வெள்ளி, 29 ஏப்ரல், 2016

தொகுதி மாறி போகாதீங்க': கட்சியினருக்கு ஜெ., கடிதம்

சென்னை:'கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளைத் தவிர, மற்ற தொகுதிகளில் பணியாற்றுவதை, முற்றிலும் தவிர்க்க வேண்டும்' என, முதல்வரும், அ.தி.மு.க., பொதுச் செயலருமான ஜெயலலிதா தெரிவித்து உள்ளார்.
அ.தி.மு.க., தொண்டர்களுக்கு, நேற்று அவர் எழுதியுள்ள கடிதம்:
கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகளைச் சேர்ந்த வாக்காளர்களை, ஒவ்வொரு நாளும் சந்தித்து, அனைவரும் பயன்பெறும் வகையில், செய்யப்பட்டிருக்கும் நற்செயல்களை விளக்கிக் கூற வேண்டும்.இப்பணிகளை நிறைவேற்ற, தொகுதிக் குழு பொறுப்பாளர்களும், சம்பந்தப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், கட்சித் தொண்டர்களும், அவரவர் சார்ந்த சட்டசபை தொகுதிகளில் பணியாற்றுவது மிகவும் அவசியம்.

தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளைத் தவிர, மற்ற தொகுதிகளில் பணியாற்றுவதை, முற்றிலும் தவிர்க்க வேண்டும். தமிழக அரசியல் வரலாற்றில், முதன் முறையாக, 234 சட்டசபை தொகுதி
களிலும், இரட்டை இலை சின்னத்தில், அ.தி.மு.க., கூட்டணி இந்த தேர்தலில் போட்டியிடுகிறது. அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்று, எம்.ஜி.ஆர்., புகழுக்கு பெயர் சேர்க்க, அவரது பிறந்த நாள் நுாற்றாண்டில், சரித்திர சாதனை படைக்க வேண்டும்.
சட்டசபை தேர்தலில், 234 தொகுதிகளிலும், நானே வேட்பாளராக களத்தில் நிற்கிறேன் என்ற உணர்வோடு, அனைவரும் முழு மூச்சுடன் தேர்தல் பணியாற்ற வேண்டும்.
என் அன்பு கட்டளையை ஏற்று, அ.தி.மு.க.,வினர் ஒவ்வொருவரும் கடமை உணர்வோடு, தேர்தல் பணியாற்றி, கட்சியினரின் வெற்றிக்கு, அல்லும் பகலும், அயராது உழைக்க வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.  dinamalar.ocm

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக