வியாழன், 7 ஏப்ரல், 2016

சினிமாவுக்குப் போன ஜெயகாந்தன்....பிரபலமடையவோ பொருள் ஈட்டவோ சினிமாவுக்கு வந்தவர் அல்லர்


அம்ஷன் குமார்: சினிமா எவ்வாறு தமிழ்ச் சமூகத்தைச் சீரழிக்கிறது என்பது பற்றி ஒரு தலைமுறைக்கே அது குறித்த எண்ணங்களைத் தோற்றுவித்த ஆசானாக விளங்கினார் ஜெயகாந்தன்.
ஜெயகாந்தன் எழுத வந்த காலத்தில் தமிழில் பத்திரிகை உலகும் சினிமா உலகும் பெரும் தொழில் நிறுவனங்களாக ஆகிவிட்டிருந்தன. பல இலக்கிய எழுத்தாளர்கள் மக்களிடையே செல்வாக்குப் பெற்ற பெரும் பத்திரிகைகளில் தங்கள் படைப்புகளை வெளியிட்டனர். நாவல்கள், கதைகள் மட்டுமின்றி கட்டுரைகளும் அவற்றில் வந்தன. இலக்கியச் சிறப்பு மிக்க உ.வே.சாமிநாத அய்யரின் சுயசரிதை ‘என் சரித்திரம்‘ ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்தது என்பது இன்று பலருக்கும் வியப்பினைத் தரக்கூடும்.
இலக்கிய எழுத்துக்கும்  பத்திரிகை எழுத்துக்கும்  இடைவெளி இருந்தும் கூட ஜெயகாந்தன் போன்ற ஒரு எழுத்தாளர் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்த பத்திரிகைகளில் எழுதிப் புகழ்பெற முடிந்தது. ஆனால் அவரைப் போன்றவர்கள் சினிமாவில் நுழைந்து அதே சுதந்திரத்துடன் பணியாற்றுகிற நிலையில் சினிமா இருக்கவில்லை.
ஜெயகாந்தனின் கதைகளைப் படிக்கும்பொழுதெல்லாம் அவர் சினிமாவிற்கு மிகவும் நெருக்கமானவர் என்கிற எண்ணமே மேலோங்கும். அவர் சினிமாவைக் கதைகளாக எழுதிவிட்டார். வாக்கியம், வார்த்தைகள் என்றெல்லாம் பார்ப்பதோடு அவரது எழுத்துகளை க்ளோஸ்-அப், லாங் ஷாட் என்றெல்லாம்கூட சுலபமாகப் பார்க்க முடிகிறது. அவரது யதார்த்தம் காட்சி யதார்த்தம். அவரது கதைகளைப் படிப்பது சினிமா பார்ப்பது போன்றது. பல சினிமா உத்திகளை அவரது கதைகளில் காணமுடியும். ப்ளாஷ் பேக் உத்தி இல்லாமல் அவர் எழுதுவதில்லை. இந்த இடத்தில் இருந்து’ சிறுகதை கேமரா கோணங்கள் வாயிலாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்‘ நாவலின் முடிவு சினிமாவின் உறைநிலை (freeze) உத்தியைக் கொண்டிருக்கிறது. ‘ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம்’ நாவலைப் பேனா எழுதவில்லை, கேமராதான் எழுதி இருக்கிறது என்று சொல்வது சற்றும் மிகைப்படுத்தல் அல்ல. ‘கோகிலா என்ன செய்துவிட்டாள்’ கதையில் ஓடிக்கொண்டிருக்கும் ரயிலுடன் ஓடி வரும் கோகிலாவை அவளது கணவன் தாவி உள்ளே இழுத்துக் கொள்ளும் செயல் சினிமாவிற்கே உரித்தான கணம். அதனாலேயே நேரடியான பாதிப்பாக அந்தக் காட்சி கணக்கிலடங்காத படங்களில் இடம் பெற்றது.
வெகுஜன சினிமா பற்றி ஜெய காந்தனுக்கு நிறைய விமர்சனங்கள் இருந்தன. அவரைப் போல் தமிழ் சினிமாவையும் தமிழ் சினிமா உலகையும் கடுமையாக விமர்சித்த தமிழ் எழுத்தாளர் இதுவரை எவரும் இல்லை. பத்திரிகைகளில், மேடைகளில், ‘சினிமாவுக்கு போன சித்தாளு’ கதையில் சினிமா எவ்வாறு தமிழ்ச் சமூகத்தைச் சீரழிக்கிறது என்பது பற்றி ஒரு தலைமுறைக்கே அது குறித்த எண்ணங்களைத் தோற்றுவித்த ஆசானாக விளங்கினார் ஜெயகாந்தன். எவரையும் அவர் தனிப்பட்ட முறையில் தாக்கியதில்லை. அதனாலேயே அவரது விமர்சனங்களுக்கு உள்ளாகிற படங்களை எடுப்பவர்கள்கூட அவரிடம் நட்பும் மரியாதையும் பாராட்டி வருகிறார்கள். தமிழ் சினிமா பற்றி விமர்சித்த அதே நேரத்தில் அவர் உலக சினிமா பற்றிய அறிவை வளர்த்துக் கொண்டிருந்தார். பிற நாட்டு இலக்கியங்களைத் தெரிந்து கொண்டதுபோன்று பிற மொழிப்படங்கள் பற்றிய பரிச்சயம் அவருக்கு ஏற்படத் துவங்கியது. ‘நல்ல சினிமா என்பது நல்ல புத்தகம் போல என்பது என் கருத்து! நல்ல படங்களைப் பார்த்துத்தான் படம் சம்பந்தப்பட்ட என் அறிவை வளர்த்துக் கொண்டேன். எனது அறிவு புத்தகங்கள் படித்து வந்தது இல்லை. எனது இளமைக் காலம் படங்களின் யுகமாக இருந்தது. ஆனால் தமிழ் சினிமா அன்றும் இன்றும் அதே கீழ்நிலையிலேயே இருக்கிறது. நமது சரித்திரப் பெருமையையோ, நமது மண்ணின் கலாச்சாரப் பெருமையையோ அவை எடுத்துச்சொல்ல முன் வந்தது இல்லை. அதைப் பற்றி நமது தமிழ் சினிமா ஏதாவது பேசியிருக்குமேயானாலும், அவை வெற்றுப் பம்மாத்துக்களாகவே இருக்கின்றன, என்று ஜெயகாந்தன் தன் சினிமா அறிவு பற்றியும் தமிழ் சினிமா பற்றியும் கூறினார்.
அவரது நண்பர்களின் வற்புறுத்தலின் பேரில் அவருக்கு சினிமா எடுக்கும் எண்ணமும் தோன்றியது. சத்யஜித் ரே போன்றவர்கள் எடுத்த கலைப்பட பாணியில் ஒரு படத்தை எடுப்பது என்று அவர் முடிவு செய்தார். அத்தகைய படம் கீழான ரசனையை மக்களிடம் உண்டுபண்ணும் தமிழ்ப் படங்களுக்கு மெய்யாகவே ஒரு மாற்றாக விளங்கும் என்று கருதினார். அவர் தனது ‘உன்னைப் போல் ஒருவன்’ நாவலை எடுத்துக் கொண்டு அதற்குத் திரைக்கதை அமைத்தார். நாவலில் வருபனவற்றில்  எவற்றை சினிமாவுக்குக் கொண்டு வரலாம், எவற்றை நீக்கலாம் என்கிற வகையிலும் காட்சி ஊடகத்திற்கு ஏற்றாற்போல் என்ன மாதிரியான காட்சிகளை உருவாக்கலாம் என்பன பற்றியெல்லாம் அவர் ஆழ்ந்த கவனம் கொண்டிருந்ததை நாவலையும் படத்தையும் ஒப்பிடுவதன் மூலம் நாம் அறிந்து கொள்ள முடியும்.
நகர்ப்புற சேரி மனிதர்களைப் பற்றிய கதை ‘உன்னைப் போல் ஒருவன்.’ சித்தாள் வேலை செய்பவள் தங்கம். அவளுக்கு சிட்டிபாபு என்கிற பன்னிரெண்டு வயது மகன். ஓடிப்போய்விட்ட அவனது அப்பாவை அவன் பார்த்ததில்லை. பிற சேரி சிறுவர்களுடன் அலைந்து துண்டு பீடி குடிக்கும் நிலையிலுள்ள சிட்டியை ஒரு ஐஸ்கிரீம் கம்பெனி முதலாளி சீர்திருத்துகிறார். தொண்டர் என்று அறியப்படும் அவரைத் தெய்வமாகப் போற்றுகிறான் சிட்டி. எதிர்பாராதவிதமாக ஒரு குருவி ஜோஸ்யக்காரனுடன் ஏற்படுகிற பரிச்சயம் தங்கத்தினிடம் காதலாக மலர்கிறது. அவனைத் தன் குடிசைக்கு அழைத்து வருகிறாள். சிட்டியால் இந்த உறவை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவன் மிகுந்த மனஉளைச்சலுக்கு உள்ளாகிறான். அவளது புதிய உறவு தனக்கு அவமானத்தை விளைவித்துவிட்டது என்று அவன் கருதியதால் தொண்டரைச் சென்று பார்க்கும் துணிவையும் இழக்கிறான். தாயும் மகனும் படும் துயர்களைக் காணச் சகியாத குருவி ஜோஸ்யக்காரன் அவர்களை விட்டு சென்று விடுகிறான். தங்கம் அவன் மூலம் ஒரு பெண் குழந்தைக்குத்தாயாகிறாள். கடைசிவரை சிட்டியின் அன்பைப் பெற முடியாமல் போன தங்கம் அப்பிரசவத்தில் இறந்து போகிறாள். குருவி ஜோஸ்யக்காரன், தனது தாய் ஆகியோரைக் காலம் தாழ்த்தி மன்னிக்கும் சிட்டி தனது தங்கையைப் பாசத்துடன் ஏற்றுக் கொள்கிறான்.
அதே பாத்திரங்கள், அதே நிகழ்வுகள் படத்திலும் வருகின்றன. படத்திற்கேற்றாற்போல் கதை நிகழ்வுகள் அமைக்கப்பட்டுள்ளன. படத்தில் ப்ளாஷ் பேக் கிடையாது. நாவலில் உண்டு. நாவலில் இல்லாத சில நிகழ்வுகள் படத்தில் உண்டு. அவை படத்தை வேறொரு தளத்திற்கு எடுத்துச் செல்கின்றன. உதாரணமாக, நாவலில் தாய் இறந்தவுடன் சிட்டி அழுவதில்லை. பின்னொரு வேளைக்கு அதை ஒத்திப் போடுகிறான். சேரியிலுள்ளவர்கள் வீடுகளுக்கு வெளியே படுத்துறங்குகிற பொழுது கனவிலிருந்து திடீரென விழித்தவன் போன்று சிட்டி எழுந்தமர்ந்து அம்மா ஞாபகம் மேலிட அழுகிறான். படத்தில் இரவு வேளைகளில் தெருவில் ஐஸ்கிரீம் வண்டிக்காரன் வருவான். அவனுடைய ‘ஒரிணா ஒன்றிணா பால் ஐஸ்’ என்னும் கூவ லைக் கேட்டவுடன் தங்கத்திடம் சிட்டி காசு வாங்கிப் போய் ஐஸ்கிரீம் வாங்குவான். இரண்டாம் முறை குருவி ஜோஸ்யக்காரன் தங்களுடன் இருக்கும்பொழுது அதே ஐஸ்கிரீம் வண்டி வரும். ஆனால் சிட்டி தன் தாயிடம் சொந்தம் கொண்டாட விரும்பாது தூங்குவது போல் படுத்திருப்பான். மூன்றாம் முறை தாயை இழந்தபின் அந்த வண்டி வரும்பொழுது அவனுக்கு ஐஸ்கிரீம் தொடர்பாக அம்மாவின் நினைவு வந்து அழுவான்.
சில நிகழ்ச்சிகள் படத்தில் இல்லை. முக்கியமாக சிட்டியின் நண்பன் கன்னியப்பனைப் பற்றிய ஒன்று. கன்னியப்பனுக்கு பதினான்கு வயது. ஆனால் அவனுக்கு வி.டிநோய் வந்து விடுகிறது. அவனைப் பரிசோதிக்கும் டாக்டர் அதிர்ச்சிக்குள்ளாகிறார். அவனுக்குக் கட்டுப்போடும் கம்பவுண்டர் அவனைத் தன் மகன் போன்று நினைத்து வேதனை தாங்காது அத்தகைய கொடூரத்திற்குப் பலியான அவனை அடிக்கிறார். அதைப் பொறுத்துக் கொள்ளாத டாக்டர் கம்பவுண்டரிடம் கூறுகிறார்: ‘உம்ம பையனா இருந்தாலும் அவனை அடிச்சு என்ன பிரயோசனம்? விப ரீதமா வளர்த்து விஷத்தைக் கக்கி பளபளப்பா நெளியற இந்த சமூகத்தை அடிக்கணும்.’ இந்தக் காட்சிகள் படத்தில் இல்லை. இல்லை என்பதால் படத்தை அதன் போக்கில் ரசிப்பதற்கு எவ்வித இடையூறுகளும் இல்லை.
ஆனால் இக்காட்சிகள் இடம் பெற்றிருந்தால் தமிழ் சினிமா யதார்த்தவாதம் ஒரு புதிய பரிமாணத்தை அடைந்திருக்கும். தணிக்கைக் குழுவினரிடமிருந்து இந்தக் காட்சிகள் தப்பாது என்று நினைத்து இயக்குநர் முன்னதாகவே சுய தணிக்கை செய்துகொண்டுவிட்டார் என்று நம்புவதற்கு இடமிருக்கிறது.
படம் பல தரப்பினராலும் பாராட்டப்பட்டது. ஜெயகாந்தன் ஒரு கம்யூனிஸ்டு என்று அறிவிக்கப்பட்டிருந்த காலத்திலும் அவரது படைப்புகள் கட்சி முன்வைத்த இடதுசாரி அரசியலைப் பேசியதில்லை. வரையறைக்குட்படாத இடதுசாரி அவர். எனவே அவர் அதற்கெல்லாம் அப் பால் சென்று மனிதர்களின் பொதுப் பண்புகள் பற்றியே  ஆய்ந்து சித்தரித்தார். ‘உன்னைப் போல் ஒருவ’னில் வரும் முதலாளி தன்னைத் தொழிலாளி என்று சமத்துவ நோக்கில் பார்க்கவில்லை.
அதற்கும் மேலே சென்று ஒரு தொண்டராகத் தன்னைப் பார்க்கிறார். மக்களின் ஏழ்மையைப் படம் சோகமாக உணர்த்துவதில்லை. அன்பைப் பரிமாற்றம் செய்வதில் ஏற்படுகிற பரிதவிப்புகளே அவர்களின் துயரங்களுக்குக் காரணம் என்பதை நாவலும் படமும் சொல்கின்றன. ‘யாருக்காக அழுதான்’ நாவலில் வரும் முதலாளி கூட பணத்தாசையால் ஒரு தவறான காரியம் செய்துவிட்டு, நல்லவன் ஒருவன் அதனால் தண்டிக்கப்படுகிறான் என்பதை உணரும் பொழுது பதைபதைத்து திருந்துகிறார். அவரும் ஒரு சாதாரண முதலாளி அல்லரே.
‘யாருக்காக அழுதான்’ ஜெயகாந்தன் இயக்கிய இரண்டாவது படம். அது முழுவதும் ஒரு லாட்ஜில்  நடக்கிறது. கெட்டது என்றால் என்ன என்று கேட்கும் ஓட்டல் தொழிலாளி அப்பாவி சோசப்பின் மீது திருட்டுப் பழி சுமத்தப்படுகிறது. லாட்ஜில் இரவில் தங்க வரும் சேட் குடிபோதையில் தனது மணிபர்ஸை லாட்ஜ் முதலாளியிடம் பாதுகாப்புக் கருதி ஒப்படைக்கிறார். விடிந்தவுடன் அதை மறந்துவிட்டு பர்ஸ் காணாமல் போனதாக அலறுகிறார். முதலாளியும் இதைத் தனக்கு சாதகமாக்கிக் கொண்டு அதை மறைத்து விடுகிறார்.
சோசப்பின் மீது பழி சுமத்தப்பட்டு அவன் வாயிலிருந்து ரத்தம் வரும் வரை அவனை அடிக்கிறார்கள் சேட்டும் லாட்ஜில் தங்கியுள்ள ஒரு சூதாடியும். சோசப்பின் மகத்துவம் அறிந்த சமையல்காரர் குறுக்கிடுகிறார். பயந்துபோன முதலாளி பர்ஸை சேட்டின் அறையிலேயே வைத்து விடுகிறார். சோசப் தப்புகிறான். தனக்காக மட்டுமின்றி தன்னைப் போன்ற அப்பாவிகள் தண்டிக்கப்படுகிற கொடுமைகளை நினைத்தும், பெரிய மனுஷத்தனத்துடன் கயமைகள் புரியப்படுகிற இந்த உலகின் நடைமுறை குறித்தும் அதுவரை அழுதிராத சோசப் வாய் விட்டுக் கதறி அழுகிறான். உணர்ச்சிகரமான கதை.
படம் ‘உன்னைப் போல் ஒருவன்’ பாணியில் எடுக்கப்பட்டிருந்தது.  மெதுவாக நகர்ந்தது. நடிகர்கள் யோசித்து யோசித்து வசனம் பேசுவது இதிலும் தொடர்ந்தது. ஆனால் இதில் இருட்டு இல்லை. நல்ல ஒளிப்பதிவு. நாகேஷ், கே.ஆர்.விஜயா, டி.எஸ்.பாலையா போன்ற பிரபல நட்சத்திரங்களும் இருந்தனர். அன்றைய கவர்ச்சி நடிகையான கே.ஆர். விஜயா இதில் எளிமையாக நடித்திருந்தார். திரையரங்குகளை எட்டிய பொழுது இது ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. சில பத்திரிகைகள் இப்படத்தை ஒரு பிடி பிடித்தன. ஜெயகாந்தனுக்கும் பத்திரிகைகளுக்குமிடையே ஒரு பிணக்கு இருந்தது. ஒரு பத்திரிகை படத்தின் விமர்சனத்திற்குத் தந்த தலைப்பு: ஜெயகாந்தனுக்காக அழுதான்.
‘உன்னைப் போல் ஒருவன்’ படம் திரையிடப்பட்ட பொழுது ரசிகர்களைப்  பார்க்கவிடாமல் தடுத்தவர்கள் கண்டு வெகுண்டெழுந்த ஜெயகாந்தன், இந்தப் படம் பற்றித் தானே கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். தன்னைத்தானே விமர்சிப்பதில் அவருக்கு இணை அவர்தானேயொழிய வேறொருவர் இல்லை. படம் பற்றி அவர் செய்த விமர்சனம். ‘தியேட்டர்களுக்குச் சென்று ஜனக் கும்பலோடு உட்கார்ந்து படத்தைப் பார்த்தேன். ரசிகர்கள் வாரிக்கொண்டார்களே வாரி… படத்தின் ஆரம்பத்தில் 3 நிமிட நேரம் வெள்ளைத் திரையில் ஒன்றுமே தோன்றாது படம் ஓடும். தேய்ந்த பிரிண்ட்டின் கீறல்களை ரசிகர்கள் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அசரீரியாக நான் இந்தப் படத்தைப் பற்றி 3 நிமிட நேரம் பிரசங்கம் செய்வேன்… பேச்சைத் தொடர்ந்து கண்ணதாசன் எழுதிய ஒரு நல்ல பாட்டு. ஒரு நல்ல பாட்டைக் கூடக் கேட்க விடாமல் ரசிகர்களை அடித்து விரட்ட முடியும். அதற்கு மேல் படத்தில் நாகேஷை நடக்க வைத்தும் படுக்க வைத்தும் சாப்பிடச் செய்தும் இசைத்தட்டில் இரண்டு பக்கம் வருகிற மாதிரி ஒரு பாட்டுக் காட்சி ரீல்’.
ஆனாலும் இப்படம் குறிப்பிட்ட சில ரசிகர்களைக் கவர்ந்தது. ‘உன்னைப் போல் ஒருவன்’, ‘யாருக்காக அழுதான்’ ஆகிய இரண்டையும் பார்த்தவர்களில் சிலருக்கு இப் படம் சற்றுக் கூடுதலாகவே பிடித்திருந்தது.
சினிமாவைவிட்டு ஒதுங்கியிருந்த காலத்தில் அவரது ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ நாவலை இயக்குநர் ஏ.பீம்சிங் படமாக்க முன்வந்தார். ஜெயகாந்தன் எப்பொழுதுமே தன்னை விரும்பி வரும் இயக்குநர்களுக்குத் தன் படைப்புகளைத் தயக்கமின்றி தருபவர். ஒன்றுமில்லாத கதைகளையெல்லம் அவர் மிக வெற்றிகரமாக சினிமாவாக ஆக்கி இருக்கிறார் என்று பீம்சிங்மீது ஒரு அபிப்பிராயம் கொண்டிருந்தார். எம்.ஜி.ஆர் நடித்த படம் எதையும் இயக்காதவர் என்பதையும் பீம்சிங்கின் தகுதியாகத் தனக்கே உரிய குணாதிசயத்தின்படி பார்த்தார்.
பீம்சிங்கிடம் அவர் கூறியது.  ‘நான் உங்களுக்குக் கதையைக் கொடுத்து உதவி செய்ய முடியும். இதை நீங்களோ அல்லது நீங்கள் விரும்புகிற வேறு யாரையேனும் வைத்தோ திரைக்கதை, வசன வடிவமைப்பை எழுதிக் கொள்ளுங்கள். நாவலில் வருகிற வசனங்களையே பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஆனாலும் படம் எடுக்கிறபோது எப்படி எப்படியெல்லாம் எடுக்கிறீர்கள் என்பதை நான் அறிந்து கொள்வதற்கும் அதில் என்ன சேர்க்கலாம், என்ன சேர்க்கக் கூடாது என்பதற்கு எனது யோசனைகளை அனுமதித்தும் இறுதியாக இந்தப் படம் சிறப்பாக இருக்கிறது என்று நான் சொல்வதற்கு இடம் வைத்தும் நீங்கள் படமெடுத்துக் கொள்ளுங்கள்.’ கதையைப் படமாக்கும் உரிமையை முற்றாக இயக்குநரிடம் கொடுத்து விட்டதுபோல் தோன்றினாலும் அதில் நிறைய நிபந்தனைகளை விதித்திருப்பதைக் காண முடியும்.
பாவம் பீம்சிங்! அதுநாள்வரை ரசிகர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் ஆகியோரைத் திருப்தி செய்து படமெடுத்தவர், இப்பொழுது மகா முன்கோபக்காரரான ஒரு எழுத்தாளரையும் திருப்தி செய்யவேண்டும். பீம்சிங் புத்திசாலித்தனமாக ஜெயகாந்தனையே எழுத வைத்தார்.  இந்த நடைமுறை அவர்கள் இணைந்து செயல்பட்ட மற்ற படங்களிலும் தொடர்ந்தது.
நாற்பது நாட்கள் பீம்சிங்கின் உதவியாளர்களுடன் அமர்ந்து அவர் சொல்லச் சொல்ல ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ திரைக்கதை -வசனம் உருவாகியது. படம் வெளிவந்து அதுவரை ஜெயகாந்தன் படங்கள் பெற்றிராத வெற்றியை அது கொடுத்தது. தமிழின் மிகச்சிறந்த இலக்கியப் படைப்புகளில் ஒன்றான ஒரு நாவல் மக்களிடையே திரைப்படமாக வெற்றி பெற்றது அப்படியொன்றும் சுலபத்தில் ஒதுக்கிவிடக் கூடியதல்ல. பல புதிய திருப்பங்கள் இருப்பினும் கதைப் போக்கினைப் புரிந்து கொள்வதில் ரசிகர்களுக்கு எத்தகைய சிரமமும் இல்லை. லட்சுமி, ஸ்ரீகாந்த், சுந்தரிபாய், ஒய்.ஜி.பார்த்த சாரதி ஆகிய அனைத்து நடிகர்களும் நன்றாக நடித்திருந்தார்கள். படம் வெற்றி அடைந்ததற்கு இவையெல்லாம் காரணங்கள்.
ஆனால் ஒப்பீட்டளவில் ஜெயகாந்தன் கதை – வசனம் எழுதி இயக்கிய படங்களுடனும் பீம்சிங்கின் பிற படங்களுடனும் பார்க்கும்பொழுது ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ வேறு  தகுதிகளைப் பெற்றிருப்பினும் ஒரு அசாதாரணமான கலைப்படைப்பு என்று கூறமுடியாது. ஜெயகாந்தன் இயக்கிய படங்களில் மௌனத்திற்கு நிறைய இடம் இருக்கும். காட்சி பூர்வமாகக் கதையை நகர்த்த வேண்டும் என்கிற முயற்சிகள் தென்படும். அதேபோல் பீம்சிங்கின் உணர்ச்சிகரமான மெலோடிராமா படங்களில் வசனங்களுக்குக் களையூட்டு கிறாற்போன்று காட்சி அமைப்புகளும் இருக்கும். ‘சில நேரங்களில் சில மனிதர்க’ளில் ஜெயகாந்தனும் இல்லை. பீம்சிங்கும் இல்லை. படம் முழுவதும் இடைவிடாது வசனங்கள் ஒலித்தன.
நாவலிலிருந்து திரைக்கதைக்கு ஜெயகாந்தன் சில மாற்றங்களைக் கொண்டுவந்திருந்தார். நாவலில் கங்கா ‘அக்னிப்பிரவேசம்’ கதையைப் படித்துவிட்டு அதை எழுதிய எழுத்தாளரைத் தேடிப் போகிறாள். படத்தில் ‘அக்னிப்பிரவேசம்’ சிறுகதையின் நிகழ்வுகள் ஆரம்பத்தில் காட்டப்படுகின்றன. படத்தில் வசனங்கள் குறைந்த பகுதி இது.
நாவலின் இறுதியும் படத்தின் இறுதியும் வெவ்வேறானவை. நாவலில் கங்கா பிரபுவுடனான உறவு முறிவுக்குப்பின் பொறுப்பற்ற உல்லாசத்துடன் வாழ்கிறாள். அவளது வாழ்க்கை வீணாகிவிட்ட விரக்தியில் பிரபு தன் வீட்டிற்குள் அடைந்து கொள்கிறான். அவனது மனைவி பத்மாவிற்கு அது ஒரு வகையில் ஆறுதலாக உள்ளது. சமூகம் என்கிற அமைப்பின் முன் தனி மனிதர்கள் தொடர்ந்து போரிட இயலாமல் தோற்றுப் போகிறார்கள் என்னும்போது கதாபாத்திரங்கள் மீது ஒரு புரிதலும் பரிவும் ஏற்படுகிறது. ‘அக்னிப் பிரவேசம்’ சிறுகதையில் கங்காவின் அம்மா நடந்து கொண்டது போல் இல்லாமலிருந்தால் கங்காவிற்கு எத்தகைய அழிவு காத்திருந்தது என்பதைத்தான் நாவல் எடுத்துக் காட்டுகிறது.
நாவலை சினிமா பின்பற்ற வேண்டும் என்கிற அவசியம் இல்லை. சினிமாவின் முடிவு வித்தியாசமாக இருப்பினும் அது அந்த ஊடகம் எடுத்துவைக்கும் கதையாடலுக்குப் பொருத்தமானதாக இருக்க வேண்டும் என்று நினைப்பதில் தவறில்லை. படத்தில் கங்கா தனிமைப்படுத்தப்படுகிறாள். அறியாத வயதில் யாரோ ஒருவனுடன் பாலுறவு கொள்கிற அவள் பின்னரும் அவனையே தன்னுடையவனாக நினைத்து அவனுக்காகவே காத்து நிற்கும், ஒரு வகையில் அவளைத் தண்டித்த சமூகத்தின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ற கற்புக்கரசியாய்க் காட்டப்படுகிறாள். இது ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ நாவலும் திரைப்படமும் முன்வைக்கும் கண்ணோட்டத்திற்கு எதிரானது. ‘எல்லா பாவங்களையும் சுமந்து கொண்டு புனிதமாகவே ஓடிக் கொண்டிருக்கிறாள் அந்த கங்கை எல்லா பழிகளையும் தாங்கிக் கொண்டு புனிதமாய் உத்தமியாய் கற்பரசியாய் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறாள் இந்த கங்கை.’ என்னும் வர்ணனையாளரின் குரல், பிரபுவின் கோட்டைத் தன் மீது சார்த்திக் கொண்டு அவனது நினைவுகளுடன் நடமாடுகிற கங்காவின்மீது ஒலிக்கிறது. அசம்பாவிதமாக தமிழ்  சினிமாவிற்குப் பழகிப்போன வட்டத்திற்குள் படத்தை அச்சொல்லாடலும் காட்சியும் இழுத்துச் சென்று விடுகின்றன.
நாவலுக்கும் சினிமாவிற்குமான வேறு சில பொதுவானவற்றையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். நாவலிலோ சினிமாவிலோ பிரபு கங்காவைக் கற்பழித்தான் என்று எங்கும் கூறப்படவில்லை. பாலுறவினை அவள் விரும்பி ஏற்றதாக பிரபு எண்ணினான். அந்த உறவினைத் தன் வரையில் அனுபவங்களாக்குவதில் தடுமாற்றம் கொண்டவளாகவே கங்கா சித்தரிக்கப்படுகிறாள். சமூகம்தான் அந்த உறவினைக் கற்பழிப்பு என்று பழிக்கிறது. திருமணத்திற்கு அப்பால் ஆணும் பெண்ணும் ஒரே ஒருமுறை பாலுறவு கொண்டு விடினும் தமிழ் சினிமாவில் கதா நாயகியாகப்பட்டவள் எப்படியோ தவறாமல் கர்ப்பம் தரித்துவிடுவாள்.
1975ல் வெளிவந்த ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படம் தமிழ் சினிமா சரித்திரத்தில் முதன் முறையாக ஒருநாள் மட்டும் உடலுறவு கொண்ட கதாநாயகியைக் கர்ப்பத்திலிருந்து காப்பாற்றியது. சரியாக இருபத்தெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு  வெளிவந்த இன்னொரு தமிழ்ப்படத்திலும் இதேபோல் கதாநாயகி காப்பாற்றப்பட்டு இருக்கிறாள். அந்தப்படத்தின் பெயரைச் சொல்லத் தன்னடக்கம் என்னைத் தடுக்கிறது.
ஜெயகாந்தன் – பீம்சிங் கூட்டணியில் ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ அடுத்து வெளிவந்தது. நாவலின் வடிவம் சிறப்பானது. நாவல் கிட்டத்தட்ட படமாக வந்திருந்தது. நாடக நடிகை கல்யாணிக்கும் நாடக விமர்சகனும் பத்திரிகையாளனுமான ரங்காவிற்குமிடையேயான உறவுதான் படம். இருவருக்கும் காதல் ஏற்படுகிறது. அதன் அடிப்படையில் திருமணம் செய்து கொள்கிறார்கள். இருவரின் சுதந்திரத்தை உணர்ந்த காதலையும் ஒருவர் சுதந்திரத்தில் மற்றொருவர் குறுக்கீடு செய்வதற்கான சந்தர்ப்பங்களை உருவாக்கும் திருமணத்தையும் படம் பல்வேறு கோணங்களிலிருந்து பார்க்கிறது.
கல்யாணிக்கு ரங்காவின்மீது அளப்பற்கரிய காதல் என்றாலும் அவள் தன்னைக் கண்டு கொள்வது நாடகத்தில்தான். அறிவு ஜீவியான ரங்காவினால் இதைப் புரிந்து கொண்டாலும், அவனே ஒப்புக்கொள்ளும் ஆண் என்கிற அகங்காரத்தினால் அவளுடன் ஒன்றிணைய முடியவில்லை. அறிவுக்கும் அடிப்படையான உணர்வுக்குமான ஒரு போராட்டமாகப் படம் எடுத்துச் செல்லப்படுகிறது. அவளுக்கு உடல் நலம் குன்றிய நிலையில்தான் அவனும் அவளும் மீண்டும் ஒன்று சேர்கிறார்கள். கல்யாணியை நாடகம் பார்க்க ரங்கா அழைத்து செல்கிறான். அவர்கள் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ கதையைக்கூட நாடகமாகப் பார்க்கிறார்கள். என்றாவது ஒரு நாள் குணம் அடைந்து மீண்டும் தான் நடிக்கக் கூடும் என்று அவள் நம்புகிறாள். நாடகத்தில் தொடங்கிப் படம் நாடகத்தில் முடிகிறது. அதுநாள்வரை தமிழ்ப் படங்கள் கண்டிராத பாணியில் ஆண் – பெண் உறவு சித்தரிக்கப்பட்டிருந்தது.
எனவே அவர்களது போராட்டங்களைப் பெரும்பான்மையான ரசிகர்கள் ஒரு பிரச்சினையாகக் கருதவில்லை. அது எழுப்பிய தனி மனித, மற்றும் ஆண் -பெண் உறவு பற்றிய சிந்தனைகள் பட ரசிகர்களைச் சென்றடையவில்லை. அது தவிர, டிராயிங் ரூம் விவாதங்கள் போன்று படம் முழுவதும் கதாபாத்திரங்களின் உரையாடல்கள் இருந்தன. படம் தோல்வி என்ற போதிலும் அது ஒரு நல்ல முயற்சி.  லட்சுமியின் நடிப்பு ஜெயகாந்தன், பீம்சிங் தவிர மூன்றாவதான ஆளுமையாகப் படத்தில் இருந்தது. அவர் தன் நடிப்பில் வெளிப்படுத்திய காதலில் சிநேகமும் தாய்மையும் ஒருசேரப் பொங்கிற்று.
தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு இயக்குநரும் ஒரு இலக்கிய எழுத்தாளரும் கூட்டணி அமைத்துச் செயல்பட்டது ஒரு அபூர்வ நிகழ்வு.
‘திரு. ஜெ.கே. அவர்கள் நம் திரைப்படத் துறைக்குக் கிடைத்திருக்கும் வரப்பிரசாதம் என்று துணிந்து சொல்லுவேன். அவரைப் போன்ற எழுத்தாற்றல் உள்ளவர்கள் கிடைத்து விட்டால் தழுவல் இல்லாமல், நகல் இல்லாமல் ஒரிஜினலாகவே தமிழ்ப்படங்களைத் தயாரிக்கலாம். அதன் வாயிலாகத் தமிழ்ப் பட உலகம் தலை நிமிர்ந்து ராஜ நடை போடலாம் என்பதில் சந்தேகமே இல்லை என்று பீம்சிங் ஜெயகாந்தன் பற்றி உற்சாகமான எண்ணம் கொண்டிருந்தார். ஜெயகாந்தனும் அவ்விதமே பீம்சிங்குடன் தொடர்வது பற்றியும் விருப்பம் கொண்டிருந்தார்.
பீம்சிங்கின் மரணத்துடன் அது ஒரு முற்றுப்புள்ளியை எய்தது. இருவரின் கடைசிப் படைப்பு ‘கருணை உள்ளம்’. ‘கருணையினால் அல்ல’ குறுநாவலை வைத்து எடுத்த படம். அதையும் அவர் வசனம் எழுதிய ‘எத்தனை கோணம் எத்தனை பார்வை’ மற்றும் அவர் இயக்கிய ‘புது செருப்பு’ ஆகியவற்றை நான் பார்த்ததில்லை. ஜெயகாந்தனையும் அப்படங்களில் நேரடியாக சம்பந்தப்பட்டவர்களையும் தவிர எத்தனை பேர் அவற்றைப் பார்த்திருக்கக்கூடும்?அவை குறைந்த திரையிடல்களாகக் கூட விநியோகம் பெறவில்லை. என்றாவது அவை பார்க்கக் கிடைக்கும் என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு. சினிமா ஆரம்பித்த காலத்திலிருந்தே  உலகின் பல மூலைகளிலும் எடுக்கப்பட்ட படங்கள் இங்குள்ள கடைகளில் எளிதாகக் கிடைக்கின்றன. ஆனால் நாம் பெருமைப்படத்தக்க படங்களை எடுத்து நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கும் கலைஞனின் படங்கள் நம் வசம் இல்லை என்னும் நிலை மாற வேண்டும்.
அவர் எடுத்த குறும்படம் ‘நேற்று இன்று நாளை’. இது 1967ல் வெளி வந்தது. படம் தொழிற்சங்க பலத்துடன், தொழிலாளிகள் அவசரப்பட்டு வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால் அவர்களது பொருளாதாரம் பாதிக்கப்படுவது பற்றிய ஓர் அறிவுறுத்தல். இது ஒரு நயமான பிரச்சாரப் படம். அவரது சில சிறுகதைகளையும் ‘நல்லதோர் வீணை’ என்ற பெயரில் ‘பாரீசுக்குப் போ’ நாவலையும் எஸ்.கிருஷ்ணசாமி தொலைக் காட்சி படங்களாகத் தயாரித்தார். அவற்றிற்கு ஜெயகாந்தன் வசனங்கள் எழுதியதோடு சிலவற்றில் புதிய காட்சிகளையும் சேர்த்திருந்தார். தொலைக்காட்சிக்காக எடுக்கப்பட்ட படங்களில் அவை சிறந்தன என்றெல்லாம் கூற இயலாவிடினும் அவை தரம் வாய்ந்தன. அவருடைய கதை வசனத்துடன் வெளி வந்த ‘காவல் தெய்வம்’ (‘கை விலங்கு’ குறுநாவல்), ‘ஊருக்கு நூறு பேர்’ கதையை மட்டுமே பயன்படுத்தி அதே பெயரில் வெளிவந்த படம் ஆகியன மற்ற தமிழ்ப் படங்களிலிருந்து  மாறுபட்டவைதான்.
ஜெயகாந்தனின் வேறு சினிமா பங்களிப்புகளும் கருதத்தக்கவை. நிமாய் கோஷ் இயக்கிய’பாதை தெரியுது பார்’ படத்திலிருந்து தொடர்ந்து அவர் பங்கேற்ற பல படங்களுக்கு அவர் எழுதிய பாடல்கள் தனிச்சிறப்பு வாய்ந்தவை. ‘தென்னங்கீற்று ஊஞ்சலிலே` போன்ற இசை நுட்பத்தால் கேட்டவர் எளிதில் மறந்துவிட இயலாத பாடல்களை எழுதியிருந்தாலும், ‘வேறு இடம் தேடிப் போவாளோ’, ‘நடிகை பார்க்கும் நாடகம்’ ஆகியனவே அவரது சிறந்த பாடல்கள். அவற்றை அவர்தான் எழுதி இருக்க முடியும். அவரது வசனங்களில் வெற்றுச் சொல் அலங்காரங்கள் இல்லை. கதாபாத்திரங்களின் உரையாடல் ஒரு கேள்வி – பதில் போன்று இல்லாது தொலை நோக்கு பார்வையைக் கொண்டிருக்கும். அவர் ட்ரீட்மெண்ட் எழுதிய ‘காத்திருந்த கண்கள்’ படத்தில் ஒரு பெண் தான் இன்னொருத்தியாக நடிக்க வேண்டி இருந்ததனால் கொண்ட வலியை வெளிப்படுத்தும் வரிகள் எந்த இலக்கியத்திற்கும் குறைந்தன அல்ல.
‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ திரைக்கதை – வசனம் புத்தகமாக வெளிவந்தது. அதுவரை தமிழ் சினிமாவின் வசனங்களும் பாடல்களும்தான் வெளியிடப்பட்டு வந்தன. பட விநியோகத்திலும் ஜெய காந்தன் ஒரு புதிய நடைமுறையைப் பின்பற்றினார். ‘உன்னைப் போல் ஒருவன் படம்’ வெளிவந்து  நன்றாக ஓடியும் விநியோகத் தரப்பில் பல இடைஞ்சல்கள் ஏற்பட்டு அது தொடர்ந்து திரையிடமுடியாமல் போனது. எனவே விருப்பப்பட்டுக் கேட்டவர்களிடம் தொகை பெற்று அவர்களுக்காகப் பிரத்யேகமாகப் படத்தைப் போட்டுக்காட்டினார். அதில் கணிசமான வரவும் அவருக்குக் கிடைத்தது. ஆனால் அவ்விதம் இன்று மாற்றுப் படங்களைத் திரையிடுவதற்கு தியேட்டர்கள் கிடைக்காது. மாற்றுப் படங்களுக்கான மாற்றுத் திரையரங்குகளைக் கலைஞர்கள் தேட வேண்டும். ஜெயகாந்தன் சென்ற வழியை முன்னோடியாகக் கொள்பவர்கள் கவனிக்க வேண்டியது இது.
ஆரம்ப காலத்தில் ‘உன்னைப் போல் ஒருவன்’ மூலம் சினிமாவில் ஒரு இயக்குநராய் அடியெடுத்து வைத்த பொழுது அவர் ஒரு அறிக்கையைப் படித்தார். அதிலிருந்து சில வரிகள்.`தமிழ்ப் பட உலகத்தைப் பொறுத்தவரையில் ஒரு புதிய கதவு ஒரு புதிய திசை வழியை நோக்கி இந்தப் படத்தின் மூலம் திறக்கப்பட்டிருப்பதை நீங்கள் உணர்வீர்கள். புதுமை, புரட்சி என்ற ஆர்ப்பாட்டத்துடன் வந்த எந்தப் படத்திற்குமில்லாத ஓர் ஆத்மா இதற்கு உண்டு… இந்தப் படத்தின் தரத்திற்கு, இதன் ரசனைக்கு ஒத்தவர்கள் எத்தனை பேர் என்பதை நான் அறிந்துகொண்டால் அதுவே எனக்கு வெற்றி.’ பிரபலமடையவோ பொருள் ஈட்டவோ சினிமாவுக்கு வந்தவர் அல்லர் ஜெயகாந்தன். நல்ல சினிமா படைப்புகள் தமிழில் வர வேண்டும் என்கிற ஒரு கர்ம வீரராக அவர் செயல்பட்டார். அவரது வெற்றிகள் சிலவாயினும் அவை மகத்தானவை. புதுமையான சில தோல்விகளும் உண்டு.
‘இந்த சமுத்திரத்தில் நமது கட்டு மரத்தில் போன பயணம் மறுபடியும் நாம் கரையேறி வருகிற பட்சத்தில் வெற்றிகரமான பயணம் என்றே சொல்லவேண்டும்.’ என்று தனது சினிமா பயணம் குறித்து ஜெயகாந் தன் கொள்ளும் பெருமிதம் ஒப்பில்லாதது.
****
நன்றி
அம்ஷன்குமார்
உயிர்மை   sramakrishnan.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக