திங்கள், 11 ஏப்ரல், 2016

படிப்படியான மதுவிலக்கு – ஜெயாவின் ஆணவப் பேச்சு !

அன்புடையீர் வணக்கம்!
குடிபோதையால் தமிழ்ச்சமூகமே சீரழிக்கப்பட்டு பெண்கள், மாணவர்கள், சிறுவர்கள் எனக் குடிப்பது அதிகரித்துள்ளது. ஒரு கோடி பேர் குடி நோயாளிகளாக உள்ளனர். லட்சக்கணக்கான பெண்கள் விதவைகளாக வாழ்வை இழந்துள்ளனர்.
கடந்த ஓராண்டாக டாஸ்மாக்கை மூடக் கோரி மக்களும் பல்வேறு அமைப்புகளும் போராடி வருகின்றனர். சசிபெருமாள் அநியாயமாக கொலை செய்யப்பட்டார். பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது தடியடி நடத்தி அவர்களை ஒரு மாதத்துக்கும் மேலாக சிறையிலடைத்தது இந்த அரசு. மேலப்பாலையூர் விவசாயிகள் ஒரு மாதம் சிறை வைக்கப்பட்டனர். கடையை மூடச்சொல்லி போராடிய மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர்கள் மீது கொலைமுயற்சி வழக்கு போட்டு கோவை, சென்னை, கடலூர் சிறைகளில் அடைக்கப்பட்டனர்.

படிப்படியான மதுவிலக்கு - ஜெயாவின் ஆணவப் பேச்சு
படிப்படியான மதுவிலக்கு – ஜெயாவின் ஆணவப் பேச்சு
“ஊருக்கூரு சாராயம்” எனப் பாடிய கோவன் தேசத்துரோக வழக்கில் கைது.. மதுவிலக்கை அமல்படுத்து என்ற திருச்சி மாநாட்டில் பேசியதற்காக மக்கள் அதிகார நிர்வாகிகள் உட்பட 6 பேர் மீது தேசத் துரோக வழக்கு. இதுதான் ஜெயா அரசின் டாஸ்மாக் மீதான நிலைப்பாடு.
ஆனால், நேற்று தேர்தல் பிரச்சார உரையாற்றிய ஜெயலலிதா, படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த இருப்பதாகக் கூறியிருக்கிறார். இது ஆழ்ந்து சிந்தித்து எடுத்த முடிவு எனக் குறிப்பிட்ட அவர் தி.மு.க ஆட்சியில் விற்கப்பட்ட மதுப்புட்டிகளின் அளவையும் தனது ஆட்சியில் விற்கப்பட்ட மதுவின் அளவையும் ஒப்பிட்டு தனது ஆட்சியில் குடிகாரர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டதாகக் காட்டியிருக்கிறார். தமிழ்ச்சமூகத்தை போதையால சீரழித்து விட்டு வாக்குக்கு ஆயிரக்கணக்கில் பணத்தை விட்டெறிந்து மீண்டும் முதல்வராக முடியும் என்ற ஆணவம்தான் அவரை இப்படிப் பேசவைக்கிறது. எந்த சுயமரியாதையுமின்ற அடிமைகளாக இருக்கும் அ.தி.மு.க கட்சிக்காரர்கள் போல் அனைத்து மக்களையும் ஏளனமாக நினைக்கிறார்.
சட்டமன்றத்தில் அமைச்சர் ந்ததம் விஸ்வநாதன் ‘மதுவிலக்கை அமல்படுத்தும் பேச்சுக்கே இடமில்லை. கள்ளச்சாராயம் பெருகும். அரசுக்கு வருமானம் பாதிக்கும். அண்டை மாநிலங்களுக்குச் சென்று குடிப்பார்கள்’ என்று பதில் சொன்னார். தமிழகத்தைப் போல மக்கள் போராட்டங்கள் நடைபெறாத கேரளத்தில் கால இலக்கு தீர்மானித்து மதுவிலக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. பீகார் அரசு முழு மதுவிலக்கு அறிவித்திருப்பதுடன், கள்ளச்சாராயம் காய்ச்சுவோருக்கு கடும் தண்டனையும் அறிவித்திருக்கிறது. தமிழக முதல்வரோ மதுவிலக்கு என்பதை தேர்தல் வாக்குறுதியாக்கி தன்னை மீண்டும் முதல்வராக்கினால் படிப்படியாக மதுவிலக்கு என்று பேரம் பேசுகிறார். இந்த அறிவிப்பைக் கேட்டு டாஸ்மாக்கால் பாதிக்கப்பட்ட பெண்கள் கொதித்துப் போயிருக்கிறார்கள்.
சாராய ஆலைமுதலாளிகள், பார் நடத்தும் அ.தி.மு.க கட்சிக்காரர்கள், அதிகார வர்க்கத்தினர், டாஸ்மாக்கால் ஆதாயம் அடைபவர்கள் என சாராய சாம்ராஜ்யம் ஜெயா, சசி உள்ளிட்டு பரந்து விரிந்தது. எனவேதான் மக்கள் அதிகாரம் சொல்கிறது. தங்கள் தெருவிலுள்ள சாராயக் கடையை மூடுவதற்கு யாரையும் முதல்வராக்க வேண்டிய அவசியமில்லை. காத்திருக்கவும் தேவையுமில்லை.
மக்களே களத்தில் இறங்கிப் போராடினால் டாஸ்மாக்கை மூடமுடியும். கடந்த ஓராண்டாக மக்கள் அதிகாரமும் மக்களோடு இணைந்து போராடியிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக வரும் ஏப்ரல் 20 அன்று தமிழகத்தின் முக்கிய இடங்களில் டாஸ்மாக் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்திருக்கிறோம். அ.தி.மு.க பொதுச்செயலரின் இந்த அறிவிப்பை புறந்தள்ளி அனைத்துத் தரப்பினரும் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.
இவண்
சி.இராஜூ,
மாநில ஒருங்கிணைப்பாளர்.

மக்கள் அதிகாரத்தின் டாஸ்மாக் அலுவலக முற்றுகைப் போராட்ட அறிவிப்பு

யாருக்காக அரசு? மூடு டாஸ்மாக்கை!
அன்பார்ந்த பெரியோர்களே! தாய்மார்களே!
நாங்கள் மக்கள் அதிகாரம், மூடு டாஸ்மாக்கை என்று தமிழகமெங்கும் போராடி வரும் இயக்கம், சீரழிக்கப்பட்டு வரும் இளைஞர்களை மீட்க, தாய்மார்களின் கண்ணீர் துடைக்க, தமிழ்ச் சமுதாயத்தை பேரழிவிலிருந்து காப்பாற்ற ஏப்ரல் 20 அன்று டாஸ்மாக் அலுவலக முற்றுகை அறிவித்திருக்கிறோம். அந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ள உங்களை அழைக்கிறோம்.
நாங்கள் மக்கள் அதிகாரம். டாஸ்மாக் கடையை மூடிய எங்கள் விவசாயிகளும், மாணவர்களும் கைது செய்யப்பட்டார்கள். ஊருக்கு ஊரு சாராயம் என்று பாடிய எமது பாடகர் கோவன் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டார். திருச்சியில் நாங்கள் நடத்திய மாநாட்டில் உரையாற்றியவர்கள் மீது தேசத்துரோக வழக்கு போடப்பட்டுள்ளது. இந்த அடக்குமுறைகளுக்கு நாங்கள் அஞ்சமாட்டோம். போராட வாருங்கள் என்று உங்களையும் அறைகூவி அழைக்கிறோம்.
பீகாரில் மது விலக்கு… கேரளாவில் மது விலக்கு…
பீகாரில் கள்ளச்சாராயம் விற்றால் மரண தண்டனை!
தமிழ்நாட்டிலோ டாஸ்மாக்கை மூடு என்று பேசினாலே தேசத்துரோக வழக்கு!
மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று அரசியல் சட்டத்தில் இருந்து என்ன பயன்?
எத்தனை இளம்பெண்கள் தாலியறுத்தாலும், எத்தனை மாணவர்கள் அப்பனை இழந்தாலும், எத்தனை குடும்பங்கள் கண்ணீரில் தவித்தாலும் டாஸ்மாக்கை மூட முடியாது என்கிறார் ஜெயலலிதா.
மூடினால் அரசுக்கு வருமானம் போகும் என்பதல்ல பிரச்சினை. மூடினால் சாராய ஆலை முதலாளிகளுக்கு பல ஆயிரம் கோடி வருவாய் போகும். போலீசு அதிகாரிகளுக்கு, அரசு அதிகாரிகளுக்கு பார் நடத்தி கொள்ளையடிக்கும் கட்சிக்காரர்களுக்கு கோடிக்கணக்கில் வருவாய் போகும். அதனால்தான் இலவசம் தருகிறேன், ஓட்டுக்கு பணம் தருகிறேன், ஆனால் சாராயக் கடையை மட்டும் மூட முடியாது என்கிறார் ஜெயலலிதா.
இன்னும் கடை திறந்து, இன்னும் குடிக்க வைப்பது எப்படி என்று திட்டம் தீட்டுகிறார்கள் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள். இதை நாம் அனுமதிக்கப் போகிறோமா? நம்முடைய தெருவில், நம்முடைய ஊரில் கடையை மூடுவதற்கு நாம் யாரைக் கேட்க வேண்டும்? தேர்தல் வரை நாம் ஏன் காத்திருக்க வேண்டும்?
தேர்தலுக்காகக் கூட டாஸ்மாக்கை மூட முடியாத தேர்தல் ஆணையம் நேர்மையாக தேர்தலை நடத்தப் போகிறதாம். நாம் 100% ஓட்டுப் போட வேண்டுமாம்.
எம்.எல்.ஏ ஆவதும் பதவிக்கு வருவதும் அவர்கள் கவலை.
கடையை மூட வேண்டும்என்பது நமது கவலை.
நாளை வரப்போகும் அரசு – ஒருவேளை கடையை மூடினாலும்
இன்று டாஸ்மாக் கடைக்கு காவல் நிற்கும் போலீசு
நாளை கள்ளச்சாராய வியாபாரத்துக்கும் துணை நிற்கும்.
சாராயத்தை நிறுத்த வேண்டுமென்றால்
மக்களாகிய நாம் போராடாத வரை
நாம் அதிகாரம் செலுத்தாத வரை முடியாது
நாம் முடிவு செய்தால், நாம் போராடினால்
நாளையே கடையை மூட முடியும்.
நாம் போராடாதவரை எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும்
கடையை மூடாது.
அனைவரும் வாரீர்!
ஏப்ரல் 20 டாஸ்மாக் அலுவலத்தை முற்றுகையிடுவோம்.
மூடு டாஸ்மாக்கை – எனப் பேசுபவர்கள் தேசத்துரோகிகளா?
சாராயம் விற்று தாலி அறுப்பவர் தேசபக்தரா?

டாஸ்மாக் தலைமை அலுவலகம்
முற்றுகை

தாளமுத்து நடராசன் மாளிகை, எழும்பூர், சென்னை
ஏப்ரல் 20, 2016, காலை 11.00 மணி
மக்கள் அதிகாரம்
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள்
தொடர்புக்கு 91768 01656

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக