செவ்வாய், 12 ஏப்ரல், 2016

அதிமுக அமைச்சரிடம் சமரசம் செய்தாரா வானதி? -கொதிக்கும் கொங்கு மண்டலம்

விகடன்.காம்: இப்படியும் ஒரு புகாரா?' என அதிர வைக்கிறது அந்தத் தகவல். 'அமைச்சர் வேலுமணியை வெற்றி பெற வைக்க சமரசம் செய்துவிட்டார் வானதி' என்ற ரீதியில் பறக்கும் புகார்கள்தான் பரபரப்புக்குக் காரணம். கோவை தெற்கு தொகுதியில் பா.ஜ.கவின் மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து இதே தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. இதுபற்றி நம்மிடம் பேசிய தி.மு.கவின் மூத்த நிர்வாகி ஒருவர், " கோவை தெற்கு தொகுதி என்பது, அரசு ஊழியர்கள், கிறிஸ்துவ சிறுபான்மையினர் நிறைந்த பகுதி. மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளில் தி.மு.கவுக்கு அதிக செல்வாக்குள்ள தொகுதியும் இதுதான். ஆனால், காங்கிரஸ் கட்சிக்கு இந்தத் தொகுதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதன் பின்னால் நடந்திருக்கும் பல விஷயங்கள் சந்தேகத்தை எழுப்புவதாக இருக்கிறது. பா.ஜ.கவின் வானதி சீனிவாசனுக்கு தொண்டாமுத்தூர்தான் சொந்த ஊர்.


அவரது சொந்த ஊரில் அமைச்சர் வேலுமணி போட்டியிடுகிறார். இவருக்கு எதிராக போட்டியிட வேண்டாம் என்பதற்காகவே தெற்கு தொகுதியை தேர்வு செய்தார் வானதி. இது ஒருபுறம் இருக்கட்டும். கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் அமைச்சர் வேலுமணியின் தொடர்புகள் கோவை மாவட்டத்திற்கே தெரியும்.

அந்தக் கல்லூரியின் உரிமையாளர் மலர்விழிக்குச் சொந்தமான இடத்தில்தான் வானதி கட்சி அலுவலகம் திறந்திருக்கிறார். அதுதான் சில சந்தேகங்களைக் கிளப்புகிறது. அமைச்சரோடு நட்பில் உள்ள கல்லூரி உரிமையாளர் எப்படி வானதிக்கும் நெருக்கமாக இருக்க முடியும்? எனவே, தொண்டாமுத்தூரில் வேலுமணி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக வானதி சமரசம் செய்துவிட்டாரோ? என்றே நினைக்கத் தோன்றுகிறது ” என்று பகீர் கிளப்பினார்.

தொடர்ந்து நம்மிடம் பேசிய அவர், “தவிர, காங்கிரஸ் கட்சிக்கு இந்தத் தொகுதியில் பெரிதாக பலம் இல்லை. வலுக்கட்டாயமாக காங்கிரஸ் தலைமையை வற்புறுத்தி தெற்கு தொகுதியை வாங்க வைத்ததில் காங்கிரஸ் நிர்வாகிகள் சிலருக்கும் தொடர்பு இருக்கிறது. அவர்களை வற்புறுத்தி வாங்க வைத்தாரா வேலுமணி? என்ற பேச்சும் தொகுதிக்குள் உள்ளது. தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடாமல் போனதற்கு நன்றிக்கடனாக, தெற்கு தொகுதியில் வானதியை வெற்றி பெற வைக்க முயற்சிக்கிறார் அமைச்சர் வேலுமணி.

பா.ஜ.கவோடு அ.தி.மு.க நடத்தும் இந்த 'நட்பு அரசியல்' முதலமைச்சருக்குத் தெரியுமா என்பது தெரியவில்லை. தேர்தல் முடியும் வரையில் இன்னும் என்னென்ன சர்ச்சைகள் கிளம்பப் போகிறதோ? என ஆதங்கப்பட்டார் அவர்.

இன்னொரு தி.மு.க நிர்வாகி, "தி.மு.க சார்பில் பொங்கலூர் பழனிச்சாமி கடந்தமுறை போட்டியிட்டு அ.தி.மு.கவின் சேலஞ்சர் துரையிடம் தோற்றார். துரை மீது தொகுதி மக்கள் அதிருப்தியில் இருப்பதால் அம்மன் அர்ச்சுனனுக்கு சீட் ஒதுக்கியிருக்கிறார் ஜெயலலிதா. இவர் மீது ஏராளமான புகார்கள் உள்ளன.

கோவை மாவட்டத்தில் சட்டவிரோதமாக பார்களை நடத்தி பல கோடிகளைச் சுருட்டியவர் அர்ச்சுனன். கட்சிக்காரர்கள் மத்தியிலும் இவருக்கு அதிருப்திதான். இவருக்கு எப்படி ஜெயலலிதா சீட் ஒதுக்கினார் என்றும் தெரியவில்லை. காங்கிரஸ் கட்சி சார்பில் வீனஸ் மணி போட்டியிடலாம். எப்படி  பார்த்தாலும், தெற்கு தொகுதியில் பா.ஜ.கவுக்கு சாதகமாக மைதானத்தை சுத்தப்படுத்தியிருக்கிறார் அமைச்சர் வேலுமணி" என்றார்.

'இப்படியொரு செய்தி பரவிவருவது உண்மையா? என வானதி சீனிவாசனிடமே கேட்டோம். பலமாக சிரித்தவர், “மலர்விழி என்பவர் எங்கள் கட்சியின் நிர்வாகிகள் பலருக்கும் நன்கு அறிமுகமானவர். என்னோடு நெருக்கமான நட்பில் இருப்பவர். அவருக்கும் அமைச்சர் வேலுமணிக்கும் உள்ள நட்பு பற்றியெல்லாம் எனக்கு தெரியாது. அதுபற்றி எங்களுக்கு அவசியமுமில்லை. தேர்தல் பணிக்காக 100 அடி ரோட்டில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறேன்.

தெற்கு தொகுதியில் நான் போட்டியிட வேண்டும் என்பது கட்சித் தலைமை எடுத்த முடிவு. படித்தவர்கள் நிறைந்திருக்கும் பகுதியில் பா.ஜ.கவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ள தொகுதியாகவும் இது பார்க்கப்படுகிறது. தொண்டாமுத்தூரில் வேலுமணியை வெற்றி பெற வைத்து எனக்கென்ன பலன்? பா.ஜ.க கவனிக்கப்படாத கட்சியாக இருந்தால், இந்தக் கேள்விகள் வராது. நாங்கள் கவனிக்கப்படுவதால்தான் இதுபோன்ற வதந்திகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

தி.மு.க ஏன் இங்கு போட்டியிடவில்லை என்பதைப் பற்றி தி.மு.க தலைமைதான் சொல்ல வேண்டும். என் மீது குற்றம் சொல்பவர்களால் அதை நிரூபிக்க முடியுமா? சமூகப் பணிகளை தீவிரமாக முன்னெடுத்துச் செல்வதால் கவனிக்கப்படுகிறேன். என்னுடைய வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. வதந்திகளைப் பற்றிக் கவலைப்படுவதற்கு இப்போது நேரமில்லை" என முடித்தார் தனது ட்ரேட் மார்க் சிரிப்போடு.

தேர்தல் முடிவதற்குள் தெற்கு தொகுதிக்குள் இன்னும் என்னென்ன பிரச்னைகள் வலம்வருமோ?

-ஆ.விஜயானந்த்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக