சனி, 2 ஏப்ரல், 2016

திமுகவில் + கு.மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் தினேஷ் : எங்கள் பணத்தில்தான் தேமுதிக இயங்குகிறது...100 கோடி கொடுத்தோம்...கடனாளியாகிவிட்டோம்

எங்கள் பணத்தை விஜயகாந்தும் பிரேமலதாவும் திருப்பி தரவேண்டும் .தேமுதிக தொண்டர்கள் நிர்வாகிகள் போர்க்கொடி! சட்டசபையில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்து பின்னர் மக்கள் நலக் கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்தது. விஜயகாந்தின் இந்த முடிவால் தே.மு.தி.க. நிர்வாகிகள் அதிருப்தி அடைந்தனர். நேற்று முன்தினம் தே.மு.தி.க. வடசென்னை மாவட்ட செயலாளர் யுவராஜ் அக்கட்சியில் இருந்து விலகி தி.மு.க. தலைவர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார். 'முடிவு எடுக்கும் முன் விஜயகாந்த் நிர்வாகிகளை கலந்து ஆலோசிக்கவில்லை, கட்சிக்காக பணம் செலவழித்து கடனாளியாகி விட்டேன்' என்று யுவராஜ் குற்றம் சாட்டினார்.மேலும் பல நிர்வாகிகளும் தி.மு.க.வில் இணைவார்கள் என்றும் யுவராஜ் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் கன்னியாகுமரி மேற்கு மாவட்ட செயலாளர் வக்கீல் தினேஷ் இன்று தி.மு.க.வில் இணைந்தார்.

அவர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தி.மு.க.வில் சேர்ந்தார். அப்போது தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர். எஸ்.பாரதி, கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன், மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் ஆஸ்டின், மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் ஜான் கிறிஸ்டோபர், மேல்புறம் ஒன்றியச் செயலாளர் சிற்றார் ரவிச்சந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர். பின்னர் தினேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:- தே.மு.தி.க.வில் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்களின் கருத்துக்கு மாறாக விஜயகாந்த் கூட்டணி முடிவு எடுத்துள்ளார். அ.தி.மு.க.வின் 2-வது அணியாக கருதப்படும் மக்கள் நலக்கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்தது. எங்களுக்கு பிடிக்கவில்லை.

மக்கள் நலக்கூட்டணி அ.தி.மு.க. வெற்றிக்குத்தான் உதவும். கடந்த 4 ஆண்டுகளில் அ.தி.மு.க. ஆட்சியால் அதிகம் பாதிக்கப்பட்டது தே.மு.தி.க. தொண்டர்கள்தான்.

என் மீது 7 வழக்குகள் உள்ளன. இவ்வளவு கஷ்டங்களை சந்தித்த நாங்கள் அ.தி.மு.க.வுக்கு தக்க பாடம் புகட்ட தி.மு.க.வோடு கூட்டணி சேருங்கள். தி.மு.க.வுடன் சேர்ந்தால்தான் வெற்றி பெற முடியும் என்றோம். அதை அவர் ஏற்கவில்லை. தே.மு.தி.க. - தி.மு.க. கூட்டணி வரும் என்றுதான் தேர்தல் நிதியாக 234 தொகுதிகளுக்கும், மாவட்ட செயலாளர்களும், நிர்வாகிகளும் ரூ.100 கோடி வரை தேர்தல் நிதி செலுத்தினோம்.
வீடு, நிலங்களை விற்று இந்தப் பணத்தை கட்டி இருக்கிறோம். எங்கள் பணத்தை விஜயகாந்த் திருப்பித்தர வேண்டும். பணம் கொடுத்து எங்களை தி.மு.க. விலைக்கு வாங்கியதாக பிரேமலதா ஆவேசத்தில் பேசுகிறார். நாங்கள் பணத்துக்காக விலை போகவில்லை. எங்கள் பணம்தான் தே.மு.தி.க.வில் உள்ளது.

உழைப்புக்கும் எங்களது கருத்துக்கும் மரியாதை இல்லாததால் தி.மு.க.வில் வந்து சேர்ந்தேன். இவ்வாறு அவர் கூறினார். தினேஷ் 2008-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தே.மு.தி.க.வில் இணைந்தார். அவருக்கு மாவட்ட துணை செயலாளர் பதவி வழங்கப்பட்டது. 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மேற்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தே.மு.தி.க. தலைமை செயற்குழு உறுப்பினரான வடசென்னை மாவட்டத்தைச் சேர்ந்த விஜய் சண்முகம் என்பவரும் மு.க.ஸ்டாலினை சந்தித்து தி.மு.க.வில் இணைந்தார். அப்போது மாவட்ட செயலாளர் சுதர்சனம் உடன் இருந்தார். கன்னியாகுமரி மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் ஜெயசிங் என்பவரும் இன்று மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக