திங்கள், 4 ஏப்ரல், 2016

மதுபான அதிபர்கள் கூட்டணி அமைத்து திமுகவை தோற்கடிக்க கடும் பிரயத்தனம்

ஊததி மூடிய மதுபான அதிபர்கள் விஜயகாந்த், 'தனித்து போட்டி' என அறிவித்தவுடன், மதுபான அதிபர்கள் கூட்டணி, பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்றில் கூடி பார்ட்டி வைத்து  கொண்டாட்டங்களில்....   சில காரியங்கள் நினைத்த நேரத்தில் நடக்காமல் இருந்தால், பெரியவர்கள், 'காலம் சரியில்லை' என்று சொல்வார்கள். அதாவது, அந்த காரியங்கள் நடக்காமல் இருப்பதற்கு, தெரிந்ததும், தெரியாததுமாய் காரணிகள் ஒன்று சேருமாம். அது போன்று தான் தே.மு.தி.க., கூட்டணி என, தி.மு.க., நினைத்துக் கொண்டது.
இருப்பினும், காரணங்களை அலசுவது இயல்பு தானே. அந்த அலசலில், தெரிந்த காரணமாக, ஸ்டாலினும், 'ஒன் மேன் குரூப்'பும் தென்பட்டனர். அ.தி.மு.க.,வின் பெயரும் அங்கு அடிபட்டது. இதுவரை தெரியாத காரணமாக இருந்து, தற்போது, தி.மு.க., தலைமைக்குதென்பட்டுள்ளது, மதுபான ஆலை அதிபர்கள்!

மது நுகர்வு உச்சம்:
கூட்டணி பற்றி அவர்களுக்கென்ன? இதை புரிந்து கொள்ள புள்ளி விவரங்கள், சமீபகால வரலாறு மற்றும் மதுவைச் சுற்றியுள்ள அரசியலை பார்க்க வேண்டும். தமிழகத்தில், மது நுகர்வு, கடந்த ஐந்து ஆண்டுகளில் பெரிய அளவில் உயரவில்லை. கடந்த 2011-12ல், 5.42 கோடி பெட்டிகள் விற்பனையான சாராயம், 2015-16ல், 5.34 கோடி பெட்டிகள் விற்பனையாகி உள்ளன. அதேபோல், 2.98 கோடி பெட்டிகள் விற்பனையான பீர், 2.19 கோடி பெட்டிகளாக குறைந்து உள்ளன. இடைப்பட்ட காலங்களிலும், பெரியளவு வேறுபாடு இல்லை; பெரிய வளர்ச்சியும் இல்லை, சரிவும் இல்லை என்ற நிலை தான் உள்ளது.
அதாவது, தமிழகத்தில், மது நுகர்வு உச்சத்தை தொட்டு விட்டது. இதற்கு மேல் அதிகரிக்க வாய்ப்பு குறைவு. மது உற்பத்தி மொத்தமும், 10 - 15 நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. 'டாஸ்மாக்'கை மையப்படுத்தும் இதே சந்தை நிலவரம் தொடர்ந்தால் தான், இவர்கள் லாபம் பார்க்க முடியும்.புதிய நிறுவனங்கள் நுழைந்தால், வியாபாரம் அடிபடும். அதை 'டாஸ்மாக்'கால் தான் கட்டுப்படுத்த முடியும். மதுவிலக்கு போன்ற அதிரடி கொள்கைகள் வந்தால், பல பத்தாயிரம் கோடி வருமானம் நின்றுவிடும். அதற்கு ஒரே வழி அ.தி.மு.க., ஆட்சியில் இருப்பது தான். ஏனெனில், இன்றைய
நிலையில், மதுவிலக்கு பற்றி பேசாத ஒரே கட்சிஅ.தி.மு.க.,தான்.
முதல் கையெழுத்து:
கடந்த 2015ல், அ.தி.மு.க., தவிர்த்து, மதுவிலக்கு பற்றி பேசாத தமிழக கட்சியே கிடையாது. சசி பெருமாள் மரணம், பள்ளி மாணவிகள் போதை என, பல பரபரப்பான சம்பவங்களின் பின்னணியில், அனைத்து கட்சிகளும் தாங்கள் மதுவிலக்கை ஆதரிப்பதாக தெரிவித்தன. தி.மு.க., தலைவர் கருணாநிதி, 'ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து மதுவிலக்கிற்காக தான்' என்றார். இதற்கு காரணம் மதுவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, கணிசமான ஓட்டு வங்கியாக உருவாகி இருப்பது தான். இன்று முதல்வராக ஆசைப்படுவோரில், அன்புமணி, சீமான், ஸ்டாலின், கருணாநிதி, விஜயகாந்தும்கூட மதுவிலக்கை ஆதரிக்கின்றனர்.
மதுவிலக்கு பிரசார கருவி
மதுவிலக்கை ஒரு பெரிய பிரசார கருவி யாகவே, தி.மு.க., கையில் எடுத்துள்ளது. ஸ்டாலினின் 'நமக்கு நாமே' சுற்றுப்பயணத்தில், இதை பற்றி அவர் பேசினார். தி.மு.க.,வின் மகளிரணி செயலர் கனிமொழி இதற்காகவே நேர்ந்துவிடப்பட்டு உள்ளார். அவர் நடத்தும் கூட்டங்களில் மதுவால் பாதிக்கப்பட்ட விதவைகளை அழைத்து வந்து, உதாரணம் காட்டி பேசுகிறார்.தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவில் முக்கிய உறுப்பினராக இருக்கும் அவர்,மதுவிலக்கு பற்றிய அறிவிப்பையும் அதில் நுழைத்திருப்பதாக கூறப்படுகிறது.தேர்தல் வேகம் இப்படி இருக்க, புள்ளிவிவரங்கள் யதார்த்த பிரச்னையை முன்வைக்கின்றன, மேற்படி பல கோடி பெட்டிகள் மதுபான விற்பனையில், சாராய பிரிவில் 56 சதவீதமும், பீர் பிரிவில் 81 சதவீதமும் தி.மு.க., சார்ந்த மதுபான அதிபர்களின் சந்தை பங்கு.
விஜயகாந்த் எரிச்சல்:
'தி.மு.க.,வை சார்ந்தவர்களும் மதுபான ஆலைகள் நடத்துகின்றனரே...' என, ஸ்டாலினிடம் கேட்கப்பட்ட போது, 'இதில் என்ன பிரச்னை இருக்கு... மதுவிலக்கு வந்தால், அனைத்து ஆலைகளும் மூடப்படும்' என்று சாதாரணமாக சொல்லிவிட்டார். இது, மதுபான அதிபர்களின் மனதில் குடைச்சல் கொடுத்திருக்க வேண்டும். அதனால் தான் தி.மு.க.,வை தோற்கடிக்கும் திட்டத்தில் இறங்கி, தே.மு.தி.க.,வை கூட்டணிக்கு வரவிடாமல் தடுத்துள்ளனர்.

அதற்கு, விஜயகாந்திற்கு எரிச்சல் ஊட்டக்கூடியவற்றை மறைமுகமாக செய்துள்ளதாக, தி.மு.க., வட்டாரங்களில் தகவல் கசிகிறது.அவற்றின் படி, பேரம் உள்ளிட்ட பணப்பற்று விஷயங்கள் பற்றி, தங்கள் ஆதரவாளர்கள் மூலம், சமூக வலைதளங்களில் தகவல்களை பரப்பியுள்ளனர்; பணம் கூடவே விளையாடியதால், விஜயகாந்த் காதிற்கு, இந்த விஷயங்கள், எரிச்சல் ஊட்டும் விதத்தில், சேர்க்கப்பட்டன. இந்த பின்புலம் ஏதும் தெரியாமலேயே, தி.மு.க., மீது விஜய காந்த் கோபமடைந்தார்.
காத்திருக்கும் ஆப்பு:
கடந்த மாதம் 10ம் தேதி, விஜயகாந்த், 'தனித்து போட்டி' என அறிவித்தவுடன், மதுபான அதிபர்கள் கூட்டணி, பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்றில் கூடி, கொண்டாட்டங்களில் ஈடுபட்ட தகவல்களையும் தி.மு.க., தலைமை மோப்பம் பிடித்துஉள்ளது.ஊற்றிமூடிய அதிபர்களுக்கு, ஆட்சிக்கு வந்தால் 'ஆப்பு' வைக்க, தி.மு.க., தலைமை காத்திருப்பதாக கூறப்படுகிறது.

நமது சிறப்பு நிருபர் தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக