சனி, 2 ஏப்ரல், 2016

மும்பை ஐகோர்ட் : கோவில்களில் பெண்கள் நுழைய... 'தடுக்க முடியாது' என உத்தரவு


மும்பை: 'கோவில்களுக்குள் செல்வது, பெண்களின் அடிப்படை உரிமை; அதை மாநில அரசு பாதுகாக்க வேண்டும்' என, மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனால், மஹாராஷ்டிராவில் உள்ள கோவில்களுக்குள், பெண்கள் செல்வதை எவரும் தடுக்க முடியாத நிலை உருவாகி உள்ளது மஹாராஷ்டிரா மாநிலத்தில், முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் தலைமையிலான, பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, சனி ஷிங்னாபூர் கோவிலுக்குள் பெண்கள் நுழைய தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து, இரு பெண்கள், மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.வழக்கை விசாரித்த, தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, 'கோவிலுக்குள் பெண்கள் நுழைய அனுமதிப்பது உறுதி செய்யப்படுமா; இல்லையா என, மாநில அரசு விளக்கம் அளிக்க வேண்டும்' என, மார்ச், 30ல் உத்தரவு பிறப்பித்திருந்தது.


ஆறு மாதம் சிறை:
இந்த வழக்கு, நேற்று, மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநில அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் வாதிட்டதாவது:பாலின பாகுபாட்டை, மஹாராஷ்டிர மாநில அரசு கடுமையாக எதிர்க்கிறது. அந்த வகையில், ஒருவரை கோவிலுக்குள் அனுமதிக்க மறுப்பவர்களுக்கு, ஆறு மாதங்கள் சிறை தண்டனை விதிக்க வகை செய்யும், மஹாராஷ்டிர மாநில அரசின், ஹிந்து வழிபாட்டு தலங்கள் நுழைவு அனுமதிச் சட்டம், கண்டிப்புடன் அமல்படுத்தப்படும். இதுசம்பந்தமாக, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் எஸ்.பி.,களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்படும். இவ்வாறு அவர் வாதிட்டார்.

பெண்களின் உரிமை:
இதை ஏற்று, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:மஹாராஷ்டிர மாநில அரசின், ஹிந்து வழிபாட்டு தலங்கள் நுழைவு அனுமதிச் சட்டம்
அமல்படுத்தப்படுவதை, மாநில உள்துறை செயலர்உறுதி செய்ய வேண்டும். இந்த சட்டம், முழுமையாக அமல்படுத்தும் வகையில், உள்துறை அமைச்சகம், அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், எஸ்.பி.,க்களுக்கும் உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். சட்டத்தை அமல்படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும், மாநில அரசு எடுக்க வேண்டும்.கோவிலுக்குள் செல்வது, பெண்களின் அடிப்படை உரிமை. அந்த உரிமையை, அதிகாரிகள் ஆக்கிரமிக்காமல், பாதுகாக்க வேண்டிய கடமை, மாநில அரசுக்கு உள்ளது. இந்த சட்டம் அமல்படுத்தப்படவில்லை என, எவரேனும் கருதினால், அவர்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கலாம். இந்த வழக்கு பைசல் செய்யப்படுகிறது. இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.இந்த உத்தரவு காரணமாக, மஹாராஷ்டிராவில் உள்ள கோவில்களில், பெண்கள் நுழைவதை யாரும் தடுக்க முடியாது. கருவறைக்கு செல்லலாமா? வழக்கு விசாரணையின் போது, ''கோவில் கருவறைக்குள் யாரையும் அனுமதிப்பதில்லை. ஒருவேளை, கருவறையில் ஆண்களை அனுமதித்து, பெண்களுக்கு தடை விதித்தால், அப்போது, ஹிந்து வழிபாட்டு தலங்கள் நுழைவுஅனுமதிச் சட்டம் பிரயோகிக்கப்படும்,'' என, அட்வகேட் ஜெனரல், ஐகோர்ட்டில்தெரிவித்தார்.

இன்று ஆலய பிரவேசம்
: மும்பை ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பை தொடர்ந்து, சனி கோவிலில், இன்று, ஆலயபிரவேசம் செய்ய இருப்பதாக, பெண் உரிமை ஆர்வலர், திருப்தி தேசாய் தெரிவித்துள்ளார். சனி கோவிலில் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து போராட்டம் நடத்திய அவர், ஐகோர்ட் தீர்ப்பு பற்றி கூறுகையில், ''இந்த தீர்ப்பு, சம உரிமை கோரி போராடும் எங்கள் இயக்கத்துக்கு ஊக்கமளிக்கும்; நானும், ஆதரவாளர்களும், சனி கோவிலுக்கு செல்வோம்,'' என்றார்.

சர்ச்சையின் பின்னணி:
மஹாராஷ்டிராவில், கோவில்களில் பெண்கள் நுழைய அனுமதி கோரி போராட்டங்கள் வெடிக்கக் காரணம், சனி கோவில் தான். இங்கு, பெண்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வந்த இந்த நடைமுறையை மீறி, 2015ல், பெண் ஒருவர், கோவிலுக்குள் நுழைந்தார். இதன் காரணமாக, கோவில் பாதுகாவலர்கள் ஏழு பேரை, 'சஸ்பெண்ட்' செய்தது, கோவில் நிர்வாகக் குழு. இதைத் தொடர்ந்தே, கோவில்களில் பெண்கள் நுழைய விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக, போராட்டங்களும், பிரசாரங்களும் மேற்கொள்ளப்பட்டன. இந்த போராட்டங்களை, 'பூமாதா பிரிகேட்' எனும் அமைப்பு வழிநடத்தியது. இந்த அமைப்பைச் சேர்ந்த, 150 பெண்கள், சமீபத்தில், நாசிக்கில் உள்ள திரிம்பகேஷ்வரர் கோவிலுக்குள் நுழைய முயன்றனர். அவர்களை, போலீசார் தடுத்து நிறுத்தினர்.  dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக