திங்கள், 4 ஏப்ரல், 2016

தலைவர்கள் வேட்புமனு தாக்கல் செய்யபோகும் தொகுதிகள்.....ஒரே பார்வையில்

வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., - தி.மு.க., - தே.மு.தி.க., - மக்கள் நலக் கூட்டணி, பா.ஜ., - பா.ம.க., என, ஐந்து முனை போட்டி நிலவுகிறது. வரும், 22ம் தேதி வேட்புமனு தாக்கல் துவங்கவுள்ள நிலையில், கட்சிகளின் கூட்டணி பெரும்பாலும் முடிந்த நிலையில், ஒவ்வொரு கட்சியும் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. இதனிடையே, கட்சி தலைவர்கள் தங்களுக்கான வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளையும் ஆராய்ந்து வருகின்றனர்.

ஜெயலலிதா:அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, கடந்த முறை, ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி பெற்றார். சொத்து குவிப்பு வழக்கால் பதவி இழந்த அவர், ஜாமினில் வெளிவந்த பின், சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார். இம்முறை அவர் போடி, திருப்போரூர், ஆண்டிப்பட்டி ஆகியவற்றில் ஏதேனும் ஒரு
தொகுதியில் போட்டியிடலாம் என கூறப்படுகிறது.

தி.மு.க., தலைவர் கருணாநிதி, கடந்த முறை திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இம்முறை உடல் நல பாதிப்பால், மீண்டும் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடஉள்ளதாக தெரிய வருகிறது.தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், கடந்த முறை கொளத்துார் தொகுதியில் போட்டியிட்டார். இம்முறையும், அவர் கொளத்துார் தொகுதியிலேயே போட்டியிடுகிறார். இது, தி.மு.க., நேர்காணலில் உறுதி செய்யப்பட்டது.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், 2006ல் விருதாச்சலத்திலும், கடந்த சட்டசபை தேர்தலில் ரிஷிவந்தியம் தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இம்முறை விழுப்புரம் மாவட்டம் உளுந்துார் பேட்டை அல்லது திருக்கோவிலுார் தொகுதியில் போட்டிஇடலாம் என தெரிகிறது. தே.மு.தி.க., மகளிர் அணி செயலரும், விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா, முதல் முறையாக தேர்தலில் போட்டியிடுவதாக கூறப்படுகிறது. அவர்போட்டியிடும் தொகுதி இன்றளவில் உறுதி செய்யப்படாவிட்டாலும், விழுப்புரம் அல்லது விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

விஜயகாந்த் குடும்பம்:விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷ், 2006ல், குடியாத்தம் தொகுதியிலும், 2009ல் பார்லிமென்ட் தேர்தலில் கள்ளக்குறிச்சியிலும், கடந்த ஆண்டு பார்லிமென்ட் தேர்தலில் பா.ஜ.,ட்டணியில், சேலத்திலும் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். இந்த முறை வெற்றி வாய்ப்புள்ள தொகுதியை ஆராய்ந்து வருவதாக கூறப்படுகிறது.

ம.தி.மு.க, பொது செயலர் வைகோ, இம்முறை கோவில்பட்டி அல்லது சாத்துார் ஆகிய தொகுதிகளில் போட்டியிடலாம் என தெரிகிறது. பா.ம.க., முதல்வர் வேட்பாளர் அன்புமணி, தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி அல்லது சோளிங்கர் தொகுதியில் போட்டியிடுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது. விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், காட்டுமன்னார் கோவில் தொகுதியில் போட்டியிடவுள்ளதாக தெரிகிறது.

- நமது நிருபர் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக