சனி, 2 ஏப்ரல், 2016

ஸ்டாலின் : யாரையும் அழைக்கவில்லை.தானாகவே வருகிறார்கள்....தேமுதிக தானாகவே கரைகிறது.

தே.மு.தி.க.வினரை நாங்கள் அழைக்கவில்லை. அவர்களாக வருகிறார்கள். அந்த கட்சி தானாகவே கரைகிறது என்று மு.க.ஸ்டாலின் கூறினார். 2 ஆயிரம் பேர் இணைந்தனர்< திருவள்ளூர் வடக்கு மாவட்டத்தை சேர்ந்த அ.தி.மு.க., தே.மு.தி.க., பா.ம.க., உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த 2 ஆயிரம் பேர் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர். இதற்கான விழா அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நேற்று மாலை நடந்தது. விழாவுக்கு துணை பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி, ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியில் இணைந்தவர்களை வரவேற்று மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- இங்கு பேசியவர்கள் தி.மு.க.வில் இணைந்ததன் மூலம் தங்களுக்கு விடியல் கிடைத்திருப்பதாக தெரிவித்தார்கள். தமிழகத்திற்கே விடியல் கிடைக்கப் போகிறது. இன்றைக்கு பல்வேறு கட்சியினர் தி.மு.க.வில் சேர்வதை சிலர் விமர்சனம் செய்கிறார்கள்.


தே.மு.தி.க. தானாக கரைகிறது

தே.மு.தி.க.வை கரைக்க மு.க.ஸ்டாலின் முயற்சி செய்கிறார் என்று கூறுகிறார்கள். நாங்கள் யாரையும் கரைக்கவில்லை. தானாக கரைந்து கொண்டு இருக்கிறது. அதுதான் உண்மை. நேற்று முன்தினம் ஒரு மாவட்ட செயலாளர் வந்தார். இன்றைக்கு காலையில் ஒரு மாவட்ட செயலாளர் வந்திருக்கிறார். இது தொடரும்.

யாரையும் கட்டாயப்படுத்தி கட்சியில் இணைக்க முடியாது. அவர்களாக தான் சேர்கிறார்கள். அ.தி.மு.க. ஆட்சியை அகற்ற தி.மு.க.வில் சேருகிறார்கள்.

மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். தி.மு.க.வை ஆட்சிக்கு கொண்டுவர வேண்டும் என்று விரும்புகிறார்கள். இன்றைக்கு பலரும் நான் வேகமாக நடப்பதாக கூறுகிறார்கள். இதற்கு ‘நமக்கு நாமே’ பயணம் தான் காரணம்.

அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை

கருணாநிதி இந்த வயதிலும் தமிழகத்தை காப்பாற்ற பாடுபடுகிறார். ‘நமக்கு நாமே’ பயணம் மக்கள் மத்தியில் மட்டுமல்ல. ஜெயலலிதாவின் மனதிலும் பதிந்துள்ளது. மதுவிலக்கு கொண்டு வருவோம் என்று முதலில் அறிவித்தவர் கருணாநிதி தான்.

சசி பெருமாளே நேரில் வந்து கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவித்தார். அந்த சசிபெருமாளை சாகடித்த பெருமை அ.தி.மு.க.வையே சாரும்.

அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கை அறிவித்தால், மக்கள் நம்ப மாட்டார்கள். எனவே இங்கு வந்துள்ள நீங்கள் ஏதோ வந்தோம், பேசினோம். என்று இல்லாமல் தி.மு.க. அரசின் சாதனைகளை மக்கள் இடத்தில் கொண்டு போய் சேர்க்க வேண்டும்.

இதற்கான பணியை இன்றே நீங்கள் தொடங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக