வியாழன், 28 ஏப்ரல், 2016

சென்ற தேர்தல் முடிவுகளை சரியாக கணித்த மேதாவிகளின் இன்றைய கணிப்புக்கள்.....அதிர்ச்சி? யாருக்கு?

விகடன்.com யாருக்கு எத்தனை தொகுதிகள்? கணிப்புக் கில்லாடிகள் - தேர்தல் ரிசல்ட்வீ.கே.ரமேஷ், ச.ஜெ.ரவி, மாணிக்கவாசகம், நா.சிபிச்சக்கரவர்த்தி, ஏ.ராம் படங்கள்: கே.குணசீலன், எம்.விஜயகுமார், ரமேஷ் கந்தசாமி, பா.காளிமுத்து ஓவியங்கள்: ராஜா
 
தேர்தல் வெற்றி - தோல்விகளைக் கணிப்பதில் விகடன் வாசகர்கள் கில்லாடிகள். அனுதாப அலை, எதிர்ப்பு அலை என எந்த அலை அடித்தாலும் ஒவ்வொரு தேர்தலின் முடிவுகளையும் வாக்குப்பதிவுக்கு முன்னரே கச்சிதமாகக் கணித்துப் பரிசுகளை வென்ற விகடன் வாசகர்களின், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல் கணிப்பு என்ன?2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ‘அ.தி.மு.க-தான் ஆட்சியைப் பிடிக்கும்' என, தொகுதிகள், வெற்றி - தோல்வி, வாக்கு வித்தியாசம் எல்லாம் துல்லியமாகக் கணித்து முதல் பரிசு வென்றவர், திருவள்ளூர் மாவட்டம் புங்காத்தூரைச் சேர்ந்த ஜெயலட்சுமி. அப்போது ப்ளஸ் 1 மாணவியான இவர், இப்போது பி.எஸ்ஸி., நர்ஸிங் நான்காம் ஆண்டு படிக்கிறார்.

‘‘என் அப்பா மாசிலாமணியும் நானும் விகடனின் தீவிர வாசகர்கள். 2011-ம் ஆண்டு தேர்தல் பரிசுப் போட்டியில் நாங்கள் வெல்லக் காரணமே ஆனந்த விகடனும் ஜூனியர் விகடனும்தான். மக்களோட மனநிலையை இந்த இரண்டு இதழ்களும் எப்பவும் மிகச் சரியாகப் பிரதிபலிக்கும். இப்போதும் விகடனைத் தீவிரமா படிச்சிட்டு வர்றோம். கல்லூரியில் நண்பர்கள் பேசுவது, அப்பாவின் நண்பர்கள் சொல்வது, டி.வி செய்திகள்... இவை அனைத்தையும் வைத்து நானும் அப்பாவும் சேர்ந்து, இந்த முறை யார் ஆட்சியைப் பிடிப்பார்கள்னு ஒரு முடிவுக்கு வந்திருக்கிறோம்’’ - ஆர்வமும் எதிர்பார்ப்புமாகப் பேசுகிறார் ஜெயலட்சுமி.
‘‘2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வென்று அ.தி.மு.க ஆட்சியைப் பிடிக்க முக்கியக் காரணம், தி.மு.க செய்த தவறுகளும் அந்த ஆட்சியின்போது நடைபெற்ற ஊழல்களும்தான். அதே தவறை இந்த முறை ஒருபடி மேலே போய் அ.தி.மு.க அரசு செய்திருக்கிறது. சென்னை வெள்ளம், ஆவின் பால் ஊழல், அமைச்சர்களின் செயல்பாடுகள், சட்டம்-ஒழுங்கு சீர்கேடு... இப்படி அனைத்திலும் அ.தி.மு.க அரசின் மேல் மக்கள் வெறுப்பில் உள்ளனர்.

தி.மு.க-வின் தேர்தல் அறிக்கை, மக்களைப் பெரிதும் கவர்ந்திருக்கிறது. இதில் மாதம் ஒரு முறை மின்சாரக் கட்டணம், மாணவர்கள் படிப்புக்காக வாங்கிய வங்கிக் கடன் தள்ளுபடி எனப் பல சிறப்புகள் உள்ளன. இவை அனைத்தும் சாத்தியமாகக்கூடியவை. தி.மு.க., அ.தி.மு.க இரண்டும் பல தொகுதிகளில் நேரடியாக மோதுகின்றன. அந்தத் தொகுதிகளில் கடும் போட்டி நிலவினாலும் தி.மு.க-வே பெரும்பான்மையான தொகுதிகளைக் கைப்பற்றும். எங்கள் கணிப்பின்படி தி.மு.க 122 முதல் 125 தொகுதிகளில் உறுதியாக வெல்லும். கருணாநிதி, ஸ்டாலின் உள்ளிட்ட ஸ்டார் வேட்பாளர்கள் தி.மு.க-வில் வெல்வார்கள். 80-ல் இருந்து 85 தொகுதிகள் வரை வென்று அ.தி.மு.க எதிர்க்கட்சியாக அமரும். ஆர்.கே நகரில் ஜெயலலிதா வென்றாலும் அ.தி.மு.க-வின் முக்கியப் பிரமுகர்கள் பலர் தோற்பார்கள்.

விஜயகாந்த் தலைமையில் தேர்தலைச் சந்திக்கும் மக்கள் நலக் கூட்டணி மொத்தமாக ஏழு தொகுதிகள் வென்றாலே பெரிய விஷயம். அந்தக் கூட்டணியில் திருமாவளவனின் வெற்றி உறுதி. மற்ற தலைவர்கள், குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோற்பார்கள். அன்புமணியை முன்னிறுத்தி தனியாகக் களம்காணும் பாட்டாளி மக்கள் கட்சி, வடமாவட்டங்களில் மட்டும் ஆறு தொகுதிகளில் வெல்லும். இதுதான் எங்களின் கணிப்பு'’ என உறுதியாகச் சொல்கிறார் ஜெயலட்சுமி.

தாராபுரம் பெரியாத்து கள்ளிவலசு பகுதியைச் சேர்ந்த கவுசல்யாவின் கணிப்போ, வேறாக இருக்கிறது. இவர் 2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் கணிப்பில் மூன்றாம் பரிசை வென்றவர்.
‘‘இது இழுபறியான தேர்தலாகத்தான் இருக்கும். ஐந்தாறு அணிகளாகப் பிரிந்து தேர்தலைச் சந்திப்பது அ.தி.மு.க-வுக்குத்தான் சாதகம். அ.தி.மு.க 120 இடங்கள் வரை வென்று ஆட்சி அமைக்கும். தி.மு.க-வுக்கு இரண்டாம் இடம் கிடைக்கும். தே.மு.தி.க - மக்கள் நலக் கூட்டணி - த.மா.கா-வுக்கு ஏழு இடங்கள் கிடைக்கலாம். பா.ம.க-வும் ஏழு இடங்கள் வரை வெல்லும். பா.ஜ.க-வுக்கு ஒரு இடம்கூட கிடைக்காது. தி.மு.க-வின் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம்... இவை ஓரிரு இடங்களைப் பிடிக்கலாம்.

வி.ஐ.பி வேட்பாளர்களில் ஜெயலலிதா, கருணாநிதி, விஜயகாந்த், திருமாவளவன், ஓ.பன்னீர்செல்வம் எளிதில் வெற்றிபெறுவார்கள். ஸ்டாலின் கொஞ்சம் கஷ்டம்தான். சரத்குமாருக்கு இந்தத் தேர்தலில் வெற்றி கிடைக்காது. ஜெயலலிதா 35 ஆயிரம் வாக்கு வித்தியாசத்திலும், கருணாநிதி 20 ஆயிரம் வாக்கு வித்தியாசத்திலும் வெல்வார்கள்’’ என்கிறார்.

‘‘221 தொகுதிகளைக் கைப்பற்றி ஜெயலலிதாவே மீண்டும் முதல்வராவார்’’ என்கிறார் கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் சரியாகக் கணித்து முதல் பரிசைப் பகிர்ந்துகொண்ட கோபிசெட்டிப்பாளையத்தைச் சேர்ந்த பாலசுப்ரமணியம்.

‘‘கடந்த தி.மு.க ஆட்சியில் மின்வெட்டு, ரௌடியிசம், குடும்பத் தலையீடு போன்ற பிரச்னைகளால்தான் ஜெயலலிதாவுக்கு ஒரு வாய்ப்பை, தமிழ்நாடு வாக்காளர்கள் வழங்கினார்கள். ஜெயலலிதாவின் இந்த ஆட்சியில் பெரிய அதிருப்தி எதுவும் இல்லை. குறிப்பாக, மின்வெட்டுப் பிரச்னை இல்லை. ரௌடியிசத்தை ஒழித்திருக்கிறார்கள். மாணவர்களுக்கு லேப்டாப், ஸ்காலர்ஷிப் வழங்கியுள்ளனர். சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா மீது மக்களுக்குப் பரிதாபம்தான் இருக்கிறதே தவிர, அதிருப்தி இல்லை. காரணம், `66 கோடி ரூபாய்தானே... அது ஒரு பெரிய விஷயம் இல்லை' என மக்கள் நினைக்கிறார்கள். அடுத்து கூட்டணிக்கு வந்தவர்களைக்கூட இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட வைத்திருக்கிறார்கள். எனவே, கூட்டணிக் கட்சி வேட்பாளர்களையும் சேர்த்து 221 இடங்களில் அ.தி.மு.க வென்று தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கும்.
தி.மு.க இரண்டாம் இடத்துக்கு வரும். மக்கள் நலக் கூட்டணி, மூன்றாம் இடத்துக்கு வரும். அந்தக் கூட்டணியின் மீது மக்களுக்கு மிகப் பெரிய அளவில் நம்பிக்கை வரவில்லை. பா.ம.க-வுக்கு நான்காம் இடம்தான் கிடைக்கும். டாஸ்மாக் பிரச்னை எந்தவிதத்திலும் அ.தி.மு.க-வின் வெற்றியைப் பாதிக்காது. உண்மையைச் சொல்லப்போனால், டாஸ்மாக்கினால்தான் 60 சதவிகித மக்கள் அ.தி.மு.க-வை ஆதரிக்கிறார்கள் எனச் சொல்வேன்’’ - ஒரே போடாகப்போடுகிறார் பாலசுப்ரமணியம்.

‘‘நான் பூக்கடை வைத்துள்ளேன். பொதுமக்களிடம் அதிகமாகப் பழகும் வாய்ப்பு இந்த வேலையில் உண்டு. ‘நீங்க யாருக்கு ஓட்டு போடுவீங்க... எதுக்காக?' என விலாவாரியா கேட்பேன். அடுத்து, உள்ளாட்சித் தேர்தலில் எந்தெந்தக் கட்சி எவ்வளவு சதவிகித வாக்குகளை வாங்குகிறது எனக் கவனிப்பேன். கட்சிக் கூட்டங்களுக்கு மாலை வாங்கவரும் கட்சிக்காரர்களிடமும் பேசுவேன். இவை அனைத்தையும் ஆராய்ந்து வெற்றிபெற யாருக்கு அதிக வாய்ப்பு என்பதைக் கணிப்பேன்.’’

தன் கணிப்புக் கணக்குடன் தொடங்குகிறார் சேலம் மாவட்டம் வீராணம் பகுதியைச் சேர்ந்த பழனிராஜ். இவர் 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் கணிப்புப் போட்டியில் இரண்டாம் பரிசு வென்றவர்.

‘ஜெயலலிதாவின் இந்த ஐந்து ஆண்டுகால ஆட்சியில் நல்லது, கெட்டது இரண்டும் நடந்துள்ளன. ஆனால், எம்.எல்.ஏ-க்கள், அமைச்சர்கள் மீது பொதுமக்கள் மிகுந்த அதிருப்தியில் உள்ளனர்.
அ.தி.மு.க., தி.மு.க இரண்டு கட்சிகளும் சரிசமமான பலத்துடன் மோதுகின்றன. தே.மு.தி.க - மக்கள் நலக் கூட்டணி - த.மா.கா மெகா கூட்டணிதான். ஆனால், இந்த ஆறு கட்சிகளின் ஓட்டு சதவிகிதம் தி.மு.க., அ.தி.மு.க., ஓட்டு சதவிகிதத்தில் பாதிகூட இல்லை. தற்போது விஜயகாந்தின் ஓட்டு சதவிகிதமும் குறைந்துவிட்டது. இவர்களால் மக்களிடையே பெரிய எழுச்சியை ஏற்படுத்த முடியவில்லை. கவர்ச்சிகரமான தலைவர்கள் இந்தக் கூட்டணியில் இல்லை.

பிரபல வேட்பாளர்களில் கருணாநிதி, ஜெயலலிதா, விஜயகாந்த் என பெரும்பாலான கட்சித் தலைவர்கள் வெற்றிபெறுவார்கள். இவர்களில் ஜெயலலிதாதான் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெல்வார்’’ என்கிறார்.

2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க 35 இடங்களைப் பிடிக்கும் எனக் கணித்து, தேர்தல் கணிப்புப் போட்டியில் மூன்றாம் பரிசை வென்றவர் தஞ்சை மாவட்டம் பாபநாசத்தைச் சேர்ந்த எஸ்.ராஜேந்திரன். முன்னாள் ராணுவ வீரர்.

‘‘பெரும்பான்மையான இடங்களில் தி.மு.க-வே வென்று, ஆட்சியைப் பிடிக்கும். காரணம், ஜெயலலிதாவின் மீதான கோபம். அவர் மீதான அதிருப்தி தி.மு.க-வுக்கு ஓட்டுகளாக மாறும். இது தவிர, சுட்டெரிக்கும் வெயிலில் மக்கள் காத்துக்கிடக்க, குளுகுளு மேடையில் நின்று சாதனைகளைச் சொல்லும் ஜெயலலிதாவின் பிரசாரத்தை மக்கள் நேரடியாகவும் செய்தி ஊடகங்கள் மூலமும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். மழை வெள்ளத்தில் ஜெயலலிதா மக்களை எட்டிக்கூடப் பார்க்கவில்லை என்பதை இன்னும் யாரும் மறக்கவில்லை. அதேபோல அப்துல் கலாமின் உடலுக்குக்கூட அஞ்சலி செலுத்தப் போகாதவர், எப்படி மக்கள் முன் நின்று வெற்றிபெற முடியும்?

கடந்த 2011-ம் ஆண்டு தேர்தலில் ஆட்சிப் பொறுப்பில் இருந்து தேர்தலைச் சந்தித்த தி.மு.க., மக்களுக்கான திட்டங்களைச் சொல்லக்கூடிய அளவுக்கு நிறைவேற்றியிருந்தது. 2011-ம் ஆண்டு தேர்தலையும் இலவசங்களை அறிவித்து, பண பலம், அதிகாரிகள் பலம், காவல் துறை பலத்துடன் தேர்தலைச் சந்தித்தது. ஆனால், ஆட்சியைப் பிடிக்க முடிந்ததா? எதிர்கட்சியாகக்கூட வர முடியவில்லை.

அதுபோலத்தான் பணத்தைக் கொடுத்து வாக்குகளை வாங்கிவிடலாம் என யார் நினைத்தாலும் அவர்களுக்குத் தமிழக மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள். வெற்றி-தோல்வி என்பது மாறி மாறித்தான் வரும். மக்களும் அதைத்தான் விரும்புவார்கள். அந்த வகையில் தி.மு.க 132 இடங்களைக் கைப்பற்றும். அ.தி.மு.க 90 இடங்களைப் பிடிக்கும். மக்கள் நலக் கூட்டணி 8 இடங்களில் வரலாம். பா.ம.க 4 இடங்களில் ஜெயிக்கலாம்.

தி.மு.க ஜெயித்தால், முதலமைச்சராக ஸ்டாலின் உட்கார வைக்கப்படலாம். ஸ்டாலின் முதலமைச்சரானால், தி.மு.க அடைந்திருக்கும் சரிவைச் சரிசெய்துவிடுவார் என்ற தனிப்பட்ட வெறுப்பினால்தான் வைகோ மூன்றாவது அணியை உருவாக்கியிருக்கிறார். அதனால்தான் அவர் அ.தி.மு.க-வுக்கு ஆதரவாகவும், தி.மு.க-வுக்கு எதிராகவும் மக்கள் நலக் கூட்டணியைக் கொண்டுபோகிறார். வைகோவின் ஒவ்வொரு செயல்பாடும் அ.தி.மு.க-வுக்கு ஆதாயத்தைத் தேடித்தருவதாகவே இருக்கிறது.

ஜெயலலிதா ஆர்.கே நகரிலும், கருணாநிதி திருவாரூரிலும், ஸ்டாலின் கொளத்தூரிலும் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிபெறுவார்கள். விஜயகாந்த் தற்போதைய நிலையில் வெற்றிபெற முடியாது. ஏனென்றால், பா.ம.க-வில் வேட்பாளரை மாற்றி பலப்படுத்தியிருக்கிறார்கள். திருமாவளவன், தலித் மக்கள் வாக்குகள் மிகுந்த தொகுதியில்தான் மீண்டும் போட்டியிடுகிறார். ஆனாலும் அவரும் வெல்வது கடினம்தான்'' என்கிறார் ராஜேந்திரன்.

இவர்களில் யார் மிகச் சரியாகக் கணித்திருக் கிறார்கள் என்பதை அறிய, மே 19-ம் தேதி வரை காத்திருப்போம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக