திங்கள், 11 ஏப்ரல், 2016

பீட்டர் அல்போன்ஸ் :கலைஞரையும் சோனியாவையும் விமர்சிப்பதை சகித்துக் கொள்ள முடியாது...! '

விகடன்.காம் :மக்கள் நலக் கூட்டணியோடு த.மா.கா உடன்பாடு வைத்துக் கொண்டது கட்சியின் நலனை முன்னிறுத்தித்தான். இதனை ஏற்காதவர்களைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை. தொண்டர்கள் நலனுக்காகத்தான் இப்படியொரு கூட்டணியை அமைத்தோம்" என ஜி.கே.வாசன் மீடியாக்களிடம் பேசிக் கொண்டிருந்த அதேநேரத்தில், ' சோனியா காந்தியை பீட்டர் அல்போன்ஸ் சந்திக்கப் போகிறார்' என்ற தகவலும் சேர்ந்தே பறந்தது. மக்கள் நலக் கூட்டணியோடு த.மா.கா இணைந்ததை எதிர்த்து அக்கட்சியின் மூத்த துணைத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், காஞ்சிபுரம் விஸ்வநாதன், ராசிபுரம் ராணி ஆகியோர் விரைவில் சோனியாவை சந்தித்து காங்கிரஸில் இணைய இருக்கிறார்கள் என்ற செய்தி பரவி வருகிறது.
கூட்டணியை உறுதி செய்த அன்றே, மூத்த தலைவர்கள் முறுக்கிக் கொண்டதை ஜி.கே.வாசன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. பீட்டர் அல்போன்ஸிடம் பேசினோம்.


இப்படியொரு அதிரடி முடிவு எடுக்க வேண்டிய அவசியம் ஏன் வந்தது?

சட்டமன்றத் தேர்தலில் விஜயகாந்த் தலைமையில் உள்ள தே.மு.தி.கவுடனும், வைகோவை ஒருங்கிணைப்பாளராக கொண்டு செயல்படும் மக்கள் நலக் கூட்டணியுடனும் உடன்பாடு வைத்துக் கொண்டு தேர்தலை சந்திப்பது ஏற்படையதாக இல்லை. என்னைப் பொறுத்தவரை த.மா.கா என்ற பேரியக்கம், தேசிய பார்வை கொண்ட மாநிலக் கட்சியாகவும் நாங்கள் மேற்கொண்ட இரண்டாவது பரிசோதனையின் மூலம் உருவான இயக்கம். முன்பொருமுறை தலைவர் மூப்பனார் தலைமையில், தேசிய பார்வை கொண்ட மாநிலக் கட்சியை உருவாக்க வேண்டும் என கட்சியைத் தொடங்கினோம். பல காரணங்களால் அது வெற்றியடையாமல் போகவே, அகில இந்திய காங்கிரஸில் இணைந்தோம். இரண்டாவது முயற்சியாக, வாசன் வேண்டுகோளுக்கிணங்க புதிய கட்சியைத் தொடங்கினோம். இந்தப் புதிய கட்சி, மாற்றத்திற்கான முன்னெடுப்பு என அறிவிக்கப்பட்டது. தலைவர் ஜி.கே.வாசனை முதலமைச்சர் என்றுதான் த.மா.கா தொண்டர்கள் முழக்கம் எழுப்பி வந்தார்கள். ஆனால், விஜயகாந்தை முதல்வர் என வாசன் ஏற்றுக் கொண்டது எனக்கு நெருடலாக இருந்தது.

அப்படியே பார்த்தாலும், எந்த இடத்திலும் தன்னை முதல்வர் வேட்பாளர் என்று ஜி.கே.வாசன் சொல்லவில்லையே?

அவர் அப்படிச் சொல்ல வேண்டாம். அவரைச் சுற்றியுள்ள நாங்களும் பலதரப்பட்ட தொண்டர்களும் அவ்வாறுதான் அவரை முன்னிறுத்தினோம். முதலமைச்சர் பதவி என்பது தூரமான கனவாகக் கூட இருக்கலாம். ஆனால், நாம் முன்வைக்கும் கூட்டணி மூன்று விதமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக இருக்க வேண்டும். ஒன்று த.மா.காவுக்கு அரசியல் ஆதாயம் தருவதாகவும், தமிழகத்தின் ஒட்டுமொத்த நலனுக்கு உகந்ததாகவும். த.மா.கா எதற்காக தோற்றுவிக்கப்பட்டதோ, எதிர்காலத்தில் அந்தப் பாதையை செழுமைப்படுத்துவதாகவும் இருக்க வேண்டும். அந்தப் பாதையில் இருந்து விலகுவதை நான் ஏற்கவில்லை. 

மாற்றத்தை முன்னெடுக்கும் கட்சியாக த.மா.காவை உருவாக்கினோம் என்கிறீர்கள். மாற்றம் என்பது திராவிடக் கட்சிகளுக்கு மாற்று என்று தொடர்புபடுத்திக் கொள்ளலாமா?

நாங்கள் விரும்பிய மாற்றம் என்பது தமிழக அரசியலில் அணுகுமுறையில் மாற்றம். அதன் அடிப்படை சிந்தாந்தம், பன்முகத்தன்மைக்கான வளர்ச்சி உள்பட பல வகைகளில் மாற்றம் வர வேண்டும் என்று நினைத்தோம்.

த.மா.காவில் இருந்து நீங்கள் பிரிந்த அன்று கட்சியின் வழக்கறிஞர் அணிக் கூட்டத்தில் கலந்து கொண்டீர்கள். கடைசி நேர மனமாற்றத்திற்கு என்ன காரணம்?

அதற்கு முன்பை ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன். 2015 ஜனவரி 31 காந்தி மறைந்த தினமன்று, மதச்சார்பற்ற இந்தியா என்ற தலைப்பில் கருத்தரங்கை நடத்தினேன். அந்தக் கூட்டத்திற்கு சி.பி.எம் கட்சியின் யெச்சூரி, பிருந்தா காரத், சி.பி.ஐ கட்சியின் டி.ராஜா, திருமாவளவன் ஆகியோரை அழைத்திருந்தேன். அந்தக் கூட்டத்தில் பேசிய பிருந்தா காரத், 'வாசன்தான் தமிழகத்தின் எதிர்காலம்' என்று பேசினார். நான் அவரிடம், 'இந்தத் தளத்தை அப்படியே எடுத்துக் கொண்டு நாம் நகர வேண்டும். இந்த முன்னெடுப்பை தமிழகத்தின் தலைநகரங்களுக்குக் கொண்டு போனால், மக்கள் மத்தியில் பெரும் எழுச்சி ஏற்படும். தேர்தலுக்கு ஒன்றேகால் வருடங்கள் இருக்கின்றன. தலைமை ஏற்பதற்கான வாய்ப்பு உங்களுக்கு வரும் என்றேன்' என்றேன். அதில் எனக்கு மாறுபட்ட கருத்து உள்ளது என்றார் வாசன். அப்போதே அவரிடம் இருந்து நான் மாறுபட்டேன். 'இந்தத் தேர்தலில் தனித்து நிற்கலாமா?' என்ற பேச்சு வரும்போது, 'கூட்டணி வேண்டும்' என்பது கட்சியில் ஒருமித்த கருத்தாகவே இருந்தது. 'தனித்து நின்றால் இன்றைக்கு உள்ள சூழலில் சாதிக்க முடியாது' என்றோம். கூட்டணி வேண்டும் என்றபோது, நானும் என் கருத்தைச் சொன்னேன். நான் சொன்ன கருத்தில் இருந்து மற்றவர்கள் மாறுபட்டார்கள். எந்தக் கூட்டணியாக இருந்தாலும், கட்சியின் வளர்ச்சியை நோக்கிய கூட்டணியாக இருக்க வேண்டும் என்று சொன்னேன். அதை அவர்கள் ஏற்கவில்லை.

'வாசன்தான் தமிழகத்தின் எதிர்காலம்' என பிருந்தா காரத் சொன்னார் என்கிறீர்கள். பிருந்தாவின் சி.பி.எம் கட்சியோடுதானே வாசன் உடன்பாடு வைத்திருக்கிறார்? இதில் உங்களுக்கு மாறுபாடு எங்கே வந்தது?


நான் நினைத்த மெகா கூட்டணி என்பது வாசன் தலைமையில் அமைந்திருக்க வேண்டியது. தளம் மிக முக்கியமானது. இந்தக் கூட்டணி விஜயகாந்த் தலைமையில், வைகோவை ஒருங்கிணைப்பாளராகக் கொண்டிருக்கச் கூடிய கூட்டணி. இதில் விஜயகாந்த் முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுகிறார். எனக்கு அதில் உடன்பாடு இல்லை.

சரி...நீங்கள் முன்வைத்த கூட்டணி எது?

அதை நான் இப்போது சொல்ல முடியாது. எல்லாம் முடிந்துபோய்விட்டது. இப்போது சொல்வது பண்பாடாக இருக்காது. ஒரு கட்சியின் தலைவருக்கும் துணைத் தலைவருக்கும் நடந்த உரையாடல் அது. என்னுடைய கருத்தை அவரிடம் சொன்னேன். இப்படி இருந்தால் கட்சியின் எதிர்காலத்திற்கு நல்லது என்றேன். அவ்வளவுதான்.

வைகோவுக்கும் உங்களுக்கும் இடையில் அப்படி என்னதான் பிரச்னை?


வைகோவின் குடும்பம் எங்கள் மாவட்டத்தில் மிகப் பெரிய குடும்பம். நானும் அவரும் ஒரே தாலுகாவைச் சேர்ந்தவர்கள். ஒரே கல்லூரியின் முன்னாள் மாணாக்கர்கள். அவருடைய பேச்சாற்றல், எழுத்தாற்றலை மிக அதிகமாக மதிப்பவன். நானும் அவரும் எதிரெதிர் முனையில் களப் பணியாற்றியிருக்கிறோம். அவரிடம், எனக்கு உடன்பட முடியாத ஒன்று,  விடுதலைப் புலிகளுக்கான ஆதரவு. ராஜீவ்காந்தி கொலை வழக்கைத் தொடர்ந்து, அவருடைய பேச்சுக்கள், நடவடிக்கைகளில் இன்றுவரையில் எனக்கு மாறுபாடு உண்டு. தனிநபராக அவரை மதிக்கிறேன். அவரது கொள்கையில் உடன்பாடு இல்லை. அதைவிட முக்கியம், தலைவர்களை தரம்தாழ்ந்து விமர்ச்சிப்பது. நாளைக்கு சோனியா காந்தியை, ராகுலை, தி.மு.கவின் தலைவர் கலைஞரை, துணைத் தலைவர் ஸ்டாலினை விமர்சிக்கிறார் என்றால், அதே மேடையில், சாட்சியாக அமர்ந்து கொண்டு நான் கேட்டுக் கொண்டிருக்க முடியுமா? அதைவிட என்ன துரதிர்ஷ்டம் இருக்க முடியும்?

த.மா.காவின் எதிர்காலம் எப்படி இருக்கும் என நினைக்கிறீர்கள்?

தலைவர் மூப்பனாரிடம் இருந்து நிறைய விஷயங்களை வாசன் கற்றிருக்கிறார். இன்னும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும். த.மா.காவை நடத்திக் கொண்டிருந்தபோது, மூப்பனார் ஒன்றைச் சொன்னார். 'எங்களுக்கு அகில இந்தியத் தலைமை எதுவென்றால், அது அன்னை சோனியா காந்தி என்று சொல்வேன்' என்றார். இதுதான் தலைவர் மூப்பனாரைப் பொறுத்தரையில் காங்கிரஸ் கட்சியைப் பற்றி வைத்திருந்த நிலைப்பாடு. 'காங்கிரஸில் இருந்து நாங்கள் வெகுதூரம் வந்துவிட்டோம்' என்கிறார் வாசன். சட்டமன்றத் தேர்தல் முடிந்ததும், அடுத்த ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் தொடங்கிவிடும். காங்கிரஸை ஆதரிக்க முடியாது என்று சொன்னால், பிறகு எந்த அகில இந்தியக் கட்சியை வாசன் ஆதரிப்பார்? வேறு என்ன வழி இருக்கிறது என்று கேட்கிறேன். இடதுசாரிகள்கூட மதச்சார்பற்ற அரசியலை முன்னெடுத்துச் செல்ல, காங்கிரஸ் தவிர வேறுவழியில்லை என நினைக்கிறார்கள். மேற்கு வங்கத்தில் அதற்கான துவக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். நாளைக்கு கேரள தேர்தல் முடிந்ததும், நாடாளுமன்றத்திற்கான அகில இந்திய மேடை அமைக்கப்பட்டுவிடும். அப்போது தேசம் முழுவதும் இரண்டே அணிகள். காங்கிரஸ் தலைமையில் மதச்சார்பற்ற அணி ஒன்றும், பா.ஜ.க தலைமையில் ஒரு அணியும் அமையும். அப்போது வாசன் என்ன நிலைப்பாடு எடுப்பார்? அதைப் பற்றிய தொலைநோக்குப் பார்வை இருந்தால்தானே கட்சியை முன்னெடுத்துச் செல்ல முடியும்?

' மூப்பனார் அவர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட பீட்டர், கடைசி நேரத்தில் இப்படி துரோகம் செய்துவிட்டுப் போகலாமா?' என்கிறார்களே?


மூப்பனாரால் வளர்த்தெடுக்கப்பட்டவன் என்ற ஒரே காரணத்தால்தான், நான் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியில் இணைந்தேன். வேறு எந்தக் காரணமும் கிடையாது. சோனியாவும் ராகுலும் எனக்கு எந்தவிதமான தீமையும் செய்யவில்லை. எனக்கு என்ன அங்கீகாரம் உண்டோ, அதைத் தந்தார்கள். மூன்று முறை எம்.எல்.ஏவாகவும் ஒருமுறை நாடாளுமன்றத்திற்கும் அவர்களால்தான் நான் தேர்வு செய்யப்பட்டேன். தலைவர் மூப்பனார் என்னை அடையாளம் கண்டு வளர்த்தெடுத்தார். நான் துரோகம் செய்துவிட்டேன் என்று சொல்பவர்களைப் பார்த்துக் கேட்கிறேன். தேர்தல் பிரசார மேடைகளில் நின்று சோனியாவையும் ராகுலையும் கலைஞரையும் ஸ்டாலினையும் தரக்குறைவாக விமர்சனம் செய்து அவமானப்படுத்துபவர்கள் மத்தியில் நாம் நின்று கொண்டு, ஆதரித்துப் பேசுவதுதான் வாசனுக்கு நாம் காட்டும் விசுவாசம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

உங்களது அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

இப்படியொரு நிலை வரும் என்று நான் நினைக்கவில்லை. நான் ஏற்றுக் கொண்ட லட்சியங்களை செயல்படுத்துவது பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

காங்கிரஸ் சார்பில் நீங்கள் போட்டியிடுவதற்கான வாய்ப்பு இருக்கிறதா?

நான் ஆறு மாதத்திற்கு முன்பே ஜி.கே.வாசனிடம் சொல்லிவிட்டேன். 'இந்தத் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை. இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்' என்று. தேர்தலை மனதில் கொண்டு இந்த முடிவை நான் எடுக்கவில்லை. போட்டியிடப் போவதும் இல்லை.
சோனியாவை சந்திக்க இருக்கிறீர்கள் என்பது உண்மையா?
இன்னும் நான் முடிவெடுக்கவில்லை. காங்கிரஸை ஆதரித்துப் பிரசாரம் செய்வேனா என்பது ஓரிரு நாளில் தெரிந்துவிடும்.

உங்களை இயக்குவது தி.மு.கதான் என்ற குற்றச்சாட்டு வருகிறதே?

(ஹா ஹா...) மிகத் தவறான குற்றச்சாட்டு.

உங்கள் பார்வையில் சட்டமன்றத் தேர்தலில் மக்களின் நம்பிக்கையைப் பெற்ற கட்சியாக எது இருக்கும்?

அந்தக் கேள்விக்கு இப்போது பதில் சொல்லவில்லை. நான் என்ன செய்ய வேண்டும் என்பதை திட்டமிட்டுக் கொண்டிருக்கிறேன். த.மா.காவை உடைக்கும் முயற்சியாக இதை நான் செய்யவில்லை. என்னுடைய நிலைப்பாடு தனி. நான் எடுத்த முடிவு என்னுடைய ஆத்ம திருப்திக்கானது.

ஒரே ஒரு கேள்வி. மூப்பனாருக்கும் ஜி.கே.வாசனுக்கும் என்ன வித்தியாசத்தை உணர்கிறீர்கள்?

தலைவர் மூப்பனார் யாரோடும் ஒப்பிட முடியாத மாபெரும் தலைவர். அவ்வளவுதான்.

-ஆ.விஜயானந்த்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக