண்டும் என்ற ரகசியம் தெரிந்தவர்; அந்த, 'ரூட்'டில் போய், கச்சிதமாக முடித்திருப்பார். அப்படியே, அந்த கட்சியை உடைக்க வேண்டிய கட்டாயம் வருமேயானால், அதையும் அவர் ஸ்டைலில் செய்திருப்பார். அவ்வளவு ஏன்... மக்கள் நலக் கூட்டணி என்ற ஒன்றே உருவாகாமல் பார்த்திருப்பார்!
இரண்டு நாட்களுக்கு முன் ஸ்டாலின் பேச்சு காரணமாக, கோபத்தில் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி வெளியேறி விட்டார். கூட்டணியில் இருந்து விலகும் நிலையில் இருந்தார். அவரிடம் பேசி, மீண்டும் கூட்டணிக்கு வர செய்திருக்கிறார். ஒரு பக்கம் வைகோவுக்கு எதிராக போராட்டத்தை துாண்டினார்; மறுபக்கம் ம.ந.கூ., தலைவர்கள் ஒவ்வொருத்தருடனும் பேசினார். வைகோவுக்கு எதிராக, அவர்களை திருப்பி விட்டதே அழகிரி தான்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

'ஆப்பரேஷன் வி' தோல்வி?:'ஆப்பரேஷன் வி' என்ற பெயருடன், தே.மு.தி.க.,விற்குள்ளேயே பெரும் புயலை உருவாக்கியதன் பின்னணியில், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் அடையாளப்படுத்தப்படுகிறார்.

தே.மு.தி.க.,வில் இருந்து புயலாக புறப்பட்டு வந்த சந்திரகுமார் உள்ளிட்டவர்கள் தற்போது, கடும் சிக்கலில் சிக்கித் தவிப்பதாக கூறப் படுகிறது. விஜயகாந்த் மீது குற்றம்சாட்டி வெளியே வந்தவர்களை, ஸ்டாலின் பெரிய அளவில் அரவணைக்காததால், அவர்கள் திக்கு தெரியாமல் நிற்பதோடு, தே.மு.தி.க.,வின் உடைப்பு வேலையை பெரிய அளவில் அவர்கள் செய்ய முடியாமல் போய்விட்டது.
இந்த ஆப்பரேஷனுக்குப் பின்னணியில், ஸ்டாலினுக்கு பதிலாக அழகிரி இருந்திருந் தால், இப்படிப்பட்ட தோல்வி கிடைத்திருக்காது என, தே.மு.தி.க., அதிருப்தி வட்டாரங்களில் இருந்தே அதிருப்தி கிளம்பி இருப்பதாக கூறப்படுகிறது. - நமது நிருபர் -  dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக