திங்கள், 11 ஏப்ரல், 2016

ஜி.கே.வாசன் மீது ஜெயலலிதாவின் கோபத்திற்கு காரணம் இதுதான்..!'விளக்கும் எஸ்.ஆர்.பி. -

விகடன்,காம் ;மக்கள் நலக் கூட்டணியில் ஜி.கே.வாசன் இணைந்ததை ஏற்றுக் கொள்ள முடியாமல், தாய்க்கழகமான காங்கிரஸ் கட்சியில் இணைய பீட்டர் அல்போன்ஸ், சாருபாலா தொண்டைமான், கார்வேந்தன், விஸ்வநாதன், ராசிபுரம் ராணி உள்ளிட்டவர்கள் முயற்சித்துக் கொண்டிருக்க, முற்றிலும் மாறுபட்டு அ.தி.மு.கவில் ஐக்கியமாக இருக்கிறார் த.மா.காவின் மூத்த தலைவராக இருந்த எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம். அவரிடம் பேசினோம். காங்கிரஸை தவிர்த்துவிட்டு, அ.தி.மு.கவை தேர்வு செய்யக் காரணம் என்ன?
த.மா.காவின் மூத்த தலைவர் ஒருவர், கூட்டணிக்காக பா.ஜ.கவுடன் பேசியதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவர்கள் நம்முடைய தேசப்பிதாவைக் கொன்றவர்களின் பின்புறத்தில் இருப்பவர்கள், டெல்லியில் தலைவர் காமராஜரை உயிரோடு கொளுத்த முயற்சித்த சங்பரிவார் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள். 'அவர்களோடு பேசுவது சரியாக இருக்காது' என்றேன். அதன்பிறகு, மக்கள் நலக் கூட்டணி என்றார் ஜி.கே.வாசன். 'முதலமைச்சர் வேட்பாளராக விஜயகாந்தை எப்படி ஏற்க முடியும்?. அ.தி.மு.கவோடு மீண்டும் பேசுவோம்' என்றேன். என்னையும் பேசச் சொன்னார் வாசன். அதற்குள் மக்கள் நலக் கூட்டணியில் 26 சீட் முடிவாகிவிட்டது என்றார்.  வாசனும் விஜயகாந்தும் கூட்டணிக்காக எல்லாருடனும் பேசினார்கள் பின்பு சீச்சி இந்த பழம் புளிக்கும் என்று இப்போ...
அ.தி.மு.கவோடு பேசச் சொல்லிவிட்டு, திடீரென்று இவ்வாறு சொன்னதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. 'குறைந்தபட்ச  கொள்கையாவது இருக்க வேண்டும். யாரிடம் வேண்டுமானாலும் பேசலாம்' என்பது தவறு என அவரிடம் சொன்னேன். அதை ஏற்றுக் கொள்ளும்நிலையில் அவர் இல்லை. அ.தி.மு.கவோடு ஆரம்பத்தில் இருந்தே நான் பேசிக் கொண்டிருந்தேன். எனவே, நான் அங்கு போவதுதான் சரியாக இருக்கும். வாசன் செய்த தவறை சரி செய்ய முடியுமா என முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்.

அ.தி.மு.க அணியில் இடம் பெற முடியாமல் போனதற்கு தென்னந்தோப்பு சின்னம் மட்டும்தான் பிரச்னையா?

அ.தி.மு.க தலைமை அவ்வாறு சொல்லியிருந்தால், கட்சிக்குள் அதைப் பற்றி விவாதித்திருக்க வேண்டும். அப்படி போட்டியிட்டால் எதிர்காலத்தில் வரக்கூடிய விளைவுகளைப் பற்றியும் பேசியிருக்க வேண்டும். கட்சி தொடங்கிய நாளில் இருந்து, அ.தி.மு.கவோடு சேர வேண்டும் என்பதுதான் தொண்டர்களின் எண்ணமாக இருந்தது. விருப்ப மனு கொடுத்தவர்களில் 90 சதவீதம் பேர் அ.தி.மு.க கூட்டணி என்ற மனநிலையில்தான் இருந்தார்கள். திடீரென்று கடந்த 7-ம் தேதி, 'அ.தி.மு.க அணி சரியாக வராது' என்றார் வாசன். 'என்ன காரணம்? எண்ணிக்கையா? சிம்பலா?' என்றேன். 'கூட்டணியில் இல்லை' என்று அ.தி.மு.க தலைமை கூறிவிட்டதாகச் சொன்னார். அப்படியே பார்த்தாலும் விஜயகாந்தை முதலமைச்சர் என்று எப்படிச் சொல்ல முடியும்? என்றேன். அவர் பதில் சொல்லவில்லை.

உங்கள் விருப்பப்படி கூட்டணி அமையாததற்கு யார் காரணம்?

அந்தக் காரணம் இன்றுவரையில் தெரியவில்லை. யாரோ எதையோ செய்திருக்கிறார்கள்.

ஜி.கே.வாசன் மீது ஜெயலலிதா அதிருப்தி அடைய என்ன காரணம்?


அவர் பல கட்சிகளோடு பேசிக் கொண்டிருந்தார். அரசாங்கத்தின் கண்ணும் காதும் மூக்குமாக பல கருவிகள் இருக்கிறது. உதாரணமாக, அரசின் உளவுத்துறை இருக்கிறது. நீங்கள் வீட்டில் இருந்து கிளம்பினாலே, கார் எங்கே போகிறது? யாரை சந்திக்கிறீர்கள்? என்பதை துல்லியமாகக் கண்காணித்து முதலமைச்சருக்குத் தெரியப்படுத்துவார்கள். பல கட்சிகளோடு வாசன் பேசிக் கொண்டிருக்கும் தகவல் முதலமைச்சர் கவனத்திற்குப் போயிருக்கிறது. இதுதான் காரணம்.
அப்படியானால், கூட்டணி முறிவுக்கு உளவுத்துறைதான் காரணமா?

இருக்கலாம். உண்மையான காரணம் என்ன என்பது வாசனுக்குத்தான் தெரியும். கடைசி நாட்களில் நடந்த விஷயங்கள் முதலமைச்சருக்கு தெரிந்திருக்கிறது. அதனால், அவர் உஷாராகியிருக்கலாம்.

எப்போது ஜெயலலிதாவை சந்திக்கிறீர்கள்? அ.தி.மு.க வேட்பாளராக போட்டியிடும் வாய்ப்புள்ளதா?

வரும் ஞாயிறுக்குள் முதலமைச்சரை சந்திக்க எனக்கு அழைப்பு வரலாம். தேர்தலில் போட்டியிடும் கேள்வியே தற்போது எழவில்லை.

'வாசன் செய்த தவறை சரி செய்கிறேன்' என்கிறீர்கள். இதுமட்டும்தான் நீங்கள் அ.தி.மு.கவை தேர்வு செய்யக் காரணமா?

ஏங்க... நான் அ.தி.மு.கவில் சேரக் கூடாதா? 'அ.தி.மு.கவோடு பேசுங்கள்' என என்னிடம் சொன்னதே வாசன்தான். காங்கிரஸ் கொள்கைகளை முழுமையாக நான் நிராகரிக்கவில்லை. மாநில நலன் மற்றும் தேசியக் கண்ணோட்டம் ஆகியவைதான் என்னுடைய பார்வை. அவர்கள்தான் மூப்பனாரின் கொள்கைகளைவிட்டு விட்டு எங்கெங்கோ போகிறார்கள். அ.தி.மு.க ஆட்சி மட்டும்தான் மக்கள் நம்பிக்கையைப் பெற்ற கட்சியாக இருக்கிறது. மக்களின் தேவையை முழுமையாகப் பூர்த்தி செய்திருக்கிறார் முதல்வர். ஐந்தாண்டுகளில் மின்தடையே இல்லாமல் இருப்பது மிகப் பெரிய சாதனையாகப் பார்க்கிறேன். மீண்டும் அ.தி.மு.க ஆட்சி மலரும்.

-ஆ.விஜயானந்த்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக