திங்கள், 4 ஏப்ரல், 2016

கொங்கு மக்களின் முடிவு மாறுமா?....மது ஒழிப்பு?... கள் விற்பனை?..

பூரண மதுவிலக்கு - கட்சிகள் கையில் எடுத்திருக்கும், தேர்தல் பிரம்மாஸ்திரம். 'நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், பூரண மதுவிலக்குக்கு தான் முதல் கையெழுத்து' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார். 'பூரண மதுவிலக்குக்காக பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். எங்களது ஆட்சி அமைந்ததும், மதுவிலக்கு அமல்படுத்தப்படும்' என, பா.ம.க., முதல்வர் வேட்பாளர் அன்புமணியும் விடாமல் கூறி வருகிறார். மக்கள் நல கூட்டணி, குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தில், மதுவிலக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. பா.ஜ., - தே.மு.தி.க., - காங்., கட்சிகளும், இப்பிரச்னையை கையில் எடுத்துள்ளன. இந்நிலையில், 'கள், போதை பானம் அல்ல; இயற்கையான பானம்; உடலுக்கு உகந்தது; உடலுக்கு தீங்கு ஏற்படும் என நிரூபித்தால், ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும்' என்ற பிரசாரமும் எழுந்துள்ளது.


மாபெரும் போராட்டம்:
இந்த விவகாரத்தில், எட்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவங்களை கட்டாயம் நினைவுகூர வேண்டியுள்ளது. தேங்காய் விலை படுபாதாளத்துக்கு சென்றபோது, மாற்று வாழ்வாதாரத்துக்கு, தென்னை விவசாயிகள் திட்டமிட்டனர். கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி மாநிலங்களில், 'கள்' இறக்க அனுமதி உள்ளதை போன்று, தமிழகத்திலும்
அனுமதிக்க வேண்டும். அப்போது தான், தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும் என்று கோரிக்கை விடுத்து, இதை ஏற்கும் கட்சிக்கு மட்டுமே ஆதரவு என, விவசாயிகள் அறிவித்தனர். கடந்த, 2009 லோக்சபா தேர்தலில், கொங்கு மண்டலத்தில், தென்னை, பனை மரத்தில், 'கள்' இறக்கும் போராட்டம் விஸ்வரூபம் எடுத்தது. 'கள்' இயக்கம், விவசாய சங்கங்கள், தென்னை உற்பத்தியாளர்கள், கொங்கு முன்னேற்ற கழகம் சார்பில், கிராமங்களில், 'கள்' இறக்கும் போராட்டம் நடத்தப்பட்டது. தற்போதைய நிலை:
ஆளுங்கட்சியாக இருந்த, தி.மு.க., அதை தடுக்கவில்லை; மாறாக தேர்தல் பிரசாரத்தில், 'விவசாயிகளின் கோரிக்கை நிறைவேற்றப்படும்' என, தி.மு.க., சார்பில் அறிவிக்கப்பட்டது. அ.தி.மு.க., பிரசாரத்தில், 'கள்அனுமதிப்பது குறித்து, கமிட்டி அமைத்து பரிசீலிக்கப்படும்' என, ஜெயலலிதா அறிவித்தார். லோக்சபா தேர்தல் முடிந்ததும், போலீசார், 'கள்' பானைகளை உடைத்து, விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்கினர். இதனால், 2011 சட்டசபை தேர்தலில், கொங்கு மண்டலத்தில், தி.மு.க.,வுக்கு பலத்த, 'அடி' விழுந்தது. ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க., வாக்குறுதியை மறந்து, 'கள்' பிரச்னையை கிடப்பில் போட்டது. தேர்தல் வரும்போதெல்லாம், 'கள்' இறக்கும் போராட்டம் தலைதுாக்குவது வழக்கமாகி விட்டது. 2015ல், தேங்காய்க்கு நல்ல விலை கிடைத்ததால், தென்னை விவசாயிகள் அமைதியாக இருந்தனர். இருப்பினும், 'கள்' போராட்டங்கள், நீறுபூத்த நெருப்பாகவே உள்ளது. லோக்சபா, சட்டசபை தேர்தலில் பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தி, தேர்தல் முடிவுகள் மாற காரணமாக இருந்த, 'கள்' போராட்டம், இன்னும் கைவிடப்படவில்லை. 'கள்' இயக்கம் ஒருங்கிணைப்பாளர் நல்லுசாமி, விவசாயிகள் சங்கத்தினர் தனித்தனியே போராடி வருகின்றனர். அதேநேரத்தில், மதுவுக்கு எதிரான போராட்டத்தில், 'கள்' பிரச்னை நீர்த்து போய் விட்டதும் மறுப்பதற்கில்லை.

- நமது நிருபர் -தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக